அரிதாரம் பூசியவர்கள் ஆடி முடித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்
திரையுலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடிகர்கள் கூட்டம் செய்தது என்ன…?
பதுக்கும் பணத்தை உரியமுறையில் பயன்படுத்தியிருந்தால் நான்கு கோடி ரூபா கடன் வந்திருக்காதே….!!!!
முருகபூபதி – அவுஸ்திரேலியா
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் ஒருவாறு நடந்து முடிந்திருக்கிறது. என்றைக்கும் இல்லாதவாறு இந்தத் தேர்தல் செய்திகள், தமிழக ஊடகங்களில் ஊதிப்பெருகியமைக்கு களத்தில் இறங்கிய சரத்குமார் அணியும் பாண்டவர் அணியென்று வர்ணிக்கப்பட்ட விஷால் அணியும்தான் காரணம்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். கூத்தாடிகளே இரண்டுபட்டால் ஊடகங்களுக்குத்தான் கொண்டாட்டம் என்று திருத்தி எழுதவேண்டியதுதான்.
கடந்த சில மாதங்களாக ஏட்டிக்குப்போட்டியாக இரண்டு தரப்பிலிருந்தும் அறிக்கைகளும் பேட்டிகளும் வெளியாகின.
இறுதியில் பொலிஸ் பாதுகாப்புடன் இந்த நடிகர் சங்கத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வந்த பொலிஸார், திரையில் பொலிஸாகத் தோன்றும் நடிகர்கள் இல்லை.
தொடர்ச்சியாக அரசியல்வாதிகளின் தில்லு முல்லு – அடியாள் ஆட்சி பற்றியெல்லாம் விமர்சித்தும், கிண்டலடித்தும் படம் பண்ணிய இந்த நடிகர்களை பாத்திரங்களாக்கி இந்தத்தேர்தல் கூத்தை வைத்தும் எதிர்காலத்தில் யாராவது படம் தயாரிக்கலாம்…!!!
இச்சங்கத்தில் முன்னர் செயலாளராக இருந்த ராதா ரவியின் தங்கையின் (ராதிகா) கணவர்தான் சரத்குமார். அவர்தான் சில தினங்களுக்கு முன்பு வரையில் இச்சங்கத்தின் தலைவராக இருந்தார். மச்சானையும் மச்சானையும் பாண்டவர் அணி தோற்கடித்திருக்கிறது.
இந்த ராதா ரவி, மற்றும் ராதிகா ஆகியோரின் தந்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா திரையுலகில் இருந்துகொண்டே பல முன்னணி நடிகர்களை கடுமையாக விமர்சித்தவர். எம்.ஜீ.ஆரை துப்பாக்கி எடுத்து சுடும் அளவுக்கு அவருடைய தர்மாவேசம் இருந்தது.
மலேசியாப்பயணத்தில் நடிகவேளின் கண்டன உரையை இன்றும் யூ டியூப்பில் கேட்க முடியும். அவரின் இரண்டு வாரிசுகளும் இந்த நடிகர் சங்கத் தேர்தலில் பேசிய பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பார்த்து ரசிக்க கொடுத்துவைக்காமலேயே போய்ச்சேர்ந்தவிட்டார்.
மச்சினன்மார் அணிக்கு எதிராக களம் புகுந்தனர் பாண்டவர் அணி விஷாலும் நாசரும்.
இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சிவாஜிகணேசனும் ஒரு தடவை சங்கத்தின்மீது வெறுப்புற்று, விலகி, ஒதுங்கியிருந்தவர்தான். நீண்டகாலமாக சங்கத்தின் கட்டிடம் தொடர்பாக சர்ச்சைகள் இருந்துவந்திருக்கிறது.
இந்த நடிகர்கள் சம்பாதிக்கும் கோடி கோடியான பணத்திலிருந்தும் பதுக்கிவைக்கும் கறுப்பு பணத்திலிருந்தும் சங்கத்தின் கட்டிடத்தை எப்பொழுதோ நிர்மாணித்திருக்க முடியும்.
இந்நிலையில் இச்சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த விஜயகாந்த், சங்கத்திற்கு கடன் நான்கு கோடிக்கு மேல் இருக்கிறது என்றும், ஆனால் – அதன் நிரந்தர சேமிப்பு வைப்பில் ஒருகோடிக்கு மேல் பணம் இருப்பதாகவும், இதுபற்றி எவரும் பேசுகிறார்கள் இல்லையென்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
திரையில் மேக்கப்புடனும், தலையில் புதிய புதிய விக்குகளுடனும் தோன்றும் தென்னிந்திய நடிகர்களின் உண்மையான சுயரூபம் இந்தத் தேர்தலில் அம்பலமாகியிருக்கிறது.
இதற்கிடையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
அதனை இந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் மாற்றவேண்டும் என்றார் உலகநாயகன்.
ஆனால், இந்த இரண்டு தமிழ்த்திரையுலக வல்லரசுகளும் இந்தத்தேர்தலில் பதவிகளுக்குப்போட்டியிடவில்லை. வல்லரசுகள் என்றைக்கும் நேரடியாக மோதுவதில்லை.
சிவகுமார் மகன் கார்த்தி பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். அவர் தமது அணிக்கு எதிராக களம் இறங்குகிறார் என்பதை அறிந்ததும் சரத்குமாரும் அவர் மனைவி ராதிகாவும் ஆளுக்கு ஒருவரை பிடித்துக்கொண்டு திட்டினார்கள்.
கார்த்தி ராதிகா ஏசும்பொழுது ” கார்த்தி எங்கே மறைந்திருக்கிறாய்…? வெளியே …வா…” என்று ஒருமையில் கேட்கிறார்.
ராதிகா காலம்பூராகவும் அண்ணன் என்று விளித்த கார்த்தியின் அப்பா சிவகுமார், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ” என்னம்மா உன்புருஷன் படங்கள் எடுத்து உன்சொத்தையெல்லாம் அழிச்சிட்டானா..?” என்று பாசமலர் பாணியில் உரிமையுடன் கேட்டதைவைத்து, சினம்கொண்ட சரத்குமார், தான் நினைத்திருந்தால் சிவகுமார் வீட்டு வாசலுக்கு சென்று வாங்கு வாங்கென்று வாங்கியிருப்பேன் என்று தெருச்சண்டியன் போன்று பொதுமேடையில் கர்ஜிக்கின்றார்.
அத்துடன் நில்லாமல் விஷால் அணிக்கு கமல்ஹாசன் ஆதரவு வழங்குவது தெரிந்ததும், கமல் தனது குருநாதர் இயக்குநர் பாலச்சந்தரின் மரணச்சடங்கிற்கு வராமல் அமெரிக்காவில் நின்றார் என்று ஏளனம் செய்து, பத்து இலட்சம் ரூபாவில் விமான டிக்கட் எடுத்து வராதவர் என்று திட்டியதுடன், கமல்ஹாசன் போன்று மிமிக்கிரி செய்து கேட்பவர்களை குதூகலப்படுத்துகிறார்.
அத்துடன் சரத்குமார் தனது சமத்துவக்கட்சியைச் சேர்ந்தவர்களையும் இந்தத்தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி நடிகை சங்கீதா என்பவரை தகாத வார்த்தைகளினால் திட்டியிருக்கிறார். நியாயம் கேட்க வந்த விஷாலை அவருடைய அரசியல் அடியாள் தாக்கியுமிருக்கிறார்.
அந்த நபர் நடிகர் இல்லை. எப்படி எமது சங்கத்தின் நடவடிக்கையில் புகுந்தார்…? எனக்கேட்கிறார் விஷால். சிலவேளை சரத்குமாரின் படங்களில் வில்லனின் அடியாளாக வந்து அடி உதை வாங்கும் ஒரு துணைநடிகராக இருக்கலாம்.
தோல்வியை சந்திக்கும் அணி தேர்தலில் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலும் உதாரணமாகியிருக்கிறது.
பொதுவாகவே தமிழக சினிமா உலகம் ஊடகங்களின் ஊடாக மக்களின் வெகுஜன ஆர்வத்தையே தூண்டிவந்திருக்கிறது.
அதனால்தான் எம்.ஜீ.ஆர். முதல் சரத்குமார் வரையில் அரசியலில் பிரகாசிக்கமுடிந்துள்ளது.
தனக்கு கிரிக்கட், கராத்தே, கபடி எல்லாம் தெரியும் முடிந்தால் ஒண்டிக்கு ஒண்டி வருகிறாயா…? என்றும் சரத்குமார் சினிமா வசனம் பேசுகிறார். நான் ஒரு தடவை சொன்னா அது நூறு தடவைக்குச்சொன்னதற்கு சமம் என்று சூப்பர் ஸ்டார் பஞ் டயலக்தான் அவர் பேசவில்லை.
இத்தனைக்கும் சரத்குமார் சமத்துவக்கட்சியின் பொறுப்புவாய்ந்த தலைவர். இந்திய மேல்சபையின் உறுப்பினாராக இருந்தவர்.
ஒருகாலத்தில் ஏரியாக்களுக்கு திரைப்படச்சுருள்கள் விநியோகிக்கும் தொழில் புரிந்தவர்.
கிராமப்புறங்களிலிருந்து திரையுலகில் எப்படியும் நுழைந்துவிட வேண்டும் என்ற கனவுடன் வருபவர்கள், அதில் நிலைபெற்றவுடன், அரசியலுக்குள் பிரவேசித்துவிட்டு அடுத்தபடியாக தமிழக முதல்வர் ஆசனக்கனவு காணத்தொடங்கிவிடுவார்கள்.
மறைந்த பாரத ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்றுதான் இளம்தலைமுறையைக்கேட்டார். அதன் அர்த்தம் தன்னம்பிக்கையும் ஆளுமையும் மிக்க சமுதாயம் உருவாகவேண்டும் என்பதன் அடிப்படையிலானது.
ஆனால் , இந்த நடிகர்களின் அரசியல் பதவிக்கனவுக்கு வித்திட்ட புண்ணியம் எம்.ஜீ.ஆரையும் ஜெயலலிதாவையும் என்.ரி.ராமராவையும்தான் சாரும்.
மக்களின் வரிப்பணத்தில் அரசியல் வாதிகள் பிழைப்பதுபோன்று வரிஏய்ப்பு செய்து திரையுலகில் ஜொலிக்கும் இந்த நட்சத்திரங்கள், நடிப்புத்தொழிலாளர்களுக்கென உருவாக்கப்பட்ட சங்கத்தை ஒரு தொழிற் சங்கமாகப்பார்க்காமல் அதனையும் அரசியலாக்குவதுதான் காலத்துயர்.
திரையுலகம் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கூட்டுப்பங்களிப்பினால் வளர்ச்சிபெறுவது. ஒரு காலத்தில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சித்தோழரும் எழுத்தாளரும் ஜனசக்தி ஆசிரியருமாக இருந்த அறந்தை நாரயணன், துணை நடிகர்களுக்கென்று ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி கடுமையாக உழைத்தார். அதில் துணை நடிகர்களின் உரிமைகளுக்காக போராடினார். அதுபோன்று படப்பிடிப்புகளில் லைட்மேன்களாக பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்கள் – உரிமைகளுக்காகவும் ஒரு தொழிற்சங்கம் இயங்கியது.
படப்பிடிப்புகளில் உயரமான தளங்களில் கால்களும் கைகளும் கடுக்க நின்று ஒளிவெள்ளம் பாய்ச்சும் தொழிலாளர்கள் தவறிவிழுந்து கால், கை முறிந்த கதைகளும் உண்டு.
எத்தனையோ தயாரிப்பாளர்கள், பெரிய நடிகர் – நடிகைகளை வைத்து படம் தயாரித்துவிட்டு நட்டப்பட்டு இறுதியில் கடனாளிகளாகவும் திரிந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
நாயகன், மௌனராகம், அக்கினி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி உட்பட பல படங்களை தயாரித்தவரும் இயக்குநர் மணிரத்தினத்தின் சகோதரருமான ஜீ.வெங்கடேசன் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். இத்தனைக்கும் அவர் தேர்ச்சிபெற்ற ஒரு பட்டயக்கணக்காளர்.
தனது வரவு – செலவு பற்றி கவனிக்கத்தவறிவிட்ட பரிதாபத்துக்குரியவர்.
கப்டன் விஜயகாந்த் நடித்த படம் ஒன்றைத்தயாரித்த ஒரு தயாரிப்பாளர் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்தார். இவர் பற்றிய அட்டைப்படக்கதை (Cover Story ) தமிழக வணிக இதழில் வெளியானது. மற்றும் ஒருவர் தயாரிப்பில் நட்டப்பட்டு , இறுதியில் மெரீனா பீச்சில் முறுக்கு, சுண்டல் விற்றார்.
தயாரிப்பாளரும் கதைவசனகர்த்தாவும் பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் படத்தயாரிப்பில் தொடர்ந்து நட்டப்பட்டு, இறுதியில் தம் வசம் இருந்த பெரியவீட்டையும் இடித்துவிட்டு, அந்தக்காணியில் ஃபிளட்ஸ் கட்டி வாடகைக்கு விட்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்.
தமிழ் திரையுலகில் ஆண்களினால் வஞ்சிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகைகள் பலர். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நடிகரால் வஞ்சிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்று உயிர்தப்பியவர்தான். அதன்பிறகு அவர் எம்.ஜீ.ஆரின் பாதுகாப்பில் இருந்து, இன்று தான்தான் அவருடைய அரசியல் வாரிசு என்கிறார்.
பல முன்னாள் நடிகர், நடிகைகள் பொறுப்பற்று வாழ்ந்து சிலரால் ஏமாற்றப்பட்டு வாழ்வில் நொடித்துப்போனர்கள். சந்திரபாபுவும் சாவித்திரியும் சிறந்த உதாரணம். நடிகை காஞ்சனா திரையுலகமே வேண்டாம் என்று ஒதுங்கி பெங்களுர் பக்கத்தில் ஒரு ஆலயத்தில் பணியாற்றும் ஆன்மீகத்தொண்டுழியராக மாறினார்.
வஞ்சிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகைகளின் பட்டியல் தனியாக இருக்கிறது. ஒரு கதாநாயகி நடிகை எய்ட்ஸ் நோயினால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டு வீதியோரத்தில் அனாதரவாகக் கிடந்தார்.
இவ்வளவும் திரையுலகை நம்பிவந்தவர்களுக்கு நடந்திருக்கிறது.
ஆனால், தென்னிந்திய நடிகர்சங்கம் இதுவரையில் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உருப்படியாக ஏதும் செய்திருக்கிறதா…?
நடிகர் சிவகுமார் சுயமாகவே அகரம் என்ற அமைப்பை உருவாக்கி ஏராளமான ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிவருகிறார். இதில் ஈழத்து அகதி மாணவர்களும் இடம்பெற்று பயன்பெற்று வருகின்றனர். அப்படிப்பட்ட — அதேசமயம் அப்பழுக்கற்ற ஒரு மனிதரைநோக்கி அவர் வீட்டுக்கு வந்து வார்த்தைகளினால் கொடுத்துக்கட்ட இருந்தாராம் சரத்குமார். காரணம் அவர் மகன் கார்த்திக் தனது அணிக்கு எதிராக போட்டியிடுவதுதான்.
இந்தப்பின்னணிகளுடன் தமது நாயக நடிகர்களின் படங்கள் வெளியானதும், பெரிய கட் அவுட்களுக்கு அவர்களின் பரம ரசிகர்கள் பால் அபிசேகம் செய்து கொண்டாடுகிறார்கள். சூப்பர் ஸ்டாரின் படம் ஒன்று வெளியானபொழுது அவருடைய பெண் ரசிகைகள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். சிலர் ஆடுவெட்டி பலிகொடுத்தனர்.
குஷ்புவுக்கு கோயில் கட்டியவர்கள், இதுபோன்ற சமயம் சார்ந்த சடங்குகள் செய்வதும் ஆச்சரியம் இல்லை!!!.
இந்தத்தகவல்களின் பின்னணியில் இலங்கையில் சிங்கள சினிமா உலகை கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்.
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜா, பிரசன்ன விதானகே உட்பட பல சர்வதேசப்புகழ்பெற்ற சிங்களத்திரைப்பட இயக்குநர்களின் படங்களில் தோன்றிய காமினி பொன்சேக்கா, ரவீந்திர ரந்தெனிய, விஜயகுமாரணதுங்க, டோனி ரணசிங்க, ஜோ அபேவிக்ரம முதலான நடிகர்களுக்கென்று அங்கே ரசிகர் மன்றங்கள் இருக்கிறதா…?
அங்கு சிங்கள ரசிகர்களும் படம் பார்க்கிறார்கள். பால் அபிஷேகம் செய்யவில்லை. பால்குடம் ஏந்தவில்லை. திரைக்கு முன்னால் நின்று சூடம் கொளுத்தி மலர் சொரியவில்லை.
காமினி பொன்சேக்கா அரசியல் பேசினார். ஒரு மகாணத்தின் ஆளுநராகவும் இருந்தார். விஜயகுமாரணதுங்க அரசியல் வாதியாக மக்கள் கட்சியும் உருவாக்கினார். ஆனால், இவர்கள் இருவரும் தமது திரைப்பட ரசிகர்களை நம்பியிருக்கவில்லை. அதுபோன்று மாலினிபொன்சேக்கா, கீதா குமாரசிங்க ( சிவாஜி கணேசனுடன் நடித்திருப்பவர்கள் ) இருவரும் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால், ரசிகர்களை நம்பி வரவில்லை.
அண்ணாத்துரை தமிழகத்தில் ஆட்சிக்கு வருமுன்னர் முழங்கினார்: ” ஏ….தாழ்ந்த தமிழகமே… எங்கே போகிறாய்…?” இன்று அவர் வழியில் வந்தவர்களின் அரசியல் வாரிசுகளும் – வாரிசுகளின் வாரிசுகளும் தமிழகத்தை எங்கே கொண்டுசெல்கிறார்கள்…?
ஈழத்தமிழர்களுக்கு வழிகாட்டுவதாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதியும், கோபால சாமியும், நெடுமாறனும், சீமானும் இந்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் வரிந்துகட்டி நிற்கும் நடிகர்கள். நடிகைகளுக்கும் நல்வழி காட்டமாட்டார்களா…?
சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும்தான் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் கடமை.
இதில் கலைஞர்கள் வட்டத்துள் வரும் இந்த தென்னிந்திய நடிகர்கள் யாருக்காக பேசுகிறார்கள்…? எந்த சமூகத்தை பேச வைக்கப்போகிறார்கள்….???!!!!
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்