விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டவர்கள் 1990 பின்னால் விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்களே. அப்படிப்பட்ட விடுதலைப்பலி ஒருவர் சித்திரைவதை செய்யப்பட்ட சிறிய குறிப்பிலிருந்து எழுதப்பட்ட சிறுகதை சித்திரவதை செய்தவர் யார் என விரும்பினால் எனது ஈமெயிலில் தொடர்பு கொளளவும் அவரது பிறந்த தினத்தையொட்டி வெளிவருகிறது.uthayam@gmail.com.au
நடேசன்
லொக்கா மெருணா உம்ப இத்தின் திரஸ்தவாதி நொவே யக்கோ ( தலைவர் இறந்துவிட்டார். இனிமேல் நீ பயங்கரவாதியல்ல.)
‘உம்ப பொறுக்காறயா ‘ (நீ பொய்யன்)’
‘ வேசிக்க புத்தா உம்பவ எதாம மருவாநம் பிரஸ்ன இவரவெலா எதி’ (வேசைமகனே அன்றைக்கே உன்னைக் கொலை செய்திருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும்)
——
ஜூலை 2014
கண்டி வைத்தியசாலையின் பத்தாவது வார்டில் ஐந்து வருடங்களாக நோயாளியாக இருக்கும் உருத்திரகுமாரனாக பெற்றோரால் நாமமிடப்பட்ட அவனைப் பார்க்கும் பொறுப்பு கோப்ரல் ஜெயசிங்காவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
வருடாந்த விடுமுறைகளைத் தவிர ஒவ்வொரு நாளும், எட்டு மணிநேரம் உருத்திரனைப் பாதுகாப்பது ஜெயசிங்காவின் இராணுவ சேவையாக இருந்தது. மருந்து கொடுத்தலுடன், மலசலம் எடுத்து அவனைப்பராமரிக்கும் வேலைகளை வைத்திய தாதிகள் செய்வார்கள். மிகுதி நேரத்தில் பல இராணுவத்தினர் அங்கே வந்து போனாலும் உருத்திரகுமாரனை கவனிக்கும் பொறுப்பு ஜெயசிங்காவிடம்தான். மனைவியோடு கட்டிப் புரளும்போது வைத்தியசாலையில் இருந்து தொலைபேசி வந்தால் வைத்தியசாலைக்கு ஓடிவரத்தான் வேண்டும்.
அவனுக்கிடப்பட்ட வேலை, மற்றைய இராணுவப்பணிகளோடு ஒப்பிடும்போது இலகுவானது. இரண்டு வருடம் மயக்கத்திலும் மூன்று வருடங்கள் முதுகெலும்பு சேதமடைந்து எழும்ப முடியாத நிலையிலும் இருந்த உருத்திரனுக்கு உடை மாற்றுவது முதற்க்கொண்டு மற்றைய விடயங்களை கவனிப்பது ஜெயசிங்க.
உருத்திரன் இனிமேல் ஆயுதப் போரில் ஈடுபடமாட்டேன் என எழுதி கையொப்பம் வைத்தால் ஏதாவது அங்கவீனர்களை பராமரிக்கும் இடத்திற்கு அனுப்பிவிடுவார்கள். ஜெயசிங்காவிற்கு வேறு வேலை கிடைக்கும். ஆனால் உருத்திரன் தொடர்ச்சியாக தலைவர் உயிருடன் இருக்கும்வரை அவரது கனவிற்காக போரிடுவேன் என அடம்பிடிப்பதால் அரசாங்கம் அவனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.
தலைவர் இறந்து விட்டார் என்ற தகவலை முள்ளிவாய்க்காலில் இருந்து ஜெயசிங்காவின் நண்பர்களாகிய மற்றைய இராணுவத்தினர் கூறியதை ஸ்பீக்கர் போனிலும் பலதடவைகள் உருத்திரனுக்கு போட்டுக் காட்டினான். தலைவரின் சடலத்தை இலங்கை இராணுவத்தினர் எடுத்துச் செல்லும் படம் வெளியான பத்திரிகைகளை காட்டிய போதும் உருத்திரன் நம்பவில்லை..
‘ இது போட்டோ ஷொப் வேலை. இதை எங்களது பரப்புரைப் பிரிவினர் உங்களைவிட நன்றாக செய்வார்கள்’ எனச் சொல்லிவிட்டு முகத்தை திருப்பிவிடுவான் உருத்திரன்.
இன்றும் அதேபோன்று ‘தமுசலா பொறுக்காரயோ’ (நீங்கள் பொய்யர்கள்) எனச் சொல்லிவிட்டு அடுத்த பக்கம் திரும்பி படுத்தான்.
ஜெயசிங்காவுக்கு ஆரம்பத்தில் இந்த வேலை இலகுவாக இருந்தது. திருமணமாகி பேராதெனியவில் மனைவி சோமலதா, அவள் பெற்றோருடன் இருப்பதால் இந்த வேலை அவனுக்கு வசதியாக இருந்தது. ஆனால் தினமும் உருத்திரனின் முகத்தைப் பார்த்துப்பார்த்து இந்த வேலை போரடித்து விட்டது. எவ்வளவு காலம்தான் ஓருவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க முடியும்..? அதுவும் இந்த தெமல முகத்தை வருடக்கணக்கில் பார்ப்பது இப்பொழுது அவனுக்கு தண்டனையாகிவிட்டது.
‘ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் ஆயுதம் எடுத்து கொல்லுவதிலும் பார்க்க இவன் படுத்திருந்தபடியே தன்னை சித்திரவதை செய்கிறானே என அங்கலாய்த்தான் ஜெயசிங்கா. இந்த பறத் தெமலா வன்னியில் குண்டுபட்டு செத்திருந்தால் எவ்வளவு இலகுவாக இருந்திருக்கும்’ – மனதில் கறுவியபடி கொட்டாவி விட்டான் ஜெயசிங்கா. பலதடவைகள் துப்பாக்கியை அவனது தலைக்கருகில் கொண்டு சென்று அவனைப் பயப்படுத்தினான். இந்தச் செய்கைக்கு உருத்திரன் சிரிப்பை மட்டுமே பதிலாக திருப்பிக் கொடுத்தான்.
உருத்திரன் முட்டாளல்ல. ஐந்தாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரையும் ஸ்கொலசிப்பில் படித்தவன். உருத்திரனுக்கு ஜெயசிங்காவின் மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும் புசல்லாவையில் பிறந்து வளர்ந்து பத்தாம் வகுப்பை முடித்தபின் ரீன்ஏஜ் வயதில் வவுனியாவில் சாப்பாட்டுக் கடையில் வேலைக்குச் சென்றான்.
தமிழர்கள் – தமிழ் என வந்த கனவுகள் தள்ளிய வேகத்தில் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று ஆனையிறவு தாக்குதலில் காயமடைந்தான். அந்தச் சண்டையில் காலில் குண்டு பாய்ந்தது. தொடர்ந்து இயக்கத்தில் தற்கொலைப்போராளியாகவே இருக்க விரும்பினான். இயக்கத்தில் தலைவருக்காக எடுத்த சத்தியப்பிரமாணத்தில் உயிர் இருக்கும் மட்டும் தலைவரின் கீழ் போராட விரும்பினான்.
‘தொடை எலும்பில் குண்டு இன்னமும் இருப்பதால், உன்னை அது சத்தமிட்டு காட்டிக் கொடுத்துவிடும். முக்கியமாக நாங்கள் கொழும்புத் தாக்குதல்களில் உன்னைப் பாவிக்க முடியாது. இப்பொழுது சமாதான காலமனதால் நீ யாழ்ப்பாணத்தில் வேலை செய். ஏதாவது தேவையென்றால் நாங்கள் தொடர்புகொள்வோம்’ என பொறுப்பாளர் சொல்லியதால் கால்மனதோடு சம்மதித்தான்.
இயக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதும் யாழ்ப்பாணத்தில் மெயின் பசார் பழக்கடையில் வேலை செய்தான்.
அப்பொழுதுதான் அவன் எதிர்பார்க்காத விடயங்கள் நடந்தன. அந்தக் கடைக்கு பழம் வேண்டுவதற்கு இராணுவத்தினர் வரும்போது முதலாளி இவனைத்தான் அவர்களுடன் பேசவிடுவார் .உரும்பராய் முதலாளிக்கு ஒரு வார்த்தை சிங்களமோ ஆங்கிலமோ தெரியாது. அந்த பசார் கடைப்பகுதியிலே உருத்திரன் மட்டும் சிங்களம் பேசுவான் என்பதால் இராணுவத்தினர் அந்தக்கடையிலேயே பழங்களை கொள்வனவு செய்தனர்.
உருத்திரன்மூலம் பெரிய அளவில் வியாபாரம் நடந்துவருவது முதலாளிக்கு சந்தோசம். மேலும் விடுதலைப்புலிகளில் இருந்து காயமடைந்தவன் என்பதால் அவரும் அவனைத் தாராளமாக கவனித்தார்.
உருத்திரனை சாதாரண கடைச்சிப்பந்திபோல் அவர் நடத்தவில்லை. முதலாளியின் மகன் பிரான்சில் இருந்து அனுப்பிய சேர்ட்டுகளையும் கொடுத்தார். வாங்க மறுத்த உருத்திரனிடம் ‘ ‘ நான் இதையெல்லாம் போட்டு என்ன செய்யப்போகிறேன்…..? நீ இளம் பொடியன். இரண்டு பெட்டைகளாவது உன்னைத் திரும்பிப்பார்ப்பாளவை’ என பகிடியும் வெற்றியுமாக கலந்து சொல்லிவிட்டு திறந்திருந்த வைத்தியசாலைவீதி சாக்கடைக்குள் வெற்றிலை எச்சத்தை துப்பி சாக்கடை நீரை கொஞ்சம் சிவக்கப்பண்ணுவார்.
இயக்கத்தில் இருந்த நாலு வருடங்களும் எந்தப் பெண்தொடர்பும் இல்லாமல் இருந்துவிட்டான். முகாமில் காலைக் கையைப்போடுற பொடியளை பேசி விரட்டிவிடுவான். ஒரு நாள் செய்தித்துறைக்கு பொறுப்பாக இருந்தவர் முகாமில் தங்கியபோது மற்ற பொடியங்கள் ஏற்கனவே மாஸ்டரைப் பற்றி எச்சரித்திருந்ததால் அன்றிரவு சென்றிக்குப் போய்விட்டான். இவ்வாறு காப்பாற்றிய ஆண்மையை முதலாளி தொடர்ச்சியாக சீண்டிவிட்டபோது உருத்திரனுக்கும் பெண்ணாசை துளிர்த்தது. காசை மிச்சப்படுத்திக்கொண்டு அந்த போர் நிறுத்தகாலத்தில் ஊருக்குப் போய் கல்யாணம் செய்ய நினைத்து சித்திரை வருடத்தோடு விடுமுறை எடுத்து புசல்லாவை செல்ல நினைத்தான்.
யாழ்ப்பாணத்தில் கொட்டடியில் வயதான ஆச்சியின் வீட்டில் தங்கியிருந்தான்.
அந்த இரவு மறக்க முடியாதது. எந்தக்காலத்திலும் யாழ்ப்பாணத்தில் சித்திரையில் மழை பெய்யாது. ‘
‘இதென்ன பெரிய விண்ணானமாக இருக்கு. நடக்காத விடயமெல்லாம் நடக்குது. காலம்தான் ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது.’ என ஆச்சி முணுமுணுத்தபடி உள்ளே போர்வைக்குள் முடங்கியது
மின்னலும் இடியுமாக மழை பெய்து கொண்டிருந்தது. இரவிரவாக முழித்திருந்தான் உருத்திரன்.
காலிமுகத் திடலில் அமைந்திருந்த பாதுகாப்பு படைகளின் தலைமையலுவலகத்தை நோக்கி குண்டுகள் நிறைந்த திருகோணமலை மீன்வியாபாரி பொடிசிங்காவின் லொறியை எண்பது கிலோமீட்டரில் செலுத்தினான். கையைக்காட்டி நிறுத்தச் சொன்ன சென்ரியில் நின்றவர்களுக்கு ‘பலயாங் பல்லோ’ எனக்கூறியபடி வேகத்தை அதிகரித்தான். பலமான மதில்சுவரை உடைத்துக்கொண்டு லொறி உள்ளே சென்று வெடித்தது. அந்தவெடியில் தூக்கியெறியப்பட்டான்.
எழுந்து பார்த்தபோது ஆச்சி பக்கத்தில் நின்றது.
‘ ஏண்டா.. நிலத்தில்… விழுந்தனீ… ஏறி கட்டிலில் படு. இந்தப்போர்வையை வைத்துக்கொள்’ என்ற ஆச்சி பச்சைத்துணியைக் கொடுத்தது.
விடியற்காலை சிறிது தாமதமாகத்தான் எழுந்தான்.
‘தம்பி யாரோ ஒரு பொடியன் கடிதம் தந்திருக்கிறான்’ என்று ஆச்சி ஒரு கடிதத்தை கொடுத்தார்
அதைப்பிரித்தபோது – அதில் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவினால் அவனை வன்னிக்கு வரும்படி எழுதப்பட்டடிருந்தது.
என்ன செய்வதென்று புரியவில்லை. இயக்கத்தை விட்டு விலகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரையும் எந்தத் தகவலும் வந்ததில்லை. முற்றாக விலகிவிட்டதாகவே நினைத்திருந்தான்.
சண்டை தொடங்கவிருப்பதால் மீண்டும் இயக்கத்தில் சேர அழைக்கிறார்களோ…? நேரடியான சண்டைக்கு நான் பொருத்தமாக இல்லாவிடினும் – தகவல் பிரிவில் அல்லது உளவுப்பிரிவில் வேலை செய்ய முடியுமல்லவா…? தமிழீழத் தலைவருக்காக போராடுவேன் என சத்தியப்பிரமாணம் எடுத்த நான் எப்பொழுதும் அழைத்தபோதும் போகத்தானே வேண்டும்.
அந்தக் கடிதம் சுருக்கமாக இயக்கத்தின் சின்னத்தோடு இருந்தது.
சில துன்பியல் விடயங்களும் அவனது மனதில் வரத்தவறவில்லை. விடுதலைப்புலிகளின் சின்னம் உள்ள இப்படி சில கடிதங்கள் சிலருக்கு வந்திருப்பதை அவன் வன்னியில் இருந்தபோது பார்த்திருக்கிறான். இவனுக்குத் தெரிந்த கடை முதலாளி ஒருவருக்கு இப்படி கடிதம் கொடுக்கப்பட்டதையும் பின்பு அவர் அதைக் கொண்டு வந்து இவனிடம் காட்டி அழுதார். பிற்காலத்தில் அவர் வன்னியை விட்டு தப்பியோடியபோது அவரது சொத்துக்கள் இயக்கத்தால் எடுக்கப்பட்;டன.
கடிதம் வந்த இரண்டு நாட்களில் இரவு நேரம் புறப்பட்டு கிளாலிப் பகுதியை கடந்து பூநகரிக்குச் செல்ல இரண்டு நாட்களாகியது.
அங்கிருந்து கிளிநொச்சிக்கு புலிகளின் வாகனத்தில் சென்றான். வழியெங்கும் வாய்க்கால்களை பொதுமக்களும், விடுதலைப்புலிகளும் வெட்டுவதையும் புல்டோசர்கள் வேலைசெய்வதையும் பார்த்தபோது தன்னையும் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்வதற்கான அழைப்பு என உறுதியாக நம்பினான். அந்த நம்பிக்கை சந்தோசத்தை அளித்து. அவனது உடல் தசைகள் முறுக்கேறின. கடந்த இரண்டுவருடங்கள் அதிகமாக உடல் பயிற்சியில்லை. பஞ்சி பிடித்துவிட்டது. குறைந்தது வாய்கால் வெட்டினாலும் உடலுக்கு நல்லது என நினைத்து வாகனத்தில் அவனை ஏற்ற வந்தவர்களைப் பார்த்தான். வந்த இளைஞர்களிடம் அவ்வளவு உற்சாகம் தெரியவில்லை.
நாங்கள் இருந்தபோது எவ்வளவு உற்சாகமாகப் போரிட்டோம். ஆனையிறவை வரைபடத்தில் இருந்து ஒழித்தோம். இந்த நாசமாப்போன குண்டு காலில் பாயாமல் இருந்தால் நான் முக்கிய பொறுப்பில் அல்லவா இருப்பேன்.
கிளிநொச்சியில் உளவுப்பிரிவை சேர்ந்தவர்களை சந்தித்தபோது அவர்களது முகங்கள் அவனை கண்டதும் மாற்றமடைந்தது.
‘ உன்னை விசாரிக்கவேண்டும்’ எனச்சொல்லி அறையில் அடைத்தபோது அவன் அதிர்ச்சியடைந்தான்.
‘நான் என்ன செய்தேன்…? ஏன் விசாரிக்கவேண்டும்…?’
இரண்டு நாட்கள் எவரும் வரவில்லை. சாப்பாடு தண்ணீர் ஒழுங்காக தரப்பட்டது.
மூன்றாம் நாள் காலையில் வந்து தட்டியெழுப்பினார்கள்.
‘ உருத்திரன் உம்மை விசாரிக்கவேண்டும்’ என உள்ளே வந்தனர் இருவர்.
‘ என்ன செய்தனான்…?’
‘யாழ்ப்பாணம் பழக்கடையில் வேலை செய்தபடி இராணுவத்தினருக்கு எமது விடயங்களை சொல்வதாக தகவல் கிடைத்துள்ளது.’
‘ நான் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அந்தக்கடையில் மரக்கறிவாங்க வருவார்கள்.’;
‘ அவர்களுடன் என்ன மொழியில் கதைப்பீர்…? ‘
‘அவர்கள் சிங்களத்தில் பேசும்போது நானும் சிங்களத்தில் பதில் சொல்வேன். ‘;
‘ஆனையிறவுத்தாக்குதலில் முக்கியமான தளபதி ஒருவர் இராணுவத்தின் ஊடுறுவித்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவர் மீதான தாக்குதலுக்கு தேவையான தகவல் உமது மூலம்தான் இராணுவத்திற்குச் சென்றது என தலைமை சந்தேகப்படுகிறது.’
‘ இயக்கத்திற்காக நானாக சேர்ந்து காயம்பட்டு பின் தற்கொடைப்போராளியாக விரும்பிக் காத்திருக்கும் நான் எதற்காக இயக்கத்தை காட்டிகொடுக்கவேண்டும்….’
‘பணத்திற்காக… ஒவ்வொருநாளும் வான்கூசன் தயாரிப்பு வெளிநாட்டு சேர்ட்போடுவதாக தகவல் வந்தது.’
‘அது பிரான்சில் இருக்கும் மகன் அனுப்புவதென்று கடை முதலாளி தருவது.’
‘உண்மையை சொல்லாவிடில் வட்டுவாய்கால் மாஸ்டரிடம்தான் போகவேண்டிவரும். இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறோம்… அதுவும் இயக்கத்தில் இருந்து காயம் பட்டது என்ற காரணத்திற்காக…’ எனச்சொல்லிக்கொண்டு எழுந்தார்கள்.
அவர்கள் சொல்லியதுபோல் வட்டுவாய்க்கால் சிறைக்கு அனுப்பப்பட்டதும் இரண்டு நாட்கள் இதேமாதிரியான கேள்விகள் தொடர்ந்தன. அதன்பின்பு எதிர்பாராத பல விடயங்கள் நடந்தன.
அறையில் அடைபட்டபின் அடித்து உதைக்கப்பட்டான். அந்த இடம் ஒரு சித்திரவதைக்கூடமாக இருந்தது. கடைசியாக வவுனியாவில் மேலும் ஒரு முக்கிய உறுப்பினர் ஆழ ஊடுறுவும் படையணியால் தாக்கப்பட்டு இறந்ததாகத் தகவல் வந்ததும் கடைசியாக நிர்வாணமாக்கி சிறிய கூண்டில் அடைத்தார்கள். அந்தக் கூட்டில் இருந்தபோது பின்பக்கத்தால் தாக்கப்பட்டதால் பொறிகலங்கி மயங்கியது நினைவு வந்தது.
இதன்பின்பாக நடந்த விடயங்கள் எதுவும் தெரியாது.
மயக்கம் தெளிந்து எழுந்தபோது கண்டி வைத்தியசாலையில் பக்கத்தில் இருந்த ஜெயசிங்க சொல்லித் தெரிந்தது மட்டுமல்ல, இரண்டுவருடமாக மயக்கத்தில் இருப்பதாகவும் சொன்னான்.
‘ பொறு கியடண்டேப்பா..? ‘ (பொய்சொல்ல வேண்டாம்) -உருத்திரகுமாரன்.
‘ மிசி இன்று என்ன திகதி..?’ என்று சொல்லும்படி பக்கத்தில் நின்ற மருத்துவ தாதியை அழைத்தான் ஜெயசிங்க .
‘ 2011 மேமாதம் முதலாம் திகதி . இன்று விடுமுறைநாள்’ எனத் தனது கடிகாரத்தை காட்டினாள் தாதி.
இவ்வளவு காலமும் நினைவு திரும்பாமல் இருந்திருக்கிறேன்
‘2009 மே மாதம் 17 ஆம் திகதி உன்னை இங்கு கொண்டு வந்தார்கள்’ என்றாள் அந்தத்தாதி.
அப்பொழுது இரண்டு அதிகாரிகள் அங்கு நுழைந்து ‘ எப்படி உருத்திரகுமார?’; என்றார்கள்.
பதில் பேசாது அடுத்தபக்கம் முகத்தை திருப்பினான்.
‘அந்த நாய்க்கூண்டுக்குள் மயங்கி கிடந்த உன்னை நாங்கள்தான் கொண்டுவந்து பாதுகாத்தோம்’
நிமிர்ந்து பார்த்தான்
‘நீ நம்பவில்லை.’
‘ஜெயசிங்கா வீடியோவையும் தொலைக்காட்சியையும் கொண்டுவா’ என்றதும் சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வீடியோ தொலைக்காட்சி செட்டாக தள்ளப்பட்டு வந்தன.
அதில் ஒரு அதிகாரி தனது கையில் இருந்த சீடியை போட்டார்.
அதில் மாஸ்டரின் முன்பு கைகட்டி உருத்திரன் நிற்கும் காட்சி வந்தது.
‘ முன்னாலோ’
அதில் அவன் நிர்வாணமாக சிறிய இரும்புக்கூண்டில் நிற்பதும் பக்கத்தில் மாஸ்டர் இரசித்து பார்ப்பதும் இருந்தது.
அடுத்த சிடியை போட்டதும் இரவில் மின்சாரம் அந்த இரும்புக்கூண்டுக்கு இணைத்ததும் அதனால் அவன் மயங்கி அந்த கூட்டில் சரிவதும் தெரிந்தது.
உன்னை ஆறுமாதங்களாக இடைக்கிடை வீடியோ எடுத்து மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அதில் இரண்டு மட்டும் எங்கள் கையில் இருக்கு. பெரும்பாலானவை நீ மலத்தில் சிறுநீரில் கிடந்து அழுந்துவது. ஏங்களால் பார்க்க முடியவில்லை. நாங்கள் சென்றபோது அந்த கூட்டுக்கு வெளியே நீ இருந்தாய். உனது பொக்கட்டுக்குள் ஐநூறு ரூபாய்தாள் யாராலோ செருகப்பட்டிருந்தது. அதைவிட என்னை மன்னித்துக் கொள் என ஒரு வாசகம் தமிழில் எழுதிய துண்டும் இருந்தது. ஏனென்றால் நீ கீழே எந்த உடையுமற்று மலத்தின்மேல் இருந்தாய். ஆனால் சேர்ட்டு மட்டும் யாராலோ அவசரமாக மாட்டப்பட்டிருந்தது. மாஸ்டர், இதைத் தான்தான் செய்தது என்று பின்பு எங்களுக்குச் சொன்னார்.இப்பொழுது ஏராளமான விடுதலைப்புலி இளைஞர்களை விட்டுவிட்டோம். அதிலும் எல்லா மலையகத்து இளைஞர்களையும் போனவருடம் வீட்டுக்கு அனுப்பியாச்சு. நீ இந்த கடுதாசியில் மீண்டும் ஆயுதம் ஏந்தமட்டேன், இதுவரையில் செய்த தவறுகளுக்கு மன்னிக்கவும் என்று எழுதப்பட்ட இடத்தின் கீழ் கையெழுத்திடவேண்டும். அதன்பின்னர் நீ வீடு போகலாம்.’
——–
‘தேசியத்லைவர் இருக்கிறாரா…?’
இரண்டு அதிகாரிகளும் சிரித்து விட்டு ‘அவர் மேலே…’
‘எங்கே மேல் மாடியிலா…?’
‘இறந்துவிட்டார்.’
‘நான் நம்பமாட்டேன். இது உங்கள் பரப்புரை. அவர் இருக்கு மட்டும் நான் கையெழுத்திடமாட்டேன்.’
—-
2015 ஜனவரி 8 ஆம் திகதி புதிய அரசாங்கம் உருவாகிய பின்னர் இரண்டு கிழமையில் உருத்திரன் கொழும்பு மனநல விடுதிக்கு அனுப்பப்பட்டான். அவனுடன் ஜயசிங்காவும் அதே இடத்திற்கு அனுப்பப்பட்டான் . ஆனால் இம்முறை இராணுவ வீரனாக அல்ல. சக நோயாளியாக.
——-
மறுமொழியொன்றை இடுங்கள்