எஸ் இராமகிருஸ்ணன்
டாக்டர் நடேசன் ஆஸ்திரேலியாவில் கடந்த இருபதாண்டுகாலமாக கால்நடை மருத்துவராக பணியாற்றுகின்றார். சிறந்த எழுத்தாளர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர். இவரது படைப்புகளில் வெளிப்படும் தனித்துவமான கதை சொல்லும் முறையும் எளிமையும் உளவியல் தன்மையும் என்னை பெரிதும் வசீகரித்துள்ளது. இவரது நாவல் ஒன்றிற்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன்.
சமீபமாக இவரது வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் தொகுதியை வாசித்தேன். இந்த நூலில் நடேசன் தனது கால்நடை மருத்துவ அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். கால்நடைகள் குறிப்பாக வளர்ப்பு பிராணிகள் குறித்து தமிழில் யாரும் அதிகமாக பதிவு செய்ததில்லை, ஒன்றிரண்டு வளர்ப்பு பிராணிகள் பற்றிய புத்தகங்கள் உள்ளன. ஆனால் மிருகங்களோடு உள்ள உறவும் நெருக்கமும் பற்றிய இலக்கிய பதிவுகள் மிக குறைவே.
நான் வாசித்த வரை ராபர்ட் டி ருவாக்கின் தாத்தாவும் பேரனும் என்ற அமெரிக்க நாவலும், ஜாக் லண்டனின் கானகத்தின் குரலும் நாய்களை பற்றிய நுட்பமான பதிவுகள் கொண்டவை. பூனையை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட ஜப்பானிய நாவல் I Am a Cat. இதை எழுதியவர் நட்சுமி சுசூகி (Natsume Sōseki).
நடேசன் காட்டும் உலகம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாய்கள் பூனைகள் மற்றும் நம்மை சுற்றியுள்ள மிருகங்கள் இன்று எப்படி நடத்தப்படுகின்றன. அதற்கான நோய்மையை எப்படி நாம் அறியாமல் புறக்கணிக்கிறோம் என்பதை நடேசன் பதிவுசெய்திருக்கிறார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவின் ஈயத்தொழில் சாலை பகுதியில் வாழும் நாய்கள் எலும்புகளை மண்ணில் புரட்டி தின்னும் போது அதன் குடலில் ஈயக்கழிவுகள் சேர்ந்து அவதிப்படுவதை பற்றியும், தெருவில் அடிபட்டு குடல் சரிந்து கிடந்த நாயை அதன் உரிமையாளரை நெருங்கி போக மனதில்லாமல் நின்ற காட்சியையும் பற்றிய அவரது பதிவுகள் மிகுந்த அக்கறையானவை.
ஆஸ்திரேலியாவின் அணில் போன்ற மிருகம் பொசம். அது வீடுகளின் மீதேறி அலைந்து திரியக்கூடியது. அப்படியொரு பொசம் தன் வீட்டிற்குள் நுழைந்த போது அதை எப்படி காப்பது என்ற அவரது போராட்டமும் அந்த பொசத்தை தன் வீட்டின் மரத்தில் வைத்த போது ஆதிவாசி ஒருவனை துரத்தியதற்கு சமமான மனவலியை உணர்வதும் அற்புதமானது.
பூனை, நாய்களும் சக்கரை நோயால் அவதிப்படுவதையும் சக்கரை நோய் முற்றிய நாய்களை கருணை கொலை செய்வதையும் பற்றிய குறிப்பும் திகைப்பூட்டும் தகவல்கள்.
ஆஸ்திரேலியாவில் சாலையில் அடிபட்டு இறக்கும் பூனை நாய்களை அடக்கம் செய்ய வேண்டிய செலவு யார் அடித்தார்களோ அவர்களே சாரும் என்பது போன்ற விபரங்களை காணும் நமது ஊர்களில் சாலையில் அடிபடும் மனிதர்களை கவனிக்கவே நமக்கு அக்கறையில்லையே என்ற ஆதங்கம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை.
நடேசன் உலகை மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கான இடம் என்று பார்க்கவில்லை மாறாக குற்றஉணர்ச்சியோடு மிருகங்கள் பறவைகள் மற்றும் எளிய உயிர்களை மனிதர்கள் தங்களது சுயலாபங்களுக்காக எந்த அளவு வதைக்கிறார்கள். கொலை செய்கிறார்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை கவனம் கொடுத்து எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தின் எளிமையும் ஈர்ப்பும் குறிப்பிடப்பட வேண்டியது. அவ்வகையில் வாசிக்கபட வேண்டிய முக்கிய நூலாகும்.
வெளியீடு. மித்ரா ஆர்ட்ஸ். 32 ஆற்காடு சாலை சென்னை .24.
மறுமொழியொன்றை இடுங்கள்