தொலைக்காட்சியில் கிடைத்த இன்பம் ஸ்ரேடியத்தில் இல்லை.
நடேசன்
கிரிக்கெட்டின் மெக்கா என சொல்லப்படுவது மெல்பன் கிரிக்கெட் மைதானம். பெயருக்குத் தகுந்தபடி ஸ்ரேடியம். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேரை கொள்ளக்கூடியது. அதனை கூர்ந்து பார்த்தால் பொறியியல் மற்றும் கட்டிடத்துறையின் உன்னதமான வடிவமைப்பு தெரியவரும். மெல்பன் கிரிக்கட் கிளப் அங்கத்தினரால் நடத்தப்படுகிறது. ஒருவர் அங்கத்தவராக தற்பொழுது கால்நூற்றண்டுகள் காத்திருக்க வேண்டுமென அறிந்தேன். நகரத்தின் மத்தியில் சகல போக்குவரத்துவசதிகளும் ஒருங்கு சேர இந்த ஸ்ரேடியம் அமைந்திருக்கிறது.
சிறுவயதில் இருந்தே கிரிக்கட் விளையாட்டில் ஈரப்பு இருந்தாலும் மெல்பனில் கால்நூற்றாண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நான் MCC( Melbourne Cricket Club)) ஐ சென்று பார்ப்பதை தவிர்த்தேன். பல முறை நண்பர்களும் எனது மகனும் அழைத்தபோதும் அங்கு செல்லவில்லை. தொலைக்காட்சியில் பார்க்கும்போது பெறும் இன்பத்தை அங்கு சென்று பெறமுடியாது என்பது நிச்சயமாகத்தெரியும் .
இந்தமுறை உலகப்போட்டியின் இறுதியாட்டம் பார்ப்பதற்கு வந்த எனது நண்பன் தனது செலவில் அனுமதிச் சீட்டையும் வாங்கி வந்து மற்றொரு நண்பனின் காரில் அழைத்துச்செல்வதாக சொன்னபோது மறுப்பது கடினமாக இருந்தது. குறைந்தபட்சம் மைதான சூழ்நிலையை தெரிந்துகொள்வோம் என நினைத்தேன்
இம்முறை மைதானத்தில் கிரிக்கட் பார்க்க வந்தவர்களில் தென்னாசியர்கள் தொகை குறைந்து, அரைக்கரைவாசியாக இருக்கும்போல் தெரிந்தது . இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காள தேசத்தின் ஆதரவாளர்கள் உலகமெங்கும் இருந்து வந்திருந்தார்கள். தங்கள் நாட்டு அணிகள் தோற்றபின்பும் இறுதிச் சுற்றை பார்க்க வந்திருக்கவேண்டும். நல்லவேளையாக சீனமுகங்களை கிரிக்கட் மைதானத்தில் காணமுடியவில்லை . அவர்களுக்கும் கிரிக்கட் பற்றிய புரிதல் தோன்றினால் அந்த மைதானம் தாங்காது. இம்முறை 93, 012 பார்வையாளர்கள். என்னையும் சேர்த்தால் அந்த எண்ணிக்கை 93, 013 ஆக உயர்ந்து இருந்தது. இதுவே உலகில் அதிகமாக கிரிக்கட் பார்க்க குழுமி மக்களின் எண்ணிக்கை என ஒலிபெருக்கியில் தெரிவித்தார்கள்.
அங்கு குழுமியவர்களுக்கு எதிரிடையாக இருந்தது எனது மனநிலை. மைதானத்தில் இருந்த போது இறகு கட்டியபடி வீட்டுக்குப் பறந்து தொலைக்காட்சியின் முன்பு அமரவேண்டும் போல இருந்தது. வெண்ணிற கிரிக்கட்பந்து எனது கண்ணுக்குத் தெரியவில்லை. விக்கட்டுகள் விழுந்தது தெரியவில்லை. அடித்தபோது பந்து எங்கு சென்றது எனத்தேடவேண்டியிருந்தது. வெய்யில் எறித்த மாலைநேரத்தில் விளையாடுபவர்களைத்தவிர எதுவும் தெரியவில்லை. இரவில் நிலைமை சிறிது சீரடைந்தாலும் தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் ரீபிளே பார்த்த எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மைதான தொலைக்கட்சியில் மீண்டும் பார்த்தால் அடுத்த பந்தை தவறவிட்டுவிடுவேன். இந்தக் கஷ்டங்களுக்கு அப்பால் விளையாட்டு மிகவும் மெதுவாக நகர்வதாக உணர்ந்து கொட்டாவியும் வரத்தொடங்கியது.
தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்காக மட்டும் விளையாட்டு நடப்பதாக நினைத்து ரசித்திருக்கின்றேன். ஆனால் இப்பொழுது 93 ஆயிரத்திற்கும் மேலானவர்களில் ஒருவராக பார்த்தேன் என்பது கவலையை அளித்தது.
அப்பொழுதான் கிரிக்கட் விளையாட்டு என்பது பார்வையாளருக்கு மிகவும் போராடிக்கும் விளையாட்டு என்பது புரிந்தது. போதக்குறைக்கு மிகவும் சிறிய பந்தால் நெடுநேரம் விளையாடப்படுகிறது. காலனி ஆதிகத்தில் உண்டு கொழுத்த பிரித்தானியர்கள் வெய்யிலில் உடல் தினவு முறிக்கவும் கோடைகாலத்தில் விற்றமின் D ஐ பெறவும் உண்டாக்கிய இந்த விளையாட்டு காலனியாதிக்க நாடுகளில் வாழ்ந்தவர்களிடம் இவ்வளவு மதிப்பை பெற்றதற்கு காரணம் தொலைகாட்சி என்ற உண்மையும் புரிந்தது. தொலைக்காட்சி கிரிக்கட்டை விற்பனைப்படுத்தும் முறை பலரைக் கவருகிறது. அதிலும் அவுஸ்திரேலியர்கள் செய்வது மிகவும் திறமையானது.
இத்தனை இலட்சம் மக்கள் அந்த ஸ்ரேடியத்திற்கு வந்து பார்க்கும் இந்த விளையாட்டை அங்கே எந்தச் சிறிய சிக்கலோ அல்லது அசம்பாவிதமோ இன்றி கிரிக்கட் கிளப் நடத்தி முடிப்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த விடயத்திலும் அவுஸ்திரேலியா முதலிடத்தில்தான்.
மறுமொழியொன்றை இடுங்கள்