‘வானத்திலிருந்து தேவதைகளின் மனமகிழ்விற்காக கடவுளால் உருவாக்கிய இடம் – இதைப்போல் ஒரு இடம் பிரித்தானியர்களுக்கோ ஐரோப்பியர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.’ என்றார் விக்ரோரியா அருவியை முதலாவதாகத் தரிசித்த ஐரோப்பியரான டேவிட் லிவிங்ஸ்ரன்.
நமது புவியில் இயற்கையாக அமைந்திருக்கும் கண்ணைக் கவரும் ஏழு அற்புதங்களில் ஓன்றான விக்ரோரிய அருவியை ஆகாயத்திலிருந்து பதினைந்து நிமிடம் ஹெலிகப்டரில் பறந்து பார்த்தபோது அந்தத் தேவதைகளின் மனநிலையில் நாங்களும் இருந்தோம்.
ஸ்கொட்லாண்டைச் சேர்ந்தவரான டேவிட் லிவிங்ஸ்ரனின் அந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது. மதியத்து ஆதவனின் ஒளியில் உருகிய வெள்ளித் திரவமாக சமபேசி ஆறு உருகியோடி மலையிடுக்கில் அமைந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து கீழே விழுந்து புகையாக வானத்திற்கு எழுந்தது.
இருபது கிலோமீட்டருக்கு அந்தப் புகை தெரியுமென்றார்கள். ஆற்றின் இருபக்கமும் மரகதப்பச்சை நிறத்தில் காடுகள் வேலியாக கோடடித்து ஆற்றைப் பாதுகாத்தன.
ஒருவர் இறப்பதற்கு முன்பு பார்க்க வேண்டிய நூறு இடங்களில் முதன்மையான இடமென எழுதப்படிருந்ததால் ஏற்பட்ட ஆவலால் தென்னாபிரிக்காவுக்கு போகும்வழியில் பார்த்து விடுவது எனத் தீர்மானித்து, மனைவியும் நானும் அங்கு சென்றோம்.
விக்ரோரியா அருவி இருக்கும் அந்த சிறிய நகரத்தில் விமானநிலையம் உள்ளது. ஜோகன்ஸ்பேர்கில் இருந்து சென்ற எங்களுக்கு அந்த விமான நிலையம், ஒரு பஸ் நிலையத்தைப்போல் காட்சியளித்தது. உல்லாசப் பிரயாணிகளால் மட்டுமே வருமானத்தைப் பெறுகிறது அந்த நகரம்.
நாம் தங்கியிருந்த ஹோட்டல் 25 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. மிகவும் சிறிய ஹோட்டல்கள் மட்டுமே விக்ரோரியா அருவி நகரத்தில் உள்ளன. உல்லாசப்பிரயாணிகளுக்கு வசதிகள் இல்லாததால் அங்கு இயற்கை இன்னமும் சிதைக்கப்படவில்லை.
எங்களது ஹோட்டல் சம்பேசி ஆற்றின் கரையில் ஆபிரிக்க காட்டுப் புற்களால் வேயப்பட்டு அழகாக அமைக்கப்பட்டடிருந்தது. சகல வசதிகளும் உள்ள அழகான ஹோட்டல். எங்கள் அறைகளுக்கு வெளியே பபூன்கள் என்ற வானரங்களும் காட்டுப்பன்றிகள் கழுகுகள் என ஏராளமான பறவைகளும் மிருகங்களும் இயல்பாகத் திரிந்தன. அவைகளுக்கு உணவளிக்கவேண்டாம் என்ற எச்சரிக்கை மட்டும் எழுதியிருந்தது.
சம்பேசி ஆற்றருகே உள்ள அந்த ஹோட்டலில் தங்கியிருந்து காலையில் எழுந்து விக்ரோரியா அருவிக்குச் சென்றோம்.
அருகில் செல்லும்போது நீரத்துமிகளால் நனைக்கப்படலாம் என எச்சரித்தபடியால் அதற்கேற்ற உடையணிந்திருந்தோம். சிம்பாப்வேயின் சுவாத்தியம் சிறிது குளிரானது. கிட்டத்தட்ட மெதிரேனியன் கடலையடுத்த நாடுகளின் பருவகாலமாக இருந்தது. மலைசார்ந்த பீடபூமிப்பிரதேசமாகவும் பூமத்திய ரேகைக்கு தூரத்தில் இருப்பதால் மிகவும் மிதமான காலநிலை.
சிம்பாப்வே – சாம்பியா இரு நாடுகளையும் சம்பேசி ஆறு வடக்குத் தெற்காக பிரிப்பதால் விக்ரோரியா அருவியின் பெரும்பகுதியும் மிகவும் அழகான பகுதியும் தற்பொழுது சிம்பாப்வேயின் பக்கத்திலே உள்ளது. அருவியைப் பார்ப்பதற்கு பிரதான பாதையில் இருந்து சில கிலோமீட்டர் உள்ளே நடந்தால் அருவி வரும். அருவியோடு நடக்கும் வழியில் ஒரு பக்கம் அருவி – மறுபக்கம் இயற்கையான சவானா வனப்பகுதி. அங்கும் இங்கும் பல்வகை மான்கள் பபூன்கள் என்பனவற்றை பார்க்கக் கூடியதாக இருந்தது.
காலையில் நிலத்தில் நடந்து பார்த்தும் பொச்சம் தீராதபடியால் மதியத்தில் ஆகாயத்தில் பறந்து பார்த்தோம். ஹெலிகொப்டர், சிம்பாப்வே , சாம்பியா ஆகிய இரண்டு நாடுகளின் எல்லையில் உள்ள அருவிக்கு மேலாகவும் வனத்தின் மேலாகவும் பறந்தபோது கண்களுக்கு விருந்தாக இருந்தது. வெள்ளிப்பாளங்கள் உருகி அருவியாகி பள்ளத்தில் விழும்போது, அதில் சிதறும் நீர்த்துளிகள் எழுந்து மேகத்தை தழுவும்போது, அதனிடையே வானவில் கோலமாக அழகு காட்டியது.
வானவில் ஆகாயத்தில் வழமையாக காண்பதுதான். ஆனால், இங்கே எங்கள் கீழே தெரிந்தது மாறுதலே. இங்கு பூரண நிலவின்போதும் இரவு நேரத்தில் வானவில் தோன்றும். அதாவது சந்திரனது ஒளி நீர்த்துகள்களின் ஊடாக ஊடுருவும்போது சந்திரவானவில் தோன்றுகிறது. சந்திர ஒளியில்; இங்கு மட்டுமே வானவில் உருவாகும். ஆனால் அதைப் பார்க்கும் அதிர்ஸ்டம் எமக்கு இல்லை.
கனடா சென்றபோது குளிர்காலமானதால் உறைந்து இருந்த நயாகரா அருவியையே பார்த்தேன். நயாகராவிலும் இரண்டு மடங்கு நீளமானது விக்ரோரியா அருவி. 1.7 கிலோமீட்டர் நீளத்திற்கு சமபேசி ஆறு 108 மீட்டர் ஆழத்தில் வீழ்கிறது. சிறிய பள்ளத்தாக்கில் விழும் பகுதி மிகவும் விசித்திரமானது. புவி இரண்டாக பிளந்து அடிவயிற்றில் நீiர் ஏந்திக்கொள்வது போன்ற தோற்றத்தைத் தரும். புவியின் கண்ட நகர்வால் உருவாகிய இடைவெளி. இந்த இடைவெளியில் நீர்விழும்போது உருவாகும் இடிமுழக்கம் போன்று இருப்பதால் ஆபிரிக்க மொழியில் புகைக்கும் இடிமுழக்கம் என்பார்கள்.
நாங்கள் சென்ற காலம் கோடைகாலமென்றும் மழைக்காலத்தில் முப்பது மடங்காக இருக்கும் என வழிகாட்டி சொன்னபோது கற்பனை செய்ய முடியவில்லை. காரணம் 540 மில்லியன் கன மீட்டர் நீர் ஒரு நிமிடத்திற்கு மாசி பங்குனியில் விழும்போது அழகாக இருக்கும். ஆனால் விழுவதால் எழும் நீர்த்துளிகளால் புகைப்படலமாகி அருவி முற்றாக மறைக்கப்பட்டுவிடும்.
இந்த அருவியைக் கண்டு அதற்கு விக்ரோரியா மகாராணியின் பெயரை வைத்த டேவிட் லிவிங்ஸ்ரன் ஒரு வைத்தியரும் கிறீஸ்த்தவ சமய போதகருமாவார். இவரது செயற்பாடுகள் தெற்கு ஆபிரிக்காவில் முக்கியமானது. அவரது வரலாற்றை மட்டுமே தனியாக புத்தகமாக எழுதமுடியும்.
மாலையில் ஆபிரிக்காவில் நான்காவது பெரிய ஆறான சம்பேசி மீது படகில் செல்லும்போது அருகில் உள்ள காட்டில் இருந்து அரைகிலோ மீட்டர் அகலமான ஆற்றை யானையொன்று நீந்திக்கடந்தது மிகவும் அழகான காட்சியாகத் தெரிந்தது. தும்பிக்கையை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நீரின்மேல் கொண்டு வரும். அதன் நகர்வு நீர்மூழ்கிக் கப்பலை நினைக்க வைத்தது. ஆற்றின் ஓரத்தில் பல முதலைகள் இளைப்பாறிக்கொண்டு இருந்ததையும் அதற்குப் பக்கத்தில் நீர்யானை படுத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ஆபிரிக்காவில் மிருகங்கள் தங்களுக்கிடையே சமாதான ஓப்பந்தத்தில் வாழ்வது புரிந்தது. இந்த சமாதான வாழ்க்கை தமிழர் – சிங்களவர், இந்து-முஸ்லீம் , சியா-சுன்னி மற்றும் ஹொட்டு -ருட்சி முதலான மத இனத்தவர்கள் அறிந்து கொண்டால் நல்லதுதானே எனது மனதில் நினைத்தேன்.
இந்த ஆற்றுப்பகுதி அழகானது மட்டுமல்ல, மனித சமூகத்தின் கர்பப்பையுமாகும். எமது மூதாதையர்கள் 2 மில்லியன் வருடங்கள் முன்பு இங்கு வசித்ததால் அவர்கள் உபயோகித்த கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. அதன்பின்னர் தற்கால மனிதர்களால்; 50 000 வருடங்களுக்கு முன்னர் பாவித்த கருவிகளும் கண்டெடுக்கப்பட்டதால் மனித வரலாற்றின் முக்கிய இடமாக இந்தப்பகுதி கருதப்படுகிறது. இதற்கு அப்பால் சிம்பாப்வே ஆயிரம் வருடங்கள் முன்பாக ஒரு பெரிய அரசு உருவாகி கிட்டத்தட்ட 500 வருடங்கள் அரசாண்ட இடம். இங்கு பெரிய மதில்சுவர்களும் கோட்டையின் அழிவுகளும் கிட்டத்தட்ட 20,000 மக்கள் வாழ்ந்த தலைநகரமாக இருந்திருக்க முடியும் என கணிக்கப்படுகிறது. இந்தியா – சீனா மற்றும் மத்திய கிழக்கோடு கடல்வழி வியாபாரம் செய்ததற்கான அடையாளங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அங்கு நவீனமான விவசாயம் நடந்து உபரி உணவு உற்பத்தியும் நிகழ்ந்துள்ளது. அந்தப் பொருளாதாரமானது ஆளும் அரசே இராணுவத்தை தன்வசம் வைத்திருப்பதற்கும் உதவியுள்ளது என்பதையும் பல விதமான தொழில் தெரிந்தவர்கள் கலைஞர்கள் வியாபாரிகள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் பிற்காலத்தில் வந்த ஐரோப்பியரால் நம்பமுடியவில்லை. அல்லது நம்பத் தயாரில்லை. ஆதலால் விவிலியத்தில் சொன்ன இராணி ஷீபாவின் இடமாக முடிச்சுப் போட்டார்கள். இந்த சிம்பாப்வேயின் பெயரே பிற்காலத்தில் தென் ரோடீசியாவாக இருந்த ஆங்கிலேயரின் காலனிப்பிரதேசத்திற்கு மீண்டும் சூட்டப்பட்டது.
அழுக்கடைந்த நோட்டும் ஒரு றில்லியன் நோட்டும்
விக்ரோரிய அருவி நகரத்தில் கடையில் சில சாமன்களை வாங்கும்போது அமரிக்க டாலரையே கொடுக்க வேண்டியிருந்தது. மிகுதியாக ஒரு டாலரை நான் வாங்கியபோது மிகவும் கசங்கியும் மிக அழுக்காகவும் இருந்தது. சிம்பாப்வே நாட்டின் பொருளாதார நிலையின் படிமமாக அதை நினைத்தேன்.
ரோடீசியா என்ற பெயரால் அக்காலத்தில் தற்போதைய சிம்பாப்வே, சாம்பியா ,மாலாவி என்பன பிரித்தானியரால் ஆளப்பட்டது. பின்பு சாம்பியா, மாலாவி 60 இல் சுதந்திரம் அடைந்தபின்பு தென் ரொடீசியா மட்டும் ரொடீசியாவாக 80 ஆண்டுகள் வரை 4 வீதமுள்ள வெள்ளையர்களால் ஆளப்பட்டது.
ரோபேட் முகாபேயின் தலைமையில் சுதந்திரத்துக்கு போராடிய இயக்கம் விடுதலையடைந்த நாட்டில் அரசமைத்தது. முகாபேயின் ஆட்சியின் ஆரம்ப காலங்கள் ஆபிரிக்காவிலே சிம்பாப்வே செல்வந்த நாடாக இருந்தது.
60ஆம் ஆண்டுகளில் ஹானா, செனகல், கென்னியா, தன்சானியா என ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஆனால் பல காரணங்களால் அவை 80இல் இந்த புதிய நாடுகளின் பொருளாதாரம் சீரழிந்த நிலையில் ஆபிரிக்காவில் சிம்பாப்வே மிகவும் பொருளாதாரத்தில உச்சத்தில் இருந்த நாடு. சிம்பாப்வே டொலருக்கு அமெரிக்காவின் 1.47 டொலர்கள் கிடைக்கும் .
பிற்காலத்தில் முகாபேயின் ஆட்சியில் பெருந்தோட்டங்களை கைப்பற்றி பின்பு அவை பயிரிடப்படாமல் அழிந்தன. அந்த நாணயத்தின் மதிப்பு குறைந்து போகத் தொடங்கியது மட்டுமல்ல, சிறிய நாணய நோட்டுகளை மக்கள் தீண்டாமல் அவை பாதையில் கிடந்தன. இறுதியில் உலகத்திலே ஒரு றில்லியனுக்கு நோட்டை அடித்த அரசாங்கம் என உலகத்தில் புகழ் பெற்றது சிம்பாவே. விலைவாசிகள் உயர்ந்து பணவீக்கம் பலமடங்காகியபோது நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது.
இப்பொழுது அமெரிக்க டொலர் சிம்பாப்வேயில் உபயோகிக்கப்படுகிறது. இப்பொழுது மக்களிடம் பணம் இல்லை. தற்பொழுது அவரது இளம் மனைவி விமானப்படையின் விமானங்களில் பாரிஸ், ஹொங்கொங் ஷொப்பிங் செய்வதாகச் சொன்னார்கள். நன்றாக இருந்த ஒரு நாட்டை குட்டிச் சுவராக்குவதற்கு முகாபேயை உதாரணமாகக் கொள்ளலாம்.
ஆபிரிக்க மக்களின் சிறப்பு மற்றைய ஆசிய ஐரோப்பிய இனத்தவரைப் போலல்லாது காத்திராமல் ஒருவருடன் சம்பாஷணையைத் தொடங்குவார்கள். இதில் சிம்பாப்வே மக்கள் இன்னும் ஒரு படி மேலானவர்கள். முதலைகளை வளர்த்து இறைச்சி எடுத்து, அவற்றின் தோல்களைப் பதனிடும் இடத்துக்கு நான் சென்றபோது அங்குள்ளவர், இலங்கையைப் பற்றிய சகல விடயங்களையும் என்னிடம் கூறி என்னோடு பேச்சைத் தொடங்கினார். கிரிக்கட்டில் ஆர்வமுள்ளதால் இலங்கையைப் பற்றி பல விடயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். டாக்சி சாரதிகள் – வனங்களில் வழிகாட்டுபவர்கள் எல்லோரும் நகைச்சுவையுடன் பேசும் இயல்புள்ளவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
எகிப்திற்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் பழைய அரசுகளின் சுவடுகளின் சிதைவுகள் கொண்ட இடம் சிம்பாப்வே . அதை பார்க்க முடியவில்லை என்ற ஏமாற்றத்துடன் மீண்டும் ஜோகான்ஸ்பேர்க் சென்றேன்.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்