மெல்பனைவிட்டு வேறுநாடு ஒன்றிற்கு சென்ற பின்பும் மெல்பனை நினைவு படுத்திய ஒரு நகரம்; தென்னாபிரிக்காவில் உள்ள கேப் ரவுண். ஒரே மாதிரியான பருவகாலங்கள். அகலமான வீதிகள் துறைமுகப் பிரதேசம் உயர்ந்த கட்டிடங்கள் சிறிது தூரம் சென்றால் மலைக்குன்றுகள் அதைச்சுற்றி கண்ணுக் கெட்டியதூரம் புல்வெளிகள் அப்பால் கரடுமுரடான கடற்கரையோரம் என விரிந்து செல்வதுபோல் தோன்றியது.
செழிப்பான அழகில் மெல்பன் விருந்திற்கு வந்த அழகியாகத் தெரியும். ஆனால் கேப் ரவுண் அதே பெண்ணை உல்லாசப் பிரயாணத்தில் பார்த்ததுபோல் தோன்றும்.
நான்கு நாட்கள் மட்டும் செலவழித்து இந்தப் பிரதேசத்தை பார்த்து முடிப்பது என்பது கடினமான காரியம். சில முக்கிய பகுதிகளுக்கு செல்வதன் மூலம் தென்னாபிரிக்காவின் முதல் மாநிலத்தை கண்ணால் காண்பது முழுமையாக இல்லாத போதிலும் கற்பனையில் எனக்குள் ஒரு சித்திரத்தை வரைவதற்கு முடிவு செய்தேன்.
கேப் டவுன் துறைமுகம்
தென் ஆபிரிக்காவின் தொடக்கப்புள்ளி டேபில் பே (Table Bay ) இங்குதான் உள்ளது. மிகவும் அழகான கட்டிடங்களும், அதிகமான உணவுச்சாலைகளும், சிற்பங்களும் கொண்ட பிரதேசம். அதிகமான உல்லாசப்பிரயாணிகள் வருகை தருகிறார்கள். நெல்சன் மண்டேலாவை சிறையில் அடைத்து வைத்திருந்த, ரொபின் தீவுக்குச் செல்ல இங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு மணிநேர கடற்பயணம். அந்தத்தீவு அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. மேற்கு கேப் மானிலத்தின் தலைநகரான கேப் டவுனின், தென்பகுதி கேப் மாநிலத்திற்கு மேற்கே அத்திலாந்திக் சமுத்திரமும் கிழக்கே, இந்து சமுத்திரமும் விரிந்துள்ளன. இந்த இரு சமுத்திரங்களும் ஒன்றாக சேர்வது நன்னம்பிக்கை முனை என அக்காலத்தில் கடலோடிகளால் பெயரிடப்பட்டது. அதுவும் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
வரலாறு
தென் ஆபிரிக்காவில் ஐரோப்பியரால் முதலாவதாக கொலனியாக்கப்பட்ட இந்த கேப் பிரதேசம் மிகவும் வித்தியாசமான வரலாறு கொண்டது. ஆபிரிக்காவின் மேற்கு கரையோர பிரதேசங்களில் இருந்து இரண்டரை நூற்றாண்டுகளாக அடிமைகளை ஐரோப்பியர்கள் வட, தென், அமரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளுக்கு கொண்டு சென்றபோது, ஓல்லாந்தைச் சேர்ந்த டச்சு ஈஸ்ட் இந்தியா கம்பனியினர் கப்பல்கள் மூலம் வந்து இங்கு குடியேறியதுடன் – பிற்காலத்தில் மலேசியா, இந்தோனேசியா , தென் இந்தியா, ஏன் இலங்கையிலிருந்தும் அடிமைகளைக் கொண்டு சென்று கேப்டவுன் பிரதேசத்தில் குடியேற்றினார்கள். மற்றப் பிரதேசங்களுக்கு ஆபிரிக்கர்கள் அடிமைகளாக செல்லும்போது தென் ஆபிரிக்காவிற்கு ஆசியாவில் இருந்து அடிமைகள் வந்தது வித்தியாசம் இல்லையா…?
ஆபிரிக்காவின் மற்றைய பகுதிகளுக்கு இஸ்லாமிய மதம் அரேபியாவில் இருந்து பரவியபோது தென்னாபிரிக்காவுக்கு மட்டும் ஆசியாவில் இருந்து பரவியது.
தற்போதைய தென் ஆபிரிக்காவை மேற்கு கிழக்காக இரண்டாக பிரித்தால் மேற்குப் பிரதேசம் 20 அங்குலத்திற்கு குறைவான மழை பெறுவதால் ஆபிரிக்க பாரம்பரிய உணவு பயிரிடமுடியாது. கிழக்குப் பகுதி விவசாயிகளான பண்டு(Bantu)இனத்தினர் விவசாயம் செய்தனர். மேற்குப்பகுதியில் கால்நடைவளர்க்கும் கோயசான் (Khoisan) மக்கள் வாழ்ந்த பகுதி தற்போது கேப் டவுன் துறைமுகம் இருக்கும் ரேபில் பே (Table Bay) பிரதேசம் ஆகும்.
ஆபிரிக்காவின் தென்முனைக்கு 1487 இல் வந்த போர்த்துக்கேய மாலுமி பாத்தலேமிய டயஸ் கேப்பொயின்ரையும் – பத்துவருடங்கள் பின்பாக வஸ்கொடகாமா தென்ஆபிரிக்காவின் கிழக்கு கரைக்கு நத்தார் தினத்தில் கப்பலில் வந்தடைந்த நினைவாக நத்தால் எனவும் பெயரிட்டனர். போர்த்துக்கேயருக்கு துருக்கியரால் அடைக்கப்பட்ட நிலவழி ஆசிய வணிபத்தை மீண்டும் கப்பலால் தொடங்குவதே நோக்கம்: குடியேறி காலனியை உருவாக்குவதல்ல.
ஓல்லாந்தின் தலைநகரான அம்ஸ்ரடாம் அக்காலத்தில் ஐரோப்பாவில் மிகவும் செல்வச் செழிப்பான நகரம்;. அங்குள்ள அரசாங்கம் மற்;றும் தனியார் கூட்டு கம்பனியான டச் ஈஸ்ட் இந்தியக் கம்பனிகள் பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள்.
1612 இல் ஐரோப்பாவில் இருந்து ஆசியாவிற்கு ஆபிரிக்காவை சுற்றி வளைத்து செல்லும்போது இடையில் தங்கி, மீண்டும் தண்ணீர் மற்றும் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இடைநிலை பிதேசத்தை உருவாக்;கி ரேபில் பே பகுதியில் வாழும் கொய்சான் மக்களோடு பண்டமாற்று விவசாயமும் செய்தார்கள்.
ஆரம்ப காலத்தில் பண்டமாற்று இருபகுதியினருக்கும் பாதிப்பில்லாத நடைமுறையாகத்தான் இருந்தது. சிலகாலத்தின் பின்பாக கப்பலில் இருந்த மாலுமிகள் சிலர் தரைக்குச் சென்று மாட்டுப்பண்ணைகளை உருவாக்கியபோது பாதிப்படைந்த உள்ளுர்வாசிகளோடு சண்டையிட்டு மேலும் நிலங்களைக் கைப்பற்றி புதிதாக பண்ணைகளை உருவாகினார்கள்.
இக்காலத்தில் கப்பல்களில் மாலுமிகள் மூலம் ஐரோப்பாவில் இருந்துவந்த வந்த சின்னம்மையால் நோய்க்குத் தடைச்சக்தியற்ற உள்ளுர் ஆபிரிக்க மக்கள் பெரும்பாலானவர்கள் நோயால் இறந்து, மக்கள் தொகை அருகியது.
விவசாய நிலங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க மலேசியா இந்தோனேசியா இந்தியாவிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்தனர். அடிமைகள் பெருமளவு ஆண்களானபடியால் இந்த ஆசிய மக்களும் மிஞ்சியிருந்த கொய்சான் மக்களிடையே நடந்த கலப்பினத் கொடர்பால் கலப்பின மக்கள் (Coloured) என்ற புதிய இனம் உருவாகியது. இதைவிட தொடர்ந்து வந்து குடியேறிய டச்சு விவசாயிகள் தங்களை ஆபிரிக்கான்( Afrikaners) என புதிய இனமாக்கினார்கள். இரண்டு புதிய இனங்கள் தென்ஆபிரிக்காவில் உருவாகியது. இனங்கள் என்பது இறுக்கமானது அல்ல. திரவமான தன்மை கொண்டது என்பதை தென்னாபிரிக்காவில் அறிய முடிந்தது.
1800 இல் பிரித்தானியர்களிடம் நமது இலங்கை கைமாறியதுபோல் கேப் கொலனி சென்ற போது பிரித்தானியர்கள் வந்து குடியேறினார்கள். பிரித்தானியர்கள் சிறிதாக இருந்த காலனியை உள்ளுர் மக்களினது நிலங்களை ஆக்கிரமித்து பெருக்கினார்கள். கேப் கொலனி தொடர்ச்சியாக விரிந்து செல்கிறது. இந்து சமுத்திரத்தையண்டிய பிரதேசத்தில் நத்தால் பகுதியில் நத்தால் என்ற டேர்பனை துறைமுகநகரமாக அடுத்த காலனியை உருவாக்கினார்கள்
ரேபில் மவுண்டின்
ரேபில் மவுண்டின் எனப்படுவது ஒரு மலைப்பிரதேசம். இந்த மலையின் உச்சியில் தட்டையான மேடை, மேசைபோல் இருக்கிறது. அங்கு வெள்ளை முகில்கள் படிந்திருப்பது மேசையில் வெள்ளைத் துணி மேசை விரிப்பாக விரித்ததுபோல் தோன்றும்.
இதன் உயரத்திற்கு செல்வதற்கு முயன்றபோது அதிகம் மேகமூட்டமாக இருந்ததால், எங்களை அழைத்துக் கொண்டு செல்லும் கேபிள் கார்ப் பயணம் நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்கள் சென்றும் ஏமாற்றம்தான். ஆனாலும் இந்தப்பகுதி மிகவும் அழகாகவும் பலவிதமான மரங்களைக் கொண்டதுமாக காட்சியளிக்கிறது. உலகத்தில் வேறு எங்கும் இல்லாத மரங்கள் இங்குள்ளன. மலையடிவாரத்திற்குச் செல்லும் வழிப்பயணம் அழகிய அனுபவம். இந்த மலைகளைத்தாண்டி செல்லும்போது அத்லாண்டிக் சமுத்திரம் தென்படுகிறது. இந்த மலையின் கீழ் உள்ள பிரதேசம் தற்போது கேப் டவுண் துறைமுகப்பிரதேசம்.
பென்குயின்
நாங்கள் மலையின் உச்சிக்கு செல்ல முடியாதபோது அடிவாரத்தை சுற்றிப் பார்த்தோம். இங்கு இருந்து பார்த்தால் கேப் டவுண் நகரம் தெரியும். அப்படியே அத்திலாந்திக் சமுத்திர கடற்கரை வழியாக செல்லும்போது பென்குயின்கள் காலனிகளாக இருந்த போல்டர் பீச் (Boulder Beach) வருகிறது. அவுஸ்திரேலியாவில் பிலிப் அய்லண்டில் (Philip Island ) பல தடவைகள் பென்குயின்களைப் பார்த்தாலும், இந்தப் பென்குயின்கள் பலமடங்கு பெரிதான தோற்றம் கொண்டவை. இவைகளை ஆபிரிக்க அல்லது கறுப்புக்கால் பென்குயின் என்பார்கள். ஒரு சிறிய இடத்தில் கூட்டம் கூட்டமாக பென்குயின்கள் இருந்தன.
தீக்கோழி
ஆபிரிக்கா கண்டத்துக்குரிய பறவை தீக்கோழி. உலகத்தின் பல பகுதிகளில் இந்த இனம் அழிந்துவிட்டாலும், காட்டுப்பறவையாக வாழ்வது ஆபிரிக்காவில் மட்டுமே. சமீப காலமாக இந்தத் தீக்கோழிகளின் இறைச்சி, தோல், இறகு என்பனவற்றிற்காக தென்னாபிக்காவில் பல பண்ணைகளில் அவை வளர்க்கப்படுகிறது. நாங்கள் சென்ற பாதையில் பல தீக்கோழிப் பண்ணைகள் இருந்தன.
சீல்
தொடர்சியாக கடற்கரைப்பதையில் சிறிது தூரம் சென்றபோது கடல் வாழ் முலையூட்டிகளில் முக்கியமான உரோமங்கொண்ட சீல்கள் வாழும் தீவு தென்பட்டது. இங்கு ஏராளமாக சீல்கள் வாழ்வதால் அவற்றைப் பார்ப்போம் என கட்டணம் செலுத்தி – வள்ளத்தில் ஏறி அரைவாசித் தூரம் சென்ற போது பெரும்புயல் உருவாகி வள்ளத்தை தூக்கி தூக்கி குத்தியது. கடற்கரையில் இருந்து இரண்டு கிலோ மீட்டரில் புயல்காற்றால் திரும்ப வேண்டியிருந்தது. காலாகாலமாக தென்பகுதியில் ஏராளமான கப்பல்கள் உடைந்து மாலுமிகள் கடலோடு சமாதியாகிய கதைகள் வரலாற்றில் உள்ளன. அந்த வரலாற்றில் நாங்களும் இடம்பெறுவதை அந்த வள்ளத்தின் கப்டன் விரும்பவில்லை. நன்னம்பிக்கை முனை என பெயர் வைத்ததே ஒரு நம்பிக்கையில்தான். உண்மையில் பல கப்பல்கள் உடைந்தது இந்தப் பகுதியில்தான்.
சீல் தீவுக்கு போகாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை எங்களுக்கு அளிக்க விரும்பாத பல சீல் விலங்குகள், நாங்கள்; நின்ற கடற்கரையில் வெய்யில் குளிக்க வந்தன. கறுப்பு அல்லது பிரவுண் நிறமான இவை கடல் சிங்கத்திற்கு உறவானவை. மாமிசம் தின்று குட்டிபோடும் இவை, குளிர்பிரதேசத்தை விரும்புவதால் தென்துருவம் மற்றும் வடதுருவத்தை அண்டிய நாடுகளின் கடற்கரையில் வாழ்கின்றன.
தென்துருவத்தை அண்டிய அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, தென்ஆபிரிக்கா, தென் அமெரிக்காவில் நிலத்தை அண்டிய பிரதேசங்களில் வாழ்கின்றன. மிகவும் சாதுவானதுடன் 120 கிலோ நிறை கொண்டவை. 19ஆம் நூற்றாண்டில் இவற்றின் உரோமத்திற்காக தலையில் அடித்து வேட்டையாடப்பட்டன. இப்பொழுது எல்லா இடங்களிலும் வேட்டைக்கு எதிரான சட்டங்கள் இருப்பதால் அமைதியான வாழ்கைக்கு திரும்பியிருப்பதாகத் தெரிகிறது. இவற்றிற்கு விருத்தியடைந்த மூளை இருப்பதால் இவை பழக்கப்படுத்தப்படலாம் என்பது, நாங்கள் கொடுத்த மீனுக்காக போட்டோவிற்கு அவை போஸ் கொடுத்ததில் புரிந்து கொள்ள முடிந்தது.
நன்நம்பிக்கை முனை
இது தென் ஆபிரிக்காவின் தென்பகுதியான பிரதேசம் கேப் டவுன். அந்த பெருநிலத்தில் இருந்து வளைந்த கைவிரல்போல் செல்லும் இந்த இடத்திற்கு காரில் போகும்போது அந்தப் பகுதியை புவியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தியுள்ளார்கள். ஏராளமான மரங்கள் மட்டுமல்ல பபுன்கள் பல மான்வகைகள் என மிருகங்களும் உள்ள அடர்த்தியற்ற பற்றைக்காடு போன்ற பிரதேசம்.
இங்குதான் புரட்டியா( Protea) என்ற அழகான பூக்கள் இயற்கையாக வளர்கிறது. பலகாலமாக தென்ஆபிரிக்க கிரிக்கட் குழுவை புரட்டியஸ் என சொல்லும்போது காரணம் புரியவில்லை. இதுவே தென்னாபிரிக்காவின் தேசிய மலராகும். தற்போது எங்கள் வீட்டுத்தோட்டத்திலும் உள்ளது. காரை விட்டு இறங்கி போர்த்துக்கேய மாலுமிகளான பாத்தலோமிய டயசும் பின்பு வஸ்கொடகாமாவாலும் அமைக்கப்பட்ட சிலுவை தாங்கிய தூண்களை தரிசித்தேன். 500 வருடங்களில் முன்பு இப்படியான இடங்களுக்கு செல்வதற்கு பணம் சம்பாதிப்பது மட்டும் காரணமாக இராது. அளவுகடந்த ஆர்வமும் துணிவும் கொண்டிருந்தவர்கள் என்பதால் மனதில் மரியாதையாக அவர்களை நினைத்துக்கொண்டேன்.
இந்து சமுத்திரமும் அத்திலாந்திக் சமுத்திரமும் சந்திக்கும் ஒரு புள்ளிதான் நன்நம்பிக்கை முனை என ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், உண்மையில் இந்துசமுத்திரத்தில் இருந்து வெப்பமான நீரும் அத்திலாந்திக்கின் குளிர் நீரும் வேறு காலங்களில் ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் எந்த இடத்திலும் வெப்ப நிலைக்கேற்ப கலப்பதாக அறியப்படுகிறது.
கன்னியாகுமரியில் அரபிக்கடலும் வங்கக்கடலும் ஒரு முனையில் சந்திப்பது போல் இங்கு நடக்கவில்லை. மேலும் யோசித்தால் எல்லாக் கடலும் ஒன்றுதான். மனிதர்கள் வைத்த பெயர்கள்தான் வேறு வேறு என எண்ணத் தோன்றியது.அந்த இடத்தில் மதிய நேரத்தில் நின்று பார்க்கும்போது வித்தியாசமான உணர்வு ஏற்படுவது உண்மைதான்.
கிரிஸ்டியன் பேர்ணாட்
நன்னம்பிக்கைமுனையை பார்த்துவிட்டு அங்கிருந்து மீண்டும் கேப்டவுண் வந்தபோது, உலகில் முதல் இதயமாற்று சத்திரசிகிச்சை செய்த வைத்தியசாலை (December 3, 1967 at the Groote Schuur Hospital in Cape Town, South Africa) என கார் சாரதி ஓரிடத்தைக்காட்டினார்.
கிரிஸ்டியன் பேர்ணாட் தனது சகோதரருடன் சேர்ந்து செய்த இதயமாற்று சத்திரசிகிச்சை – மனிதன் சந்திரனில் இறங்கியதற்கு அடுத்ததாக பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது. புதிதாக நான் அறிந்த உண்மை ஹமில்டன் நாகி (Hamilton Naki) என்ற கறுப்பர் ஆரம்பத்தில் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் புல்லு வெட்டிச்செதுக்குபவராக இருந்து பின்பு மிருகங்களின் சத்திர சிகிச்சைக்கு உதவியவர். பின்பு கிரிஸ்ரியன் பேர்ணாட்டிற்கு இந்த இருதயமாற்று சத்திரசிகிச்சையில் உதவினார். இவரிடமிருந்த சிறிய இரத்தக்குழாய்களை ஒன்றாக்கும் கைப்பக்குவம் கிறிஸ்ரியன் பேர்ணாட்டைக் கவர்ந்தது. அந்த வைத்தியசாலையில் வெள்ளையர் மட்டுமே கடமையாற்ற முடியும் என்ற சட்டம் அக்காலத்தில் இருந்தது.
2003 அதே பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு, 2005 இல் ஹமில்டன் நாகி இறந்தார்.
நிறபேதத்தால் இன்னுமொரு கிறிஸ்ரியன் பேர்ணாட்டை தென் ஆபிரிக்கா இழந்துவிட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்