– நடேசன்
தமிழ் நாட்டில் -மகாபலிபுரத்திற்கும் தாம்பரத்திற்கும் இடையே பசுமை கொழிக்கும் அயனாவரம் என்ற சிற்றூர். ஒரு பக்கத்தில் சிறிய மலைத்தொடர். மறுபக்கத்தில் நீர் நிரம்பிய ஏரி. இச்சிற்றூரில் சுமார் 150ஏக்கரில் மாடுகள் ஆடுகள் – கோழிகள் பராமரிக்கப்படும் பெரிய பண்ணை.
மாரிகாலத்தில் ஏரியில் நீர் நிரம்பினால் பண்ணை வீ;ட்டு வாயிலை ஏரி மீன்கள் வந்து கவ்வும். இயற்கை அழகு செழித்த அந்த ஊரில் 86ஆம் ஆண்டளவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் பண்ணையின் சொந்தக்காரர் எப்போதாவது வருவார் போவார். இப்பண்ணையின் முகாமையாளர் மிருகவைத்தியர் முதலான பொறுப்புகளை நானே சுமக்க நேர்ந்தது.
ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர்வரையில் அயல் கிராமங்களிலிருந்து இங்கு வந்து காலை எட்டு மணி முதல் ஐந்து மணிவரையில் வேலை செய்வார்கள். பசுமாடுகளிலிருந்து பால்கறக்கும் வேலையைச் செய்பவர் ராமசாமி கோனார். வயது இருபத்தியந்து இருக்கும். எனக்கு பண்ணையில் வலது கரமாக இயங்குவார். எனக்கு அடுத்தபடியாக அங்கு வாழ்ந்த நூற்றுக் கணக்கான மாடுகளைப்பற்றிய நெருக்கமான அறிவுள்ளவர்.
பண்ணையில் பல காளை மாடுகளும் இருந்தன. அந்தப் பண்ணையில் நான் வேலைக்குச் சேர்ந்தபின்பு மூக்கன் எனப்படும் ஜெர்சி இன காளை மாட்டை வாங்கினோம். அங்கு எம் எல்லோருக்கும் பிடித்தமான ‘இலட்சுமி கன்று’ -பசுவாங்கியதும் அதனை கர்ப்பமாக்க முயற்சி எடுத்தோம்.
லெட்சுமியும் – மூக்கனும் ஜெர்சி இனம். இது இங்கிலாந்து இனம். மாடுகளிலும் இன வேறுபாடு உண்டு. தமிழ் நாட்டில் மாடுகளுக்கு பெயர்வைப்பது வழக்கம். அவற்றின் நிறம் குணம் பார்த்து பெயரிடுவது தமிழ்நாட்டு மக்களின் இயல்பு.
லட்சுமிக்கு ஒரு வருடகாலமாக சினைபற்றவில்லை. அதன் மலவாசல் ஊடாக கர்ப்பப்பையை சோதனை செய்தபொழுது – ராமசாமி கோனாரிடம் ”சவர்க்காரம் எடு” – என்றேன்.
”சோப்பு என்று தமிழில் சொல்லலாம்தானே சார்” – என்றான். தமிழ் நாட்டின் பேச்சுமொழி வழக்குப் பற்றியே நிறைய எழுதலாம். ராமசாமி கோனார் ‘சோப்பு’ என்ற சொல்லைத் ‘தமிழ்’ என்று சொன்ன பொழுது சிரித்தேன்.
லட்சுமி பசுவை நான் சோதித்துக் கொண்டிருந்தபோது … ”சார்…… லட்சுமி நம்ம வீட்டுக்காரி மாதிரி சார்… அதற்கு சினை பிடிக்காது”- என்றான் ராமசாமி கோனார்.
”ஏன்” – என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.
”நானும் ஐந்து வருஷமாகப் பார்க்கிறேன் சார். பிள்ளைப்பாக்கியம் இல்லை” என்றான்.
”ராமசாமி ….. அதற்கு உன் மனைவிமட்டுமல்ல… நீயும் காரணமாக இருக்கலாம். எதற்கும் ஒரு டாக்டரைப் போய் பாருங்கள்” – என்று அவனுக்கு ஆலோசனை கூறினேன்.
”எதுவும் நடக்காது சார்…. என்னை வேறு பெண்ணைப்பார்த்துக் கட்டச் சொல்றா என்ர அம்மா” என்றான் ராமசாமி கோனார்.
”உனக்கு வேறு பெண்மீது ஆசை இருந்தால் அதற்காக அம்மாவைச் சாட்டுக்கு இழுக்காதே. எதற்கும் முதலில் ஒரு டாக்டரைப் பாh”; என்றேன்.
பண்ணையில் சினைப்பிடிக்காத லட்சுமி பசுவை சோதித்தபின்பு – மூக்கன் காளையின் விந்தை எடுத்து சோதனைக்கு அனுப்பிப் பார்த்தேன். அதன் விந்து எண்ணிக்கை குறைவு என்று வந்தது. பின்பு விவசாய திணைக்களத்திடமிருந்து ஜெர்சி இனத்துக்குரிய விந்தை எடுத்து செயற்கை முறையில் லட்சுமி பசுவுக்குச் செலுத்தினேன்.
மூன்றாவது மாதம் – ராமசாமி கோனாரிடம் லட்சுமியை சோதிக்க – சவர்க்காரம் எடுத்துவா என்று சொன்னபோது – மீண்டும் ”சோப்பு” எனச் சொல்லிக்கொண்டு வந்தான். தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ச் சொல்லைத் தெரிந்துகொண்ட புளகாங்கிதத்துடன், லட்சுமியை சோதித்து அது கர்ப்பமாகியுள்ள தகவலை ராமசாமி கோனாருக்குச் சொன்னேன்.
”அப்படியா சார்” – என்று என்னை வியப்புடன் பார்த்தான். ”நீயும் ஒரு டாக்டரைப் போய் பார்” என்றேன்.
அவன் வெட்கத்தால் தலைகுனிந்தான்.
மறுமொழியொன்றை இடுங்கள்