ஷோபா சக்தி நடித்த தீபன் படத்திற்கு சர்வதேச விருது

அல்லைப்பிட்டியிலிருந்து அய்ரோப்பா வரையில் ஆளுமையுடன் இயங்கும் எழுத்துப்போராளி ஷோபாசக்தி

Shoba முருகபூபதி

” ஒப்பீட்டளவில் இந்திய நாடு, இலங்கையைவிட ஊடகச் சுதந்திரம் மிகுந்த நாடு. இவ்விரு நாடுகளின் திரைப்பட அடிப்படைத் தணிக்கை விதிகள் காலனியக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. தணிக்கையே இல்லாத சுதந்திர ஊடகவெளிதான் நமது விருப்பமென்றாலும் இப்போதுள்ள தணிக்கை விதிகளைக் கண்டு நாம் பேரச்சம் அடையத் தேவையில்லை. ஆனந்த் பட்வர்த்தனின் அநேக படங்கள் தணிக்கை விதிகளுடன் நீண்ட போராட்டத்தை நடத்தித்தான் வெளியாகியுள்ளன. தமிழில் சமீபத்திய உதாரணமாக நான் பணியாற்றிய ‘செங்கடல்’ திரைப்படமும் நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தித் தணிக்கையை வென்றிருக்கிறது”
இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கும் ஷோபா சக்தி நடித்திருக்கும் தீபன் என்ற படம் (Feature Film) சமீபத்தில் நடந்த கேர்ன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்றிருக்கிறது.
முதலில் அவரை மனந்திறந்து பாராட்டி வாழ்த்திக்கொண்டே அவர் பற்றிய குறிப்புகளை இங்கு பதிவுசெய்கின்றேன்.
எனது விருப்பத்துக்குரிய படைப்பாளி ஷோபா சக்தி. இதுவரையில் நாம் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டதில்லை. எழுத்துக்களினால் பரிச்சயமானவர்.
1994 ஆம் ஆண்டளவில் எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்து புகலிடச்சிறுகதைகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது ஷோபா சக்தியினதும் சிறுகதையொன்றை புகலிட இதழிலிருந்து தெரிவுசெய்தோம்.
எனினும் அந்தப்பெயரைப்பார்த்ததும் அவர் ஆணா… பெண்ணா… என்ற மயக்கமும் வந்தது. காலப்போக்கில் அவரது கொரில்லா நாவலைப்படித்ததன் பின்னரும் தமிழக இதழ்களில் அவர் பற்றிய குறிப்புகளை படித்த பின்னரும்தான் உண்மை தெளிவானது.
தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் ஷோபா சக்தி. இலங்கை , இந்தியா மற்றும் புகலிட தீவிர வாசகர்களினதும் விமர்சகர்களினதும் மிகுந்த கவனிப்புக்குள்ளான இலக்கிய ஆளுமை. இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமம் இவரது பூர்வீகம். பல வருடங்களாக பிரான்ஸில் வாழ்ந்துவரும் ஷோபா சக்தி, இதழ்கள், இணையத்தளங்களில் தொடர்ந்து பேசப்படுபவர். விவாதங்களில் வீரியமுடன் ஈடுபடுபவர். சிறுகதை, நாவல், நேர்காணல், விமர்சனம், பத்தி எழுத்து என பல்துறை ஆற்றல்மிக்கவர். தமிழ் திரைப்படத்துறைக்கும் வந்தவர். இவரின் கொரில்லா, தேசத்துரோகி, ம், வேலைக்காரிகளின் புத்தகம், எம்.ஜி.ஆர். கொலை வழக்கு என்பன வாசகர், விமர்சகர் பரப்பில் பேசப்பட்டவை.
நான் எப்போது அடிமையாயிருந்தேன் என்ற நேர்காணல் தொகுப்பினையும், போர் இன்னும் ஓயவில்லை (பல இதழ்கள் இணையத்தளங்களில் வழங்கிய நேர்காணல்களின்) தொகுப்பையும் வெளியிட்டிருப்பவர். இவரது படைப்புகள் ஆங்கிலம் உட்பட பிறமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.

மேற்குறித்த குறிப்புகளுடன் அவருடனான நேர்காணலை இலங்கையிலிருந்து வெளியாகும் ஞானம் இதழ் வெளியிட்ட போர்க்கால இலக்கிய மலர் தொகுப்பில் பதிவுசெய்துள்ளேன்.
அவருக்கும் எனக்குமான நட்புறவுகூட நேர்காணல்கள் வழியாகத்தான் வளர்ந்திருக்கிறது.
அவரும் என்னை தொடர்பு கொண்டு ஒரு விரிவான நேர்காணலை பதிவு செய்திருக்கிறார். இது நடந்தது 2010 ஆம் ஆண்டில்.
2011 ஆம் ஆண்டு நாம் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை தூற்றியும் எதிர்வினையாற்றியும் பல புலன்பெயர்ந்த படைப்பாளிகளும் ஊடகவியலாளர்களும் சன்னதம் ஆடியவேளையில் எமக்காக உரத்துக்குரல் கொடுத்து மாநாட்டுக்கு ஆதரவாக உலகெங்கும் கையொப்பம் திரட்டுவதற்கு ஊக்கமளித்தவர்.
அவர் சம்பந்தப்பட்டிருந்த குவார்னிக்கா சர்வதேச இலக்கியத்தொகுப்பு கனதியானது. ஏற்கனவே வெளியான படைப்புகளை வைத்துக்கொண்டு அதனைத் தொகுக்காமல் மிகச்சிறந்த படைப்புகளை அதில் வெளிக்கொணர்ந்தவர்.
கிளிநொச்சியில் வதியும் நண்பர் கருணாகரனும் அவருக்கு பக்கத்துணையாக செயற்பட்டிருந்தார்.
ஷோப சக்தி வாழ்ந்த அல்லைப்பிட்டி கிராமத்தை நாம் அவரது புதினங்களில் தரிசிக்கலாம். அவர் வாழும் அய்ரோப்பாவையும் அவரது படைப்புகளில் காணமுடியும்.
தனது தாயகத்தை மீண்டும் சென்று பார்க்கமுடியாத அகதியாக ஓடிக்கொண்டிருந்தவர், புகலிடத்தில் சந்தித்த நெருக்கடிகள் – சவால்கள் ஏராளம். அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் உயிராபத்தும் நேர்ந்துள்ளது. மொக்கையான கருத்துக்களை சொல்லாமல் துணிவுடன் பேசுபவர்.
முன்னாள் ஈழப்போராளியாக இருந்தவர். அதே சமயம் போராளி இயக்கங்களையும் கடுமையாக விமர்சித்தவாறு இலங்கை அரசுகளையும் விமர்சித்துவருபவர். தவறுகளை தட்டிக்கேட்கும் அவரது துணிச்சல் பல புகலிட எழுத்தாளர்களுக்கு பாலபாடம்.
” கெட்ட சினிமா எடுக்கலாம்” இப்படியும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதமுடியும் என்று நாம் கனவிலும் நினைத்திருக்கமாட்டோம். ஆனால், அவர் எழுதியிருக்கிறார். தமிழ்த்திரைப்படங்கள் குறித்தும் அவர் விரிவாக விவாதித்திருப்பவர்.
சென்னை லொயோலா கல்லூரி, ‘தமிழ் – ஆங்கில இலக்கியங்களில் திரைப்படங்களிற்கான கதைக்கருக்கள்‘ என்ற பொருளில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்காக அவரால் எழுதப்பட்ட கட்டுரைதான் கெட்ட சினிமா எடுக்கலாம்.
இதனை அவரது வலைப்பூவில் விரிவாகப்பார்க்க முடியும். (www.shobasakthy.com) அவரது தார்மீகக் கோபத்தையும் அறியமுடியும்.
கேர்ன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதை வென்றுள்ள ஷோபா சக்தி முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ள தீபன் படத்தில் அவரது சொந்தக்கதையே அய்ம்பது வீதமிருக்கிறது என அறியப்படுகிறது.
ஈழ அகதியின் புகலிட வாழ்வை சித்திரிக்கும் தீபன் படத்திற்கும் அது வெளிவரு முன்னரே விமர்சனம் வெளியாகிறது.
அகதிகள் விவகாரத்தை சினிமாவில் வியாபாரப் பண்டமாக்குகிறார்களா…? என்ற கேள்வியை ஒரு ஊடகம் வெளியிட்டபொழுதும் ஷோபசக்தி, ” முதலில் ஓகஸ்டில் வெளியாகவுள்ள படத்தைப்பாருங்கள் ” என்றே இரத்தினச்சுருக்கமாக பதில் சொன்னார்.
ஏற்கனவே கண்ணத்தில் முத்தமிட்டால், காற்றுக்கு என்ன வேலி, ஆணிவேர், இராமேஸ்வரம் முதலான படங்கள், அவை வெளியானபொழுது அவை வியாபாரப் பண்டமகத்தெரியவில்லை.
ஆனால், ஒரு பிரான்ஸ் நாட்டவரால் ஈழத்து அகதிகள் விவகாரம் படமாகியதும் வியாபாரப் பண்டமாகத் தெரிகிறதா…?
பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் Jacque audiard இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் ‘ தீபன்’.
ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து பிரான்சுக்குள் வந்த மூன்று பேரின் புகலிட அகதி வாழ்வை சித்திரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஷோபா சக்திக்கு அகதி என்ற அடையாளம் நேர்ந்தமையினால் அவர் சந்தித்த இன்னல்களின் விளைவாக புகலிட இலக்கியத்திற்கு புதிய முகவரி கிடைத்திருப்பது போன்று, வலிமையான திரை ஊடகத்திலும் புதிய முகவரியை அழுத்தமாக பதிவுசெய்துவிட்டார்.
அதற்குக்காரணமாக இருந்த இயக்குநர் Jacque audiard அவர்களையும் வாழ்த்திப்பாராட்டுவோம்.
—0—

“ஷோபா சக்தி நடித்த தீபன் படத்திற்கு சர்வதேச விருது” மீது ஒரு மறுமொழி

  1. அவர்களுக்கு
    எனது பாராட்டும் வாழ்த்தும்
    உரித்தாகட்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: