அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் சிறிலங்கா அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மகுடம் சூட்டி மரியாதை செலுத்திய படங்களும் செய்திகளும் ஆய்வுகளும் மூஞ்சிப்புத்தகத்திலும் மூத்திரச்சந்திலும் சூடுபறக்கும் விவாதங்களாக பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றன.
வெளியே தெரியாத கம்பன் கழகத்தின் அரசியலையும் அதில் அங்கம் வகிக்கும் சிலரது குசும்புத்தனங்களையும் புரிந்துகொள்ளாது இவ்வளவு காலமும் கம்பனது தமிழில் மட்டும் தங்களை கட்டிவைத்துக்கொண்ட பலர், மைத்திரிக்கு வைத்த மகுடத்துடன் திடுக்கிட்டு எழும்பியுள்ளார்கள்.
அகில இலங்கை கம்பன் கழகத்தையும் அதன் முகமாகிய ஜெயராஜையும் அந்த அமைப்பின் செயற்பாட்டையும் தீர அறிந்தவர்களுக்கு நடந்து முடிந்த சம்பவங்கள் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதற்கு நியாயமில்லை. ஏனெனில், அந்த கழகத்தின் சீத்துவம் அப்படி.
பல லட்சக்கணக்கான மக்கள் ஒரு அடக்குமுறை ஆட்சி இயந்திரத்தின் நெருக்குவாரத்துக்கு எதிராக அல்லற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில், அந்த மக்களின் விடுதலைக்காக பெருந்தொகையான இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிக்கொண்டிருந்தபோது –
அந்த மண்ணில் இருந்துகொண்டே இந்தியாவின் தொன்மையான இலக்கியங்களில் ஒன்றான இராமாயணத்தை எழுதிய கம்பனது தமிழை புகழ்ந்து ஒரு அமைப்பெடுத்து அதன் ஊடாக தமிழ் வளர்த்தவர்கள்தான் கம்பன் கழகத்தினர். (கண்முன்னால் கதறும் உன் இனத்தை வலியை பதிவு செய்யாது எங்கோ இருக்கும் ஒரு பழம்பெரும் காப்பியப்புலவனின் பெயரால் தமிழ் வளர்க்கப்போகிறோம் என்று புறப்பட்ட இவர்கள்தான் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் முன்னோடிகள்) சரி. இதில் ஒன்றும் பெரிய தவறுள்ளதாக நான் இங்கு குறிப்பிடவில்லை. போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இது போன்ற எத்தனையோ விடயங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதும் அதனை மக்கள் ரசித்ததும் நாங்கள் கடந்துவந்த விடயங்கள்தான்.
ஆனால், தமிழின் பெயரால் அமைப்பெடுத்த கம்பன் கழகத்தினர் தாங்கள் வாழ்ந்த போர் சூழ்நிலைகைளையும் மக்கள் வேதனைகளையும் அங்கு செறிந்து கிடந்த போரிலக்கியத்தையும் தங்களது தமிழ் தராசில் எந்த பக்கத்திலும் சுமக்காது, தனியே கம்பனது தமிழ் மட்டும்தான் பாடுவோம் என்று கூவித்திரிந்தது எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத ஒன்று.
கம்பனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உங்கள் முன்னால் இரத்தம் சிந்தி இறந்த உறவுகளுக்கும் அவர்களுக்காக உயிர் துறந்து மடிந்த மாவீரர்களுக்கும் ஏன் கொடுக்க மறுத்தீர்கள் என்றால், இல்லை நாங்கள் இலக்கியவாதிகள். அரசியல்வாதிகள் இல்லை என்றால் இவர்களை எப்படி மதிப்பது?
உலக அளவில் பெரிய யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான் அங்கிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களிடமிருந்து உணர்ச்சி மிகுந்த படைப்புக்கள் உருவாகியிருக்கின்றன.
எத்தனையோ உணர்வுகளின் குவியல்களாக எமது தாயகம் வெம்பிக்கொண்டிருந்த காலத்தை ஒரு போரிலக்கிய படைப்பாக கொண்டுவருவதற்கு அக்காலத்தில் இந்த கம்பன் கழகம் எந்த ஒரு கூட்டு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. (தனிப்பட்ட ரீதியில் த.ஜெயசீலனும் மணிமாறனும் ஜெயநிதியும் முகுந்தனும் கல்வயல் குமாரசுவாமி, திருக்குமார், ஜெயரூபன் ஆகியோரும் இன்னும் ஒரு சிலரும் மக்கள் பிரச்சினைகளை கவிதை வடிவில் வெளிக்கொண்டுவந்தார்கள்)
மறுபுறத்தில், போர்க்களத்தின் வேலிகளில் இருந்துகொண்டு போராளிகள் எழுதிய கவிதைகள், கதைகள், அனுபவங்கள் என உணர்வு தெறிக்கும் படைப்புக்கள் வெளியாகியிருந்தன.
இன்னொரு பக்கம், ‘வெளிச்சம்’ மற்றும் ‘போர் உலா’ போன்ற சஞ்சிகைகள் எமது தாயகத்தின் கனதியாக பக்கங்களை சுமந்து வந்துகொண்டிருந்தன.
ஆனால், கம்பன் கழகத்தினரோ, ஜெயராஜ் தலைமையிலான பட்டிமன்ற குழு கைதட்டுக்களை வாங்கவல்ல நகைச்சுவைகளை மக்கள் மத்தியில் கொழுத்திப்போட்டுவிட்டு கல்லாப்பெட்டியை நிரப்புவதிலேயே குறியாக இருந்தார்கள். அதாவது, கம்பனின் புகழ் பரப்புவதையே இலட்சியமாகக்கொண்டிருந்தார்கள். அத்துடன், கழகத்தை நிறுவனமயப்படுத்துவதிலும் பெரும் குறிக்கோளுடன் செயற்பட்டார் வாரிதியார்.
தங்களுக்கு முன்னால் வெடித்துச்சிதறும் வேதனைமிக்க வாழ்வியலை தங்கள் உணர்வுக்குள் உள்வாங்க முடியாத இந்த வெற்றுப்படைப்பாளிகள், போலி வேஷம் தரிந்து மக்களை ஏமாற்றும் “பேச்சாளர்” போர்வையில் தாயகத்தில் இனியும் வலம் வரவேண்டாம் என்று இந்தக்கூட்டத்தின் தலைவரான கம்பவாரிதியை யாழ்ப்பாணத்திலிருந்தே அகற்றினார்கள் விடுதலைப்புலிகள். அத்துடன் கம்பகோட்டம் காலியானது.
கொழும்பில் வந்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விடுதலையான கம்பவாரிதி பின்னர், கொழும்பு கம்பன் கழகத்தை ஆட்டையை போட்டு அங்கும் பழைய பல்லவியை பாடத்தொடங்கினார். இவர்களது இந்த கூத்து குறித்து புதுவை எழுதிய கவிதையில் –
“கண்டி வீதி கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது
கொழும்பில்
கம்பன் புகழ் பாடும் இந்திர விழாவில்
பத்மா சுப்ரமணியம்
பரதமாடிக் கொண்டிருந்தார்.
சலங்கை ஒலியில்
சபைக்கு கேட்கவில்லை
எம் சாக்குரல்”
– என்று பாடினான்.
யாழ்ப்பாணத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட வாரிதியாரின் கம்பன் கழக செயற்பாடுகள், கொழும்பிலிருந்துகொண்டு இந்தியாவை நோக்கியதாகவே இருந்தது. மருந்துக்கு உள்ளுர்காரர்கள் ஓரிருவரை அழைத்து மாலை அணிவித்து அனுப்பிவிட்டு, தங்களது வியாபாரத்தை சர்வதேச ரீதியில் கடைவிரித்து ஆரம்பித்தார்கள்.
இதுவரை தொடர்ச்சியாக பேசிவந்த இந்த கழகத்தின் செயற்பாடுகளை உற்றுவாசித்தால், இந்த அமைப்பு தாயகத்தின் தேவையிலிருந்தும் தாயத்தின் மொழியிலிருந்தும் தன்னையே தான் தொடர்ந்து தனிமைப்படுத்தி ஒரு போலி சாம்ராஜயத்திற்குள் மூழ்கிக்கொண்டுபோவதை தெளிவாகப்பார்க்கலாம். பாவம்! இதில் திருநந்தகுமார், குமாரதாசன் மற்றும் சில தமிழ் மேல் காதல்கொண்ட அப்பாவி படைப்பாளிகள் தம்மையும் அறியாமல், அறிந்தும் சொந்தத்துக்கு பங்கம் விளைவிக்காமல் அகப்பட்டுக்கொண்டிருப்பது துரதிஸ்டவசமானது.
என்னை பொறுத்தவரை நான் பிறந்த தேசத்தின் எந்த தேவைக்கும் சேவைக்கும் அப்பாற்பட்ட ஒரு அமைப்புத்தான் கம்பன் கழகம். ஆகவே, இந்த அமைப்பு யாருக்கு மணிமுடி சூடினால் எமக்கென்ன?
மறுமொழியொன்றை இடுங்கள்