நடேசன்
ஆபிரிக்க காடுகளில் மட்டும் பார்க்கக் கூடிய மிருகம் கழுதைப்புலி. ஆசியாவின் சில பகுதிகளில் முன்பு இருந்தாலும் தற்பொழுது அரிதாகிவிட்டது. உல்லாசப்பயணிகளில் ஏராளமானவர்கள் குருகர் காட்டுக்கு சென்றாலும் சில முக்கியமான மிருகங்களை பார்க்கத் தவறிவிடுவார்கள்.
பருவகாலம் தப்பினால் அல்லது வழிகாட்டிகள் காண்பிக்கத்தவறினால் முக்கியமாக பார்க்கவேண்டியனவற்றை பார்க்கத்தவறிவிடுவார்கள். இப்படி பல காரணிகள் உள்ளது.
மிருகங்களை அவற்றின் உறைவிடங்களில் காணவேண்டும் என்ற எனது ஆவல் இந்தமுறை குருகர்வனத்திற்கு சென்றபோது நிறைவேறியது.
இரவுவேளைகளில் மட்டும் வேட்டைக்குத்திரியும் கழுதைப்புலியை பகல்நேரத்தில் கண்டது அதிசயமே. அதைவிட அதிர்ஷ்டம் அதைபோட்டோ எடுக்க முடிந்தது. புள்ளிகள்கொண்ட கழுதைப்புலியை தனியாக மதியத்தில் காணமுடிந்தது. எந்த தயக்கமும் இல்லாது பாதையோரத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.
புள்ளிகள் கொண்ட கழுதைப்புலி மிகவும் விசித்திரமானது. புலிவிலங்கியலாளரை பிரமிக்கவைக்கும் உடல்கூறை தனக்குள் கொண்டிருக்கிறது.
அது என்ன?
பிறவுண், புள்ளி, கோடுகள் என மூன்று விதமான கழுதைப்புலிகள் உள்ளன. ஆனால் இந்தப் புள்ளிகள் கொண்ட கழுதைப்புலிகள் மிகவும் விசித்திரமானவை. ஆண் விலங்கிலும உடல் பலமானது பெண்விலங்கு. அதைவிட முக்கியமான விடயம் பெண்விலங்கில் மற்றைய விலங்குபோன்று யோனி அல்லது பெண்குறி இல்லை. அதற்குப் பதிலாக ஆண்விலங்கின் குறிபோல் ஆறு அங்குலங்கள்; நீளமான ஆண்குறியுள்ளது.
பெண் கழுதைப்புலிகளின் இந்தக் குறி உண்மையில் பரிணமத்தில் ஓரு விபத்து. வரப்பிரசாதமில்லை.
இரண்டு விறைப்பான ஆண்குறிகள் போன்ற அமைப்புகள் உடலுறவில் ஈடுபடுவது இலகுவானது அல்ல . பல சிறிய அத்தியாயங்களாக விட்டு விட்டு உடலுறவு ஏற்படும். ஆண் – பெண் உறவின்போது இந்தப் பெண்குறி சட்டைக் கையைப்போல் மடிக்கப்பட்டு ஆண் குறிக்கு இடம்விடவேண்டும். அதாவது இரண்டு நீளமான குழாய்கள் ஒன்றுக்குள் ஒன்று செருகுவதுnபுhன்ற கைங்கரியம்.
இதனூடாகவே சிறு நீர் கழிப்பதும் குட்டிபோடுவதும் இலகுவான காரியமல்ல. அப்படி குட்டிபோடும்போது நுனிப்பகுதி கிழிந்துவிடுகிறது. இந்தக் குறியின் அடிப்பகுதியில் தோல்களிலான மடிப்பு உள்ளது. ஆண்விலங்கின் விதைபோன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
இந்த எனப்படும் கிளிரோரஸ்(Clitoris) மற்றும் யூரித்திரா(Urethra) இரண்டும் ஒன்றாக அமைந்துள்ளது.
இது எப்படி இயங்குகிறது என்பது புதிராக இருந்தாலும் பெண்விலங்கின் வயிற்றில் இருக்கும்போதே அதிக அளவு ஆண்ஹோமோன் என்ற ரெஸ்ரஸ்ரோன் பாய்ச்சப்படுவதால் சாத்தியமாகிறது. பிறக்கும் பெண்குட்டி நீளமான குறியுடன்தான் பிறக்கிறது. இதனால் ஆண்குட்டியையும் பெண்குட்டியையும் இளம்பருவத்தில் பிரித்தறிவது கடினம். வயதாகிய பின்பு குறியில் சில வித்தியாசமும் பெண்விலங்கில் முலைகள் தோன்றுவதால் இனவிருத்தி நடக்கிறது.
பெண்விலங்குகளே கூட்டத்தில் முக்கியமாக தலைமைத்துவத்திற்கு வருகிறது.
கழுதைப்புலிகள் நாய்கள்போன்ற உடல்; தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் உண்மையில் பூனைவகைகளுக்கு நெருக்கமானவை. தற்பொழுது ஆபிரிக்காவில் பெருமளவில் உள்;ளன. இந்தியா ஆப்கானிஸ்தான் துருக்கியில் சிறிய அளவில் கோடுகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன. ஐரோப்பா மத்தியகிழக்கில் இல்லாமல் போய்விட்டது
கழுதைப்புலிகளில் பிறவுண் நிறமுள்ள கழுதைப்புலி தனியாக வேட்டையாடும். கழுதைப்புலிகள் மற்றைய மிருகங்களின் மிச்ச சொச்சத்தை உண்பவை என்று சொல்லப்பட்டாலும் அது முற்றிலும் உண்மையல்ல.
அவை மிகவும் திறமையாக வேட்டையாடும். அதேநேரத்தில் மற்றைய மிருகங்களின் வேட்டையைப் பறித்து உண்பதுடன் சிறிய பறவைகள், தவளைகள் மற்றும் ஊர்வன என்பவற்றை உண்ணும். இதைவிட இரவில் தூங்கும் மிருகங்களையும் வேட்டையாடும். கறையான் புற்றுகளை தோண்டி கறையான்களை ருசித்துஉண்ணும்.
புள்ளிகள் உள்ள கழுதைப்புலி உடல் பலமுள்ளவை. கூட்டமாக சேர்ந்து உணவு தேடும். அப்பொழுது சிங்கங்களைக் கண்டாலும் பயப்படாது. ஆனால் கூட்டம் குறைந்தால் சிங்கங்களின் உணவு மிச்சத்திற்காக காத்திருக்கும். பகலிலும் பார்க்க இரவில் துணிவாக வேட்டையாடும்.
காட்டினுள்ளே நான் வாகனத்தில் சென்றபோது இருமுறை புள்ளிகள் கொண்ட கழுதைப்புலிகளைக் கண்டேன். எனினும் அவை வாகனத்தைப் பொருட்படுத்தாமல் பாதையைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. மிருக வைத்தியரான எனக்கு அவற்றின் உடல் அமைப்பு அதன் தேவைக்கேற்ப விருத்தியடைந்துள்ளது தெரிந்தது.
உடலின் முன்பகுதி முக்கியமாக தோள் பகுதி பருத்து விருத்தியடைந்து தொண்டையும் மற்றும் நெஞ்சுப்பகுதி என்பன அகலமாக விரிந்து இருப்பதால் பிராணவாயுவை கூடுதலாக உள்ளெடுத்து வேட்டைக்கு பாய்ந்து தாக்கும் வலிமை பெறுகிறது. அதேவேளையில் பின்பகுதி இடுப்பு பின்னங்கால் ஒடுங்கி மெலிந்துள்ளது. முன் கால்களும் பாதங்களும் பெரிதாகவும் உறுதியாகவும் இருப்பதால் உணவை தேடுவதற்கும் அவற்றை இழுத்துக்கொண்டு பலதூரம் பாதுகாப்பான இடத்தைநோக்கி நடப்பதற்கும் ஏற்றதாக அதன் உடல் அமைப்பு இருக்கிறது. ஏனைய மிருகங்களிலும் பார்க்க கழுதைப்புலிகளின் பற்கள் உறுதியானவை. மற்ற மிருகங்களுக்கு எலும்பிலிருந்து தசையையும் கிழிக்கவே பற்கள் இருக்கின்றது. ஆனால் கழுதைப்புலிகளில் எலும்புகளையும் உடைத்து தின்பதற்கான வலுவுள்ள பற்கள் அமைந்துள்ளன.
கழுதைப்புலிகளுக்கு மனிதர்கள் மத்தியில் நல்ல பெயரில்லை. ஓநாய்கள்போல் அவை ஆபிரிக்காவில் இறந்தவர்களது உடலையும் புதைத்த சடலங்களையும் உண்டதாக வரலாறு உண்டு. முக்கியமாக பஞ்சம் வரட்சியான காலத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. ஆபிரிக்காவில் மந்திர தந்திர விடயங்கள் செய்வதற்கு கழுதைப்புலிகளின் உடல்பகுதியைப் பாவிப்பார்கள். குழந்தைகள், மாடுகள், செம்மறிகளை இந்தக்கழுதைப்புலிகள் உண்பதாக உருவகிக்கப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல.
த லயன் கிங் படத்தில் பிரபல கருப்பின நடிகை வூப்பி கோலட்பேக்( Whoopi Goldberg) குரல்கொடுக்க அவை பாதகமான மிருகங்களாக காட்டப்படுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்