ஐயா எலக்சன் கேட்கிறார்.

ஐயா எலக்சன் கேட்கிறார்.
wig_sam
நடேசன்
ஐயா எலக்சன் கேட்கிறார். மாவை நித்தியானந்தனின் நாடகத்தின் பெயர். பல தடைவ மெல்பேனில மேடையேறியது. தேர்தலே நாடகமாக தமிழர் மத்தியில் ஒவ்வொரு முறையும் அரங்கேறுகிறது. மக்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் வெட்டியள்ளிக்கொண்டு வருவாவார்கள் என ஆவலாக பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நான் சமீபத்தில் உருத்திரகுமாரன் கதை என இலங்கைத் தமிழரை படிமமாக்கினேன். ஐந்து வருட கோமாவின் பின்பும் விடுதலைப்புலிகள் இருப்பதாக விடாது மறுத்து ஆயுதப்போராட்டதிற்கு தயாராகதக இருக்கும் கால் ஊனமான போராளி கடைசியில் அங்கொடை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுகிறான். அவன் மட்டுமல்ல அவனோடு ஐந்து வருடம் காவலுக்கு இருந்த ஜெயசிங்காவும் பைத்தியமாகி வைத்தியசாலைக்குள்ளே அனுமதிக்க அனுமதிக்கப்படுவதாக கதை முடிகிறது. இங்கே யார் உருத்திரகுமாரன் யார் ஜெயசிங்கா என்பது கதையில் சொல்லப்படாவிடிலும் சாதாரணமான இலக்கிய அறிவு உள்ளவர்களுக்கு விலங்குப்பண்ணையில் சினோபோல்,நெப்போலியனை புரிந்து கொள்வதிலும் இலகுவானது.

https://noelnadesan.com/2015/07/08/

நகைச்சுவை இலக்கியத்தை விட நமது அரசியல், பல நடிகர்களைக் கொண்டது. சிவாஜிலிங்கம் குருணாகலையில் போட்டியிடுவதும் தேர்தல் அபேடசகர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளமன்ற உறுப்பினர்களையும் தேர்தலில் நின்ற ஒருகாரணத்திற்காகவே விண்ணிற்கு தோட்டாவால் அனுப்பிய போராளிகள் தேர்தலில் நிற்பதைவிட நகைச்சுவையா நாங்கள் எழுதமுடியும்?

நான் வித்தியதரன் குழுவில் உளள போராளிகளை மட்டும் சொல்லவில்லை.

உடுவில் தர்மலிங்கம் யாருக்கும் கனவில் கூட தீமை செய்யாத மனிதர். அவர் சேர்த்த நல்ல பெயரில்த்தான் இனனமும் சித்தார்த்தன் வாக்கெடுப்பது.

அவர் ஏன் கொல்லப்பட்டார்?

தமிழர் வரலாறு எங்கள் ஊரில் ஒரு பேச்சுவழக்கை நினைக்கப் பண்ணுகிறது.

‘வயிற்றுக்குள் இருக்கும் மலத்தை கொழுப்பென நினைப்பது.’

நமது தலைவர்கள் பல அணிகளில் திரண்டு போட்டியிடுகிறார்கள். வாள் வீச்சுப்போல் வீரவசனங்கள், மயிர்கூச்செறியும் அறிக்கைகள். அதைக்கேட்டு மக்கள் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறாரகள். ஒருவிதத்தில் கடந்த முப்பது வருடங்களில் நினைத்துப்பார்க்க முடியாத விடயம்தான். ஐம்பதினாயிரம் ரூபாயிருந்தால் எவரும் எங்கும் கேட்கலாம். அதாவது குருநாகலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம்போல். குருநாகலில் பஸ் நிலையத்திற்கு போகவே தமிழர்கள் பயந்தகாலம், நாங்கள் பேராதனையில் படிக்கிற காலம்.

காலம் மாறிவிட்டது. தமிழர்கள் இந்த ஜனநாயகத் தேர்தலில் கலந்து கொள்வதற்கு சிங்களவர்களே வழிசமைத்தார்கள். இது ஒரு அழகிய முரண்பாடு இல்லையா? அதிலும் தேர்தலில் வாக்கு கேட்டவர்களை கொலை செய்தவர்களும் இந்தத் தேர்தலில் இறங்கியிருப்பது மிகவும் சந்தோசம்.

ஒட்டுமொத்தமாக நமது தமிழர்களிடம் ஜனநாயகம் ஆடிக் காவேரிபோல் பொங்கிப் பாய்கிறது. ஊரில் இல்லை என்பது மட்டும் எனது கவலை.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு எவர் வந்தாலும் சந்தோசம். எழுவைதீவில் வந்து வாக்குக்கேட்ட தந்தை செல்வநாயகத்திடம் ‘உங்கள் சார்பில் கங்கு மட்டையை அனுப்பினாலும் எங்களது வாக்கு தமிழரசுக்கட்சிக்குத்தான்’ எனக் கூறிய எனது தாத்தாவின் வார்த்தைகளை கேட்டு வளர்ந்தவன்.

அக்காலத்துமனிதர் அவர் – இக்காலத்திலும் அப்படியே பலர் இருப்பதால் சிலகோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன் தமிழ் அரசியல்வாதிகளிடம்.

இலங்கையில் தர்மிஸ்ட ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்குப்பின் வந்த தலைவர்கள் அனைவரும் தற்போதைய மைத்திரிபால சிறிசேன உட்பட ஒவ்வொரு ஜனாதிபதிகளும் ஏதோ ஒருவிதத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்தில் அணுகினார்கள்.

அவர்களில் ஒருவரை உலகை விட்டு அனுப்பினோம். மற்றவர்களை அனுப்ப முயற்சித்தோம். அது மட்டும் போதாது என்று பக்கத்து நாட்டு தலைவரையும் சமாதானத்தை கொண்டுவர முயற்சித்ததற்காக போட்டுத் தள்ளினோம். தற்போது இலங்கையில் சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையினர் தமிழர்கள்மேல் குரோதமற்று வாழ்கிறார்கள் அல்லது வாழ முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில் நமது தமிழர்கள் இனவாதம் பேசி இலங்கையின் பௌத்த மக்களை பர்மீய பௌத்த மக்களது நிலைக்குத்தள்ளக் கூடாது. தேர்தலில் வாக்குகேட்கும்போது நாகாக்க வேண்டும். தற்கால உலகத்தில் இனவாதம் மதவாதம் நெருப்பாக எரிகிறது.

மிகவும் இலகுவாக உணர்வுகளை ஏற்றி 83 நிலைக்கு தள்ளமுடியும்.

இலங்கையில் தேர்தலின் முடிவில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. ஆனால் தற்போது உள்ள அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒத்துழைக்கக் கூடாது. தற்போதைய அரசியல் அமைபபில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்பு தேவை அதை கடந்த ஜனவரி தேர்தலில் பார்த்தோம்.
மேலும் அரசாங்கம் அமைப்பதிலும் இப்படியாக விகிதாசார முறையில் சிறுபான்மையினரின் தேவை உள்ளது. 77இல் இந்த அரசியலமைப்பை உருவாக்கும்போது இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தன தனது அதிகாரத்தை அதிகரிப்பதற்காக கொண்டு வந்தாலும் இதனால் ஏற்பட்ட பக்கவிளைவை இஸ்லாமியர்களும், மலையக கட்சியினரும் தங்களுக்கு சாதகமாக பாவித்தார்கள். அவர்களை மனமார பாராட்டும் வேளையில், நமது யாழ்ப்பாணத் தலைமைகள் பாவிக்கவில்லை என்பதோடு ,பாரிய அழிவைத் தேடித் தந்தார்கள் உயிர்களை, உடைமைகளை, வாழ்வாதாரங்கள் எல்லாவற்றையும் இழந்து ஒவ்வொரு தமிழனையும் பழனி முருகனாக்கினார்கள். இதற்குக் காரணம் தமிழ் தலைமைகளின் விதண்டாவாதமான வழக்காடும் தன்மையான மனப்பான்மை மட்டுமே.

இக்காலத்தில் அரசியல் என்பது பேரம் பேசும் விடயம். இதை அழகாக செய்த மனிதர் மண்டேலா. சிறையில் இருந்தபடி தனது மந்திரிசபையை அமைத்தார்.

அவ்வாறு சிற்பத்தை செதுக்குபவன்தான் சிறந்தவன். ஆனால் நமது சமூகம் தொடர்ச்சியாக அதைப் போட்டு உடைப்பவர்களையே தலைவர்களாக பெறுகிறது.

பரவாயில்லை பிரபாகரன் செய்தததைவிடவா இவர்கள் தீமை செய்துவிடுவார்கள்?

நான் கேட்ட இரண்டையும் அதாவது சிங்களவர்கள் மத்தியில் இனவாதத்தை ஏற்றாமலும், தற்போதைய அரசியலமைப்பை மாற்றாமல் வைத்திருந்தால் குறைந்த பட்சம் சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றவர்களின் பின்பு – அபிமன்யூவின் மனைவியான உத்தரையின் வயிற்றில் இருந்து பரிட்சத் வந்து குரு வம்சத்தை தொடர்ந்ததுபோல் நமது தமிழ் தலைமை எங்காவது கருவில் இருந்து எதிர்காலத்தில் தமிழ்த்தலைமை வராதா என்ற எதிர்பார்ப்புத்தான் தற்பொழுது இருக்கிறது.

வாழ்க தேர்தல் ஜனநாயகம்.

“ஐயா எலக்சன் கேட்கிறார்.” மீது ஒரு மறுமொழி

  1. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: