பேராசிரியர் கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூலுக்கு ” மாக்ஸீயக்கல்லறையிலிருந்து குரல் ” – என்று எதிர்வினையாற்றியவரும் விடைபெற்றார்.
இலக்கிய முகாம்களில் பேசுபொருளான அந்த ஆளுமையின் மதிப்பீடுகள் காலத்தையும் வென்றுவாழும்
முருகபூபதி – அவுஸ்திரேலியா
நேற்று 21 ஆம் திகதி மெல்பனில் சிறிய பயணத்தில் இருந்தேன். நண்பர் நடேசன் தொடர்புகொண்டு, ” இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனும் மறைந்துவிட்டார் ” என்ற அதிர்ச்சியான தகவலைத்தந்தார்.
இதில் கவனிக்கவேண்டியது, ” வெங்கட்சாமிநாதனும் ” என்ற பதம்தான். வெ.சா. மறைந்தார் என்று சொல்வதற்கும் வெ.சாவும் மறைந்தார் என்று அழுத்தமாகச்சொல்வதற்கும் இடையே நூலிழை வேறுபாடு இருக்கிறது.
இவரும் போய்விட்டார் என்பது, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பல ஆளுமைகள் அடுத்தடுத்து போய்விட்டமை குறித்த வருத்தம்தான். எனினும் நண்பர் நடேசனின் அந்தத் தகவல் சரியா…? தவறா…? என்ற மனக்குழப்பத்துடன் பயணம் தொடர்ந்தேன்.
சில நாட்களுக்கு முன்னர் நடிகை மனோரமா மறைந்து ஓரிரு நாட்களில் புன்னகை அரசி நடிகையும் போய்விட்ட தகவலையும் இந்த நண்பர்தான் சொன்னார். ஆனால் – அதுதவறானது என்பது பின்னர் ஊர்ஜிதமானது.
எனினும் வெ.சா.வின் மறைவு பற்றிய தகவலும் பொய்யாகவே இருக்கவேண்டும் என விரும்பினேன்.
வீடு திரும்பியதும் மனைவி ” இன்று சரஸ்வதி பூசை – கெதியா குளிச்சிட்டு வாங்கோ… விளக்கேற்றி பிரார்த்திக்கவேண்டும் ” என்று சமையலறையிலிருந்து ஏதோ பூசை படையலுக்கு தயாராகிக்கொண்டு குரல்கொடுத்தாள்.
உடனே நான், ” வெங்கட் சாமிநாதன் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. அதனை நம்பமுடியவில்லை. எதற்கும் அறிந்துகொண்டு வருகிறேன் ” எனச்சொல்லிக்கொண்டு உடையும் மாற்றாமல் கணினியின் முன்னமர்ந்தேன்.
அதுவும் என்னைப்போல் தாமதமாகவே விழிக்கும். பதட்டத்துடன் தேடியபொழுது கனடா கிரிதரனின் பதிவுகளும் ஜெயமோகனின் வலைப்பூவும் அந்த இலக்கிய விமர்சன மேதையின் மறைவை ஊர்ஜிதம் செய்தன. விக்கிபீடியாவும் தகவல் தந்திருந்தது.
” வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கு இடம் ஏது” என்று சுடலைஞானம் பேசிக்கொண்டு , முற்பகல் பயணத்தில் எனது நினைவுகளை முற்றாக ஆக்கிரமித்திருந்த வெங்கட் சாமிநாதன் பற்றி எழுதத்தொடங்கினேன்.
பிடித்தமானவர்களின் மறைவு தரும் மன அழுத்தங்களை அவர்கள் பற்றி எழுதி போக்கிக்கொள்ளும் இயல்பு என்னிடம் நெடுங்காலம் பற்றிக்கொண்டிருக்கிறது.
மனைவி எனது அறைக்கு வந்து தனது இடுப்பில் கைவைத்துக்கொண்டு, ” சரஸ்வதிக்கு விளக்கேற்றப்போகிறேன். நீங்களும் குளித்துவிட்டு வந்து சரஸ்வதியையும் பிரார்த்தித்து மேலே போய்விட்ட வெங்கட் சாமிநாதனின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டிக்கொள்ளுங்கள் ” – என்று சற்று உரத்த குரலில் சொன்னாள்.
வீட்டுக்கு விளக்கேற்றியவள் பேச்சைத்தட்டலாமா…? மனைவி சொல்லே மந்திரம் அல்லவா….? அவள் சொன்னதை செய்தேன்.
நான்குவயதில் எனது பாட்டி சொல்லித்தந்த,
“அன்னை சரஸ்வதியே அடியென் நாவில் குடியிருந்து அருள்புரிவாய் மிகுந்து, நன்நூலிலக்கணங்கள் நானறிகிலேனே… உனை நம்பினேனே நற்குகந்து நற்கருணை தாராய்…” என்ற பாடலை முழுவதுமாக பாடும்பொழுது எனக்கு ஏனோ கண்கள் கலங்கின.
அது பாட்டியை நினைத்தா…? அல்லது அடுத்தடுத்து விடைபெற்ற ஆளுமைகளை நினைத்தா….? என்பது தெளிவில்லாமல் நேற்றைய பயணத்தில் நான் நினைவிலிருத்திய வெ.சா. பற்றிய முக்கியமான விடயங்களை இங்கே வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
இந்தப்பதிவு எனது வழக்கமான திரும்பிப்பார்க்கின்றேன் தொடருக்குள் வருகிறதா…? அல்லது எழுத மறந்த குறிப்புகளுக்குள் வருகிறதா ….? அப்படியும் இல்லையென்றால் வெ.சா.வுக்குரிய அஞ்சலியா….? என்பதும் தெரியாமல் எழுதுகின்றேன்.
” வாழ்க்கையில் தனக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளவாறு வாழ்ந்த ஆளுமைகளின் மறைவை கண்ணீர்விட்டு கதறி அழுது துயரம் பகிராமல், அவர்களை மனதிலிருத்தி அவர்தம் நினைவுகளை நாம் கொண்டாடவேண்டும் ” என்று எனது நண்பர் மாவை நித்தியானந்தன் ஒரு தடவை சொன்னார்,
ஆம்…. வெங்கட் சாமிநாதன் என்ற ஆளுமையும் கொண்டாப்படவேண்டியவர்.
இலங்கையில் 1970 – 1975 காலகட்டம் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையும் இனநெருக்கடிக்கானதும் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிக்கானதுமான அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தது.
கலை, இலக்கியப்பார்வையிலும் சிந்தனைமாற்றத்தை தீவிரமாக்கியிருந்தது. கொழும்பில் 1972 ஜூலை மாதம் நடந்த பூரணி காலாண்டிதல் அறிமுக அரங்கு எனது வாழ்வில் ஒரு திருப்புமுனை. நவீன இலக்கியத்தில் அரிச்சுவடியில் நின்ற எனக்கு அந்த நிகழ்வு தெளிவின்மையை தந்தது. ஆயினும் அன்றுதான் நான் சந்தித்த, பின்னாளில் என்னைக்கவர்ந்த பல இலக்கிய ஆளுமைகளின் உறவும் நட்பும் சித்திப்பதற்கும் பூரணி முதல் இதழ் வெளியீட்டு அரங்கு அடிப்படையாக இருந்தது.
இரண்டாவது பூரணி இதழில் எனது இரண்டாவது சிறுகதையும் வெளியானது. அதனையடுத்து கொழும்பு சட்டக்கல்லூரியில் கு.விநோதன் தலைமையில் பூரணி விமர்சன அரங்கு நடந்தபொழுதுதான் முதல் முதலில் எச்.எம்.பி. மொஹிதீனையும் பார்த்தேன். அன்றைய நிகழ்வும் முக்கியமானது. பின்னாளில் இலங்கை அரசியலில் பிரகாசித்த விநோதன், அஷ்ரப், ஸ்ரீகாந்தா ஆகியோரும் அப்பொழுது சட்டக்கல்லூரி மாணவர்கள். அந்த நிகழ்ச்சிபற்றிய செய்திக்கட்டுரை எழுதி பூரணியின் கொழும்பு முகவரிக்கு அனுப்பினேன். அதனையும் ஆசிரியர் என்.கே. மகாலிங்கம் அடுத்துவந்த பூரணி இதழில் வெளியிட்டு எனது எழுத்துக்களுக்கு அங்கீகாரம் தந்தார்.
அவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், நேரம் கிடைக்கும்பொழுது கொழும்பு கொட்டாஞ்சேனையிலிருக்கும் சப்பாத்து வீதியில் அமைந்துள்ள தமது இல்லத்திற்கு வருமாறும் அழைப்புவிடுத்தார்.
இங்குதான் மு.பொன்னம்பலம், சட்டநாதன், வில்வரத்தினம் ஆகியோரையும் சந்தித்து உரையாடினேன். மகாலிங்கம் அவர்களின் மனைவி நன்றாக உபசரிப்பார். பல நாட்கள் அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்திருக்கின்றேன். அந்த இல்லத்தில் நடந்த சந்திப்புகளில் மு.தளையசிங்கம் கண்டியிலிருந்து வெளியான செய்தி என்ற இதழில் தொடராக எழுதிய ” ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ” பற்றியும் கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூல் பற்றியும் வெங்கட்சாமி நாதன் என்பவர் அந்த நூலுக்கு எதிர்வினையாற்றி எழுதியிருப்பது பற்றியும் பலரும் பேசிக்கொண்டார்கள்.
நான் எதுவும் புரியாமல் வாயைப்பிளந்துகொண்டிருந்தேன்.
அந்த இல்லத்திற்கு அடிக்கடி சென்று வந்தமையினால் மகாலிங்கம் நல்ல நண்பரானார். அந்த நட்புறவு இன்றும் 43 ஆண்டுகள் கடந்தும் ஆரோக்கியமாக தொடருகிறது.
ஒருநாள் நண்பர் மகாலிங்கத்தை தனியாக சந்தித்து ” நீங்கள் அனைவரும் பேசுகின்ற விடயங்கள் எதுவும் புரியவில்லை” என்று தயக்கத்துடன் சொன்னேன். அவர் எனது தோள்பற்றி அழைத்துச்சென்று தனது சிறிய நூலகத்தை காண்பித்தபொழுது அதிசயித்தேன். அங்கிருந்த நடை என்ற தமிழக சிற்றிதழைத்தந்து எடுத்துச்சென்று படிக்கச்சொன்னார். அதில் வெங்கட் சாமிநாதன், கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூலுக்கு எதிர்வினையாற்றி நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். நான் படித்த முதலாவது விமர்சனக்கட்டுரை. அதன் தலைப்பு இன்றைய தலைமுறை படைப்பாளிகளின் தலையைச்சுற்றும். எனக்கும் அன்று சுற்றியது.
” மாக்ஸீயக்கல்லறையிலிருந்து ஒரு குரல் ” – இதுதான் வெ.சா.வின் நீண்ட கட்டுரையின் தலைப்பு. அதன் ரிஷிமூலத்தை தேடியபொழுது கைலாசபதியின் தமிழ்நாவல் இலக்கியம் கிடைத்தது. அதற்கும் ஒரு நதிமூலம் இருந்தது. அதனைத்தேடியபொழுது செ.கணேசலிங்கனின் செவ்வானம் என்ற பெரிய நாவல் கிடைத்தது. அதற்கு கைலாசபதி எழுதிய நீண்ட முன்னுரையின் விரிவாக்கமே தமிழ்நாவல் இலக்கியம்.
வெ.சா. எழுதிய எதிர்வினை வெளியான நடை சிற்றிதழ் பூரணி வட்டத்தில் உலாவியது. அதனைப்பற்றிய விவாதங்களும் தொடர்ந்தாலும் நடை இதழ் பரவலான வாசிப்புக்கு கிட்டவில்லை.
அடுத்து வந்த பூரணி இதழொன்றில், நடையில் வெளியான வெ.சா.வின் கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கலை கலைக்காகவா, மக்களுக்காகவா என்ற விவாதம் தொடங்கியது. மறுமலர்ச்சிகாலம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழிவழக்கு, மண்வாசனை இலக்கியம், பண்டிதத்தமிழும் இழிசனர் வழக்கும் முதலான சொற்பதங்கள் இலக்கிய வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்நிலையில் புதுக்கவிதை இயக்கமும் வீறுகொண்டு எழுந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து மல்லிகையை வெளியிட்டுக்கொண்டிருந்த டொமினிக்ஜீவா உட்பட பல முற்போக்கு எழுத்தாளர்களுக்கு பூரணியில் வெ.சா.வின் கட்டுரை வெளியானது உவப்பாக இருக்கவில்லை.
கைலாசபதி தனக்கு எதிர்வினையாற்றுபவர்களுக்கு நேரடியாக பதில் தரமாட்டார் என்றும் – அவருடைய மாணாக்கர்களே எழுதுவார்கள் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், அவ்வாறு எழுதினால் பூரணி வெளியிடுமா…? என்ற தயக்கமும் இருந்தமையினால்— இருக்கவே இருக்கிறது நம்வசம் மல்லிகை என்று அதில் தமது கருத்துக்களை தொடர்ந்து எழுதினார் நண்பர் நுஃமான். அப்பொழுது அவர் கொழும்பில் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
சில மாதங்கள் நுஃமானின் வெ.சா.வுக்கு பதில்கூறும் எதிர்வினை வந்தது. ஆனால், மல்லிகை ஜீவா பொருத்தமில்லாத இடத்தில் எல்லாம் கைவைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் வந்தது. நுஃமான் எழுதி முடித்ததும் மல்லிகையில் ஒரே கட்டுரையில் மு.பொன்னம்பலம் அதற்கு பதில் கொடுத்தார். அதன்பின்னர் மல்லிகையில் எவரும் விவாதம் தொடரவேயில்லை.
சில முற்போக்காளர்கள் மு.பொ.வின் கட்டுரையை மல்லிகையில் அனுமதித்திருக்கவே கூடாது என்று ஜீவாவுடன் தர்க்கப்பட்டனர். மு. தளையசிங்கம் மறைந்ததும் பூரணி ஒரு நினைவுச்சிறப்பிதழ் வெளியிட்டது. அதற்கு கைலாசபதியும் எஸ்.பொன்னுத்துரையும் எழுதிய கட்டுரைகளை பூரணி ஆசிரியர் குழு நிராகரித்தது. கைலாசும் எஸ்.பொ.வும் எதிர் எதிர் துருவங்கள். அப்படியிருந்தும் பூரணி இருவரதும் கட்டுரைகளை நிராகரித்தது அக்காலப்பகுதியில் ஆச்சரியமானது.
பூரணி அத்துடன் நிற்கவில்லை. மற்றும் ஒரு இதழில் பூரணி குழுவில் இருந்த இமையவன் என்ற புனைபெயரில் எழுதும் ஜீவகாருண்யன் கைலாசபதி பற்றி எழுதிய கட்டுரைக்கு களம் தந்தது.
அதில் இடம்பெற்ற ஒரு வாசகத்தை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.
மாக்ஸீயவாதியான கைலாசபதி எப்படி முதலாளி வர்க்கத்தின் ஏரிக்கரை (Lake House) பத்திரிகை தினகரனில் ஆசிரியராக இருந்தார்…?
பல வருடங்கள் கழித்து நான் அவுஸ்திரேலியா வந்து 1990 இற்குப்பின்னர் பிரான்ஸிலிருந்து அப்பொழுது வெளியான மனோகரனின் ‘ அம்மா ‘ அவுஸ்திரேலியா சிறப்பிதழில், முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்த முருகபூபதி எப்படி முதலாளி வர்க்கப்பத்திரிகை வீரகேசரியில் பணியாற்றினார் …..? என்று ஒரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார். இரண்டு சம்பவங்களும் நினைக்கும்தோறும் புன்னகையை வரவழைப்பவை.
இலங்கையில் அப்பொழுது முற்போக்கு இலக்கிய வட்டாரத்தில் வெங்கட்சாமிநாதன் ஏகாதிபத்தியவாதியென்றும், பிற்போக்கு வாதியென்றும் கற்பிதங்கள் பரப்பப்பட்டிருந்தது.
ஒருபடி மேல் சென்று அவரை அமெரிக்க கைக்கூலி என்றும் சி.ஐ.ஏ. ஏஜன்ட் என்றும் அந்த வட்டாரங்கள் சொன்னதுதான் நகைச்சுவையின் உச்சம்.
கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் அமெரிக்காவின் நியூயோர்க்டைம்ஸின் டெல்லி நிருபர் என்றால், அவரும் ஒரு சி.ஐ.ஏ.!!!!??? என்போன்ற வளர்ந்துவந்த அன்றைய இளம்படைப்பாளிகளின் சிறுகதைகளில் சோகரசம் மேலோங்கியிருக்கிறது. சோஷலிஸ யதார்த்தப்பார்வையை காணமுடியவில்லை என்றெல்லாம் சொன்னவர்கள், இன்று அதுபற்றி மூச்சும் விடுவதில்லை.
எஸ்.பொன்னுத்துரை அந்த வாதங்ளை “காயடித்தல்” என்று ஒரு சொல்லில் நிறுத்திக்கொண்டாலும், 1990 இற்குப்பின்னர் அவரும் தமிழகத்தில் இலக்கிய காலூண்றியதும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போன்று வெங்கட்சாமிநாதனுடன் நெருக்கமானார்.
பொன்னுத்துரையின் ஒரு நூலுக்கு வெ.சா. முன்னுரைப்பாணியில் குறிப்புகளும் எழுதினார்.
எனினும் அவருக்கும் ஈழத்து இலக்கிய உலகம் பற்றிய தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் தருகின்றேன். ஈழத்து இலக்கிய உலகில் மூத்த படைப்பாளி என்.கே.ரகுநாதன் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் தற்பொழுது கனடாவில் வசிக்கிறார். டானியலின் தங்கையை மணம் முடித்தவர்.
ரகுநாதன் எழுதிய பிரசித்தி பெற்ற சிறுகதை ” நிலவிலே பேசுவோம்.” அந்தத்தலைப்புடன்தான் அவருடைய முதல் தொகுப்பும் வெளியானது.
மேல்சாதியைச்சேர்ந்த ஒரு பிரமுகர், ஒரு முன்னிரவு வேளையில் தன்னைச் சந்திக்கவந்த ஊர்மக்களில் சிலர் தாழ்ந்த சாதியினர் என்பதால் வீட்டுக்குள் அழைத்துப்பேசாமல், வெளியே நல்ல நிலவு காய்கிறது, முற்றத்திலிருந்து பேசுவோம் – என்று சொல்கிறார்.
கைலாசபதி மேல்சாதியைச் சேர்ந்தவர். ஆனாலும் அவருடைய கருத்துக்களினால் ஈர்க்கப்பட்ட
பல முற்போக்குவாதிகளில் இடதுசாரிகளும் அவர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்டவர்களும் இருந்தனர். ஒரு சந்திப்பில் கைலாஸ் அவர்களை நிலாமுற்றத்தில் வைத்து பேசி அனுப்பிவிட்டதாகவும் அதனைத்தான் என்.கே.ரகுநாதன் அவ்வாறு எழுதியிருக்கிறார் என்ற செய்தி வெங்கட் சாமிநாதனுக்கு சென்றுள்ளது. அந்த விதையை அவரிடம் யார் விதைத்தார்கள்…? என்பதும் ரிஷிமூலம்தான்.
ஆயினும் கொழும்பு வெள்ளவத்தையில் இலக்கம் 29, 42 ஆவது ஒழுங்கையில் அமைந்த கைலாசபதியின் இல்லத்தில் அருகிலிருந்து வரும் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டு கடலையும் ரசித்தவாறு பலமணிநேரங்கள் தாங்கள் இருவரும் உரையாடியிருப்பதாக ரகுநாதன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறார்.
கைலாசபதி, இலக்கிய விமர்சகர் க.நா.சுப்பிரமணியம் (க.நா.சு) பற்றியும் மல்லிகையில் ஒரு தொடர் விமர்சனக்கட்டுரை எழுதியிருக்கிறார். கைலாஸ் பல தடவைகள் தமிழகம் சென்று வந்திருப்பவர். அவருடைய நூல்கள் சென்னையில் செ.கணேசலிங்கனின் குமரன் பதிப்பகத்தில் பல பதிப்புகளை கண்டுள்ளது. திருமதி சர்வமங்களம் கைலாசபதிக்கு தாம் ஒழுங்காக ரோயல்டியும் கொடுத்திருப்பதாக ஒரு தடவை கணேசலிங்கன் என்னிடம் சொல்லியிருக்கிறார். கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழக பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்.
அதனால் இருவருடைய நூல்களும் அங்கு அடிக்கடி மறுபதிப்பு காண்கின்றன.
இந்தப்பின்னணிகளுடன் பார்க்கும்பொழுது இலங்கைப்பக்கமே என்றைக்கும் வந்திராத வெங்கட் சாமிநாதனும் க.ந.சு.வும் ஈழத்து இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியே வந்திருக்கிறார்கள். முற்போக்கு முகாமைச் சேர்ந்த தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் இராமகிருஷ்ணன், பொன்னீலன், தாமரை மகேந்திரன் முதலானோர் இலங்கை வந்துள்ளனர். ஆனால், வெ.சா.வையும் க.நா.சு.வையும் எவரும் இலங்கைக்கு அழைத்ததில்லை. அவர்களும் வருவதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை. சுந்தரராமசாமி விடயத்திலும் இதுதான் நடந்தது.
கைலாசபதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக பதவியிலிருந்தபொழுது, நடந்த தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்கு – எந்த அணியும் சார்ந்திராத அசோகமித்திரன்தான் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டார்.
அசோகமித்திரன் தமிழகம் திரும்பும் வரையில் அவருடைய நலன்கள் – தேவைகளை உடனிருந்து கவனித்தவர் கைலாசின் முன்னாள் மாணவரும் அதே யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும், பின்னாளில் பேராசிரியரானவருமான நண்பர் நுஃமான் அவர்கள்தான்
வெங்கட் சாமிநாதன் கதை எழுதிய அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் முக்கியமானது. இதில் பேராசிரியராக நடித்திருப்பவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம். பி. ஸ்ரீனிவாசன். இவர் ஒரு மாக்ஸிஸ்ட். தமிழக கம்யூனிஸ்ட்டுகள், கூட்டுறவு அமைப்பில் குறைந்த பட்ஜட்டில் எடுத்த பாதை தெரியுது பார் என்ற படத்திற்கும் இசையமைத்தவர். ஜெயகாந்தனின் நல்ல நண்பர். அந்தப்படம் ஓடியதோ இல்லையோ அதில் வரும் ஜே.கே. இயற்றிய ஸ்ரீனிவாசன் இசையமைத்த தென்னங்கீற்று ஊஞ்சலிலே… என்ற பாடல் இன்றும் எங்கள் செவிகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
மாக்ஸீயக்கல்லறைகளை விமர்சித்த வெ.சா.வும் மாக்ஸிஸ்டாகவே மரணித்த ஸ்ரீநிவாசனும் எப்படி தோழமையுடன் அக்ராஹாரத்தில் கழுதையில் இணைந்தார்கள்…?
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்தேறு குடியாகச்சென்று தாயகம் திரும்பவும் கடவுச்சீட்டு இல்லாமல் வாழ்ந்த தருமுசிவராம் தொடர்ச்சியாக வெங்கட் சாமிநாதனை கடுமையாக விமர்சித்துவந்தபோதிலும் – டெல்லியில் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பிரயோகித்து தனது கருத்தியல் எதிரியை நாடுகடத்தும் கைங்கரியத்தில் ஈடுபடாமல் வெ.சா. பெருந்தன்மையாக வாழ்ந்தது எங்கனம்….?
வயது முதிர்ந்த பின்னரும் தன்னைவிட அதிகம் வயது குறைந்த பெர்லின் கருணகரமூர்த்தி மற்றும் அவுஸ்திரேலியா கே.எஸ்.சுதாகரன் ஆகியோரின் நூல்களுக்கு முன்னுரைகள் எழுதியும் – கனடா கிரிதரனின் பதிவுகள் இணையத்தளத்திற்கு தமது மரணம் வரையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த வெங்கட்சாமிநாதனின் சிந்தனைப் போக்கு எவ்வாறு பரிமாணம்பெற்றது…?
இவ்வாறு நாம் அவர் குறித்து யோசிக்கவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
1982 இறுதியில் கைலாஸ் கொழும்பில் அற்பாயுளில் மரணித்தபொழுது அவர் முன்னர் அமெரிக்கா சென்ற சமயம் அங்கு சி.ஐ.ஏ.தான் ஏதோ சாப்பாட்டில் கொடுத்துவிட்டது என்று சொன்ன முற்போக்காளர்களையும் நான் அறிவேன். நல்லவேளை சுந்தரராமசாமி குறித்து இந்தப்பழி சி.ஐ.ஏ.க்கு வரவில்லை.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டு காலம் நெருங்கும் வேளையிலும் இன்றும் புலிப்பூச்சாண்டி காட்டுபவர்கள் இருப்பதுபோன்று அன்று சி.ஐ.ஏ. பூச்சாண்டியை பலர் காண்பித்தார்கள்.
வெங்கட்சாமிநாதனும் கைலாசபதியும் எதிரும் புதிருமாக எம்மத்தியில் வாழ்ந்திருந்தபோதிலும் நாம் இவர்களிடம் கற்றுக்கொண்டது ஏராளம்.
வெ.சா. தமது 80 வயதின் பின்னரும் அயர்ச்சியின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர். வயது முதிர்வினால் உடல் உபாதைகள், நினைவு மறதி என்பன வரும் இந்தப்பருவத்திலும் அவர் இலக்கியம், நடனம், சிற்பம், ஓவியம் , நாடகம் , கூத்து, திரைப்படம், தொல்பொருள் முதலான துறைகளிலெல்லாம் தமது மதிப்பீடுகளை தேர்ந்த வாசகர்களிடம் சேர்ப்பித்து பகிர்ந்துகொண்டார்.
இளம் தலைமுறை எழுத்தாளர்களின் நூல்களை படித்து தனது எண்ணங்களையும் பதிவுசெய்தார். வெளிநாடுகளில் வதியும் ஈழத்தை தாயகமாகக்கொண்ட படைப்பாளிகளின் எழுத்துக்களை படித்து புலம்பெயர் வாழ்வின் வலிகளை அறிந்து கவலைகொண்டார். தனது மதிப்பீடுகளையும் வழங்கினார்.
அவருடைய மோதிரக்கையினால் குட்டுவாங்குவதும் பெருமை என்று நினைக்கும் புகலிட படைப்பாளிகளுக்கு அவருடைய மறைவு ஆழ்ந்த துயரம் தரும்.
இவ்வளவும் எழுதினீரே… அவரை உமக்கு நேரில் தெரியுமா…? என்றைக்காவது அவருடன் உரையாடியிருக்கிறீரா…? என்று எவரும் கேட்டால், நான் அபாக்கியவாதி என்பேன்.
ஆனால் , கம்பனைப்பார்த்தோமா…. பாரதியை பார்த்தோமா…புதுமைப்பித்தனை பார்த்தோமா… இல்லையே !!!! எனினும் அவர்களை இன்றும் கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறோம். அவ்வாறு நேற்றையதினம் கலைத்தெய்வத்தின் தினத்தில் விடைபெற்ற வெங்கட் சாமிநாதனையும் கொண்டாடுவோம்.
letchumananm@hmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்