தமிழினியின் பன்முகம்.

நடேசன்.

ta

‘இயல்பான மென் உணர்வு கொண்ட மனிதர்கள் வாழ்வின் கடினமான தருணங்களை எப்படிக்கடந்து போகிறார்கள் என்பதை அருமையாக சித்தரிக்கும் இந்தக் கதையுடன் எனது கதையை ஒப்பீடு செய்தமை என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் உங்களது வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி.’ ‘
Thamilini Jayakumaran

தமிழினினி முகநூல் நண்பராகியது அவரது சிறுகதையை வாசித்துவிட்டு நான் படித்த ஆங்கிலக்கதைபோல் இருப்பதாக பாராட்டி எழுதியதற்கு உடனே நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். அந்தப் போர்க்காலக் கதையை நான் ஏன் இரசித்தேன் என்பதற்கு மாறக பலர் எழுதியதால் அந்தக் கதையை மீண்டும் கீழே பிரசுரித்துள்ளேன்.

மறைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைக்கு பொறுப்பாக இருந்த தமிழினிக்கு முகநூலில்இணைவதற்கு அழைப்பு விடுத்தேன். உடனே அது ஏற்றக்கொள்ளப்பட்டது. தமிழினியை நேரே பார்க்காது இருந்தபோதும் உதயம் பத்திரிகை நடத்திய காலத்தில் கூர்மையாக அவதானித்து வந்தேன்.

போரின் இறுதிக்காலத்தில் வன்னியில் விடுதலைப்புலிகளின் வசமே இருந்து மீட்ட 18 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர் சிறுமிகளை அவர்கள் தங்கியிருந்த கேகாலை அருகே இருந்த முகாமில் பார்த்து அவர்களுடன் ஒரு பகலைக் கழித்தவன். போர்முடிந்தபின் 350 பெண் போராளிகளுக்கு அரசாங்கம் தையல் பயிற்றுவித்தபோது அவர்களை அந்தத் தொழிற்சாலையில் சந்தித்தேன். சிறையில் இருந்தவர்களது அறிக்கைகள் மற்றும் அவர்கள் சம்பந்தமான சில குறிப்புகளையும், ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் போராளிகளது வெளியிடப்படாத சுயசரிதைகள் என்பனவும் எனக்கு கிடைத்தது.எதிர்காலத்தில் ஏதாவது நாவல் எழுதுவதற்கு உதவும் என்பதால் அவற்றைச் சேகரித்தேன்.

சமீபத்தில் நான் கேள்விப்பட்டதில் தமிழினியின் வயிற்று வலி ஆரம்பத்தில் வந்தபோது, அவர் அதைத் தாங்கியபடி “இப்படி ஒரு வலி தனக்கு தேவை’’ என முடிந்தவரை வைத்தியத்திற்கு போகவில்லை என அறிந்தேன். விடுதலைப்புலிகளில் இருந்து செய்ததற்கான பாவத்தின் சம்பளம் அது என நினைத்திருக்கலாம்.

மலையக வம்சாவளியாக சிவகாமி சுப்பிரமணியத்தைப் போல் பரந்தனில் வசித்திருந்தால் நானும் விடுதலைப்புலிகளில் சேர்ந்திருப்பேன். அவரது விடுதலைப்புலிகள் காலத்து செயல்களுக்கு அவரை நான் பொறுப்பாக்கவில்லை. தற்பொழுது பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் என்ற இருவரைத்தவிர மற்றவர்களை அவரது சூழ்நிலைகள் அவர்களை உருவாக்கியிருக்கின்றன எனப் பார்க்கிறேன்.. கடைசிப்போரில் அகதிமுகாமில், நான் சென்று பார்த்தபோதும் அதிகமானவர்கள் மலையகத்தில் இருந்து 77லும் அதன் பின்பாகவும் இடம் பெயர்ந்தவர்கள். மக்கள் மீள்குடியேற்றத்தின் பின்பு மீண்டும் செட்டி குளத்தருகே உள்ள அகதிமுகாமில் அக்காலத்தில் எட்டாயிரம் மக்கள் சிறுதுண்டு காணிகூட அற்றதால் வேறு எங்கும் போகாது முகாமில் இருந்தனர். யாழ்ப்பாணத்தவர்கள் தொடக்கிய தமிழீழப்போராட்டத்தை கிழக்கு மாகாணத்தவரும், கடைசியில் வன்னி அதிலும் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுமே அதிகமாக உயிர்கொடுத்து நடத்தினார்கள் என்பது தெளிவான விடயம்.

ஆரம்பகாலத்தில் சில பெண்கள் விடுதலைப்புலிகளை ரோமான்ரிக்காக நினைத்திருக்கலாம்.ஆனால் அவர்களுக்கு அது பிற்காலத்தில் புரிந்தது. அப்படியான இயக்கத்தில் திருமதி அடல் பாலசிங்கத்தின் தலையீட்டால் சிலமாற்றங்கள் வந்தாலும் உண்மையான மாற்றம் கட்டாயமாக திணிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துப் பையன்கள் தொடர்சியாக வெளிநாடுகள் போனதால் இயக்கத்தில் ஆண்களை மட்டும் வைத்து போர்புரிய முடியாத நிலமை உருவாகியது. அத்தோடு அக்காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இயக்கத்தில் இணைவதன் மூலமே கிடைக்கும் என்ற பிரச்சாரத்தை உண்டாக்கியதால் பல இளவயதுப் பெண்கள் தங்களுடைய பாடசாலைக்காலத்திலேயே இயக்கத்தில் இணைந்தனர்.

இப்படியான இயக்கத்தில் தமிழினியின் இடம் முக்கியத்துவமடைந்ததற்கு தமிழினியின் அறிவும் அதே நேரத்தில்விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தமிழ்செல்வனினதும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடப்பது முக்கிய தகமையாக இருந்திருக்கும். அதுவும் தமிழ்செல்வன் மற்றவர்களை பற்றி எப்பொழுதும் பிரபாகரனுக்கு ஊதும் சங்காக இருந்தவர் என்பது பல பழைய விடுதலைப்புலி இயக்கத்தினரது அபிப்பிராயம். ஆகவே அதையும் தமிழினி மனங்கொண்டிருக்கக்கூடும்.

தமிழினி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதிலிருந்து, பயிற்சிகள் கொடுப்பது, தாக்குதலில் பங்கு பற்றியது மற்றும் சுதந்திரப்பறவைகளில் இருந்தது எனப் பல காரியங்களில் ஈடுபட்டார் என்பதை அறிந்தேன். அவரது பயிற்சியின்போதும் பிற செயற்பாடுகளின் போதும் பல பெண்கள் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் எனச் சொல்லி என்னிடம் அழுதிருக்கிறார்கள். பதுங்கு குழியில் நித்திரையாகிய பெண்கள் தூசண வார்த்தையால் பேசப்படுவது தண்டிக்கப்படுவது சகசமானதானே!

தமிழினி நேரடியாக சம்பந்தப்பட்ட பாரதூரமான விடயம் செஞ்சோலைக்கு அண்மையாக அமைந்திருந்த பயிற்சித்திடலில் நடந்த விமானத்தாக்குதலில் பலியான பாடசாலை மாணவிகளின் பலி. ஆனால் இந்த விடயமும் மடுவில் நடந்த தாக்குதல் போல் தமிழ் ஊடகங்களால் திரிக்கப்பட்ட விடயம். இதைக் குறைந்த பட்சம் தற்பொழுதாவது திருத்துவது அவசியம் என நினைக்கிறேன்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து பெண்கள் பயிற்சிக்காக புதுக்குடியிருப்பிலுள்ள வள்ளிபுனத்தில் வைத்திருந்தபோது இந்த விமானத்தாக்குதல் நடந்தது. இந்தப்பிள்ளைகள் 17-18 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலைப் பெண்கள். இவர்களை செஞ்சோலைக்கு 400 மீட்டர் அருகாமையில் உள்ள தற்காலிக மண்டபங்களில் வைத்திருந்தது இவர்களது உணவு செஞ்சோலையில் இருந்து கொண்டுவரப்படுமென்பதற்காகவும் தங்குமிட வசதிக்காகவுமே. மேலும் இந்தப்பிள்ளைகளின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்தது தமிழினி. ஆனால் அவர்கள் பெற்றோர்களின் மறுப்பின் மத்தியில் அக்காலத்து முல்லைத்தீவு கிளிநொச்சி கல்விப்பணிப்பாளர்களின் பூரண ஒத்துழைப்புடனேயே கொண்டு வரப்பட்டார்கள். இந்தக் கல்விப்பணிப்பளர்கள் விடுதலைப்புலிகளின் கல்விப் பொறுப்பாளர் பேபி சுப்பிமணியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் . பேபி அண்ணை, பேபி அண்ணை என வாலாட்டும் இவர்கள் தற்போதய மாகாண சபையின் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள். அக்காலத்தில் வன்னிமக்களால் வெறுக்கப்பட்ட இவர்கள் இக்காலத்தில் வாக்களித்து அரசியல் பிரமுகர்களாக்கியதும் வன்னி மக்களே. ஆனால் இந்த 53 பெண்பிள்ளைகள் இறந்த (செஞ்சோலை) விடயத்தில் தமிழினியை மட்டும் நான் பொறுப்பாக்கவில்லை. தற்போது மக்களால் மாவட்டசமைக்கு தெரிவான அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையானவார்கள்.

இந்த பிள்ளைகள் மடடுமல்ல, வன்னிப் பெண்கள் எல்லோரும் ஆயுதப்பயிற்சிக்கு தயாராக்கப்பட்டதை நாமறிவோம். வயதான மூதாட்டிகளுக்கு பொல்லுடன் பயிற்சியளித்த படத்தினை பலர் பார்த்திருப்பார்கள். இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களில் மூதாட்டிகளும் ஆயுதமேந்த கற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த விடயங்கள் தமிழனியின் பொறுப்பில் இருந்தது.

தமிழினி குடும்பத்தோடு சரணடைந்தபோது மக்களாலே அடையாளம் காட்டப்பட்டார் எனச் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழனிக்காக ஆரம்பத்தில் வாதிட்ட தமிழ் அரசியல்வாதி அப்பாத்துரை விநாயகமூர்த்தி அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட சிங்கள வக்கிலே இதை வழக்காக்காமல் தமிழினி குற்றத்தை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வு முகாமுக்குச் செல்லமுடியும் என வாதிட்டதும் வழிகாட்டியதுமாகும்.

தமிழினிபோன்ற மிக முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரை இலங்கை அரசாங்கம் நாலு வருடத்தில் விடுதலை செய்தது மிகப்பெரியவிடயம். அமரிக்காவில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வேண்டியவர்களுக்கு கிடைத்த இருபத்தைந்து வருடங்களோடு ஒப்பிடும்போது. அல்லது அமரிக்கர்கள் குவாண்டனமோ சிறையில் வைத்திருப்பவர்களோடு ஒப்பிட்டால் எனது கூற்றின் உண்மை புரியும்.

ஆனால் தமிழினி வெளிவந்தது பலருக்கு வயிற்றில் புளிகரைத்தது. அவர் ஒரு அரசியல்வாதியாக இறங்கியிருந்தால் தங்களது வியாபாரம் மூடிவிடும் என நினைத்திருக்கலாம். அதனால் அவசரம் அவசரமாக தமிழினியை துரோகியாக்க முயற்சித்தார்கள்

தமிழினி போன்ற பெண்கள் எமது சமூத்தில் அவர்களது அறிவையும் துணிவையும் சமூகவளத்தைக் கூட்டுவதற்கு பயன்பட்டிருக்கவேண்டும் என நினைத்து ஏமாற்றத்துடன் இதை எழுதுகிறேன்.

விடுதலைப்புலிகள் இயக்கம் அழிந்துபோனபோது தமிழருக்கு விட்டு சென்றது சில எழுத்தாளர்களும் மற்றும் சில இசைக்கலைஞர்களுமே. அந்த ரீதியில் தமிழினி வாழ்ந்திருந்தால் நமது சோபாசக்தி போன்று பெண் எழுத்தாளர் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது.

ஒருபானை அரிசிக்கு ஒருசோறு பதம் என்பதுபோல் நான் படித்த அந்தச் சிறுகதையில் நான் இரசித்தது

கடைசிவரையும் அந்ததோழி மரணமடைந்ததை தெரிவிக்காமல் கொண்டு சென்றது மிகவும் நேர்த்தி. இதைவிட அந்த கதையில் ஏதாவது இடத்தில் இறப்பைக் காட்டுகிறாளா என்பதற்காக இரண்டாவது மீள்வாசிப்பு செய்தேன். “குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது.
ஒரு துப்பு இதை ஆரம்பத்தில் விட்டுவிட்டேன்.

ஒரு சிறந்த போர்க்கால கதையில் இரண்டு பகுதியையும் காட்டவேண்டும். காரணம் இறப்பு, காயம் இரு பகுதிக்கும் பொதுவானது. அரசியல்வாதிமட்டுமே தனத்து இனத்தை மட்டும் பேசுவான். காரணம் அவன் வாக்குப் பெறுவது அவனது மக்களிடம் இருந்து. ஆனால் கதையாசிரியன் பிரசாரம் செய்பவன் அல்ல. இரண்டு பக்கத்தினதும் நுண்ணிய விடயங்களை எ:டுத்துக்காட்டி வாசிப்பவரிடம் முடிவுகளை விடுவான். தமிழ்சமூகத்தில் போர்க்கால கதைகள் இனத்துவேசத்தையே காட்டி நிற்கும். இதற்கு மாறாக தமிழினியின் கதையில் இரணுவத்தினர் தங்கள் இழப்புகளை பேசுகிறது காட்டப்படுகிறது.

போரின் வெற்றியை புகழ்பாடாமல் அதன் வலியை, இழப்பை அழகாக கூறும் கதையிது. இந்தச் சிறுகதை தனது வடிவம் பொருள் என்பதோடு மானிடத்திற்கே பொதுவான நட்பை மிகவும் உயர்ந்த தரத்திற்கு சிறந்த படிமமாக கொண்டு செல்கிறது.

இந்தக்கதையின் இடங்களின் வர்ணனை மிகவும் அழகாக, அளவாக இருக்கிறது ‘மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப்’எப்பொழுதும் வானம்பொய்த்த அல்லது உழப்படாத விளைநிலத்தை அழகாக உருவகிக்கும்
அமரிக்கரான சேர்லி ஜக்சனின் “லாட்டரி “ என்ற கதையோடு ஒப்பிட்டு எழுதினேன். சேர்லி ஜக்சனின் பல கதைகள் எழுதினாலும் பேசப்படுவது இந்த லாட்டரி என்ற கதையே. அதைப்போல சிவாகாமியை தமிழினியாக நினைவுகூறாமல் தமிழில் சிறந்த ஒரு கதையை எழுதிய சிவகாமியாக நினைவு கூறவிரும்புகிறேன்

thamizini_jeyakumaran5
சிறுகதை: மழைக்கால இரவு.

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.

அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.
பெரும்பாலும் அன்றிரவு மீண்டும் எனது அணி போரின் முன்னணி களமுனைக்கு அனுப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்புடனிருந்தேன். எனக்கு தரப்பட்டிருந்த பதினைந்து பேர் கொண்ட அணியில் நேற்றிரவு நடந்தசண்டையில் காயமடைந்தவர்கள், மரணித்தவர்கள் போக ஆறு போ் தான் எஞ்சியிருந்தோம். வேறு அணிகளிலும் எஞ்சியவர்களை ஒன்று சேர்த்து அணிகள் மறு சீரமைக்கப்படும் வரை சிதைவுற்றிருந்த எம்மைப் போன்ற அணியினருக்கு சிறிய ஓய்வு தரப்பட்டிருந்தது.

அன்றிரவு நடந்த சண்டையில் காயமடைந்தவர்களை உடனடியாகவே பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ நிலைகளுக்கு அனுப்பியாகி விட்டது. மரணித்தவர்களின் உடல்கள் மட்டும் அது வரையிலும் அனுப்பப்படாமல் மழைத் தண்ணீரில் நனைந்து ஊறிப் பெருத்து உருமாறிக் கொண்டிருந்தது. அவைகள் பெற்றோர்கள் உரித்துடையோருக்கு ஒப்படைக்கப்படும்வரை மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது.

சங்கவி எனக்கருகில் படுத்திருந்தாள் அவள் எப்பவும் அப்படித்தான் நீட்டி நிமிர்ந்து மல்லாந்துதான் படுப்பாள். அப்படிப் படுக்கா விட்டால் நித்திரை வராது எனச் சொல்லுவாள். பொம்பிளைப் பிள்ளைகள் அப்பிடிப் படுக்கக் கூடாது என அவளின் அம்மம்மாவிடம் சின்ன வயதில் அடிக்கடி திட்டு வாங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறாள். ஆனாலும் அந்தப் பழக்கம் நானறிந்த வரையிலும் அவளுக்கு மாறவேயில்லை. தலை ஒரு பக்கமாக திரும்பியிருந்தது, வாயைக் கொஞ்சமாக திறந்து கொண்டு படுத்திருந்தாள். குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது.

ஆறெழு மாதங்களுக்குப்பின் அன்றுதான் அப்பிடி நிறைய நேரம் சங்கவி படுத்திருந்தாள். நேற்றுக் கூட சொல்லிக் கொண்டிருந்தாள், ’இந்த சண்டை முடியவிட்டு முதலில நிம்மதியா நித்திரை கொள்ளவேணும்.’ உண்மைதான், அந்த யுத்தத்தின் தயார்ப்படுத்தலுக்காக, சுமார் ஒரு வருட காலமாகவே தொடர் பயிற்சிகளும் துாக்கமில்லா இரவுகளும்தான் எங்களுக்கு வாய்த்திருந்தது.

போர் தொடங்குவதற்கு முதல்நாள் முன்னிரவுப் பொழுதில் மழை சற்று ஓய்ந்திருந்தது. கருமையான வானத் திரையில் பதிக்கப்பட்ட வைரக்கற்களாக நட்சத்திரங்களின் ஜோலிப்பு மனதைக் கொள்ளையடிப்பதாயிருந்தது. ஐயாயிரம் போராளிகள் பங்கு பற்றும் பெரும் போர் நடவடிக்கையின் கடைசி ஆயத்தங்கள் முடிந்து புறப்படுவதற்கான இறுதி தரிப்பிடங்களில் படையணிகள் நிலை கொண்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் அந்த இராணுவ முகாமின் பாரிய தேடோளி விளக்குகள் ஆங்குமிங்குமாக சுழன்று சுழன்று இரவைப்பகலாக்கி தமது விழிப்பு நிலையை காண்பித்துக் கொண்டிருந்தன.

சிறிய மா மரமொன்றின் அடியில் சாய்ந்திருந்த என்னருகில் சங்கவியும் ஓய்வாக அமர்ந்திருந்தாள். மந்தகாசமான புன்னகையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விரிந்த உதடுகளும், கனவு காணுமாப் போல பாதி செருகிக்கிடந்த கண்களும், அவளிதயம் விபரிக்க முடியாத உணர்வுகளுக்குள் லயித்திருப்பதை எனக்கு உணர்த்தியது. “என்னடி முழிச்சுக்கொண்டே நித்திரை அடிக்கிறியோ” எனது சீண்டல் அவளைக் குழப்பியதாக தெரியவில்லை. என்னிதயத்திலும் பொங்கியெழும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தாலும், அவளது அந்த இனிய மோன நிலையை குழப்பவும் மனமில்லாதிருந்தது..

ஒரு போர்ப் பயணத்திற்குரிய பரபரப்பான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் ஒரு சில மணித்தியாலயங்களில் புறப்படுவதற்கான பதட்டம் அனைவரின் முகங்களையும் கனமாக மூடியிருந்தது.
பலர் தாழ்ந்த குரல்களில் தம் தோழியருடன் கதைத்துக் கொண்டிருந்தனர். சிலர் பாதி நிலவு தெளித்திருந்த ஒளியில் தம் உறவுகளுக்கு இறுதியாக சொல்ல நினைக்கும் செய்திகளை கடிதங்களாக வரைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் எல்லா சலனங்களையும் ஒத்தி வைத்து விட்டவர்கள் போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.

தன் மௌனம் கலைந்த சங்கவி எனது கையுடன் தனது விரல்களைக் கோர்த்துப் பிணைந்து கொண்டாள். எதையோ பேசுவதற்குத் தயாராகிறாள் என்பது புரிந்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்தில நிலைமை எப்படி மாறப்போகுது. அழகான இந்த இரவின்ர அமைதியே குலையப் போகுது, எத்தனை அம்மாக்களின்ர பத்து மாதக் கனவுகள் கலையப் போகுது நாளைக்கு எங்கட சனங்கள் விழுந்தடிச்சுக் கொண்டு பேப்பர் எடுப்பினம்”
எனக் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகிப் போனாள். நாங்களிருவரும் சம வயதுடையவர்கள். எமக்கு விபரம் புரியத் தொடங்கிய சிறு வயதிலிருந்தே தொண்டையை நெருக்கிக் கொண்டிருக்கின்ற யுத்தத்தின் பாடுகளுக் கூடாகவே வளர்ந்திருந்தோம். நான் வன்னியின் ஒரு கிராமத்திலும் அவள் யாழ்ப்பாணம் வடமராட்சியின் ஊரொன்றிலும் பிறந்திருந்தாலும், அமைதியான ஒரு வாழ்வு எப்படியிருக்கும் என கற்பனை பண்ணிக் கூட பாரக்கவே முடியாதளவுக்கு மலைப்பாம்பு மாதிரி எமது வாழ்வை வளைத்து இறுக்கிக் கொண்டிருந்தது நீண்டு கொண்டேயிருந்த யுத்தம்.

விறைப்பெடுக்கச் செய்த குளிரையும் மீறி பெரு மூச்சொன்று அவளிடமிருந்து சூடாக வெளியேறியது. எனக்கோ என்றால் நெஞ்சுக்குள்ளாக பாராங்கல்லொன்று அடைத்துக்கொண்டு இருப்பதைப் போல சாதாரணமாக மூச்செடுத்து விடவும் கூட கடினமாக இருந்தது. அவள் சொல்லுவதை மட்டுமே நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்ற கனவு உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும்போதே ஊரில் நிலவிய யுத்த சூழ்நிலையில் எம்மைப் போன்ற பலருக்கும் கூட கலைந்து போயிருந்தது. ஏதாவது புதுமைசெய்யத்துடிக்கும் அந்த பதின்மப் பருவத்தில் போரிடுதல் ஒன்றுதான் எமது கனவுகளை நனவாக்கும் எனக் கருதினோம். யாழ் நகரத்தில் உள்ள பிரபல கல்லுாரியின் மாணவியான சங்கவியும் வன்னிக் கிராமத்து பள்ளியொன்றின் மாணவியான நானும் போர்ப் பயிற்சிப் பாசறையின் நண்பிகளானோம்.

எம் நினைவுகளை கலைத்தவாறு சட்டென மரக்கிளைகள் அலைப்புற இரவுப் பறவையொன்று வேகமாக எழும்பிப் பறந்து சென்றது. பொல பொலவெனச் சிதறிய தண்ணீர் துளிகள் இருவரின் தலைகளையும் நனைத்துச் சிதறியது. தண்ணீரைக் கைகளால் வழித்து எறிந்துகொண்டு உடைகளையும் இலேசாக உதறிக்கொண்டோம். தடிப்பான சீருடையையும் தாண்டி தேகம் சிலிர்த்தது

“இந்த சண்டை முடிய எல்லாருக்கும் லீவு கிடைக்கும் என பொறுப்பாளர் சொன்னவா, நான் உன்னோட வரட்டுமா? எனக்கு வன்னியில ஊருகளைப் பாக்கிற தெண்டால் சரியான விருப்பமடி. பச்சையான வயலுகளும் நெளிஞ்சு நெளிஞ்சு ஓடுகிற வாய்க்கால்களும், பென்னாம் பெரிய யானை நிக்கிற காடுகளும் அப்பப்பா என்ன இயற்கையப்பா..”

“அதுக்கென்னடியப்பா வா போவம் நான் பள்ளிக்கூடம் கொண்டு போன சைக்கிள் இப்பவும் இருக்குமெண்டு என நினைக்கிறன், இரண்டு பேரும் சுத்தித் திரியலாம், நான் படிச்ச பள்ளிக் கூடத்தைக் காட்டுறன், நானும் கூட்டாளிப் பிள்ளைகளும் தாவணி உடுத்துக் கொண்டு ஆனி உத்தரத் திருவிழா பார்க்கப் போன முருகன் கோயிலைக் காட்டுறன், அங்க போகிற பெட்டையள் கூட்டத்தைக் கண்டாலே நாதஸ்வரக்காரன் ’ராசாத்தி மனசில’ பாட்டுத்தான் வாசிப்பான் தெரியுமாடி நாங்கள் அவரை கோவத்தோட நல்லா முறைச்சுப் பாத்திட்டு வருவம்”
எனது கதையைக் கேட்டதும் பக்கென வெடித்த சிரிப்பை அடக்குவதற்காக தனது வாயை கைகளால் இறுக்கி பொத்திக்கொண்டாள் சங்கவி. மிக அருகான இராணுவதளத்திலிருந்து ஆட்லெறி எறிகணையொன்று ’கும்’ என்ற அதிர்வுடன் எழும்பி கூவிக் கொண்டு புறப்பட்ட சிலநொடிகளிலேயே தூரத்தில் வெடித்துச்சிதறும் சத்தம் கேட்டது. எத்தனை தொட்டில் குழந்தைகளின் உறக்கம் கலைந்து போனதோ என எண்ணிக் கொண்டேன்.
தலையை உலுக்கி நினைவுகளை உதற முனைந்தேன்.. அசையாமல் படுத்திருக்கும் சங்கவியின் கிராப்புத் தலை முடியினை கோதி விட வேண்டும் போலிருந்தது. இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களில் எல்லாமே புதியதான காலகட்டம், இறுக்கமான நாளாந்த அட்டவணையின்படி செயற்படவேண்டும். பயிற்சி முகாமில் மிகவும் துடிப்பான, கலகலப்பான போ்வழிகளான நாம் அனைவராலும் விரும்பப்பட்டவர்களாக இருந்தோம். பெரும்பாலும் ஒத்துப்போகும் இயல்புகள், ரசனைகள், வேறுபட்ட சிந்தனைபோக்கு இவைகளினால் இணைபிரியாத எமது நட்பு பொறுப்பாளர் மட்டங்களிலும் பிரசித்தமானதாகவே இருந்தது.

ஓய்வு நேங்களில் புத்தகவாசிப்பு, ஒன்று சேரும் நேரங்களில் நீளும் உரையாடல்கள், அப்பப்பா எப்பவுமே முடிவடையாதது எங்களின் சம்பாசணைகள் அவளது மூளையின் மடிப்புகளில்தான் எத்தனை கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் வைத்திருந்தாள். சராசரியான விடயங்களை பேசிக் கொள்ளும் தோழிகளோடு எங்களிருவருக்கும் எப்போதுமே ஒத்துப்போவது குறைவு. எமது உரையாடல்களில் பங்கு பற்றும் தோழிகள் சற்று நேரத்தில் ’இதுகள் சரியான கழண்ட கேசுகள்’ எனும் விதமான பார்வையை வீசி விட்டு மெதுவாக இடத்தைக்காலி செய்து விடுவார்கள்.

அந்த யுத்த நடவடிக்கை சரியாக நள்ளிரவு ஒன்றறை மணிக்கு ஆரம்பிக்கப் படவிருந்தது. மிகவும் இரகசியமான சங்கேத சமிக்கைகளுடன் எமது ’முன்னரங்க தடை உடைக்கும்’ அணியும் முன்னணியில் நகர்ந்து கொண்டிருந்தது. ’உச்ச பாதுகாப்புடன் இருந்ததான அந்த இராணுவ முகாமின் முன்னணிப் பாதுகாப்பு வேலியில் காணப்படும், முள்ளுக்கம்பி சுருள்களையும், நிலக் கண்ணிகளையும், சூழ்ச்சிப் பொறிகளையும் தகர்க்கக் கூடிய டோபிடோ குண்டுகளை வெடிக்க வைத்து பாதையொன்றை ஏற்படுத்திக் கொண்டு, இராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியவாறு, உயரமான மண்அரணை வேகமாக கடந்து உள்ளுக்கு இறங்க வேண்டும்.
பின்னுக்கு வரும் தாக்குதல் அணிகள் அந்தப் பாதைக்கூடாகவே முன்னேறிச் சென்று இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பிரதான மையங்கள் மீது தாக்குதலை மேற் கொள்ளுவார்கள்’ இதுதான் எனது அணிக்கு தரப்பட்டிருந்த தாக்குதல் திட்டம். இதற்கான கடின பயிற்சிகளையும் சண்டைக்கான ஒத்திகையினையும் மேற் கொண்டிருந்தோம். இராணுவ தளத்தினை சுற்றி வளைத்து பல முனைகளிலும் அணிகள் இவ்வாறாக பாதைகளை உடைக்க வேண்டியிருந்தது. அந்தப் பாதைகளுக் கூடாக இராணுவ முகாமுக்குள் பெரியளவில் படையணிகள் உள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் திட்டமாக இருந்தது. இராணுவ முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும், பெறுமதியான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும் எனவும், இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக சுமார் ஐயாயிரம் போராளிகள் வரை யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கூறப்பட்டிருந்தது. இறுதி ஒத்திகைப் பயிற்சி முடிந்து, வரைபடத்தில் விளக்கம் தரப்பட்டு, முழுமையான ஆயுதபாணிகளாக படையணிகள் தயார்ப்படுத்தப்பட்டு, “சென்று வாருங்கள் வென்று வாருங்கள்” என வாழ்த்துக் கூறி வழி அனுப்பப் பட்டிருந்தோம். போர்க்களத்தின் சூனியப் பிரதேசத்தை அண்மித்த பகுதிவரை தாக்குதல் அணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு பின்னால் பல லொறிகளில் ஆயிரக்கணக்கான சவப்பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு கூடவே கொண்டு வரப்பட்டிருந்தன.

தாக்குதல் தொடங்கிய சற்று நேரத்திலேயே எமது அணி உள்நுழைந்து விட்டிருந்தாலும், மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை கடந்து முன்னேறிச் செல்லும் முயற்சியிலே அந்த இடத்திலேயே பலர் உயிரிழக்க நேர்ந்தது. இராணுவத்தினர் கனரக ஆயதங்களின் உதவியுடன் பலமான எதிர் தாக்குதலை மேற் கொள்ளத் தொடங்கியிருந்தனர். மிகுந்த பிரயத்தனத்துடன் எனது அணி தனது பணியை முடித்திருந்த போது ஆரம்ப நகர்விலே எம்முடனிருந்த பல தோழிகள் உயிரிழந்தும், இன்னும் சிலர் படு மோசமான காயங்களையும் அடைந்திருந்தனர். எஞ்சியிருந்தவர்கள் பயங்கரமாகக் களைப்படைந்திருந்தோம்.

அந்த இராணுவ தளம் வயல் வெளி சூழ்ந்த பிரதேசமாகையால், ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளிலிருந்து வந்த எதிர்த்தாக்குதல்களால் எமது தரப்பு அணிகள் வயல் வெளியைக் கடக்கும் முயற்சியிலேயே அடிவாங்க வேண்டியிருந்தது. தொடர்ந்து பலர் உயிரிழந்தும், காயமடைந்தும், கொண்டிருந்தனர். உயரமான காவலரணிலிருந்து மேற் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சினைப்பர் தாக்குதல்(குறிபார்த்துச் சுடுதல்) மிகுந்த நெருக்கடியை தந்தது. வரம்புக்கு மேலாக தலையை உயர்த்தினால் கட்டாயம் வெடி விடும் என்ற நிலைமையிலும், இராணுவ காவலரண்களை நோக்கி தாக்குல் நடத்தியவாறு எழும்பி ஓடிச் சென்றவர்கள் தலையிலும், மார்பிலும் சூடுகளை வாங்கியபடி சேற்றுத் தண்ணீர் தளம்பிக் கொண்டிருந்த வயல்களுக்குள் சரிந்து விழுந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியாமலிருந்தது.
அப்படியிருந்தும் பல அணிகள் உள்நுழைந்து மிக நெருக்கமான நிலையில் நின்று போரிட்டனர். அருகருகாகவே இறந்தும் விழுந்தனர். சிக்கலான முள்ளுக் கம்பிச் சுருளுக்குள் ஒரு ஆண் போராளி காயத்துடன் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருந்தான், அவனை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஓடிச் சென்ற பெண் போராளி ஒருத்தி அந்த இடத்திலேயே சூடுபட்டு விழுந்தாள். பல மணி நேரமாக அந்த இடத்தை எவராலும் நெருங்கவே முடியாமலிருந்தது. அதிகமான இரத்தம் வெளியேறியதால் சற்று நேரத்தில் அவனது சடலம் அக்கம்பிச் சுருளுக்குள் அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

எனது அணி மிகவும் நலிவடைந்திருந்தது. காயமடைந்தவர்களுக்கான அவசர முதழுதவிகளை வழங்கி அவர்களை ’காவும் குழுவினர்’ பின்னணி மருத்துவ நிலைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும் தூக்கிக் கொண்டு பின்வாங்கும்படி எனது அணிக்கு கட்டளை கிடைத்தபோது பொழுது புலரத் தொடங்கியிருந்தது.

அன்று நண்பகல்வரையிலும் உக்கிரமாக நீடித்த சண்டை சற்று தணிவான நிலைமைக்கு சென்றிருந்தது. அப்போது களமுனையில் ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியிருந்தது. ஓய்வில்லாதபடி குண்டுகளைச் சொறிந்து கொண்டிருந்த வானூர்திகளும் ஓய்வெடுக்கின்றன போல என நினைத்துக் கொண்டேன்.
எமது அணி ஓய்வுக்காக நிலை கொண்டிருந்த பூவரசு வேலிக் கரையினை அண்டிய சிறிய மண் பாதைக் கூடாக, முன்னணி நிலைகளில் நின்று போரிட்டு எம்மைப் போல பலமாக சிதைவுற்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எனக்கு அறிமுகமான பலரது முகங்கள் காணாமல் போயிருந்தது. அவர்கள் காயமடைந்தோ அல்லது மரணித்தோ போய்விட்டார்கள் என மனம் சொல்லிக் கொண்டது. அதேவேளை பல புதிய அணிகள் ஓட்டமும் நடையுமாக முன்னணிக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தன. கைகளிலும், கால்களிலும் உடலின் பல பாகங்களிலும் பாரிய காயங்களுடன் அலறிக் கொண்டிருந்த காயக்காரர்களையும், உயிரிழந்து கிடந்த சடலங்களையும் கடந்தவாறு முன்னணிக்கு களமுனைக்கு சென்று கொண்டிருந்தவர்களின் முகத்தில் எந்தச் சுரத்துமே இல்லாதிருந்தது.

அன்றிரவு களமுனையில் நான் கண்டு கடந்து வந்த காட்சிகள் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நின்று சுழன்று கொண்டிருந்தன. சினிமாவில்கூட இரத்தக்காட்சிகள் வரும்போது கண்களை மூடிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்தான் எனது அதிகமான தோழிகள். காலம் எம்மீது திணித்துவிட்டிருந்த அந்த போராட்ட வாழ்க்கையின் . சில தருணங்களில் நாம் கண்னால் காணும் காட்சிகள் மனதை மிகவும் பேதலிக்கச் செய்பவையாக இருந்தாலும் கட்டளைக்கு கீழ்பணியும் இராணுவ மரபு செயலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் இயந்திரம் போலாக்கிவிடும்.

அன்றையபோரில் ஈடுபட்டுக் மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது.

ஓயாமல் பெய்த வண்ணமேயிருந்த மழை அங்கு சிந்திக் கொண்டிருந்த இரத்தத்தை கரைத்துக் கொண்டு சிவப்பு வெள்ளமாக வயல்களிலும், வாய்க் கால்களிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது . அந்தக் குருதிச் சகதியில் கால்கள் புதையப் புதைய நடந்த போது, இனம்புரியாத ஏதோவொரு இயங்குவிசை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போவதைப் போல உணர்ந்தேன்.

அடுத்த கட்டளை எந்த நேரத்திலும் எனது அணிக்கு பிறப்பிக்கப்படலாம் என்பதை ஊகிக்க முடிந்தது, உடனடியாக முன்னேறிச் செல்வதற்குரிய தயார் நிலையில் இருந்து கொள்ளும்படி எனது அணியைச் சேர்ந்த தோழிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தேன். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாயிருந்த, அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களிலும் களைப்பு அப்பிப் போயிருந்தது. நின்று நிதானித்துக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை, தமக்காக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த உலர் உணவுகளை உண்டு பசியாறிக்கொண்டும், தமது துப்பாக்கிகளை சுத்தப்படுத்திக் கொண்டுமிருந்தனர். அவர்களிடையே வழக்கமான எந்த சல சலப்புக்களும் இருக்கவில்லை, ஒரு இறுக்கமான மனநிலையுடன், கட்டளைகளை செயற்படுத்துவதில் மட்டுமே அவர்களுடைய புலன்களை குவித்திருந்தார்கள், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த சண்டை முடிவுக்கு வரும் போது, உயிரோடு திரும்பும் சந்தர்ப்பம் சிலருக்காவது கிடைக்கலாம். ஆனாலும் எல்லா முகங்களிலுமே அப்படியொரு நிச்சயம் முற்றாக துடைக்கப்பட்டிருந்தது.

திடீரென உலங்கு வானூர்திகள் சில மும்முரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டே வட்டமடிக்கத் தொடங்கின. வேறு சில உலங்கு வானூர்திகள். தரையிறங்குவதும் மேலெழும்புவதுமாக இருந்தன. இராணுவத்தினரும் தமது அணிகளை தயார்படுத்துகிறார்கள் எனப்புரிந்தது. அவர்களில் காயப்பட்டிருந்தவர்களையும், உயிரிழந்துவிட்டவர்களின் உடல்களையும் அந்த வானுார்திகளில் ஏற்றிச் செல்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களில் எஞ்சியிருப்பவர்களும் பிரிந்து போன தமது நண்பர்களுக்காக மனம் வருந்திக் கொண்டு, அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.

எனது பார்வை உறங்கிக்கிடக்கும் சங்கவி மீது படிந்தது. சாதாரண நாட்களில் தலையிடி காய்ச்சல் எனக்கூட படுத்தறியாத சங்கவி, பயிற்சிக் காலங்களில் நின்று கொண்டே நித்திரை கொள்ளுவாள். குப்புறப்படுத்து நிலையெடுத்தால் பாதியுடம்பு மூழ்கும்படியானபடியான சேற்று வயலில் மணிக்கணக்காக நீளும் இரவுப் பயிற்சிகளின் போது மெல்லிய குறட்டையுடன் அவள் உறங்கி விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் இப்போது அவளைப்பார்க்க பொறாமையாக இருந்தது. எப்படியொரு நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றிருக்கிறாள். எனக்கும் கூட உடனடியாகவே அவளைப்போல உறங்கிவிட வேண்டும் போலிருந்தது.

வானூர்தியிலிருந்து படையினருக்கு வீசப்பட்டிருந்த உணவுப் பொதிகள் எமது பக்கத்திற்கும் தாராளமாகவே வந்து விழுந்திருந்தன. பேரீச்சம்பழ பக்கற்றுக்கள், டின்களில் அடைக்கப்பட்ட சமைத்த உணவு வகைகள், சீஸ்கட்டிகள், இப்படி நிறைய, ஆனால் எனக்கோ பசி, தாகம் என்பதை உணர முடியாமலிருந்தது. எனது வயிறு ஒட்டிப் போய் இறுகிக் கிடந்தது. ஒருமிடறு தண்ணீர் கூட உள்ளிறங்குமா எனத் தெரியாதிருந்தது.
முதல்நாள் மத்தியானம் விசேட உணவாக தரப்பட்டிருந்த புரியாணிப்பார்சலில், மிகவும் சுவையாக சமைக்கப்பட்டிருந்த கோழியின் கால் எலும்பை கடித்து சுவைத்துச் கொண்டிருந்த சங்கவியின் தோற்றம் கண்ணுக்குள் வந்து நின்றது, அவள் நல்ல சாப்பாட்டுப்பிரியை, எஸ். பொ வின் “நனைவிடை தோய்தல்“ புத்தகத்தை வாசித்து வாசித்தே நாக்கைச்சப்புக் கொட்டுவாள்.

“இந்தச்சண்டை முடிந்தவுடனே வீட்டுக்கு போய் முதல் வேலையாக அம்மாட்டச் சொல்லி குழல்புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும், நிறைய வெங்காயம் போட்ட முட்டைப் பொறியலும் செய்து சாப்பிடவேணுமடி” என்பாள். சாதாரணமாக பசியிருக்கவே மாட்டாள், கொஞ்சமாக வயிறு கடிக்க ஆரம்பித்ததும் எல்லா வேலைகளையும் மறந்து எங்கயாவது கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா, என தேடத் தொடங்கி விடுவாள். நள்ளிரவு நேரமானால் கூட காவல்கடைமை முடித்த கையுடன் ஏதாவது கொறித்து விட்டுத்தான் நித்திரைக்குப் போவாள். இப்போது பசியே இல்லாத மாதிரி படுத்துக் கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சங்கவியின் ஜீன்ஸ் பொக்கட் ஒன்று புடைத்துக் கொண்டு இருப்பதைக்காணமுடிந்தது. கையை உள்நுழைத்துப் பார்த்தேன். “ஓ…. முதல் நாளிரவு கடைசியாக அனைவருக்கும் பகிரப்பட்ட அப்பிள் பழம். இதையேன் சாப்பிடாமல் வைத்திருந்திருந்தாள் என்ற கேள்வி மனதிற்குள் ஓடியது. எத்தனை நாட்கள் ஒரு கப் தேனீரை மாறி மாறி குடித்திருக்கிறோம், ஒரு கோப்பையில மட்டுமே சோறு கிடைக்கும் சந்தர்ப்பங்களில், “அள்ளிச்சாப்பிடு அள்ளிச்சாப்பிடு” என வாஞ்சையுடன் எனக்கென ஒதுக்கி விட்டுக் கொண்டு தான் உண்பது போன்ற பாவனையில் இருந்திருக்கிறாள். நட்புடன் பகிர்ந்து ருசிக்கும் பிஞ்சு மாங்காயின் சுவை கூட, எவ்வளவு அலாதியானது. காதைச்சுற்றி ரீங்காரமிடும் துரத்த முடியாத வண்டுகளைப்போல நினைவுகள் சுழலுகின்றன.

எனது கைகள் அவளின் நெற்றியை வருடின. முதல்நாள் மாலை திடீரென தனது குறிப்பு புத்தகத்தை என்னிடம் நீட்டியிருந்தாள் “இதை உன்ர பாக்கில வை இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டாள்.. “திரும்பிப் போகக் கிடைத்தால் நிறையக் கதைகள் எழுத வேணும்” கொள்ளை கொள்ளையான கதைகளை மூடி வைத்திருக்கும் பெட்டகம் மாதிரித்தான் அவளுடைய மனதும் இருந்தது,

சங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபட வென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம்.

அன்றிரவு எமது அணிகள் முன்னேறிச் சென்று போரிட்டுக் கொண்டிருந்த போது, சங்கவியும் தனது அணியுடன் போரில் ஈடுபட்டிருந்தாள். அப்பொழுது சரமாரியாக அவளது அணியை நோக்கி தீர்க்கப்பட்ட வேட்டுக்களில் ஒரே ஒரு ரவை அவளது இதயப்பகுதியை ஊடுருவிச் சென்றிருந்தது. உடனே சற்று தலையை உயர்த்தியவளிடமிருந்து ’ஹக்’ என்ற விக்கல் போன்ற ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்தகணம் வாயிலிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்த வெளியேறியது. எந்த துடிப்போ, துள்ளலோ இல்லாமல் மௌனமாக தலை சரியத் தொடங்கிய சங்கவியின் முகம் சேற்று வயலில் பொத்தெனப் புதைந்து போய் விட்டது .

அவளது உடலையும் தோளிலே சுமந்து கொண்டுதான் பின்வாங்கியிருந்தோம். வெகு நேரத்தின் பின்பு அதையும் அனுப்பியாயிற்று. பளிச்சென்ற குங்குமம் தீட்டிய அவளது தாயின் வதனமும், கனிவான புன்னகை படர்ந்திருக்கும் அவளின் தந்தையின் முகமும் எனது கண்களுக்குள் வந்து நின்றது. அடி வயிற்றிலிருந்து கிளம்பிய திரணையொன்று நெஞ்சுக்குள்ளேயே சிக்கிக் கொண்டதால் பிளந்து விடுவது போன்ற வலியில் மூச்சு திணறியது எனக்கு. தீக்கங்குகள் போல சிவந்துபோயிருந்த கண்களின் எரிவு தாங்கமுடியாதிருந்தது. அந்த உழவு இயந்திரத்தின் சத்தம் தூரத்தில் தேய்ந்து மறைந்து போனது. எனக்கோ அசையவும் முடியாமலிருந்தது.

“உங்கட ரீமை வேகமாக நகர்த்திக் கொண்டு ஆழமரத்தடி சந்திக்கு வாங்கோ”. வோக்கி டோக்கி இரைச்சலுடன் எனது அணிக்கான கட்டளையை அறிவித்திருந்தது, மீண்டும் போர்க்கள முன்னணிக்கு நகர்வதற்கானக்கான வேகமான தயார்ப்படுத்தலுக்காக அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன, கரு மேகங்கள் சூழ்ந்த வானம் இருள்மூடிக் கிடந்தது. நசநச வென்று வெறுக்கும்படியாக மழை பெய்து கொண்டேயிருந்தது, இடை வெளியில்லாமல் காது கிழியும்படி பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன. நிணமும் குருதியும் கடைவாயில் வழிய வழிய பசியடங்காத பூதம்போல மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம்.
(1993-11-11) பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டது)

நன்றி பதிவுகள்

“தமிழினியின் பன்முகம்.” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: