நாமெல்லாம் செம்மறியளாக இருப்பது எமது தவறல்ல குறைந்த பட்சம் நல்ல இடையர்களையாவது எப்பொழுது தேடுவது?
நடேசன்
பதினாறு வயது சிறுவனாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் இரவுநேர கடைசி பஸ்ஸ_க்காக காத்திருந்தேன். அக்காலத்தில் படபஸ் எனப்படும் அந்தபஸ் காங்கேசன்துறை வீதிவழியாகப் போகும். அதில் இறங்கி விடுதிக்கு செல்லவேண்டும்.
அந்த இரவில் தனித்து நிற்பதால் பயம்வேறு வாட்டியது. அப்பொழுது சாறமணிந்த இருவர் அதனை உயர்த்தி கட்டியவாறு ஒருவரோடு ஒருவர் தர்க்கமிட்டனர். இருவரது வாரத்தைகளிலும் அதிகம் தூசணம் மற்ற தமிழ் சொற்கள் அரை குறையாக கேட்டது. நிரம்ப குடித்துவிட்டார்கள் என நினைத்தேன். தெருச்சண்டை கண்ணுக்கு குளிர்ச்சிதானே. அந்தப்பொழுது பஸ்ஸின் தாமதத்தை மறக்கச்செய்தது.
வாய்ச் சண்டையிட்ட பச்சை நிற சாறமணிந்தவர் சிறிது நேரத்தில் நீல நிறசாறமணிந்தவரின விதையை எட்டிப்பிடித்தார். பச்சை சாறமணிந்தவர் விடடா விடடா என கதறியபடி அழுதார். அப்பொழுது மீசைவைத்து திரைப்பட மனோகரைப் போலிருந்த மற்றும் ஒருவர் அங்கு வந்து இருவரையும் விலத்தி பிரிந்து போகும்படி கூறினார். அவர்கள் பிரிந்து போகாது மீண்டும் சண்டையிட்டனர். இப்பொழுது பச்சைசாறமணிந்த மனிதர் தனது எதிராளியின் விதையை எட்டிப்பிடித்தார். மீண்டும் அங்கு நடுவராக வந்த மூன்றாமவர் அவர்களை விலத்தினார். மூன்றாவது முறையாகவும் மாறி மாறி விதை பிடித்தல் அரங்கேறியபோது நடுவர் தனது கையில் இருந்த கனமான பையால் இருவரையும் அடித்து பஸ் நிலயத்தை விட்டு துரத்தினார்.
சின்ன வயதில் நான் பார்த்த அந்த தெருச்சண்டைக்காட்சி இலங்கையில நடந்த போர் நிறுத்தங்களையும் அதன்பின்பு நடந்த யுத்த்மீறல்களையும் நினைக்கத் தோன்றுகிறது.
மாவிலாற்று அணையை மூடி தொடக்கிய இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் எதிர்பாராது வென்றிருந்தால் எப்படியான நிலைமை இருந்திருக்கும்…? யுத்தத்தில் யாரோ ஒருவர் மட்டுமே வெல்லமுடியும் என்பது விதி.
இதற்கு முன் யாழ்ப்பாணத்தில் இலங்கைப்படைகள் முன்னேறும்போது அந்த இடத்தில் மக்களை வெளியேற்றி விடுதலைப்புலிகளால் மக்கள் உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டது என பலர் பேசிக்கொண்டார்கள். அது உண்மையென நினைக்கிறேன். இராணுவரீதியில் மக்களை வெளியேற்றுவதும் அந்த இடங்களை எரித்து உணவு கிடைக்காமல் செய்வதும் மிகவும் ஆதிகால தந்திரோபாயம். நெப்போலியனோடு போர் புரிந்தபோதும் பின்னர் ஹிட்லரோடு போர் புரிந்தபோதும் ரஷ்யர்கள் இதனைத்தான் செய்தார்கள். இந்த தந்திரோபாயம் ரஷ்யா போன்ற பரந்த நிலப்பரப்புள்ள நாட்டில் அதிக பலனளித்தது.
ஆனால் விடுதலைப்புலிகள் முருங்கன், செட்டிகுளம் போன்ற தூரமான பகுதிகளில் இருந்து போர் நடக்கும் இடத்திற்கு மக்களை ஆட்டு இடையர்கள்போல் சாய்த்துக்கொண்டு போனது எந்த யுத்த தந்திரத்தை சேர்ந்தது என்பது அக்காலத்தில் எனக்குப் புரிந்தது.
அதாவது பணயக் கைதிகளாக அப்பாவித்தமிழர்களை யுத்தம் நடத்தும் இடத்திற்கு கொண்டு சென்று அவர்களின் மீது குண்டுகள் விழுந்து அவர்கள் கொல்லப்படும்போது அதை வெளிநாடுகளுக்கும் குறிப்பாக இந்தியாவிற்கு அறிவித்து தாங்கள் இராணுவத்தின் பிடியில் இருந்து தப்புவதாக காண்பிக்க, கெமராக்காரர் வீடியோகாரர் மற்றும் தமிழ்நெற்போன்ற ஊடகங்களைத் தயாராக வைத்திருந்தார்கள்.
இந்த தந்திரமான நடவடிக்கையை இளம் சிறார்களாக விடுதலைப்புலிகளில் இணைந்திருந்தவர்கள் மட்டுமல்ல புலிகளுக்கும், அவர்களுக்கு பணஉதவியும் ஆயுத உதவியும் அளித்த வெளிநாட்டுத்தமிழர்களும், தமிழ்ஊடகங்களை நடத்தியோரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். இதனால் இதைப்பற்றி எவரும் வெளிநாட்டில் இருந்தும்கூட மூச்சு விடவில்லை.
விடுதலைப்புலிகளை தப்பவைப்பதற்கு சாதாரண மக்கள் கேடயமாக விளங்கட்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்கள். விடுதலைப்புலிகள் மக்களை கொண்டுசெல்லும்போது மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கவில்லையென்றால்; இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும்.
இந்த விடயத்தையிட்டு பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்கள் இலங்கை அதிபரிடம் நேரடியாக சென்று சொன்னபோதும் ‘சில நாட்கள் தாருங்கள் ” என்றார். இறுதியில் அவர்கள் கோபமடைந்தபோது ‘நாங்கள் தற்பொழுது காலனி ஆதிக்கத்தின் கீழ் இருக்கவில்லை என நினைக்கிறேன் ” என்றார் இலங்கை அதிபர்.
இதேபோல் இந்திய அமைச்சர் சிதம்பரமும் கேட்டபோது அதற்கு மறுத்ததுடன் ‘கனரக ஆயுதங்கள் பாவிக்கமாட்டோம்’ என வாக்கு கொடுத்தபோது அந்த விடயம் சரியாக மொழிபெயர்க்கப்படாமல் முதல்வர் கருணாநிதியும் ஆயுதங்கள் ஓய்வு பெறுகின்றன என நம்பிக்கொண்டு தமது உண்ணாவிரதத்தை முடித்தார். இதற்குப் பின்னால் பல கதைகள் உள்ளன.
கடைசியில் இந்திய தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை மீறி வந்ததும் மக்களை பணயக் கைதிகளாக வைத்து தப்பும் விடுதலைப்புலிகளின் உத்தி உபயோகப்படாமல் போனது.
இதைவிட ஒரு இலட்சம் மக்களை விடுவித்தால் உங்களை விடுவோம் என தூதுவிட்டு, கடைசிநாட்களில் அரசினர் வெளியே எடுத்தார்கள். ஒரு இலட்சம் மக்கள் விலகியதும் எதிர்பாராத நிகழ்வு.
இந்த பணயக்கைதிகளாக மக்களைக் கொண்டு போவதையிட்டு ஆறுமாதம் முன்பாக இருவர் ஆங்கிலத்தில் எழுதினர். ஒருவர் டி.பி. எஸ். ஜெயராஜ். மற்றது அடியேன். இருவரதும் கட்டுரைகள் பிரபலமானவை, கிட்டத்தட்ட ஒரேவிதமான தலைப்புகள்.
http://www.srilankaguardian.org/2008/08/let-my-people-go-in-peace.html
இதில் டி பி எஸ் ஜெயராஜ் பழம் தின்று கொட்டைபோட்ட பத்திரிகையாளர். ஆனால் என்போன்ற பகுதிநேர பத்தி எழுதுபவருக்கு புரிந்த விடயம் வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கோ தற்போதைய தமிழ்த்;தலைவர்களுக்கோ புரியவில்லை என்பது என்னால் நம்பமுடியாதது.
தற்போது வாலைமுறுக்கும் அரசியல்வாதிகள் அந்தக்காலத்தில் கோமாவில் இருக்கவில்லைத்தானே…?
அப்படியானால் எனது கேள்வி: குறைந்தளவு ஆறுமாதத்தின் பின் எமது மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளாத நீங்கள் எப்படி அரசியல்வாதிகள் – தலைவர்கள் எனச் சொல்லமுடியும.;..?
வீட்டை கட்டும் கொத்தனாருக்கு கட்டும் வீட்டுக்கு என்ன நடக்கும் என தெரியவேண்டும். பாலம் கட்டும் பொறியிலாளருக்கு இருக்க வேண்டிய சாதாரண அறிவு போன்று பொருளாதார நிபுணர்களுக்கும் இருக்கவேண்டும்.
ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் சாதாரண கொத்தனாரோ அல்லது பொறியிலாளரோ இல்லை. பொருளாதார நிபுணரைவிட அறிவு குறைந்தவர்களா…?
அல்ல என்பது எனது அபிப்பிராயம்.
விறகெரிந்தால் கரியாகும், மீன் செத்தால் கருவாடகும் என காத்திருந்த வியாபாரிகள். தற்போது இந்த வியாபாரம் இலங்கைத் தமிழர்களிடம் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நடந்து டொலர்கள் யூரோக்களாக பெருகுகிறது. விடுதலைப்புலிகளின் அழிவும் மக்களின் அழிவும் இவர்களுக்கு உவப்பானது. இவர்களின் அரசியலில் முதலாகிவிட்டது.
தற்போது ஆறுவருடங்களாக அழிவிற்கு நிவாரணம் செய்யாமல் அழிவைப்பற்றியே பேசிப் பேசி வருகிறார்கள். இது இன்னும் பத்துவருட வியாபரத்திற்கு போதுமானது .
இக்காலத்தில் இலங்கையில் பல அரசாங்கங்கள் மாறும். பல சிங்களத் தலைவர்கள் இறப்பார்கள். சிலர் இவர்களுடன் சேருவார்கள். ஆனால் இவர்கள் கடைசி யுத்த அழிவை இலங்கையில் ஜெனிவாவில் புதுடில்லி என சகல நாடுகளிலும்; பேசுவார்கள்.இக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு உணவுகொடுத்த தமிழர்கள் சிறைகளில் வாடுவார்கள். கணவரை இழந்த விதவைகள் வாழ்க்கையைத் தொலைத்து அலைவார்கள் குடும்பங்களற்ற குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும்.
அதனால் உங்களுக்கென்ன?
இலங்கையில் நடந்த யுத்தத்தில் தமிழ்தரப்பு வென்றது போன்ற கனவுலகத்தில் கைகால் உதைக்கிறீர்கள். வென்றது இலங்கை மரசாங்கம். வென்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியதாக எந்த வரலாறும் இல்லை. இவ்வளவு காலமும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் முரட்டுத்தனமாக 20 ஓவர் கிரிக்கட் விளையாடினார்கள். தற்போதைய அரசாங்கம் ஐந்து நாள் கிரிகட்டை ஆறுதலாக விளையாடுகிறது. கடைசியில் முடிவு ஒன்றாகத்தானிருக்கும்.
ஏதோகாரணத்தால் நீங்கள் நினைப்பது நடந்தால் இலங்கையில் ரஷ்யாவில் 1917இல் நடந்தது மீண்டும் நடக்கும்.
அன்பான தமிழ்மக்களே உலகத்தில் மற்ற அரசியல் வாதிகள் மக்களுக்கு செய்ததை நன்மையை சொல்லி மீண்டும் வாக்குக் கேட்பார்கள். தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் மற்றவர்கள் அநியாயம் செய்ததை சொல்லி வாக்குகேட்பது முரண்ணகையாக தெரியவில்லையா?
நாமெல்லாம் செம்மறியளாக இருப்பது எமது தவறல்ல குறைந்த பட்சம் நல்ல இடையர்களையாவது எப்பொழுது தேடுவது?
மறுமொழியொன்றை இடுங்கள்