சிறுகதை இலக்கியம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் 19ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது. இதில் முக்கியமாக, கோகுல்(Gogol) அலன்போ Edgar Allan Poe) நத்தானியல் ஹாத்தோன்( Nathaniel Hawthorne)அவர்களின் பின்பாக செழுமைப்படுத்தியவர்கள் மாப்பசான்(Guy de Maupassant), செக்கோவ் (Anton Chekhov)ஆகியோர்.
சிறுகதை மேற்கு நாட்டிலிருந்து வந்த வடிவம் இதில் அலன்போ, கோகுல் அமான்னிசத்தைக் கலந்து படைத்தார்கள். ஆனால் மாப்பசான் , செக்கோவ் போன்றவர்கள் யதார்த்த சித்திரிப்பாக சாதாரண மனிதர்களின் மன நிலைகளைப் பற்றிய கதைகளை எழுதினார்கள். அவர்களில் இருந்து வெகு தூரம் சிறுகதைகள் பலவடிவங்களில் மனோதத்துவ மாயாஜால யதார்த்தம் (Magical Realism)) என்று கடந்து சென்றது .
சிறுகதைகள் வாழ்க்கையின் சில பகுதிகளை நமக்கு காட்டுவன. அதாவது நடுக்காட்டில் இருட்டு வேளையில் திடீரென வந்த மின்னல்போல்.
நாவல் போன்று தலைமுறைகளைக் கடந்து பல பாத்திரங்களைக் கொண்டவையல்ல. ஒரு சம்பவத்தை வைத்தோ அல்லது தொடர்ந்தும் நடக்கும் காட்சிகளையோ வைத்து எழுதப்படுகிறது.
தமிழில் இலக்கிய கோட்பாடுகளில் முரண்நகையையும் பொருள் மயக்கத்தையும் வைத்து எழுதிய இருவரது சிறுகதைகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இரா. நடராஜன் மற்றவர் ஜி. நாகராஜன்.
ஜி.நாகராஜனது சிறுகதைகளைப்பற்றி எழுதியது விரைவில் ஞானம் இதழில் வெளிவரும் . இரா. நடராஜனது கதைகளைப்பற்றியும் எழுதுவேன்.
சிறுகதை பற்றிய புரிந்துணர்விற்கு எனது ஒரு கதையை எடுக்கிறேன்.
ஆற்றோரக் கிராமத்தில் அவளொரு துரோகி
https://noelnadesan.com/2015/08/03/
இந்தக் கதை நடந்த களம் எனது சுயவாழ்வில் சம்பந்தம் இல்லாத – நான் பார்த்திராத பிரதேசத்தை வைத்து எழுதியது. களம் – பாத்திரங்கள் – சம்பவங்கள் அனைத்தும் முற்றாக கற்பனையில் உருவாகியது.
கதையின் பெயரில் ஆறு பாய்ந்து செல்லும் கிராமம், அங்கு ‘அவளொரு துரோகி’ என்பன கதையில் முக்கிய அம்சங்களை வாசகர்களுக்கு சொல்ல விழைகிறது. இதன்மூலம் வாசகன் தனது கற்பனை குதிரையை தட்டி இப்படியான நிலத்தை தேடுகிறான்.
கதைச் சுருக்கம்.
இராசாத்தி சலவைத் தொழிலாளி ஏகாம்பரத்தின் புதிய மனைவி. அவளைக் கண்டு காமமுறும் இராணுவ அதிகாரி அவளை வலியுறுத்தியும் அவளை இணங்க வைக்க முடியாதபோது அந்த கிராமத்தை அவன் அடிக்கடி சோதனை செய்தும் – இறுதியில் கிராமத்து ஆண்களை ஏகாம்பரத்தோடு சேர்த்து கைது செய்கிறான். கைதின் நோக்கம், ஊரில் உள்ள மேல் சாதி பெண்களால் புரிந்து கொள்ளப்பட்டதும் இராசாத்திக்காகத்தான் இது நடக்கிறது என்பதனால், இவளை இராணுவ முகாமுக்கு அனுப்புகிறார்கள். அவள் அந்த முகாமுக்கு சென்று வந்தபோது அவள் துரோகியாக இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டு விளக்கு கம்பத்தில் கட்டப்படுகிறாள். அவளது பிரேதத்தை அவள் வளர்த்த நாய் நக்குவதிலிருந்து கதை தொடர்ந்து முன்னோக்கி செல்கிறது.
முதல் பந்தியில் அவளை நாய் ஒன்று நக்கியபடி நிற்கிறது. அவள் அந்நாய்க்கு எஜமானி என்பது படிமமாகிறது.
‘துரொகி . துரொகிகள் ஒழிக’ என காகித அட்டையில் எழுதப்பட்டிருப்பது அங்கு அவளைக் கொன்றவர்கள் எவ்வளவு தூரம் படிப்பறிவில்லாதவர்கள் என்பதை மட்டுமல்ல, ஈழத்தில் இயக்கங்களின் கொலைக் கலாச்சாரத்தையும் சொல்கிறது.
இராணுவ வீரன் நாயை காலால் உதைத்தபோது தடுத்த இராணுவ அதிகாரியை நட்புடன் அந்த நாய் நக்கியது.
அந்த நாய்க்கு இராணுவ அதிகாரியைத் தெரிந்திருக்கிறது. இது அந்தப் பெண் – நாய் – இராணுவ அதிகாரி என முக்கோணமாக இணைக்கிறது.
ஊரைக் காப்பாற்றுவதற்காக அவள் இராணுவ முகாமிற்கு வந்து இறுதியில் இயக்கத்தால் மரணத்தை ஏற்றாள் என மனமுடைந்து இருக்கும் இராணுவ அதிகாரியின் மனச்சாட்சியாக அவளது இறந்தகாலம் விரிகிறது.
காலம் – இடம்
விடுதலை இயக்கங்கள் துரோகிகளை கொல்லும் காலமும் ஆறுகள் கடலோடு கலப்பது கிழக்கு மாகாணம் என்பதும் இலங்கையை சேர்ந்த வாசகனுக்கும் புரிந்துவிடும்.
பாத்திரங்கள்
சலவைக்காரர் சமூகத்துப் பெண் இராசாத்தி ஒருவிதத்தில் அந்தக் கிராமத்தில் உள்ள உயர்சாதியினரால் உபயோகிக்கப்படுகிறாள்.
ஊரில் ஒரு வண்ணாரக் குடும்பம்தான் தீட்டுத்துணியை தோய்க்கும்- ஆனால் அவளைப் பலி கொடுத்து தங்களது பிள்ளைகள் கணவன்மார்களை விடுவிப்பது மட்டுமல்ல, தாங்களே தங்கள் தீட்டுத்துணியை தோய்க்கும் முடிவுக்கும் வருகிறார்கள். அதிலும் தனக்கு தீட்டு நின்று போனதை பெருமையாக நினைக்கிறாள் அந்த ஊரில் அதிகம் காணி வளவு வைத்திருக்கும் நல்லம்மா.
ஏகாம்பரம் புருசனாக இராசாத்திக்கு இருந்தாலும், எதுவும் செய்ய முடியாது குடிபோதையில் இராணுவ அதிகாரியை நோக்கி கல்லெறிகிறான். அதனால் கைதாகிறான்.
இராணுவ அதிகாரி செனவிரத்தின காமத்தால் ஏகாம்பரத்தின் ஆண்குறியைப் பார்த்து நகைக்கிறான். காமவெறிகொண்ட ஒவ்வொரு ஆணும் தன்னைப் பொறுத்த வரையில் தனது ஆண்குறியை முக்கியமாக்கும்போது அடுத்தவனை குறைத்து மதிப்பிடுகிறான். இங்கே காமத்தோடு அதிகாரமும் சேர்ந்து கொள்கிறது. கடைசியில் இராசாத்தியை அடைய முயற்சிக்கும்போது இதற்குத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டாய் என்று தனது சேலையை உயர்த்தும்போது தலைகுனிந்து வெளியேறுகிறான்.
அவனைத் துச்சமாக இராசாத்தி எண்ணியது கதையில்வைக்கப்பட்ட அவளது பெண்மையின் விழுமியம் ஆனால் யதார்த்தமான போர்கால நிலைக்கு அவள் கட்டுப்படவேண்டியுள்ளது.தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்க சமைக்க மட்டும் இராணுவ முகாமுக்கு போனாள் என்றிருந்தால் அது வாதாபியில் நடனம் மடடும் ஆடிய கல்கியின் சிவகாமி போல் முடிந்திருக்கும். யதார்த்தமாக இருந்திராது.
இங்கே முறுக்கு என்ற நாயும் பாத்திரமாகிறது.கார்திகை சித்திரையில் நாய்கள் புணரும் காலம். ஆக்காலத்தில் ஆண்நாயை அலட்சியப்படுத்திவிட்டு தனது ஏஜமானியின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது.
படிமம்
போர் காலத்தில் சமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பலியிடப்படுவதும் பணம் வசதி உள்ளவர்கள் தப்புவதும் எங்கும் நடக்கிறது. இதுவே இலங்கையிலும் நடந்தது. வசதி உள்ளவர்கள் கோசங்களுடன் நின்றுவிட்டால் உயிர்கொடுப்பது மற்றவர்களே.
முழு கிராமத்தவரதும் நன்மைக்காக இராசாத்தி இராணுவ முகாமுக்கு செல்வதின் மூலம் தன்னை அழித்து கிராமத்திற்கு வாழ்வு தருகிறாள். ஒருவிதத்தில் சிலுவையில் ஏற்றப்பட்ட யேசுவின் நிலைக்கு ஒப்பான படிமமாகிறாள்.
மனித குலத்தின் பாவத்தை ஒரே ஆளாக சுமந்ததுபோல, ஒரே ஆளாக முற்றாக கிராமத்தை இராணுவ அடக்கு முறையில் இருந்து விடுவிக்கிறாள். இது மாதிரியான படிமம் முக்கியமாக போர்க்காலத்தில் மிக உன்னதமாகிறது.
முரண்நகை
உண்மையில் ஊரை பாதுகாத்தவளை துரோகியாக கொலை செய்யும் இயக்கத்தினர் சமூகத்தின் நிலைகளை அறியாததோடு கொலை செய்து விளக்குக் கம்பத்தில் கட்டுகிறார்கள் என்பது இங்கு முரண்நகையாக வைக்கப்படுகிறது.
போர்க் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சாதிப்பாகுபாடு இல்லாமல் ஒழிக்கப்பட்டது என்றாலும் வெளிப்படையாக நிலமுள்ளவர்களின் அதிகாரங்கள் மற்றவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் ஈழவிடுதலை இயக்கங்களான தமிழ் மக்கள் விடுதலைக்கழகமும் மற்றும் ஈழமக்கள் புரடசிகர முன்னணியில் மேல் சாதி இளைஞர்களை சேர்த்துக் கொண்டபோது பிற்காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர் விடுதலைப்புலிகளில் சேர்ந்து கொண்டார்கள். ஈழவிடுதலை இயக்கங்களை ஊடுறுவிப்பார்த்தால் வேறு மட்டத்தில் தமிழ்சாதியம் எப்படி இருக்கிறது என்பது தெரியும்.
மொத்தமான சமூக அமைப்பு ,இராணுவத்தின் செயல்கள் வாசகர்களுக்கு வௌவேறு நிலைகளில் பொருள்மயக்கமாக(Ambiguity) வாசகர்களுக்கு விடப்படுகிறது.
கடைசியாக இந்தக் கதையில் பெயர்களை மாற்றினால் உலகத்தில் மற்றைய நாடுகளிலும் நடப்பதாக நினைக்கத் தோன்றும்.
இப்பொழுது எனது கதையை வாசிப்பவர்களுக்கு முடிவுகளை அவர்களிடமே விடுகிறேன்.
—-0—
மறுமொழியொன்றை இடுங்கள்