உயிரியல் பரிணாமக் கொள்கையின் தந்தையான சாள்ஸ் டார்வின் உலகத்தின் பல இடங்களுக்கும் சென்று ஆராய்வுகள் செய்து தற்போதய பரிணாமம் என்ற கொள்கையை உருவாக்கியவர் . அவுஸ்திரேலியாவிற்கு அவர் வந்ததை நினைவு கூரும் முகமாக வட அவுஸ்திரேலிய நகரத்தை அவர் பெயரில் டார்வின் என அழைக்கிறார்கள்.ஒரு விஞ்ஞானியின் பெயரில் நகரமொன்று பெயரிடப்படுவது அரிது. அதற்காக அவுஸ்திரேலியனாக நான் பெருமையடைகிறேன்.
சாள்ஸ் டார்வின் ஆபிரிக்காவை மனிதசமூகத்தின் தொட்டில் எனச் சொன்னார். அவர் சொன்னதின் காரணத்தின், மிகச்சிறிய பகுதியை அறிந்துகொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் தென் ஆபிரிக்கா சென்றபோது கிடைத்தது.
ஜோகனஸ்பேர்க்கின்(Johannesburg) அருகாமையில் உள்ள ஸ்ரேக்பொன்ரயின்(Sterkfontein) என்னும் இடத்தை மனிதகுலத்தின் ஆரம்பத் தொட்டிலாக (Cradle of Humankind) வர்ணிக்கிறார்கள். நாலு மில்லியன்கள் வருடத்திற்கான மனித எலும்புகளும் மற்றும் உயர்விலங்குகளின் எலும்புகளும், அதன் தடயங்களும் எடுக்கப்படுகிறது. இந்த இடத்தில் பல சுண்ணாம்புக் குகைகள் அமைந்திருக்கின்றது. இதனால் எலும்புகள் பழுதடையாது பாதுகாப்பாக இருக்கின்றன. இந்தக் குகைகளுக்குள் இப்பொழுது செல்வது மிகவும் கடினமாக இருந்தது. இருந்து கொண்டும், குனிந்து, சிலவேளை முழங்காலிலும் போக வேண்டியிருந்தது. இந்தக் குகைகளுக்கு அருகாமையில் மிக அழகான மனித வரலாற்று மியூசியத்தை அமைத்துள்ளார்கள்.
88ம் ஆண்டு நியுசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஜெனரிக் எஞ்ஜினியரிங் என்ற பாடத்தை படித்துக்கொண்டிடிருந்த காலத்தில் அது பற்றிய விடயங்கள் அக்காலத்திலே தொடந்து செய்திகளிலும், நிறமூர்த்த அலகுகள் ஆராய்ட்சி அறிமுகமானது. என்னுடன் படித்தவர்கள் பலர் ஜெனரிக் எஞ்ஜினியரிங் ஆராய்வில் ஈடுபட்டார்கள். நான் மிருகவைத்திய தொழிலுக்கு மீண்டும் மாறினேன்.
அக்காலத்தில் அறிய நேர்ந்த செய்தி — 1986ம் ஆண்டு அமரிக்காவில் வெளியாகிய செய்தி உலகத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியது.
இதுவரையும் ஆபிரிக்காவில் ஆதிமனிதர்கள் பற்றிய பல தடயங்கள் கிடைத்தாலும் மற்றய இடங்களில் ஆதிமனிதர்கள் உருவாகவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க முடியாத நிலையிருந்தது. அப்போது நிறமூர்த்த அலகுகள் (DNA) பற்றிய ஆராய்ட்சி இதுவரையும் இருந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த ஆராய்ட்சி முடிவுகள் உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் 150000 வருடங்களுக்கு முன்பாக ஒரே தாயில் இருந்து உருவானவர்கள் என்பதை ஆபிரிக்கா ஆசியா ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் நியூகினி வாழ்பவர்கள் என 4000 மனிதர்களின் மயிற்ரோகொன்றியாவில் உள்ள நிறமூர்த்த அலகுகள் நிரூபிக்கின்றது என்றார்கள் .
மயிற்ரோகொன்றியாவில் உள்ள நிறமூர்த்த அலகுகள் தொடர்ச்சியாக தாய்வழியில் மாறாமல் சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டு வருபவை.இதன்மூலம் ஒருவிதத்தில் ஆப்பிரிக்க ஏவாள்தான் இந்தப் புவியில் உள்ள எல்லோருக்கும் ஆதித்தாயாக கருதமுடியும் என அந்தச் செய்தி சொன்னது.
மனித குலம் , ஆதாம் -ஏவாளால் பபிலோனியாவில் உருவாக்கப்பட்டது என்று மனிதர்களை பலவருடங்களாக மதவழிபாட்டாளர்கள் நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை தெட்டத்த தெளிவாக பரிணாமத்தின் மூலம் மறுத்தார் சால்ஸ் டார்வன். அதன்பின்பு கடந்த நூற்றாண்டில், ஆபிரிக்கா எங்கும் மனித மூதாதையர்களின் எலும்புகள் தடயங்கள் எடுக்கப்பட்டன.
எத்தியோப்பியாவில் மனிதர்களின் மூதாதையான லூசி பின்பு கென்யாவில் ரெர்கேனா(Turkana) ஏரியருகில் ரெர்கேனா போய் (Turkana Boy)என்ற மிகவும் உயர்ந்த இளைஞனின் எலும்புகள் கிடைக்கிறது. மனித வரலாற்றில் கிழக்காபிரிக்காவில் பல தடயங்கள் கிடைத்தது. இதேபோல் தென்ஆபிரிக்காவில் திருமதி பிளஸ் (Ples) மற்றும் ரவுங் குழந்தை (Taung Child) கண்டெடுக்கப்பட்டது
திருமதி பிளஸ்
திருமதி பிளஸ் கண்டெடுக்கப்பட்ட இடம் ஜோகனஸ்பேர்கில் இருந்து நாற்பது கிலோமிட்டரில் உள்ள இடத்தை மனித நாகரிகத்தின் தொட்டில் என்பார்கள் அங்குதான் 500 மேற்றபட்ட மனித மூதாதாதையர்களினது எலும்பு படிவங்கள் கண்டெடுக்கப்பட்டது
திருமதி பிளஸ், தற்போதய மனிதரது மூளையின் அரைபகுதிகொண்ட, மத்திய வயதான பெண் என்பது பிற்காலத்தில் உறுதி செய்யப்பட்டது. திருமதி பிளஸ் கண்டுபிடித்து நிறுவிய டாக்டர் புரும் (Dr Robert Broom & Dr John Robinson) தனது வாழ்வின் பெரும்பகுதியை தொடர்ச்சியான இந்தக் கண்டுபிடிப்பில் மேற்கொண்டார். அவரது நண்பரான ஜோன் ரொமபின்சன் இதற்கு முன்பாபக ரவுங் குழந்தையை கண்டுபிடித்தவர். இருவரும் திருமதி பிளஸ் பற்றிய விடயத்தில் ஒன்றாக வேலைசெய்து மனிதரின் ஆரம்ப மூதாதைகள் அதாவது ஆப்பிரிக்க மனிதன் என்றதை நிறுவினார்கள்.
ரவுங் குழந்தை
இதற்கு முன்பாக ரேமண் டாட் (Raymond Dart))ரான்ஸவாலில் கண்டுபிடிக்கப்பட்ட ரவுங் குழந்தையில் மனிதக்குரங்கிற்குரிய சில உடற்கூறுகள் இருந்தது. அதே நேரத்தில் மனிதக்குரங்கின் கோரைப்பல் நீளமானது. இது ரவுங்குழந்தையில் இல்லாததால் மனித மூதாதையாகக் கருதினார்
சுண்ணாம்புக்குகைகள் அமைந்த இந்த இடத்தில் 1890 ஆண்டில் இருந்து இன்று வரையும் மனிதவடிவத்தின் அடையாளங்கள் கிடைக்கின்றன
இந்தப் பகுதி தென்னபிரிக்க விற்வாற்ற்ஸராண்ட் ( University of Witwatersrand) பல்கலைக்கழகத்தை சேர்ந்தது. இங்கு தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சிகளால் ஆதிகால மனிதர்களின் அடையாளங்கள் கிடைக்கிறது.
புவியின் சிறிய வரலாறு.
எமது பூமி கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள் வயதானது ஆரம்பத்தில் அக்கினிக்கோளத்தின் வெப்பம் குளிர 4 பில்லியன் வருடங்களின் ஆரம்பத்தில் நீரில் எளிய உயிரினங்கள் உருவாகின. நிலத்தில் உயிரினம் உருவாக பலகாலங்கள் சென்றது நிலத்தில் உயிரினங்கள் உருவாக 350 மில்லியன் வருடங்கள் சென்றன. குட்டிகளை ஈன்று பாலைக் கொடுக்கும் முலையூட்டிகள் 200 மில்லியன் வாழ்கின்றன. பிறைமேற் (Primates) என்னும் வானரங்கள் 65 மில்லியன் ஆண்டுகளும் ஏப்ஸ் (Apes) எனும் மனிதக்குரங்கு 30 மில்லியன் வருடங்களும் இந்தப் புவியில் வசிக்கின்றன. மனித மூதாதைகள் 7.5 மில்லியன் ஆண்டுகளும் தற்கால மனிதர்கள் 0.1 மில்லியன் (100000) வருடங்கள் வாழ்கிறார்கள். இதைவிட நியண்டதால் (Neanderthal என்பவர்கள் தற்கால மனிதர்களுக்கு மிவும் நெருங்கிய உருவ அமைப்புள்ளவர்கள் 35000 வருடங்கள்வரையும் ஐரோப்பவில் குளிர்ப் பிரதேசங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். நியண்டதால்களும் தற்கால மனிதர்களும் ஓரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இவைகளெல்லாம் களிமண்ணில் இருந்து உருவத்தைச் செய்து பின்பு அந்த உருவத்தின் மூக்குள் இறைவன் ஊதியதால் ஆதாம் உருவாகி பின்பு, சிறிய சத்திரசிகிச்சையில் விலா எலும்பை எடுத்து, ஏவாளை உருவாக்கிய கதையை போல், எளிதாக மனிதப்பரிணாமம் இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
மனிதர்கள் அறிவதை விடவும் நம்புவதற்கு தயாராக இருப்பதாக ஒரு அறிஞர் கூறினார்.
ஒரு விஞ்ஞானி, மனிதர்களின் ஒரு இலட்சம் வருட வாழ்வுக்காலத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மதங்கள் உருவாகி அழிந்தாக சொல்கிறார்.
தற்போது உள்ள பெரிய மதங்கள் ஆதிகாலத்தில் சிறிய மதங்களை அழித்து உருவானவை என்ற உண்மை கசப்பாக பலருக்கு இருக்கும்.
பல ஆதிமனித தடயங்கள் கிழக்காபிரிக்காவிலே கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ஆதிமனிதனின் பல பரிணாமங்கள் இந்தப்பகுதியிலே நடந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு பலகாரணங்கள் இருக்கலாம். ஆனாலும் முக்கிய காரணம் 20 மில்லியன் வருடங்கள் முன்பாக கிழக்கு ஆபிரிக்காவில் நடந்த நிலக்கண்டங்கள் நகர்வு ஏற்பட்டது. இதனால் றிவ்ற் வலி (Rift Valley)என்ற பிரதேசம் உருவாகியது. இது வட ஆபிரிக்காவில் இருந்து எத்தியோப்பியா, கென்யா, தன்சானியா என ஒரு முதுகுத்தண்டுபோல தெற்கே மொசப்பிக் வரை ஓடுகிறது. இந்த கண்டநகர்வால் ( Continental rift) றிவ்ற் வலியின் கிழக்குப்பக்கத்தில் மலைகள் உருவாகின்றது. கென்யா மலை , மற்றும் கிளிமஞ்சரோ இப்படி உருவாகிய மலைகள்தான். இந்து சமுத்திரத்தின் ஈரலிப்பான காற்று இப்படி உருவான மலைப்பிரதேசத்தால் தடுக்கப்படுவதால் இந்த ரிவ்ட் வலியின் மேற்குப்பகுதி வறண்டு போகிறது.
பூமத்தியரேகையின் இருபக்கத்திலும் இருந்த ஆபிரிக்காவின் பெரிய பிரதேசம் இதற்கு முன்பு வளமாக மழைபெறுவதால் செழிப்பாக இருந்த நிலை இந்தக் கண்ட நகர்வால் மாறுகிறது. இதன்பின்பே ஆபிரிக்காவில் செழிப்பற்ற சவானாகாடுகள் உண்டாகிறது. இதனால் இங்கு வாழ்ந்த உயிரினங்களுக்கு உணவு, இடம், பாதுகாப்பு என நெருக்கடி உருவாகிறது.
வளமாக இருந்த காலத்தில் இருபது வகையான மனிதக் குரங்குவகைள் இருந்தன தற்போது மூன்று விதமான மனிதகுரங்குகளே உள்ளன(இரண்டு விதமான சிம்பான்சி மற்றயது கொரில்லா). இதேபோல் ஏராளமான மிருகங்கள் அழிந்துவிட்டன.
உணவுகள் குறைந்து வாழ்க்கை கடினமாகியதால் வாழ்வுப்போட்டியில் வெற்றிபெற இந்த இரண்டு கால்களை பாவித்தல், மூளை திறன்கூடுதல் ஏற்பட்டதாக விளக்கப்படகிறது. இரண்டு கால்களால் ஆயுதம் தரிக்க, வேட்டையாட, ஓடுவதற்கு இலகுவாக இருக்கிறது . இப்படியான நெருக்கடி நிலைமையே 7.5 மில்லியன் வருடங்கள் முன்பாக நம் மூதாதையர் இரண்டுகால்களை பாவிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளுகிறது.
கொரில்லா சிம்பான்சி இரண்டும் பின்னங்கால்களால் நடக்கும்போது கைமூட்டுகளால் நிலத்தில் ஊன்றி (Knuckle walkers )நடப்பன. இதனால் ஆரம்ப மனித மூதாதையினரும் இப்படி இருந்திருக்கலாம் என நினைக்கமுடிகிறது.
மனிதர்கள் தோன்றுவதற்கு முக்கிய விடயமான இரண்டு காலில் நடப்பதும், மூளை விருத்தியாகி கருவிகளைப் பாவிப்பதும், மூன்றாவதாக தொண்டையில் உள்ள லரிங்ஸ் (Larynx) கீழிறங்கி மொழி விருத்தியாக்கியது.
மனிதர்களின் மூளையின் மடிப்புகளை உருவாக்கி மிகவும் விருத்தியடைவதற்கு காரணமாக இருந்தது மொழியாகும்
தற்கால மனிதனின் மூளை 1350( Cubic centre meter) கன சென்ரிமீட்டர் அதேவேளையில் தற்கால மனிதக்குழந்தை பிறக்கும்போது 725 கன சென்ரிமீட்டர் மனிதரின் மூதாதையர்களது மூளை 500-700 இடையில் இருந்தது. தற்கால மனிதர்களின் மூளையில் மூன்றில் இரண்டு பகுதியை கொண்டவர்களாக மூதாதையர்கள் இருந்திருக்கிறார்கள்
மனிதக்குரங்களில் இருந்து மனிதர்கள் வித்தியாசம் நிறமூர்த்தத்தில் இரண்டு வீதம்தான் மேலும் 24 நிறமூர்தங்கள் உள்ள சிம்பான்சியில் ஏதோ காரணத்தால் மனிதர்களில் 23 சோடிகளாகியுள்ளது. இது குதிரைக்கும் வரிக்குதிரைக்கும் உள்ள வித்தியாசத்தை விடக்குறைவானது. ஆனால் கொரில்லா சிம்பான்சியை விட மனிதர்களுக்கு தூரத்து உறவாக கணிக்கிறர்கள்.
இப்படியான ஒரு மனிதக் குரங்குகளாக சிம்பான்சி கொரில்லா என்பன பல மில்லியன் வருடங்களாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு காலில் நடக்கும் சக்தியுள்ள மனித மூதாதையர் கிட்டத்தட்ட 7-அல்லது 4 மில்லியன்ஆண்டுகளின் முன்பேதான் தோன்றியிருக்கிறார்கள்.
தொடர்ச்சியான பரிணாமம் மனிதர்களில் ஏற்பட்டுள்ளது. அது ஏன் மனிதக்குரங்குகளில் ஏற்படவில்லை என்பதற்கான பதிலாக மனித முதாதையர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருப்பதால் மூளை மற்றும் உடல் உறுப்புகள் விருத்தியடைந்து திறனடைகிறது. புதிய சூழலில் வாழ்வதற்கு ஏதுவாகிறது புவியில்தோன்றிய 90 வீதமான மிருகங்கள் இப்பொழுது இல்லை அழிந்ததும் இதே காரணத்தை சொல்கிறார்கள்.
அதேபோல் குதிரை பல விடயத்தில் உயரம், குழம்பு, உடல் வலிமை என பரிணாமம் மடைந்து வந்துள்ள ஒரு மிருகமாகக் கருதப்படுகிறது
இரண்டு கால்களைப் பாவித்தல் மனிதக்குலத்திற்கு தேவைகருதி ஏற்படுகிறது. இரண்டு கால்களில் நடப்பது கைகளை பாவித்து உணவைப்பெற வேட்டையாட உதவுகிறது.
புவி சூழலில் நடந்த மாற்றங்கள் ஆபிரிக்காவில் நடந்த மாற்றங்கள், உணவுகள் உட்கொள்வதில் ஏற்பட்ட மாற்றங்கள், என ஏராளமான விடங்கள் புவி வரலாற்றில் நடந்தது மனித குலத்தை உருவாக்கும் நோக்கத்துடனா என்ற கேள்வியுடன் அந்த சுண்ணாம்புக் குகைகளை விட்டு வெளி வந்தேன்
Source- Origins Reconsidered By Richard Leaky Roger Lewin
நன்றி தினக்குரல் -இலங்கை
மறுமொழியொன்றை இடுங்கள்