ஜெயமோகனின் முதற்கனலை படித்து முடித்து அதைப் பற்றிய எனது பார்வையை எழுத நினைத்தபோது என்னளவில் அறிந்த ஒரு சிறிய வரலாறும் நினைவுக்கு வந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்கழியில் எனது அறுபதாவது பிறந்த தினத்தின்போது எனது மனைவியும் நண்பர் முருகபூபதி மற்றும் எனது உறவினரான சிறிஸ்கந்தராஜாவும் ஒழுங்குசெய்த நிகழ்ச்சிக்கு பல நண்பர்கள் வந்து பல பரிசுப்பொருட்கள் தந்தார்கள். சேர்ட்டுகள் குடிவகைகள் எல்லாம் கொடுத்தார்கள். நண்பர் இளங்கோவும் டொக்டர் ஐமன் ஹாசனும் எனக்கு புத்தகங்களை பரிசளித்தனர்.
தரத்திலும் நிறையிலும் கனமான பரிசு இளங்கோவினுடையது. ஜெயமோகன் எழுதிய மகாபாரத மறுவாசிப்பான நான்கு புத்தகங்கள் அந்தப்பரிசுப்பொதியில் இருந்தன. அதை பரிசாக ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை. பெறுமதியானவை. அவரிடம் பணம் கொடுக்க முயற்சித்தேன். மறுத்துவிட்டார். இதற்குச் சரியாக ஒருவருடம் முன்பு நாகர்கோவிலில் ஜெயமோகனை சந்தித்தபோது மகாபாரதம் எழுதிக்கொண்டிருந்தார்.
‘எப்படி முதுகுவலி?’ என கேட்டுவிட்டு, அவருடன் அதிக நேரம் பேசிக்கொண்டிராது, அவர் மூலமாக பெரியார்வனத்தில் இரண்டு நாட்கள் விடுமுறையை கழிக்க நானும் மனைவியும் அவர் ஒழுங்கு செய்த காரில் புறப்பட்டோம்.
காரில் சென்றபோது மனதில் உதித்த எண்ணத்தை இங்கு சொல்லவேண்டும். வியாசர் சிரஞ்சிவி என்பதை நான் நம்பாத போதும் அவர் ஐந்து தலைமுறைகளைக் கண்டவர். அதாவது திருதராட்டினன், பாண்டு, விதுரனின் தந்தையாகிய, கொள்ளுப்பாட்டன் வரையாவது சீவித்தவர். அப்படியான அவரால் எழுதிய மகாபாரதத்தை எழுத பலவருடங்களாவது ஜெயமோகன் நோயற்று வாழவேண்டும் என எனது மருத்துவ மூளை சிந்தித்தது.
மகாபாரதம்
மகாபாரதம் வியாசர் விருந்தாக இராஜாஜி இராஜகோபாலாச்சாரியார் எழுதியதை சிறுவயதில் சிலதடவையும் குருஷேத்திர போரை பல தடவையும் படித்தேன். பிற்காலத்தில் இலங்கைப்போரை பற்றிய எனது ஆக்கங்களில் பலமுறை மகாபாரதத்தின் காட்சிகளை உவமைகளாக பாவித்திருக்கிறேன். தற்பொழுது சன் தொலைக்காட்சியில் பார்க்கிறேன்.
எமது வாழ்க்கையின் சகல திருப்பங்களிலும் நிழலாக, பாரதம் எம்மோடு வருகிறது. பாரதப் பாத்திரங்களை எமது வாழ்வில் பல இடங்களில் சந்திக்கின்றோம். ஓரிரு தர்மர்களை மட்டும் சந்தித்தாலும் எத்தனை சகுனிகள் வாழ்வில் வந்துபோகிறார்கள்…?
காலங்கள் கடந்து வாழும் இந்த மகோன்னதமான காவியத்தை நான் சென்ற தென்கிழக்காசிய நாடுகளில் பல கலை வடிவங்களில் பார்த்திருந்தாலும் இந்து பாரம்பரியத்தோடுதான் சென்றிருக்கிறது. அதற்கு அப்பால் தனக்குரிய சரியான அரியணையில் உலகத்தில் ஏற்றப்பட்டிருக்கிறதா…? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்றால், அதற்குக் காரணம் மற்றைய மதத்தவர்களால் இது மதநூலாக மாத்திரம் பார்க்கப்படுவதே காரணமாகலாம் என நினைக்கின்றேன்.
பாரதத்தின் ஆரம்பத் தொகுதியான முதற்கனல் குலவரலாற்றை பல உப கதைகளாக தருகிறது. அக்காலத்திற்கு ஏற்ற நதிகள், காடுகள், மற்றும் மலைகள் சக்திவாய்ந்த தேவர்கள், கந்தர்வர்கள் என்ற மாயாவாத தன்மையுடன் அமைந்திருக்கிறது. உண்மையில் மாயாவாத எழுத்துகள் தற்பொழுது எழுதும் அமெரிக்க , லத்தீன் அமெரிக்க இலக்கியம் எழுதுபவர்கள் தவறாமல் பாரதத்தை படித்தால் அவற்றின் உண்மையான ஊற்றுக்கண் இங்குள்ளது என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதேபோல் விலங்குகளை கதைப் பாத்திரமாக்கி உலாவ விடுதலின் ஆரம்பம் இந்தியாவே என மேற்குலகம் ஒப்புக்கொள்கிறது. அதற்குக் காரணம் பௌத்த ஜாதகக்கதைகள், ஈசாப் கதைகளாகி தற்பொழுது மிக்கி மவுசாக உலகெங்கும் வலம் வருகிறது.
நாய்களுக்கு தனியான சரமை என தெய்வம் இருப்பதும், பரிட்சீத் ஆறுமாத குழந்தையாக வந்தபோது முத்துச்சிப்பியில் வைக்கப்பட்டு நான்கு மாதம் இன்குபேட்ரர்போல் பாதுகாக்கப்படுவது அறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
முதற்கனல் முக்கிய பாத்திரங்களாக வியாசர், பீஷ்மர், அம்பை பின் சிகண்டி ஆகிய பாத்திரங்களோடு சந்தனு மகாராஜாவின் அரசியான சத்தியவதியையும் நம்முடன் உறவாட வைக்கிறது. உயர் இலக்கியம் வசிப்பாவனது மனதில் அதிர்வை மட்டுமல்ல, அறிவையும் உயர்த்துகிறது.
மகாபாரதத்தில் புதைந்த வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய மூன்று பகுதிகள் என்னைக் கவர்ந்தது.
வரலாறு
ஆரம்ப வரலாற்றில் மனித நாகரீகம், நிலவுடமை பரிணாமமாகி அரசுகள் உருவாகியது. விவசாயம், கால்நடை வளர்ப்பு என்று உருவாகியதால் அந்தப் பின்னணியில் அரசுகள் உருவாக்கம் பெற்றன. சில காலங்கள் முந்திப் பிந்தி இருந்தாலும் புவிப்பரப்பில் எகிப்தும், மேற்கு தென் மற்றும் கிழக்காசியா அரசுகளின் தோற்றுவாயாக அங்கெல்லாம் ஓடிய நதிகள் அமைந்தன. எகிப்தில் மற்றும் மேற்காசியாவில் தாமிர உலோக காலத்தில் அரசுகள் உருவாகியதற்கான பதிவுகள் உள்ளன(3500-3000BC) ஆனால் இந்தியர்களிடம் வரலாற்றுப் பதிவுகள் அழுத்தமாக இல்லை.
எகிப்தில் 5000 வருடங்களுக்கு முன்பு வட எகிப்தும், தென் எகிப்தும் நாமர் என்ற அரசனால் ஒன்றாக இணைக்கப்பட்டது தெளிவாக அரச சாசனமாக கல்லில் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. இதற்குமேல் அரச குழந்தைகள் பிறப்பு, இறப்பு என்பன மட்டுமல்ல. குடிமக்கள் சம்பந்தமான சாதாரணமான விடயங்களையும் நாம் அறிந்கொள்ளும் விதமாக கற்களிலும் மண்டபங்களிலும் பதிக்கப்பட்டுள்ளது. என் போன்றவர்களாலே எகிப்த்தின் அரச வம்சத்தை வருடம் பிசகாமல் சொல்ல முடியும் விதமாக பதிவுகள் உள்ளன.
வரலாற்றின் மிகப் பிரபலமான போராக (1274 BC) நடந்த கடேஸ் யுத்தம் (Battle of Kadesh) எகிப்திய மன்னன் மகா இராம்சிக்கும்(Ramses the Great) கிற்றரைற்(Hittite Empire) (தற்போதைய துருக்கி) மன்னனுக்கும் நடந்த போரில் எவ்வளவு இராணுவம் எத்தனை படைப்பிரிவுகள் ஒரு நாளில் எத்தனை தூரம் நடந்தார்கள் எல்லாம் விபரமாக கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இப்படியான சரித்திரம் இந்தியாவில் இல்லை இதற்குக் காரணம் வாய்மொழி வழக்கில் அறிவு கடத்தப்படும் இந்து மதமே மூலகாரணம் என நினைக்கிறேன். ஏனென்றால் இலங்கையில் பௌத்த மதத்துறவிகளால், தொடராக 2400 வருட வரலாறு மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சமூகமும் பௌதீகமாக அழியும்போதே எல்லைகள் சிதையும்வேளையில் தன்னை வரலாற்றில் நிலைப்படுத்த எண்ணுகிறது. அரசர்களும், வீரர்களும் அழியும்போது சமூகத்தை பாதுகாத்து உருவாக்கும் கடமை அறிஞர்கள், புத்திஜீவிகளிடம் செல்கிறது. அவர்கள் வரலாற்றை மீண்டும் கட்டமைக்கும்போது உண்மைகள் மட்டுமல்ல கற்பனையும் கலந்து விடுவதோடு செங்கற்களை வைத்து சிமந்து பூசுவதுபோல் உருவாக்குகிறார்கள். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. யூதர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டபோதுதான் (604-585 BC) விவிலியத்தின் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதேபோல் இலங்கையில் பௌத்த சமயத்திற்கும் இலங்கைக்கும் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றபட்ட இடர்கள் மகாவம்சத்தின் தோற்றத்திற்கு காரணமாகிறது என்கிறார்கள்.
குருஷேத்திரப் போரால் குருவம்சத்தில் ஏற்றப்பட்ட அழிவே மகாபாரதத்தின் தொடக்கமாகிறது. நேரடியாக கண்டதுமல்லாது, அரசவம்சத்தை உருவாக்கிய வியாசர் அந்த அழிவை எவ்வளவு கவலையோடு எதிர்கொண்டிருப்பார்? அதுவும் அவரது இறுதிக்காலத்தில் என்பதை இப்பொழுது நம்மிடையே நடந்த யுத்த அழிவுகளை வைத்து கற்பனை செய்யமுடியும்.
மகாபாரதம், வாய்வழி கதைகளாக வந்தாலும் நடந்த விடயங்களை பார்க்கும்போது கதைநடந்த காலத்தை ஊகித்துக் கொள்ளமுடியும். இரும்பை உருக்கி(Metallurgical coal) கரியுடன் சேர்த்து உருக்காக்கும் காலம் அண்ணளவாக 3500 வருடங்கள் முன்பு நடந்திருக்கவேண்டும். தற்போதைய தகவல்களின்படி துருக்கியிலும், வட இந்தியாவிலும் சமகாலத்தில் இந்த உலோக உருவாக்கம் நடந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன.
பாரதப்போரில் முக்கியமாக பாவிக்கப்படும் பீஷ்மர், விதுரர், அருச்சுனனின் விற்கள் இந்த உருக்கில் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதேகாலத்தில் வேடர்கள் மரவில்லையே பயன்படுத்தியிருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. சிறந்த உருக்கு வில்லை வளைப்பதற்கு மிகுந்த தோள்வலிமையும் நுட்பமும் தேவைப்படுகிறது. இதன்படி பார்த்தால் உருக்குத் தொழில் அரசுக்கு மட்டும் குறிப்பிட்ட சிறுஅளவிலும் பரவி இருப்பது தெரிகிறது.
ஏற்கனவே விவசாயம் கால்நடைத்தொழில் மிக விருத்தியடைந்து அதில் உருவாகிய செல்வத்தால் அரசு உருவாகியதுடன் அரசு தனியாக இராணுவமும் வைத்துள்ளது. வட இந்தியாவில் இந்த விடயங்கள் ஆரம்பித்த காலத்தில் ஐரோப்பாவில் அரசுகள் இல்லை. ஆனால் எகிப்து மற்றும் மத்திய கிழக்கு, பராசீகப் பேரரசுகள் உருவாகி போட்டி போட்ட காலம்.
இந்த அரசுகள் உருவாக்கியதற்கு விவசாயத்தால் ஏற்பட்ட உபரி உணவு உருக்கு தொழில்நுட்பமும் தேவை. அத்துடன் நகரமயமாக்கம் நடந்துவிட்டது. இதனால் விவசாயிகள் அல்லாத தொழில்நுட்ப நிபுணர்கள், கலைஞர்கள் உருவாகி இருந்துள்ளார்கள். அஸ்தினாபுரத்தை வடிவமைத்தவர் தேவலோகமயனின் வம்சத்தினர் என்ற விடயங்களை நாம் புறக்கணித்து பார்க்கும்போது கதை நடந்த காலம் சரியாக குறிக்க முடியாவிடிலும் சரித்திரத்தில் ஆரம்ப இரும்புக்காலமாகும் (Iron Age).
இலக்கியம்
இலக்கியமாக பார்க்கும்போது முதற்கனலில் பாத்திரங்களில் அம்பையின் பாத்திரம் தற்கால ஜெர்மைன் கீர் (Germaine Greer) போன்ற பெண்ணியவாதிகள் பாராட்ட வைக்கும் கூர்மையுடன் பூரணமான பாத்திரமாக படைக்கப்பட்டுள்ளது. அம்பையின் செயல்கள் காட்டுவது,பாரதத்திலே ஆணுக்கு நிகரான ஒரே பாத்திரம். இது எந்த இந்திய இலக்கியத்திலும் அற்ற புதுமை. அம்பை பெண்ணாக தனது துன்பத்திற்கு காரணமானவரை பழிவாங்குதல் என்பது ஒரு பிறவியில் அல்ல பல பிறவியில் தொடர்கிறாள். அவளது தங்கைகள், குழந்தை பிறக்கவைக்கும் இயந்திரங்கள் போல் பாவிக்கப்படும்போது அம்பையின் பாத்திரம் வரலாற்றில் எங்கும் காணமுடியாத தன்மை கொண்டது.
தற்கால மனதத்துவத்தோடு பார்த்தால் பிஷ்மர் சத்தியவதி அரசியின் கட்டளையால் காசி இளவரசிகளை சிறையெடுத்தபோது அவரது மனவேதனையின் நிழலே சிகண்டியாக உருமாற்றமடைவதாக கொள்ளலாம்.
காஃவ்காவின் உருமாற்றம் அல்லது தற்கால கதை சொல்லலின் மாயாஜால யதார்த்த கதைசொல்வதில் உருவகித்துக் கொள்ளலாம். தான் நினைத்தாலே இறக்கமுடிந்த பீஷ்மரின் முடிவுகாண சிகண்டிக்கு ஒருபிறப்பு காணாதது மட்டுமல்ல பல பயிற்சிகள் ஊடாக போகும் தேவையிருக்கிறது.
வியாசர் பாரத கதை சொல்லுபவராகவும் அதேவேளையில் இவரே கதைபாத்திரம். இவரே திருதராட்டினன் பாண்டுவின் தந்தை. அவர்களது குறைகளை நிவர்த்திக்க தாதித்பெண்ணை கலந்து விதுரனை உருவாக்குகிறார். அதே நேரத்தில் சகலரும் இறப்பதை பார்த்து துன்பமடைந்து அதைக்கடந்து எழுதுகிறார். படைத்தவரே அவர்களின் இறப்பையும் எழுதுவது இலக்கியத்தின் உச்சமானது.
சத்தியவதியின் பாத்திரம் சோகமானது. சந்தனு மகாரஜாவுக்கும், கங்கையின் மகளாகிய கங்காதேவிக்கும் புத்திரனான பீஷ்மருக்கு மகுடம் இல்லாது, தனது புத்திரர்களுக்கே பட்டம் கட்டவேண்டும் என்று நிபந்தனையுடன் மணந்தாலும், இரண்டு புத்திரர்கள் அரசுக்கட்டிலை அனுபவிக்காது வம்சமற்று இறக்கிறார்கள். இதனாலே தனது குலத்து வியாசரால் காசி அரசிகள் கர்ப்படைந்து வாரிசுகளை உருவாக்கிறார்கள். அரசி என்ற ரீதியில் எதுவித உணர்வுகளுக்கும் அடிமையாகாமல் அரசகடமையை செய்தாலும் தாயாக, மனைவியாக தோற்கிறார் என்பதும் இங்கு முரண் நகையாகிறது.
சத்தியவதி, அம்பை, திரௌபதி, குந்தி, காந்தாரி, உத்தரை என எல்லா பெண்களும் அல்லல்படுகிறார்கள். பாரதத்தில் எந்தப் பெண்ணும் துன்பத்தை மட்டுமே சுமக்கிறார்கள். நிஜத்தை உருவாக்கி கற்பனையாக்கியதா இல்லை கற்பனையை நிஜமாக்கியதா? பெண்களின் துன்பம் காவிய சீதையிலிருந்து மகாபாரத பெண்பத்திரங்கள் என இந்திய மண்மேல் நிழலாகத் படிந்திருக்கிறதா என எண்ண வேண்டியிருக்கிறது.
தத்துவம்
தத்துவமாக பாரதத்தை பார்பவர்களுக்கு அமுதசுரபி பாரதம் – ஆனால் எனக்குப் பிடித்த இடம் அகங்காரத்திற்கும், காமத்திற்கும் பாம்பு படிமமாவது. குருஷேத்திரம்போல் மீண்டும் ஒரு அழிவு ஏற்படாமல் இருப்பதற்கு பாம்புகளை அழிக்க முயற்சித்த மன்னரை, வியாசர் தடுத்து இரண்டுமற்ற உலகமில்லை என்பதுதான் இங்கே பாரதம் அளிக்கும் வைரங்கள். அகங்காரத்தையும், காம இச்சையையும் துறக்கச் சொல்லும் மத நூல்களில் இருந்து மகாபாரதம் வண்ணுயரதில் நிற்கியது.
நான் முதல்கனலில் உள்ளவற்றைத்தான் இங்கு குறிப்பிட்டேன். சிலர் இது மகாபாரதம் இல்லை எனவாதிடலாம். ஆனால் வியாசரின் கையெழுத்துடன் தாழைமடல் நமக்கு கிடைக்கவில்லை ஒவ்வொரு காவியமும் தற்காலத்தில் தற்காலமொழியில் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு மக்களிடம் செல்லவேண்டும்.
முதற்கனலை இணைய வாசகராக சிலகாலம் இணையத்தில் படித்தேன். முடியவில்லை. திருதராட்டினன் குழந்தையில் தாயின் முலைப்பாலை உறுஞ்சும் வேகத்துடன் எனது நேரத்தை உறிஞ்சியதால் எனது அந்த முயற்சி தோல்வியடைந்து புத்தமாக வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தேன் அது சரியான முடிவாக இருந்தது. காரணம் புத்தகத்தை படித்து முடித்துவிட்டு ஆரம்பத்தை மீண்டும் படிக்க வேண்டியிருந்து.
தற்கால இலக்கியத்தின் சகல நுட்பங்களும் புதைந்துள்ள இந்தக் காவியத்தில் இல்லாத இலக்கியக்கோட்பாடு இல்லை. ஜெயமோகனது முயற்சி தமிழுக்கும் வாசகர்களுக்கும் பாரிய கொடை.
மறுமொழியொன்றை இடுங்கள்