நடேசன்
மனிதர்கள் பேசும்போது அதில் உண்மை, உணர்வு, தர்க்கம் ( Ethos, Pathos, Logos )என்பன இருக்கவேண்டும் என்றார் கிரேக்க தத்துவஞானி அரிஸ்ரோட்டல்.
ஸர்மிலா ஸெய்யத்தின் உம்மத் நாவலில் இந்த மூன்றும் ஆழமாக பதிந்துள்ளன.
நரம்பியல் நிபுணர் நோயாளியின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் அதில் உருவான கட்டியை வெட்டுவதற்காக தனது திறமையை பாவிப்பதுபோல், தான்சார்ந்த இஸ்லாம் மதத்தை தாய்ப்பறவை தனது குஞ்சை பாதுகாப்பதுபோல் அணைத்துக் கொண்டே மதத்தின் பெயரால் பெண்களை அடக்கும் ஆண்வர்க்கத்தை அதே பறவை தனது அலகுகளால் குதறியிருப்பது உம்மத் நாவலின் வார்த்தைகளில் மட்டுமல்ல வார்த்தைகளுக்கு இடையேயும் பரவிக்கிடக்கிறது.
உண்மை ( Ethos, )
போகப்பொருளாக கருதி பெண்ணின் உருவத்தை மூடி மறைக்கலாம். அல்லது வீட்டில் பூட்டி சாவியை வீசிவிட்டு விசேடங்களுக்கு மட்டும் அணிந்து கொள்ளும் வைரநகைபோல் தமது உடலுறவுக்கு மட்டும் பெண்ணைப்பாவிக்க விரும்பும் ஆண்கள் மற்றைய மார்க்கங்களிலும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.
பிரித்தனியர்கள் இந்தியாவில் சட்டத்தால் தடை செய்யும்வரை கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏறுதல் மற்றும் பிற்காலத்தில் விதவைப் பெண்ணின் தலைமயிரை மொட்டை அடித்து விடுதிகளுக்கு அனுப்புதலை இந்து மதத்தின் பெயரால் செய்தார்கள். அதேபோல கிறீஸ்தவ மதமும் ஒரு காலத்தில் விதவைப் பெண்களை சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தது.
ஐரோப்பியர்களின் அதிர்ஷ்டம் கிறீஸ்துவத்தை புனருத்தாரணம் செய்ய மாட்டின் லூதரில் இருந்து பல அறிஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் உயிரைக் கொடுத்து பாடுபட்டார்கள். தற்போதைய போப்பண்டவர் பிரான்சிஸ் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் கத்தோலிக்கர்களிடம் பல விடயங்களை எடுத்துச்செல்கிறார்.
ஏனைய மதங்கள், தேங்கிய குட்டையாக பல நூற்றாண்டுகால சேற்றை தங்கள் பொக்கிசமாக சேகரித்து வைத்திருக்கின்றன.
பொருளாதார உறவுகள் சமூக உறவுகளைத் தீர்மானிப்பவை. பெண்கள் கல்வி, அவர்களின் உழைப்பு என்பன தற்கால பொருளாதாரத்தின் இன்றியமையாத விடயங்கள். மதங்கள் எதிர்த்திசையில் செல்ல நினைக்கும்போது முரண்பாடுகள் எழுகிறது.
தற்போதைய மேற்கத்தைய நாடுகளில் பொருளாதார கோட்பாடுகளுக்கு உலகத்தின் கடைசித்தடையாக இருப்பது இஸ்லாமியமார்க்கம். இதனால் இஸ்லாம் நெருக்கடியை சந்திக்கிறது. இந்த நெருக்கடி கூடும்போது இஸ்லாமிய ஆண்கள் பெண்கள்மேல் அதை ஏற்றுகிறார்கள்.
சாதாரண மானிட உளவியல் வெளியில் நெருக்கடி இருப்பதால் விரக்தியடையும் ஆண் அதை தன் மனைவியில் காட்டுவது சகஜம்தானே? இதிலிருந்தே தற்போதைய மேற்கு – இஸ்லாம் உலக முரண்பாட்டை பார்க்கமுடியும்.
இலங்கையில் நீடித்த போரால் ஏராளமான தமிழ் பெண்கள் விதவையானார்கள். எந்தவொரு தமிழ் அரசியல்வாதியோ சமயவாதியோ அந்தப் பெண்களுக்கு மறுமணம் மூலம் வாழ்வு வழங்கவேண்டும்என ஒரு அறிக்கையாவது விட்டார்களா? எந்த ஊடகமாவது அந்தப் பெண்களின் துன்பங்களிற்கு மாற்றுவழியைக்காண்பித்து அதை எழுதினார்களா..?
அதற்கு மாறாக அவர்கள் விபச்சாரம் செய்தார்கள் இராணுவத்தினரோடு படுத்தார்கள் என மேற்கு நாடுகளில் இருந்து செய்தி எழுதுகிறார்கள். அதை எனக்கும் அனுப்புகிறார்கள் அந்தப் போக்கிலிகள்
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் மற்றைய சமயத்தவர்கள் திறமானவர்கள் அல்ல . இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த நாவல் இஸ்லாமிய ஆண்களை மட்டுமல்ல மற்றைய சமூகம் சார்ந்த முழு ஆண்வர்க்கத்தையும் நோக்கி கேள்வி எழுப்புகிறது. அந்த வர்க்கத்தின் உடல் குறுகச் செய்கிறது என நினைக்கிறேன்.
உணர்வு (Pathos)
போராளியாக இருந்த யோகா என்ற பெண்ணை ‘என்னடி பத்தினி நாடகம் ஆடுகிறாய்? இயக்கத்தில் சும்மதானே இருந்தனி…? பம்பமடுவில் எத்தனை ஆமிக்கு உன்னைக் கொடுத்திருப்பாய் ” என சித்தாண்டி மாமா தனது வீட்டிற்கு அடைக்கலம்தேடி வந்த சொந்த மருமகளையே வேட்டையாடுவதும் – அதன்பின்னர் அந்தப்பெண் ‘அவன்ர மண்ணாங்கட்டிச் சாமான் எந்தப் பொம்பிளையை பார்த்தாலும் எழும்புமே… இப்படி… என்பதும் எந்த ஆணுக்கும் முகத்தில் அறைந்தது போன்றிருக்கும்.
ஸர்மிளாவின் நாவலில் அவர் எழுதிய நோக்கத்தில் வெற்றியை அளித்தது மட்டுமல்ல அழகியலிலும் வெற்றியடைந்திருக்கிறது. இலங்கையில் நடந்த இனப்போரில் போரை நடத்தியது
பெரும்பான்மையாக ஆண்களாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது மூவினத்திலும் பெண்களே. உறவினரான தந்தையோ கணவனோ இல்லை மகனோ இறந்த பின்பு தாயாக மனைவியாக மகளாக அவர்கள் இழந்தது பல மடங்கானது. அவர்கள் உலகம் இந்த ஆண்களை பாதுகாப்புக்காக நம்பியிருக்கும் தந்தை வழி சமூகத்தில் பல மடங்கு பாதிக்கிறது. பெண்களை நடைப்பிணமாக்குகிறது. மேற்கத்தைய சமூகம் போல் மறு திருமணங்களை சிந்திக்காது நமது சமூகம்.
தவக்குல் என்ற சமூக சேவை செய்யும் இளம்பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் – அவள் உதவி செய்ய விரும்பிய தெய்வானை – யோகா என்ற இரண்டு போராளிப் பெண்களைப் பற்றிய நாவலே உம்மத்.
இந்த நாவல் பெண்களினது உணர்வுகளை மட்டும் சொல்லுவதால் முக்கியமான பெண்ணிய நாவல் என் வகைப்படுத்தமுடியும். நாவலின் நடை அதனை தொடர்ச்சியாக வாசிக்கக்கூடியதாக உள்ளது. பல இஸ்லாமிய எழுத்தாளர்களால் எழுதப்படும் எழுத்துக்களில் அதிகமான அராபிய சொற்கள் என்னைக் களைப்படையச் செய்துவிடும். ஆனால் – உம்மத்தில் பெரும்பாலான அறிந்த சொற்களே உள்ளதால் பிற்குறிப்பை பார்க்காமலேயே வாசிக்க முடிந்தது.
கைத்தொழில் புரட்சியின் பின்பு ஐரோப்பாவில் உருவாகிய நாவல் இலக்கியம் மத்திய வகுப்பு பெண்களுக்காக எழுதப்பட்டது. எல்லோருக்கும் கல்வியறிவு எற்பட்டதால் உருவாகிய மத்தியதரவர்க்கத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றபோது அவர்களது பொழுது போக்குசாதனமானது. சிந்திக்கும் பெண்களை வன்முறையால் அடிமை கொள்ளமுடியாது என்பதை மார்க்கப் பெரியவர்களைப் புரிந்து கொள்ளவைப்பது இந்த நாவல்.
தர்க்கம் (Logos)
உம்மத் நாவலில் சில தர்க்கமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. உள்ளுரில் சமூகசேவை செய்வதைத் தடுக்கும் இவர்கள் அரபு நாட்டுக்கு இஸ்லாமியப் பெண்கள் பணியாளர்களாக செல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரபு நாடுகளில் பெண்கள் மீது பாலியல் பலவந்தங்கள் செய்யப்படுவதை இந்த கலாச்சார காவலர்கள் அறியாததா?
தனியாகச் சென்ற பெண்கள் குழந்தைகளுடன் திரும்பும் கதைகள் இல்லையா (பக்கம் 209)
இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லைத்தானே?
ஆனால் – ஓரே வழி இந்த நாவலைப்பார்க்காமலோ அல்லது கேள்விப்படாமலோ அல்லது தெரிந்தும் உதாசீனம் செய்வதே நலம் என்று பலர் நினைத்திருக்கலாம்.
ஆனால் – அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நாவலைப் பதிப்பித்த காலச்சுவடிற்கும் எனது வாழ்த்துக்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்