ஆற்றோர கிராமத்தில் அவளொரு துரோகி

நடேசன்

கடல் நுரை நிறத்தின் மேல் கறுப்பு புள்ளிகளை உடலெங்கும் கொண்ட அந்த பெட்டை நாய் லைட்டு கம்பத்தில் வெண்ணிற கையிற்றினால் இடுப்பிலும் நெஞ்சிலும் பல முறை சுற்றி கட்டப்பட்டிருந்த இளம் வயதுப் பெண்ணின் சடலத்தை முகர்ந்து பார்த்தது.பின்பு அவளது பாதங்களையும் கால்விரல்களையும் நக்கியது. சாலையில் போய்வரும் வாகனங்களினால் வாரியடிக்கப்பட்ட புழதி அவளது தேகத்திலும் அணிந்திருந்த ஆடைமேலும் போர்வையாக போர்த்தி இருந்தது. இடது தோளில் சாhய்ந்திருந்த தலையில் இருந்து தொங்கும் ஒற்றைப்பின்னல்லும் புழதி படிந்து இடைக்கு கீழே தொங்கியது. இடது பக்க நெஞசில் பாய்ந்த தோட்டாவால் வடிந்த இரத்தம் கூட மண்ணிறமாகிவிட்டது.

அந்தப் பெண் மண்ணாகிவிட்டாள்.

நாய் நக்க இப்பொழுது புழதி விலகி அவள் பாதம் புலர்ந்தது. இடது காலின் நடுவிரலில் போட்டிருந்த வெள்ளி மெட்டி பளபளத்தது. அவளது பாதங்களின் அமைப்பு அவளை ஒரு அழகி என கட்டியம் கூறியது. அந்த காலை வேளையில் பாதத்தில் படிந்த மண் திரையை மட்டும் அந்த நன்றியுள்ள நாயால் விலக்க முடிந்தது. ஆனால் அவளது தலைக்கு மேல் இவள் துரொகி . துரொகிகள் ஒழிக. என இருவார்த்தைகள் சிவப்பு மையால் ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்ட வெள்ளை காட்போட் தொங்கிக்கொண்டு இருந்தது. நெஞ்சில் தெரிந்த ஒரு தோட்டவின் அடையாளம் இந்த பெண்ணை கொன்றவர்கள் எழுதுவதிலும் பார்க்க ஆட்களை சுடுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டியது.

இந்த மின்சாரக்கம்பம் கிராமத்தின் பஸ் தரிப்பு நிலயத்துக்கு பக்கத்தில் உள்ள வேப்ப மரத்திற்கு புறத்தில் நாலு மீட்டர் தூரத்தில் உள்ளது..இந்த கம்பத்தில் கடந்த இருபது வருடங்களாக திருடர்கள், துரோகிகள் என நெஞ்சிலும் தலையிலும்மாக சுடப்பட்டு பலர் கட்டபட்டிருக்கிறார்கள்.உடல்களில் இருந்து பாய்ந்த இரத்தங்கள் வடிந்த மல சலங்கள் பெய்த மழையிலும் நாய்களின் மூத்திரங்களும் சேர்ந்து சுத்தப்படுத்தியிருந்தது.

இயற்கையை விட சிறந்த தோட்டி இந்த உலகத்தில் இல்லை.

மற்றய நாட்களில் இந்த பெட்டை நாய் லைட்டு கம்பத்தில் கட்டப்பட்ட பிரேதங்களை தனக்கு அறிமுகமான முகவரி உள்ளவர்களா என அறிவதர்க்கு சில நிமிட நேரம் நின்று முகர்ந்துவிட்டு செல்லும.;.

இள்று அப்படி செல்ல முடியவில்லை.

இது கார்த்திகை மாதமானால் ஊரில் பெண்நாய்கள் ஒரு இடத்தில் நிற்க முடிவதில்லை. ஆண் நாய்கள் துரத்திக்கொண்டிருக்கும்.கிழடு நொண்டி சப்பட்டை எல்லாவற்றையும் தவிர்த்து ஓடவேண்டும்.

இந்த சடலம் சில மணித்தியாலங்களுக்கு முன்பு இந்த நாயின் ஏஜமானி. அவளது காலை சுத்திக்கொண்டு திரிந்து. ஆற்றுக்கு வெளிக்குபோகும வெள்ளாவி வைக்கும் இடத்திற்கும் அவள் பின்னால் செல்லும். அவள் சரளை கல்லால் எறிநது கலைத்தாலும் சிறிது தூரம் சென்று விட்டு அவளை மீண்டும் தொடரும்.

சடலத்தை விட்டு அகலாமல் நின்ற அந்த பெட்டைநாயை எங்கிருந்தோ வந்த பெட்டை நாயின் காதலன் கறுத்த கடுவன் நாய் பின்பக்கத்தில் நக்கியது. தன் ஏஜமானியின் மரணத்தில் ஏற்பட்ட சோகத்ததை கோபமாக்கி கடுவனின் கழுத்தில் கடித்தது. கடுவன் இரத்தம் வழிய வவ் என கத்தியபடியே அந்த இடத்தை விட்டு ஓடியது.

சுpல நிமிடத்தில் இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் அந்த மின்கம்பத்தை கடந்து சென்றார்கள்.

‘பாவம் வண்ணாத்தியின் நிலைமையை பார்த்தாயா?

‘ஆமிக்காரனோடு படுத்தால் இப்படித்தான்’ என்று தலைப்பாரத்தோடு இடுப்பை நெளித்தாள்.

நாய் மட்டும் அந்த இடத்தை விட்டு அசையாமல் படுத்திருந்தது.

ஓருவர் சைக்கிளிலும் மற்றொருவர் பின் கரியரிலும் இருந்தபடி அந்த மின்கம்பத்தை கடந்து போனார்கள்

‘இன்று ஓரு துரோகியை கொன்று கட்டி இருக்கிறார்கள்’

‘இவன்களிட துரோகியும் தியாகியும். கொலைகளுக்கு புதுமாதிரியான ஞானஸ்ஞானம். சந்தியால கிறுக்கி ஓடு’.

‘அண்ணை உங்களது கதையை கேட்டால் உங்களையும் துரோகி என முடீவு கட்டிவிடுவார்கள்’

‘அதுதான் நான் சாப்பிடமட்டும்தான் வாய் திறக்கிறனான’;.

அவர்களின் குரல் காற்றில் கலந்து சென்றது.

பக்கத்தில் இருந்த இராணுவ முகாமில் இருந்து வந்த ஜீப் சடுதியாக பிரேக் போட்டு நின்றது.

ஜீப்பில் இருந்து இறங்கிய இரு ராணுவ அதிகரிகளில் ஒருவர் கப்டன் தரத்திலும் மற்றயவர் சாதாரண படை வீரர்போல் காணப்பட்டார். இறங்கிய அதிகாரி தனது கைத்தொலைபேசியில் பேசினான். படுத்துக்கிடந்த நாய் மெதுவாக அந்த அதிகாரியின் காலருகே சென்று தனது கழுத்தை நட்பாக உராய்ந்து. தனது அறிமுகத்தை தெரிவுப்படுத்தியது இராணுவ வீரர் அந்த நாயை உதைப்பதிற்கு காலை தூக்கிய படி முன் சென்ற போது அதிகாரி சைகையால் அந்த வீரரை தடுத்தார். நாய் நட்புடன் அந்த அதிகாரியை காலை சுற்றி வந்தது.

வேகமாக வந்த அம்புலன்ஸ் அந்த இடத்தில் நின்றதும் அதில் இருந்து இறங்கிய ஆஸ்பத்திரியை சேர்ந்தவர்கள் இளம் பெண்ணின் சடலத்தை லைட்டு கம்பத்தில் இருந்து கயிற்றை கழற்றி ஸ்ரெச்சரில் வைத்து அம்புலன்ஸ்சில் ஏற்றி சென்றார்கள்.

அந்த நாயைத் தவிர இரக்கம் காட்ட எவரும் இல்லாத ஊராகி விட்டதா? அந்த கிராமத்தில் மனிதர்களுக்கு மனிதம் மரணித்து விட்டதா? ஆயுததாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தேசமாகிவிட்டதா?

உயிருடன் இருந்த போது ஏற்பட்ட வெறுப்பு மரணித்த பின்பு மறைந்து விடும் என்பார்களே!

இவள் செய்த துரோகம் என்ன?

இந்தக் கிராமம் இரண்டு பெரிய ஊர்களுக்கு இடையே உள்ளது. கிராமத்தை சுற்றி நெல்லு வயல்களுண்டு. சிறிய ஆறு ஒன்று அந்த ஊரின் மேற்கே ஓடுகிறது. கிழக்கே இந்த ஊரை வெளியே இணைக்கும் தெரு செல்கறது. இந்த தெருவழியே வாகனங்கள் மட்டுமல்ல தொலைபேசி மின்சரம் வருகிறது. ஆரம்ப பாடசாலையும் அந்த தெரு ஓரத்திலே அமைந்துள்ளது.

ஓருகாலத்தில் இள வட்டங்கள் வயதானவர்கள் என கூட்டமாக கூடி பொழுது போக்கும் இடமாக இருந்க இந்த தெருச்சந்தி இப்பொழுது வெறிச்சோடிவிட்டது.

ஆயததாரிகள் வந்த பின்பு அவர்களின் இருப்பை இடைக்கிடை வெளிப்படுத்தும் இடமாக மாறிவிட்டது. ஆயுதங்களை காட்டி ஆட்சேர்த்தல். சமூக விரோதிகள் தண்டித்தல் என்பன நடந்ததால் சில காலங்களுக்கு முன்பாக இராணுவத்தினர் ஆரம்ப பாடசாலையில் உள் புகுந்து தங்களை சுற்றி முள்வேலி போட்டுக்கொண்டார்கள். கலகலப்பாக இருந்த இடம் இவர்களின் வருகையின் பின்பு சூனியமாகிவிட்டது. இராணுவத்தினர் பகலில் உலாவுதால் இளம் வயதினர் கிராமத்தின் பின் பகுதியால் ஆற்றைக் கடந்து செல்வார்கள். தங்களின் இருக்கையை வெளிப்படுத்த ஆயதம் தாங்கியவர்கள் இரவு நேரங்களில் இப்படி சிலரை துரோகிகள் எள சுட்டு கொலை செய்து விட்டு லைட்டு கம்பத்தில் கட்டிவைத்து விடுவார்கள்.

காம்புக்கு சென்ற கப்டள் உடனே பக்கத்து ஊரில் உள்ள பொலிஸ் நிலயத்துக்கு தொலைபேசியில் ‘ இரண்டு கிழமைக்கு முன்பாக கைது செய்து வைத்திருக்கும் அந்த ஏகாம்பரத்தை விடுதலை செய்து விடுங்க’

‘நீங்கள் கைது செய்து கொண்டு வந்த ஏகாம்பரத்தையா’

‘யேஸ் யேஸ்’ எரிசசலுடன்;

ஏகாம்பரத்தை விடுதலை செய்தவுடன் தனது அறைக்கு சென்று தனது தலையணை யின் கீழ் உள்ள தனது தினக்குறிப்பை திறந்து படித்தான்

‘அவளை கண்ட முதல் நாள் வேடிக்கையாக தொடங்கிய பேச்சு பின்பு அவளால் நிராகரிக்கப்பட்ட போது ஓரு மோகமாக வளர்ந்தது.. என் தவறுகளை உணர்ந்தாலும் என்னை அவள் நோக்கி தள்ளியது. கடைசியாக அவளிடம் திட்டுவாங்கிய பின் அவளை மறந்துவிடடு அவளது கணவனை விடுதலை செய்வதற்ற்கு தயாராகிய போது அவளே காம்புக்கு வந்தாள்.

தனது ஊர்காரரை விடுவித்தால் என்னுடன் ஜீப்பில் நான் கூப்பிடும் இடத்திற்கு வருவதாக சொன்னாள்.

ஓவ்வொரு நாளும் காம்புக்கு வந்து ஏகாம்பரத்துடன் இருந்துவிட்டு சனி ஞாயிறு கிழமைகளில் நுவரஎலிய பங்களாவுக்கு என்னுடன் வருவாளே.. அந்தக்காலத்தில் அந்ந ஊர் அமைதியாக இருந்தது. அந்த போர் நிறுத்தத்திற்கு இராசாத்தியே காரணம.அவளை என்னைக்காண வரும்போது மரியாதையாக சில சோல்ஜர்கள் ஆசனம் எடுத்துப் போட தொடங்கி விட்டார்களே. ஓரு நாள் காம்மில் எல்லோருக்கும் சமையல் இராசாத்திதான்.

எனக்கு தெரியும் இவள் எனக்காக வரவில்லை. ஊர்மக்களின் வேண்டுகோளுக்காக என்னுடன் உறவு கொள்வதை ஒரு கடமையாக செய்கிறாள். இவளது உயிர்கொலைக்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டும்.’

இதற்து மேல்படிக்க முடியாமல் டயரியை மூடினான்.

…………………………………………

அந்த பகுதியில் இராணுவம் சிறிய இராணுவ காம்பை புதிதாக திறப்பதற்கு தீர்மானித்ததும் வெளி நாட்டில் இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு வந்த செனிவிரத்தன தலைமை செயலகத்தில் கட்டளையின் படி அனுப்பப்பட்டான்.எந்த மேலதிகாரிகளும் இல்லாமல் பதினைந்து சோல்ஜர்ளுடன் இரர்ணுவ முகாம் அமைக்கப்பட்டது.

இந்தக்காலத்தில் ஊரில் துணி வெளுத்துக்கொண்டிருந்த ஏகாம்பரம் பக்கத்து ஊரில் மச்சாள் உறவான இராசாத்தியை சோறு கொடுத்து திருமணம் செய்து கொண்டு தனது ஊருக்கு கொண்டு வந்திருந்தான்.

வெளுத்த துணிகளை கொண்டு தலையில் சுமந்த படி சந்தியால் ராசாத்தி நடந்த போது இராணுவ ஜீப் வந்தது.

தலையை நீட்டியடி ‘ இந்த பொதிக்குள் குண்டு இருக்கா?’ அரை குறைத்தமிழில் செனிவிரத்தின கேட்டான்

‘ இல்லை ஐயா இது வெள்ளாவி வைத்த துணிகள். சொந்தக்கார்களுக்கு குடுக்க கொண்டு போகிறேன’

‘திறந்து காட்டு’

துணி மூட்டையை திறந்து காட்டியதும் ‘சரி சரி . நீ எங்கு போகவேண்டுமோ அங்கே விடுகிறேன்.’

‘இல்லை நான் நடந்து போவேன’ என கூறிக்கொண்டு வேகமாக நடந்தாள்

மறு நாள் மதியத்தில் காம்பை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு சிலர் மறைந்து விட்டார்கள். ஓரு மணி நேரத்தில் வேறு காம்பில் இருந்தும் ஏராளமான இராணுவத்தினர் ஊரை சுத்தி வளைத்து சோதனை செய்தனர். இளைஞர்கள் பலரை கைது செய்து இராணுவ வண்டிகளில் ஏற்றினார்கள். சுற்றி வளைத்து சோதிக்கும் போது செனவிரத்தின ஊரின் ஆற்றுப்பக்கமா இருந்த வீட்டுக்கு சென்று கதவை தட்டிய போது ராசாத்தி வெளியே வந்தாள்.

“ஹலோ தண்ணி கிடைககுமா?’ அவன் மனத்தில் இனம் புரியாத கிளர்சி நெஞ்சை நிறைத்தது

அவசரமாக உள்ளே சென்றவளை பின் தொடர்ந்தான் செனவிரத்தின.

உள்ளே போய் குனிந்து செம்பை தூக்கிய இராசத்தி தன் அருகில் வந்துவிட்ட செனவிரத்தினவை கண்டு திடுக்கிட்டு செம்பை நிலத்தில் போட்டாள். வாய்திறக்க முற்பட்டபோது வாயை பொத்தி விரலால் சத்தம் போடவேண்டாம் என சைகை செய்து விட்டு வெளியே வந்தான்.

இராசாத்தி அந்த இடத்தில் சிலையாகி நின்றாள்

அன்றேடு தேடுதல் நின்று விடவில்லை.

செனிவிரத்தனவின் மோகம் மேலேங்கியது.

இரரசாத்தியின் துன்பம் தொடரந்தது.

மீண்டும் இரவு நேரத்தில் சுற்றி வளைத்த தேடுதலில் நடு இரவில் கிராமத்து ஆண்கள் எல்லாரும் சந்திக்கு அடையாள அட்டையுடன் வரச்சொல்ல விட்டு பின்பு வீடு வீடாக சோதித்தார்கள். அன்று இரண்டு மணி நேரமாக நடந்த இந்த சோதிப்பு எல்லோருக்கும் வெறுப்பை அளித்தது.இதே நேரத்தில் செனிவிரத்தன இராசாத்தி வீட்டை சோதிக்க வருவதை எதிர்பார்த்து ஏகாம்பரத்தின் அக்கா தங்கம்மா வீட்டில் தங்கி விட்டாள். வெறும் வீட்டை கண்டு வெறுப்புடன் வெளியே வந்து
எதிர் வீட்டில் ‘எங்கே இந்த வீட்டு பொம்பிளை?’ என்றான்.

‘அக்கா வீட்டில் . அதோ அந்த வீடு ஐயா’.

அந்த வீடுகள் மற்றய இராணுவத்தினரால் ஏற்கனவே சோதனைத்குள்ளாக்கப்பட்டது. மீண்டும் ராசாத்தி இருக்கும் வீட்டுக்கு போக முடியாது எள்ற நினைப்பு அவன் மனத்தில் கசப்பை ஏற்படுத்தியது.

மறுநாள் ஆற்றங்ரையில் ஊர் பெண்களின் கூட்டம் கூடியது.

சாதி பேதம் மறந்து பெண்கள் எல்லாரும் சமூகமளித்திருந்த இந்த கூட்டத்திற்கு ஊரிலே நிலபுலத்துக்கு சொந்தக்காரியான நல்லம்மா தலைமை வகித்தாள். நல்லம்மாவின் கணவன் சிலவருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் வசதியாக வாழ்ந்த பரம்மரையை சேர்ந்தவர்கள். இரண்டு பெணகள் கனடாவில் திருமணம் முடித்து வழ்கிறார்கள்.

‘எவ்வளவு நாளைக்கு இந்த சோதனைகள் தொடரப் போகிறது?’ என்று அங்லாய்த்தாள்

‘இந்த ஆமி காம் வந்தபடியால்தான் இப்படி நடக்கிறது’. – இது இளைப்பாறிய ஆசிரியை சந்திரமதி.

‘அது சரி .ஏன் ஆமிக்காரன் இராசாத்தியை கேட்டவன்?’

‘எங்களுக்கு என்ன தெரியும்?’ கூட்டத்தில் ஒருத்தி

‘இராசாத்தி எங்கே?’ மீண்டும் நல்லம்மா அதிகாரம் தொனித்தது.

‘புரிசனோடு ஆத்துப்பக்கம் அழுக்குத்துணிகளோடு போனதை கண்டேள் அக்கா ‘ ஒரு இளவயதுக்காரி

‘ஒருக்கா இராசாத்தியை கூட்டி வாரயா? அவளிடமே நேராக விடயத்தை கேட்டு விடுவம்’

சில நிமிட நேரத்தில் அந்த இடத்தில் இராசாத்தி பிரசன்னமானாள்.

தலைமையிரை ஈரமான வெள்ளைத்துணியை சேர்த்து கொண்டையை உச்சந்தலையில் போட்டிருந்தாள். பெரிய குங்குமப் பொட்டு நெற்றியை அலங்கரித்தது

‘நேற்று இரவு செக்கிங் வந்த போது உன் வீட்டை வந்தாங்களா?’ நல்லம்மாவின் குறுக்கு விசாரணை தொடங்கியது

‘இரவு அவரில்லை. நான் சாந்தி அக்கா வீட்டில் இரவு படுத்திருந்தேன். நீங்க அவவைக் கேளுங்க’.

‘ஆமாக்கா அவள் சொல்லுறது உண்மைதாக்கா.’

‘சரி சரி உன வேலையைப் போய்ப்பார்’.

கூட்டம் அன்றய விசாரணையை ஒத்தி வைத்து விட்டு கலைந்தது

இந்த சம்பவத்தின் பின்னர் இரசாத்தி வெள்ளாவி வைப்பதற்கோ வெளுத்த துணிகளை வினியோகிக்கப் போவதற்கு முற்றாக மறுத்துவிட்டாள். ஆரம்பத்தில் ஏகாம்பரம் இதைப் பொருட்படுத்தவில்லை. வெளியூரில் இருந்து வந்ததவள் அத்துடன் புதுப் பெண்சாதி என்ற மயக்கமும் அவன் மனத்தில் நிறையவே இருந்தது.

ஊரில் தொடர்து பல முறை எது வித காரணமும் இல்லாமல் இராணுவத்தின் சுத்திவளைப்பு நடந்தது. ஓவ்வொரு சுத்திவளைப்பின் போதும் கப்டன் செனிவிரத்தனவிற்கு இராசாத்தியால் கடுக்காய் கொடுக்க முடிந்தது.ஏதாவது காரணத்தை சொல்லி வேறு வீடுகளில் தங்கி விடுவாள. சில தடவைகள் ஏகாம்பரம் இராணுவத்தினரிடம் தனியாக சிக்கிக்கொள்ள நேர்ந்தது.

ஓரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இராணுவ முற்றுக்கை நடத்தப்பட்டது. கிரிச்சிட்டபடி நிறுத்தப்பட்ட ஜீப்பில் இருந்து செனிவிரத்தன இறங்குவதைப்பார்த்ததும் தென்னோலைத்தட்டிகளின் இடை வெளியால பார்த்த இராசாத்தி கண் இமைக்கும் நேரத்தில் வெற்று ஹர்லிக்ஸ் போத்தலுடன் அடுத்த வீட்டில் பார்வதி ஆச்சியின் அடுக்களையில் சீனி இரவல் கேட்பது போல் புகுந்து விட்டாள். செனிவிரத்தனவின் பூட்ஸ் காலடி ஓசைகளால் திடுக்கிட்டு எழுந்த ஏகாம்பரத்துக்கு பக்கத்தில் படுத்திருந்தவளை காணாதது மேலும் அதிர்ச்சியை அளித்தது.

அலங்க மலங்க எழுந்தவனது தலைமயிரைப்பற்றிய படி ‘எங்கே பயங்கரவாதிகளை வைத்திருக்கிராய்’என சிங்களத்தில்
கேட்டபோது ‘ஐயா எளக்கு ஒருவரையும் தெரியாது’எழுந்த ஏகாம்பரத்தின் சாரம் இடுப்பை விட்டு கழன்று விழுந்தது. சாரத்தை இரு கைகயால் எடுக்கச் முயற்சித்தவனிடம் கைகளை உயர்த்தும்படி ஆணை பிறந்தது. சில வினாடி ஏகாம்பரத்தின் ஆண் குறியை பார்த்தபடி நின்று விட்டு ‘ எஙகே உன் பென்சாதி’ கொச்சைத்தமிழில் கேட்டான்

ஆத்திரம், ஆற்றாமை கண்களில் நீராக ‘வெளிக்கு போய் இருக்க வேண்டும் ஐயா’என்றான்

‘இந்த சாமானை பார்த்துதான் வெளியே போய்விட்டாள்’ ஏகாம்பரத்தின் ஆண் குறியை பார்த்து சிரித்தபடி

குனிந்து சாரத்தை இடுப்பில் கட்டினான்

திரும்பி வாசலை நோக்கி செல்லும்போது ‘உனது பெண்சாதிக்கு பயங்கரவாதிகளோடு தொடர்பு உள்ளது என சந்தேகம் உள்ளது. காம்புக்கு வந்து என்னை பார்க்க சொல்லு’ கூறிவிட்டு வெளியேறினான்.

நெற்றிப்பொட்டில் சுத்தியலால் அடிவாங்கிய உணர்வுடன் அப்படியே பாயில் விழுந்து தலையணியில் முகத்தை புதைத்தான்

குப்பற கிடந்தவனை முதகில் தட்டியபோது விழித்தான் ஏகாம்பரம்.

இராசாத்தி தேத்தண்ணி கோப்பையுடன் நின்றாள் கிழகில் உதித்த ஆதவன் கிரகணங்கள் வாசல் வழியே சாணியால் மெழுகிய தரையின் சில பகுதிக்கு தங்க முலாம் பூசி இருந்துது. அதே கிரகணங்கள் குளித்து குங்கும பொட்டு வைத்து தலை மயிரை காயவைத்துக் கொண்டிருந்த இராசாத்தி மேலும் பாரபட்சமின்றி தெளித்து அவள் அவனுக்கு தேவதைபோல தோற்றமளித்தாள்.

ஏகாம்பரத்துக்கு மாமியின் மகள் என்ற உரிமையால் எனக்கு கிடைத்தாள். இல்லையானால் இவளது அழகுக்கும் பவிசுக்கும் யாராவது படித்து உத்தியோகம் செய்யிறவனை கட்டிக்கொண்டு வெளியூரிலோ அல்லது வெளிநாட்டுக்கோ போயிருந்திருப்பாள்.

நான் பேராசை பிடித்தவன். இவளை அழுக்குத்துணி தூக்கிறதற்கும் வெள்ளாவி வைக்கவும் பாவிக்கிறேன். கல்யாணம் கட்டி ஒரு வருடம் ஆகியும் இவளுக்கு ஏதாவது நகையோ துணியோ வாங்கி கொடுக்கவில்லை. ரவுணுக்கு கூட கூட்டீக் கொண்டு போகவில்லை. இந்த ஆமிக்காரன் பொடியளோடு தொடர்பு இருக்கு என்று சொல்லி விட்டு போகிறானே? இதை எப்படி இவளிடம் கேட்பது?

‘அப்பா இவ்வளவு நேரமாக தேத்தண்ணி கோப்பையுடன் நிக்கிறன். என்ன அப்பிடி யோசிக்கிறிங்க?’

தன்னை சுதாரித்துக் கொண்டு ‘ஒண்டும் இல்லை’ சொல்லிக்கொண்டு தேனீரை வாங்கி குடித்தான்

‘காலமை நீ எங்கே போனாய்?. ஆமிகாரன் என்னை நித்திரையால் எழுப்பினான்’.

‘நான் வெளிக்கு போய் விட்டு சீனி முடிந்து விட்டதால் பார்வதி ஆச்சியிடம் இரவல் வாங்க போன போது ஆமி ஜீப்புகள் ஊருக்குள் வந்ததை கண்டதும் ஆச்சியின் வீட்டை தங்கி விட்டேன். அங்கேயும் வந்து செக் பண்ணி விட்டுpத்தான் போனார்கள்.

‘உன்னை ஏதாவது விசாரித்தார்களா?’

இல்லை. இரணடு ஆமிக்காரர்கள் வீட்டுக்குள் சுற்றிப்பார்த்துவிட்டு ஆராவது பொடியங்கன் வந்தார்களா என கேட்டுவிட்டு சென்றார்கள்.

‘உணமையாகவா?’

‘நான் ஏன் பொய் சொல்கிறேங்க.’

‘இல்லை இங்க வந்த ஆமிகாரன் உனக்கு பொடியளோடு தொடர்பு இருக்கதாகவும் உன்னை காம்புக்கு வரசொல்லி விட்டு போனான. அதை நினைத்துக் கொண்டு காலமை முழவதும் அழுது கொண்டிருந்தேன்’

‘இங்கு வந்தது உயரமான சிவப்பாக இருந்தானா?’

‘அவன்தான். ஆமியில் பெரியவன் போல் இருந்தான்’.

“நான் உங்களுக்கு சொல்லவில்லை. ஏன் சின்ன விடயத்தை பெரிதாக்க வேண்டும் என நினைத்தேன். ஓரு நாள் தெருவால் வரும் போது ஜீப்பை நிறுத்தி பேசினான். பின்னால் ஓரு முறை சுத்தி வளைத்த போது வீட்டுக்குள் வந்து தண்ணி கேட்டான். தண்ணியை வீட்டுக்குள் எடுக்க வந்த போது உள்ளே வந்துட்டான். நான் உடனே வெளியே ஓடி வந்து விட்டேன்’.

‘இவ்வளவு நடந்தும் நீ ஏன் எனக்கு சொல்லவில்லை .சொல்லாமல் விட்டது பிழை’ .

‘நீங்க என்னப்பா செய்திருப்பாய்? அவங்களோடு நாங்கள் எப்படி எதிர்க்க முடியும்? ஓரே வழி எங்கள் ஊருக்குக்கு போவது தான்.’

ஏகாம்பரம் தலையையாட்டி ஆமோதித்தபடி படுக்கையை விட்டு எழும்பி வெளியே சென்றான்

அன்று முழவதும் மழை தொடர்சியாகப் பெய்து கொண்டிருந்தது. ஏதுவித வேலையும செய்ய முடியவில்லை என மனத்துக்குள் முனகிக்கொண்டிருந்தான் ஏகாம்பரம். மாலை ரெலிவிசன் செய்தி கேட்போம் என கூறிய படி சிகாமணி வாத்தியார் வீட்டுக்கு போய்விட்டாள் இராசாத்தி. இந்த நேரத்தில் பரமன் வீட்டிற்கு போனால் கல்லோயா கறுப்பில் கொஞ்சும் நாக்கை நனைத்து விட்டு வருவோம். எப்படியும் இராசாத்தி வருவதற்கு முன்பு வீடுவந்து விடலாம் என நினைத்தபடி கயிற்று கொடியில் தொங்கிய சேட்டை போட்டுக்கொண்டு வெளியேறினான். பரமன் பக்கத்து ஊரில் லாண்டரி வைத்து தொழில் செய்பவன். இரவு நேரத்தில் போத்தல்களை வைத்து சில்லறை வியாபாரம். ஏகாம்பரத்தின் உறவுக்காரனும் கூட.

பரமனின் குடிசைக்கு பின்புறமாக வைத்து நின்றபடியே குடித்து விட்டு ஏற்கனவே காதில் சொருகி இருந்த பாதி சிகரட்டை பற்றிக்கொண்டு ஆற்றுப்பக்கமாக இருந்த ஓழங்கையை விலத்தி பிரதான சாலையை நோக்கி செல்லும் நடக்கத்தொடங்கினான் பாதையில் நடந்த போது சிறிது தூரத்தில் முறுக்கு என இராசாத்தியால் அழைக்கப்பட்டு சோறுவைத்து வளர்கப்படும் அந்ந பெட்டை நாய் நின்று கொண்டிருந்தது. அடுத்த ஊர் பெட்டை நாய் அவசரத்தில் ஆற்றோரம் குட்டி போட்டு விட்டு சென்ற போது இராசாத்தியால் எடுத்து வளர்க்கப்டது. ஆரம்பத்தில் இராசாத்தி அந்த குட்டி நாய் மேல்காட்டும் பரிவு எரிச்சலை கொடுத்தாலும் அவளுக்கு அது கொடுக்கும் சந்தோசத்தை பார்த்த பின்பு எரிச்சலை தவிர்த்துக் கொண்டான்.

இராசாத்தி அதற்கு வைத்த பெயர் அவனுக்கு சிரிப்பூட்டியது. ஓரு நாள் ஏன் முறக்கு என்று பெயர் வைத்தாய் என்ற போது முறுக்கு மாதிரி தான் குட்டியாக இருந்த போது பீ பேண்டது எனக் கூறிவிட்டு சிரித்தது நினைவுத்து வந்தது.

‘என்ன முறக்கு இந்தப்பக்கம். மாப்பிளை தேடுகிறாய் போல’ என வாயையில் முணுமுணுத்த படி முறுக்கு நின்ற பாதையில நடந்தான். முறுக்கும் அவனை பின்தொடர்ந்தது.

சில நிமிட பொடி நடையில் பிரதான வீதியை அண்மித்தபோது இராணுவ ஜீப் ஒன்று பிரதான வீதியில் அங்குள்ள சந்திக்கு சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.. இதைப் பார்த்ததும் கையில் இருந்த சிகரட்டை உறிஞ்சி குடித்துவிட்டு மீதி பில்டரை எறிந்து விட்டு ஏகாம்பரம் வேப்மரத்துக்கு பின்னால் இருந்த ஆமணக்குபுதரின் பின்னால் வெளிக்கு போக இருப்பது போல் குந்தி கொண்டு ஜீப்பை பார்த்தான்

நிலவுடன் சந்தி விளக்கின் வெனிச்சமும் அந்த இடத்தில் நடப்பதை காட்டியது. ஜீப்பின் முன்பக்கத்தில் இருவர் ரோச்சு வெளிச்சத்தில் திறந்திருந்த போனட்டுக்குள் ஏதோ பழுது பார்த்துக் பெண்டிருந்தார்கள். உள்ளிருந்த ஒருவன் பக்தில் இருக்கும் இராணுவ காம்பை நோக்கி நடந்தான். சுhலை வெளிச்சம்த்தின் கீழ் வந்த போது அது செனிவிரத்தன என்று தெரிந்தது.

செனிவிரத்தன என்றதும் எங்கிருந்தோ பற்றிய காட்டுத்தீ போல உடலில் கொதிப்பேற்றியது. இரத்தத்தில் கலந்திருந்த கல்லோயா சாராயமும் அவனது சினத்தை தூண்டி விட்டது.. குந்திய இடத்தில் கையை விட்டு தடவிய போது கைக்கு அடக்கமான ஒரு கல்லோன்று கிடைத்தது. அந்த கல்லால் செனிவிரத்தன வை குறி பார்த்து வீசினான்.

எறிந்த கல்லு செனிவிரத்தனவை கடந்து சிறிது தூரத்தில் விழுந்தது.செனிவிரத்தன எச்சரிக்கையுடன் நிலத்தில் படுத்தபடி ஏகாம்பரம் இருந்த புதரை நோக்கி சுட்டான். ஜீப்பருகே நின்ற மற்றய இரு இராணுவத்தினரும் அந்தப் புதரை சுற்றிவளைத்தனர்.

நடுங்கியபடியே இரண்டு கைகளையும் உயர்த்திய படி ஏகாம்பரம் வெளியே வந்தான்.

வெளியே வந்தவனை நோக்கி துப்பாக்கிகளை தூக்கிய இருவரிடமும் சுடவேண்டாம் என சமிக்கை செய்து கைது செய்து வரும்படி சொல்லிவிட்டு செனிவிரத்தன முன்னால் நடந்தான். ஏகாம்பரம் நீட்டப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுக்கு முன்னால் செண்றான்.

ஊர் அடுத்த நாள் அதிகாலையில் சுத்திவளைக்கப்பட்டது. பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். நேரடியாக இரசாத்தியிடம சென்று ‘ஜீப்பில ஏறு உன் புரிசனை பார்க்கலாம்’ என கூறினான். வாசல்வரை எதுவும் பேசாமல் சென்ற இராசாத்தி திடிரென பத்திரகாளியாகி நிலத்தில் இருந்து மண்ணை வாரி அந்த ஜீப்பில் மேல் கொட்டிவிட்டு ‘என்ர புருசன் உனக்கு என்ன செய்தார்? உனககு இதுதானே வேணும்.’. என்றபடி உடுத்திருந்த சீலையை கழட்டினாள். இராசாத்தியின் குரலை கேட்டு பலர் விட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். செனிவிரத்தன அவமானத்தால் குனிந்தபடி ஜீப்பில் ஏறி சென்றான் உள்ளே சென்றவளது காலடிகளை தொடர்ந்து முறுக்கு சென்றது. முறுக்கை அணைத்தபடி மூலையில் குந்தினாள் இராசாத்தி.

அன்று ஊரில் இருந்தவர்களில் பெரும்பகுதியினர் இராணுவ முகாமின் வாசலில், காலையில் இருந்து காத்திருந்தனர். பெண்களின் ஓலங்களும் திட்டுகளும் அந்தப் பகுதியை துயரத்தால் மூடியிருந்தது. ஆணகள் வாய்விடடு அழாவிடிலும் மெனைத்துடன் நடந்து காம்புக்கும் சந்திக்கு இடைப்பட்ட பகுதிக்கு மரணவீட்டின் சூழலை உருவாக்கினர். மாலை மூன்று மணியளவில் தந்தைமாரை மட்டும் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டது அதுவும் பத்து நிமிடம் மட்டுமே. காத்திருந்த பெண்களின் அழுகை உச்சத்துக்கு சென்று ஆண்கள் வெளியே வந்தபின் அடங்கியது.

பெண்களின் கூட்டம் இரவு நடந்தது. அன்று முழவதும் உணவு தண்ணியின்று முறக்கோடு வெறும் நிலத்தில் படுத்திருந்த இராசாத்தி அவசரமாக அழைக்கப்பட்டாள். அவசரமாக முகத்தை துடைத்துவிட்டு பச்சை தண்ணியில் ஒரு கோப்பையை குடித்துவிடடடு அவசரமாக சென்றாள்.

வழக்கம் போல் நிலச்சொந்தக்காரி நல்லம்மா தலைமை வகித்தாள். சந்திரமதி , நல்லம்மாவுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.

இரசாத்தியை கண்டதும் நேரடியாக சந்திரமதி ‘இராசாத்தி இன்று உன்னை ஆமி காம்பு பக்கம் காணவில்லை. .ஏன்?’

‘இல்லையக்கா——‘ என இழுத்தாள்

‘அவள் பின்பக்கமாக போய் பார்த்திருப்பாள். நம்மளை மாதிரியா’ என நக்கலாக நல்லம்மா கழுத்தை நெளித்தாள்

கூட்டத்தில் சிரிப்பு அலையாக பரவி மறைந்நது.

எதுவித பதில் பேசாமல் நின்றாள் இராசாத்தி

‘என்னடி கொழுக்கட்டையா வாய்க்குள்?. வுhயை திறந்து பேசேன்டி? நல்லம்மா பொறுமை இழந்ததவளாக.

இராசத்தியின் கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது

‘ஏன் ஏகாம்பரத்தை பார்க்க ஆமி காம்புக்கு வரவில்லை?’

‘வந்து —வந்து ‘ சொற்கள் தடங்கியது

‘சொல்லன்டி ‘சந்திரமதியும் பொறுமை இழந்தாள்

‘ஆமி பெரியவன் பல தடவை என்னோடு தவறாக நடக்கமுயற்சித்தான் அதுதான் நான் காம்புக்கு போக பயந்தன்’. என்று தொடங்கி ஆதியோடு கூறினாள்.

கூட்டத்தில் கச முச என கதைக்தனர்

‘ஆமி சுற்றி வளைத்தது. எல்லாரையும் கைது செய்தது எல்லாம் உனக்காக தான் போலிருக்கு’ என்றாள் சந்திரமதி

‘இவளை அனுப்பினால்தான் ஊர் பிள்ளைகளை ஆமி காம்பில் இருந்து வெளியெடுக்கலாம்‘.என நல்லம்மா தீர்மானமாக சொன்னாள்.

இராசாத்தி எதுவும் புரியாமல் விழித்தாள்

‘நீங்கள் போங்கள்.’ நானும் சந்திரமதியும் இராசாத்தியுடன் கதைத்துவிட்டு நாளைக்கு பதில் சொல்கிறேன்

‘அப்பிடியென்றால் இனிமேல் அவளவள் தீட்டு சீலையை தாங்களே தோய்க்க வேண்டியதுதான. நல்ல வேளை சிலமாதங்கள முன்தான் தீட்டு நிண்டது. நான் சொல்வது சரிதானேக்கா’ என்றாள் சந்திரமதி.

‘வாயை பொத்திக்கொண்டு வீட்ட வா. கதைப்பம்’ என கூறியபடி வீடு நோககி சென்றாள், போடியார் பொம்பிளை நல்லமமா.
——-

“ஆற்றோர கிராமத்தில் அவளொரு துரோகி” மீது ஒரு மறுமொழி

  1. THIS STORY REFLECTS THE NATURE OF SINHALA ARMY’S OCCUPATION & TAMIL SUFFERINGS DUE TO BOTH “SINHALA ONLY” ARMY’S BRUTAL ACTIONS & LTTE/TAMIL MILITANTS BEHAVIOUR/ REACTIONS! IGNORANCE,IDIOTISM,HATRED,ARROGANCE, AS WELL AS COMMUNICATION DIFFICULTIES,FEAR PLAYED A MAJOR ROLE DURING THE WAR 1983-2009 AS WELL AS 2009- 2016! TAMILS NEED A FEDERAL SOLUTION TO NESL &UC WITHOUT SINHALA INTERFERENCES IN THE FUTURE!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: