ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர்

JK

தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன.
அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளியாகியுள்ளன. தமது படைப்புகளுக்காக மாஸ்கோவிலிருந்து ரோயல்ட்டியும் பெற்ற ஒரே ஒரு தமிழக எழுத்தாளர். பாரதியை தமது ஞானகுருவாக வரித்துக்கொண்ட ஜெயகாந்தனிடம் பாரதியின் இயல்புகளும் இருந்தன.
சில வருடங்களுக்கு முன்னர் ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரையை அவரது மறைவின்பொழுது அவர் நினைவாக மீண்டும் சமர்ப்பிக்கின்றேன். ஜெயகாந்தன் என்றும் எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.
முருகபூபதி
அவுஸ்திரேலியா

நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்

சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்

இந்தியாவின் ஆத்மாவை யதார்த்தம் சிதையாமல் இலக்கியப்படைப்புகளிலும் திரையிலும் காண்பித்த கலைஞன் ஜெயகாந்தன்.

முருகபூபதி

தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கேள்வி – பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
கேள்வி: தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த ஜெயகாந்தன் ஏன் இப்பொழுது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் ?
பதில்: தமிழ் சினிமா எதிர்பார்ப்பதுபோல் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தன் எதிர்பார்ப்பதுபோல் தமிழ் சினிமா இல்லை.
இந்தத்தகவலை உயிர்மை இதழின் நூறாவது இதழில் (டிசம்பர் 2011) திரையுலக விமர்சகர் தியோடர் பாஸ்கரனின் பின்வரும் கருத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.
அவர் சொல்கிறார்:
எழுத்தாளர்களை நல்ல முறையில் ஒரு சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இயக்குநர்களுக்கு ஆழமான இலக்கியப்பரிச்சயம் தேவை. எழுத்தாளர்களுக்கும் சினிமாவின் தனி இயல்புகள் சாத்தியக்கூறுகள் – இவை பற்றிய ஒரு பிரக்ஞை வேண்டும். அதுமட்டுமல்ல திரையும் எழுத்தும் தத்தம் இயல்புகளில் மிகவும் வேறுபட்ட ஊடகங்கள் என்பதையும் உணர்ந்திருக்கவேண்டும். வங்காள – மலையாள சினிமாக்களில் இத்தகைய புரிதல் இருபுறமும் இருப்பதைக்காணலாம். அங்கிருந்து வரும் பன்னாட்டுப்புகழ்பெறும் திரைப்படங்களில் பெருவாரியானவை ஒரு இலக்கியப்படைப்பையே சார்ந்திருப்பதைக்கவனிக்கலாம்.
ஜெயகாந்தனுக்கு முன்பே பல இலக்கியப்படைப்பாளிகள் தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்துவிட்டு வெளியே வந்தவர்கள்தான் அல்லது ஓதுங்கிக்கொண்டவர்கள்தான். அவர்களில் புதுமைப்பித்தன், விந்தன் ஆகியோரைக்குறிப்பிடலாம். இவர்கள் இருவரும் சில படங்களுக்கு வசனம் எழுதியதுடன் தமது எல்லையை வகுத்துக்கொண்டார்கள். கல்கியின் சில தொடர்கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. பொன்னியின் செல்வனை முதலில் எம்.ஜி.ஆர் விலைக்கு வாங்கி இயக்குநர் முள்ளும் மலரும் மகேந்திரனிடம் கொடுத்து வசனம் எழுதச்சொல்லிவிட்டு பின்னர் திரைப்பட தயாரிப்பு முயற்சியை கைவிட்டவர்.
மகேந்திரன் சிறுகதை – நாவல்களை திரைப்படமாக்கிய அனுபவம் உள்ளவர்.
புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவல்தான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள். உமாசந்திரனின் முள்ளும் மலரும் அதே பெயரில் மகேந்திரனால் இயக்கப்பட்டது. பொன்னீலனின் உறவுகள் கதையும் மகேந்திரனால் பூட்டாத பூட்டுக்கள் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. கந்தர்வன் எழுதிய சிறுகதை சாசனம். இக்கதையையும் அதே பெயரில் மகேந்திரன் எடுத்திருந்தார்.
பாலகுமாரன், சுஜாதா ஆகியோர் சிறுகதைகள் நாவல்கள் எழுதி புகழ்பெற்றவர்கள். இவர்கள் பின்னர் பல படங்களுக்கு வசனம் எழுதினார்கள். சுஜாதாவின் பல கதைகள் படங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும் மாறியிருக்கின்றன.
தற்காலத்தில் ஜெயமோகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பல படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் – ஜெயகாந்தன் இவர்களிடமிருந்து வேறுபட்டு தாமே தமது கதைகளுக்கு திரைப்படவடிவம் கொடுத்து தயாரித்து இயக்கி வெளியிட்டவர்.

மிகவும் குறைந்த செலவில் உன்னைப்போல் ஒருவனையும் யாருக்காக அழுதானையும் எடுத்தார்.
ஜெயகாந்தன் கடலுர் மஞ்சகுப்பத்திலிருந்து 12 வயதில் சென்னைக்கு வந்தபின்னர் அவரை அரவணைத்தது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் கம்யூன் வாழ்க்கை. எத்தனையோ அன்றாடக்கூலி கிடைக்கும் தொழில்களையெல்லாம் பார்த்துவிட்டு ஒப்புநோக்காளராக (Proof Reader) தமக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய தொழிலை தேர்வுசெய்துகொண்டவர். ஒப்புநோக்காளர் ஜெயகாந்தன் படைப்பிலக்கியவாதியானது முன்னுதாரணம் மிக்க சரிதை.
அவரது இலக்கியப்படைப்புலக வளர்ச்சியென்பது பலருக்கும் பாலபாடமாக அமையக்கூடியது.
ஏராளமான சிறுகதைகள் அதேபோன்று நாவல்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கும் ஜெயகாந்தனை சினிமா உலகிற்கு அழைத்ததும் அவர் நேசித்த கம்யூனிஸ்ட் இயக்கப் பாசறைதான்.
கட்சியில் கலை இலக்கிய ஈடுபாடு மிக்கவர்களின் முயற்சியினால் எடுக்கப்பட்ட படம் பாதை தெரியுது பார். இப்படத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியதுடன் சிலரது நிர்ப்பந்தம் காரணமாக ஒரு காட்சியில் தோன்றி நடித்துமிருக்கிறார்.
ஆனால் – அவருக்கு நடிக்கப்பிடிக்காது. அரிதாரம் (மேக்கப்) பூசிக்கொள்ளமாட்டேன் என்ற கொள்கையை சபதமாகவே கொண்டிருந்தவருக்கு – அந்தப்படத்தில் வரும் சிறிய காட்சியில் தோன்றியது குற்றவுணர்வாகவே இருந்ததாம். எப்படியாவது அந்தக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்திலிருந்தவருக்கு – தயாரிப்பாளர்களும் இயக்குநரும் படத்தின் நீளம் கருதி நீக்க விரும்பிய காட்சிகளில் – தான் தோன்றும் காட்சியையும் நீக்கிவிடுமாறு வற்புறுத்தி எப்படியோ படத்தில் நடித்ததாகவே ஜெயகாந்தன் காண்பித்துக்கொள்ளவில்லை.
எனவே – அவருக்கு திரைப்படத்தில் நடிக்க முற்று முழுதாக விருப்பம் இல்லை என்பது அவரது வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது. ( ஆதாரம்: ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்)

பிரபல்யமான – ஜனரஞ்சக – வசூலை மாத்திரம் குறியாகக்கொண்ட ஏராளமான தமிழ்ப்படங்களுக்கு வசனம் எழுதிய ஏ.எல். நாராயணன் என்பவருக்கு ஜெயகாந்தன் சிறிதுகாலம் உதவியாளராக இருந்தார் என்றும் தகவல் உண்டு.
பாரதி சொல்லும் ரௌத்திரம் பழகு ( கோபம்) என்றவாறு வாழ்ந்து காட்டிய ஜெயகாந்தனிடம் அமைதியும் நிதானமும் அசாத்தியமான துணிச்சலும் குடியிருந்தன. தாம் எழுதிய உன்னைப்போல் ஒருவன் நாவலுக்கு திரைப்பட வடிவம் கொடுத்து மூன்று வாரங்களில் தாமே இயக்கி வெளியிட்டார்.
1946 ஆம் ஆண்டில் ஜெயகாந்தன் தமது 15 வயது இளம்பருவத்தில் ஒரு சோப்பு – இங்க் தொழிற்சாலையில் வேலை செய்தபொழுது தன்னோடு வேலை செய்த – அவர் உள்ளன்போடு ‘மொட்டை” என அழைத்த ஒரு சிறுவனின் கதைதான் உன்னைப்போல் ஒருவன். நாவலில் வரும் சிட்டிதான் அவன் என்று அந்நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவரது பால்யகால அனுபவம் நாவலாகி பின்னர் திரைப்படமாகவும் உருவாகியிருக்கிறது.
( உன்னைப்போல் ஒருவன் நாவலை – இலங்கையில் பிரபல வில்லிசைக்கலைஞர் லடீஸ் வீரமணி மேடை நாடகமாக்கி அரங்கேற்றினார். இந்நாடகத்தில் சிட்டி என்ற சிறுவன் பாத்திரம் ஏற்று நடித்தவர் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா. லடீஸ_ம் ஸ்ரீதரும் மறைந்துவிட்டனர்)
எவரது தலையீடுகளும் இன்றி திரையுலக தொழில் நுட்பங்கள் எதுவுமே தெரியாத நிலையில் சில நண்பர்களின் துணையுடன் உன்னைப்போல் ஒருவனை ஜெயகாந்தன் எடுத்திருந்தார்.
இந்நாவல் ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்து பல இலட்சம் வாசகர்களை ஈர்த்தது.
தாமே திரைக்கதையையும் வசனத்தையும் எழுதி இயக்கி – தயாரித்து தாமே புதுமையான முறையில் அதனை விநியோகமும் செய்தார். தமது படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்கமாட்டார்கள் என்பது தெரிந்தபின்னர் விநியோகப்பொறுப்பையும் தாமே ஏற்றுக்கொண்டார்.

தமிழ்ப்படங்களே பார்த்தறியாத கர்மவீரர் – பெருந்தலைவர் காமராஜர் மீது பற்றும் மரியாதையும் கொண்டவர் ஜெயகாந்தன். அவரையும் அழைத்து உன்னைப்போல் ஒருவனைக் காண்பித்தார்.
காமராஜரும் படத்தைப்பார்த்துவிட்டு பாராட்டினார்.
ஏராளமான பல மொழிப்படங்ளை வெளியிட்ட தமிழக முன்னணித் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் ( ஏ.வி.எம்) காமராஜருடன் இந்தப்படத்தைப்பார்த்துவிட்டு – ஜெயகாந்தனிடம் ‘ இப்படத்தை தேசியவிருதுக்கு வேண்டுமென்றால் அனுப்புங்கள். கதையை எனக்குத்தாருங்கள். வர்த்தக ரீதியில் லாபம் கிட்டக்கூடியவிதமாக இதனை நான் எடுக்கிறேன்” என்றாராம். ஆனால் – ஜெயகாந்தன் அதற்கு மறுத்துவிட்டார்.

1964 இல் நடந்த தேசிய திரைப்படவிழாவில் உன்னைப்போல் ஒருவன் மூன்றாவது இடத்தில் தெரிவானான். ஜெயகாந்தனுடன் இத்திரைப்பட விழாவில் போட்டியிட்டு சத்யஜித்ரேயின் சாருலதா வெற்றிபெற்றது.
அந்த வெற்றி எவ்வளவு பொருத்தமானது என்று நான் மகிழ்ந்திருக்கிறேன் எனக்கூறும் ஜெயகாந்தன், தான் ரேயின் படைப்புகளுக்கு நிகரான அமைதியான ரசிகன் என்றும் ஒப்புக்கொண்டவர்.
ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் கதையை இயக்குநர் ஸ்ரீதர் கேட்டார். அதற்கும் ஜெயகாந்தன் மறுத்துவிட்டார்.
யாருக்காக அழுதான் மிகக்குறைந்த செலவில் 1966 இல் ஜெயகாந்தனால் எடுக்கப்பட்டது.
நாகேஷ் – திருட்டுமுழி ஜோசப் பாத்திரமேற்று திறம்பட நடித்திருந்தார். கே.ஆர். விஜயா, பாலையா, சகஸ்ரநாமம் முதலானோர் நடித்த படம்.

நடிகர் நாகேஷ் குறித்து உயர்வான அபிப்பிராயம் கொண்டிருந்த ஜெயகாந்தன் இவ்வாறு பதிவு செய்கிறார்:
‘ நகேஷின் நடிப்பு தமிழ்த்திரைப்பட உலகிற்கு, இதன் தகுதிக்கு மிஞ்சிய ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லவேண்டும். நல்லவேளையாக டைரக்டர்களின் ஆளுகை தன்மீது கவிழ்ந்து அமிழ்த்தி விடாதவாறு பாதுகாத்துக்கொள்ளும் அதேசமயத்தில் ஒரு நடிகனுடைய எல்லைகளை மீறி நடந்துகொள்ளாதவர். தனது பாத்திரத்தைத் தன் கற்பனையினால் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எதிர்பாராத முறையில் மிகவும் சிறப்பாக அமைத்துக்கொள்கிற ஒரு புதுமையான கலைஞராகவும் இருந்தார்.’
ஜெயகாந்தன் தமிழ் சினிமா உலகில் பிரவேசித்த காலப்பகுதியில் அவருக்கு பக்கத்துணையாக விளங்கிய இருவர் – பின்னாளில் கவனிப்புக்குள்ளான பிரபல இயக்குநர்களாக விளங்கினார்கள்.
அவர்கள்தான்: கே. விஜயன், மல்லியம் ராஜகோபால்.
ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் கைவிலங்கு. கல்கியில் வெளியான குறுநாவல். பின்னாளில் காவல் தெய்வம் என்ற பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும் வெளியானது. இக்கதையை ஜெயகாந்தனிடமிருந்து வாங்கிய எஸ்.வி. சுப்பையா காவல் தெய்வம் என்ற பெயரிலேயே வெளியிட்டார்.
சிவகுமார், லட்சுமி, எஸ்.வி.சுப்பையா எஸ்.ஏ. அசோகன், நம்பியார் நடித்த இத்திரைப்படத்தில் சிவாஜிகணேசன் சாமுண்டி என்ற கள்ளிறக்கும் தொழிலாளி வேடத்தில் கௌரவ நடிகராகத் தோன்றி அட்டகாசமான கோபக்கனல் பொங்கும் சிரிப்புடன் உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருப்பார். சிவாஜி தூக்குத்தண்டனை கைதியாக வித்தியாசமான பாத்திரம் ஏற்று நடித்த படம் காவல் தெய்வம்.

ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவலான பிரம்மோபதேசம் கதையையும் வாங்கி திரைப்படமாக்க முயற்சித்த எஸ்.வி.சுப்பையா – பின்னர் அதனைக்கைவிட்டார்.
ஜெயாகந்தன் அக்கினிப்பிரவேசம் சிறுகதையை ஆனந்தவிகடனில் எழுதியவேளையில் விமர்சன சர்ச்சைகளை எதிர்நோக்கினார். அதேசமயம் அந்தக்கதைக்கு பாராட்டுக்களும் குவிந்தன. இக்கதை அந்நாட்களில் ஜெயகாந்தனின் ஆளுமைக்கும் துணிவுக்கும் அத்தாட்சி.
இச்சிறுகதையை காலங்கள் மாறும் என்ற பெயரிலேயே முதலில் தொடர்கதையாக விரிவுபடுத்தினார்.
வசதி படைத்த ஒருவனால் ஒரு மழைநேரத்தில் அவனது காரினுள்ளே வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட அப்பாவி பிராமண மாணவி பின்னாளில் எப்படி ஒரு அறிவுஜீவியாக மாறி தன் வாழ்வை அழித்தவனுடனேயே சினேகிதமாக பழகத்தொடங்கினாள் ? அதில் அவள் எதிர்நோக்கிய முடிச்சுகள் – சிக்கல்களை சித்திரித்த வித்தியாசமான கதை.
காலங்கள் மாறும் (தொடர்கதை) நாவல் – சிலநேரங்களில் சில மனிதர்கள் என்ற பெயரில் வெளியாகி இந்திய தேசிய சாகித்திய அக்கடமி விருதைப்பெற்றது.
இக்கதைக்கு திரைப்பட வடிவம் கொடுத்து திரைப்படச்சுவடியும் வெளியிட்டார். அந்நாட்களில் வெளியான தமிழ் சினிமாக்களின் கதை – வசனம் மற்றும் பாடல்கள் அடங்கிய சிறிய பிரசுரங்கள் விற்பனைக்கு வரும்.
உதாரணமாக கலைஞரின் பராசக்தி, சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன், திருவாருர் தங்கராசு எழுதிய நடிகவேள் எம். ஆர். ராதாவின் இரத்தக்கண்ணீர், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் முதலான படங்களின் வசனம் – பாடல்களின் தொகுப்பாக குறிப்பிட்ட பிரசுரங்கள் வெளிவந்தன.
ஆனால் ஜெயகாந்தன் தமது சிலநேரங்கள் சில மனிதர்களை அவ்வாறு மலினப்படுத்தாமல் திரைக்கதையின் முழுவடிவத்துடன் திரைப்படச்சுவடியே வெளியிட்டார். திரைப்படங்களுக்கு காட்சிகளை அமைப்பதற்கும் இயக்குவதற்கும் ஏற்றவாறு அந்தச்சுவடி இருந்தமையால் இத்துறையில் ஈடுபட விரும்பியவர்களுக்கும் அது பாட நூலாகவே விளங்கியது எனலாம்.
பா மற்றும் ப வரிசையில் பல படங்களை இயக்கியவர் பிம்சிங். பா – ப என்ற முதல் எழுத்துக்கள் அவருக்கு மிகவும் ராசியான எழுத்துக்களாகியிருக்கலாம்.

பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாவ மன்னிப்பு, பாலாடை, பார் மகளே பார், பாதுகாப்பு – பந்தபாசம், படித்தால் மட்டும் போதுமா? பழநி, பச்சை விளக்கு என அடுத்தடுத்து பல படங்களைத் தந்த பிம்சிங் – தற்காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணியில் திகழும் சினிமா எடிட்டர் லெனினுடைய தந்தை.
ஏ.பிம்சிங்கின் இயக்கத்தில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் நூறு நாட்கள் ஓடியது. லட்சுமி, ஸ்ரீகாந்த், நாகேஷ், சுந்தரிபாய் உட்பட பலர் நடித்த இத்திரைப்படத்திற்காக நடிகை லட்சுமிக்கு தேசியவிருதும் கிடைத்தது.
ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலும் பிம்சிங்கின் இயக்கத்தில் வெளியானது. ஆனால் அதன் தயாரிப்பு முடியும் தறுவாயிலிருந்தபொழுது இயக்குநர் பிம்சிங் காலமானார். அதனால் டைட்டிலில் இயக்குநர் என வருமிடத்தில் பிம்சிங்கின் பெயரும் அவரது ஆசனமும் காண்பிக்கப்பட்டது.
ஜெயகாந்தனின் கருணையினால் அல்ல – கருணை உள்ளம் என்ற பெயரில் தயாராகியது.
ஆனால் வெளியாகவில்லை.
கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து நியாயம் கேட்கிறோம் என்ற படத்தையும் எடுத்தார். ஆனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டதனால் படம் வெளியாகவில்லை.
புதுச்செருப்பு கடிக்கும் என்ற கதையும் திரைப்படமாகியது. இதனை இயக்கிய அன்பழகன் தற்பொழுது சிங்கப்பூரில் வசிக்கிறார். அவர் ஏற்கனவே கே. பாலச்சந்தரிடம் துணை இயக்குநராக பல படங்களுக்கு பணியாற்றியவர். பிம்சிங்கின் நண்பர். புதுச்செருப்பு கடிக்கும் படமும் வெளியாகவில்லை.
பிம்சிங்கின் மகன் லெனின் ஜெயகாந்தனின் எத்தனை கோணம் எத்தனை பார்வை சிறுகதையையும் படமாக்கினார். ஆனால் வெளியாகவில்லை.
ஜெயகாந்தனின் ஆனந்தவிகடனில் வெளியான தொடர்கதை பாரிசுக்குப்போ. இக்கதை நல்லதோர் வீணை என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகமாக ஒளிபரப்பானது. இதிலும் லட்சுமி லலிதா பாத்திரம் ஏற்றார். நிழல்கள் ரவி சாரங்கனாக நடித்திருந்தார்.

மௌனம் ஒரு பாஷை என்ற ஜெயகாந்தனின் மற்றுமொரு சிறுகதையும் தொலைக்காட்சி நாடகமாகியது. எஸ்.எஸ். ரஜேந்திரன் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்திருந்தனர். பேரப்பிள்ளைகளும் கண்டுவிட்ட ஒரு முதிய தாய் தனது கணவனால் மீண்டும் எதிர்பாராத விதமாக கர்ப்பிணியாகிறாள். ஆனால் அதனை அவமானமாகக் கருதி தற்கொலை செய்துகொள்ள அரலிவிதையை அரைத்து சாப்பிடுகிறாள். ஆனால் அவள் காப்பாற்றப்பட்டதும் ஏன் அவள் தற்கொலைக்கு முயன்றாள் என்பது தெரியாமல் குடும்பத்தினர் மனம் குழம்பியிருக்கும் வேளையில் நகரத்தில் ஒரு மேல்நாட்டு வெள்ளை இனப்பெண்ணை மணம் முடித்து தந்தையின் கோபத்திற்கு ஆளாகி புறக்கணிக்கப்பட்ட டொக்டர் மகன் தாயைப்பார்க்க வந்து தனியே சந்தித்து கைநாடி பார்த்து தாய் தாய்மையானது கண்டு உள்ளம் பூரிப்படைந்து தாயை சமாதானப்படுத்தி பிரசவ காலத்தில் தனது பராமரிப்பில் வைத்திருக்க அழைத்துச்செல்கிறான். அந்த வீட்டில் ஒரு பலாமரத்தின் கிளையில் அல்ல வேரில் காய்த்த பலாப் பழத்தை ரசித்து ருசிக்கிறான்.
அந்த முதிய தாயின் தாய்மைப்பேறை வேரில் பழுத்த பலாவுக்கு ஜெயகாந்தன் உவமைப்படுத்தும் மற்றுமொரு அவரது வித்தியாசமான கதைதான் மௌனம் ஒரு பாஷை.
பல ஆண்டுகளுக்கு (1962) முன்பே ஜெயகாந்தன் காலத்தையும் மீறி சிந்தித்தவர் என்பதற்கு இக்கதையும் சிறந்த உதாரணம்.
ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு சென்னை சேரிப்புற ரிf;க்ஷா தொழிலாளர்கள் பற்றிய குறுநாவல். ரிf;;க்ஷா தொழிலாளரின் பேச்சு மொழியிலேயே எழுதப்பட்டது. கண்ணதாசன் இதழில் வெளியானது. எம்.ஜி.ஆர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கதைதான் சினிமாவுக்குப்போன சித்தாளு, இதுவும் தொலைக்காட்சி நாடகமாகியது.
நக்சலைட் தீவிரவாதிகள் குறித்து ஜெயகாந்தன் எழுதிய நாவல் – ஊருக்கு நூறுபேர்.
சுயநலம் கருதாத தியாக மனப்பான்மை கொண்ட நூறு இளைஞர்களைத்தாருங்கள் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன். என்று விவேகானந்தர் சொன்ன கருத்தொன்று கவனிப்புக்குரியது.
அந்தக்கருத்தை பின்னணியாகக்கொண்டு ஜெயகாந்தன் எழுதிய நாவல் ஊருக்கு நூறுபேர். இந்நாவல் வெளிவந்த பின்னர் சில நக்சலைட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கும் ஜெயகாந்தன் ஆளாகியதாகவும் அப்பொழுது முதலமைச்சராக பதவியிலிருந்த எம்.ஜி.ஆர் – ஜெயகாந்தனுக்கு பொலிஸ் பாதுகாப்புத்தர முன்வந்ததாகவும் – ஆனால் ஜெயகாந்தன் தனக்கு எந்தப்பாதுகாப்பும் தேவையில்லை என மறுத்ததாகவும் தகவல் இருக்கிறது.
ஊருக்கு நூறுபேர் திரைப்படமாகியது. பிம்சிங்கின் மகன் லெனின் இந்தப்படத்தையும் எடுத்தார்.
தமிழ் இலக்கிய உலகில் ஆழமாக தடம்பதித்த ஜெயகாந்தன் தமிழ் சினிமாவிலும் தனது ஆற்றலை பதிவு செய்துவிட்டுத்தான் மிகவும் கௌரவமாக ஒதுங்கிக்கொண்டார்.
தமிழ் சினிமாவை தரம் உயர்த்த பல புதிய இளம் இரத்தங்கள் அறிமுகமாகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஜெயகாந்தன் ஆதர்சமாக விளங்குவார்.

ஜெயகாந்தனின் திரையுலக அனுபவங்களை அவரது ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் நூலில் விரிவாகப்பார்க்க முடியும். இதுவரையில் ஐந்து பதிப்புகளை இந்நூல் கண்டுவிட்டது.
நூறாண்டுகள் கண்டுவிட்ட இந்திய சினிமாவின் வரலாற்றில் ஜெயகாந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. பாடல் காட்சிகளுக்காக அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்துறையினருக்கு ஒரு காலகட்டத்தில் இந்திய மண்ணின் – குறிப்பாக தமிழகத்தின் மனிதர்களின் வாழ்வை யதார்த்தம் சிதையாமல் காண்பித்தவர் ஜெயகாந்தன்.
தான் மனிதர்களைத்தான் காண்பித்தேன். தனது கதைகளில் மண்ணி;d; நெடி இருக்காது மனிதர்களின் நெடிதான் இருக்கும் எனவும் சொன்னவர் ஜெயகாந்தன்.
பலகோடி ரூபா செலவில் தமிழக அரசும் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையும் இணைந்து இந்திய சினிமாவின் நூற்றாண்டை சமீபத்தில் கொண்டாடியிருக்கிறது.
ஆனால் – இந்திய மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளிலும் தனது திரைப்படங்களிலும் பிரதிபலித்த கலைஞன் ஜெயகாந்தனையும் – பல தரமான படங்களை எடுத்த பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரய்யா முதலானோரையும் இந்த நூற்றாண்டு விழா கண்டுகொள்ளவில்லை. அதனால் யாருக்கு நட்டம்…?
நிச்சயமாக இவர்களுக்கு அல்ல. அரசுக்கும் சபைக்கும்தான்.
இந்தக்கலைஞர்களின் திரையுலக பங்களிப்பு பலனை எதிர்பாராதது என்ற ஆறுதல் தேர்ந்த சினிமா ரசிகர்களுக்கு கிட்டும்.
ஜெயகாந்தனின் சில படங்களை வலைத்தளத்தில் யூ டியூபிலும் தற்பொழுது பார்க்க முடியும்.
letchumananm@gmail.com
——0—-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: