காட்டில் வாழும் மற்றைய மிருகங்களிலும் பார்க்க யானைகள் பற்றிய விடயங்கள் எனக்கு ஆவலானவை. அதற்குக் காரணம் அவற்றைப்பற்றி அரைகுறையாக தெரிந்ததால்தான் என நினைக்கிறேன்.
மிருக வைத்தியராக இலங்கையில் யானைகளை பற்றி படித்திருப்பதுடன், அவற்றிற்கு வைத்தியம் பார்க்கும் வேலைகளையும் ஓரளவு செய்திருக்கிறேன். தந்தத்திற்காக கொலை செய்த யானைகளை பிரேத பரிசோதனை செய்திருக்கிறேன். குட்டிகளை பிடிப்பதற்காக, வெட்டிய குழிகளில் விழுந்த ஓரிரு மாதங்களேயான, யானைக் குட்டிகளை இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பில் எடுத்தால், அவற்றை வளர்ப்பதற்கு உதவுவது மிருகவைத்தியர்களான எங்கள் கடமை. அப்படி பல குட்டிகளுக்கு குழந்தை பால்மா ஊட்டி வளர்க்க உதவினேன்.
இப்படியான அனுபவம் இருந்த போதும் ஆபிரிக்க காட்டு யானைகள் அருகே சென்று பார்க்கவேண்டும் என்ற உந்தல் பலகாலமாக இருந்தது. அந்த நெடுங்கால ஆவல் சிம்பாப்வேயிலும் தென்னாபிரிக்காவிலும் விடுமுறைக்கு சென்றபோது எனக்கு நிறைவேறியது. ஆசிய யானைகளோடு ஓப்பிடும்போது தோற்றத்தில் பெரிதாகவும் கம்பீரத்தில் சிறந்தும் இருந்ததுடன் அவற்றை அங்கு காட்டில் பார்க்கும்போது அவைகளை மரியாதையுடன் பார்க்கத் தோன்றியது.
யானைகளைப் பற்றி காலம் காலமாக பல விடயங்கள் மனிதர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்திருக்கிறது. சில சுவையானவை. சில வதந்தி போன்றவை. என்னைப் பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே நான் பதில் தேடிய விடயம் ஒன்று உள்ளது. பிற்காலத்தில் மனதைவிட்டு மறைந்தாலும் இம்முறை ஆபிரிக்கா சென்றதும் அந்த விடயம் எங்கிருந்தோ கடலில் மிதந்து கரையில் ஒதுங்கிய தேங்காயாக மனதில் வந்தது.
ஆபிரிக்காவில் யானைகள் இறப்பதற்காக தங்களுக்கான நமது சவக்காலைக்கு ஒப்பான ஒரு இடத்தை தேடுமென்று அறிந்திருந்தேன். அதைப்பற்றி தென்னாபிரிக்காவில் நிபுணர் ஒருவரிடம் பிரஸ்தாபித்தபோது அதில் பாதி உண்மை பாதி பொய் என்று கூறி விளக்கினார்.
‘வயதான யானைகள் தங்கள் மதி நுட்பத்தால் எதிரிகள் அற்ற மற்றும் உணவு அதிகமான இடங்களில் ஒதுங்குவதாகவும் பிற்காலத்தில் வயதாகி இறக்கும்போது அவற்றை சிங்கங்களும் கழுதைப்புலிகளும் தின்பதால் எலும்புகள் அந்த இடத்தில் சிந்தப்படுகிறது. அதுவே யானைகளின் சவக்காலையாக கருதப்படுகிறது. சில ஹொலிவூட் படங்களால் இந்த விடயம் பிரபலமானது. ஆனால் யானைகள் இறப்பதற்காக இடங்களைத் தேடிப்போவதில்லை’. என்ற விளக்கம் கிடைத்தது.
இதேபோல் இலங்கையில் நான் பார்த்த விடயம் ஒன்றுண்டு. ஒரு ஆண்யானையை மட்டும் அங்குள்ள சரணாலயத்தில் கட்டிப் போட்டிருந்தார்கள். அது காலை உதைத்தபடி தும்பிக்கையை தூக்கி பிளறியவாறு நின்றது. அதை விசாரித்தபோது மதம் கொண்டுவிட்டதாக கூறி அதனது நெற்றியின் இருபக்கத்திலும் கறுப்பாக திரவம் வடிவதைக் காட்டினார்கள். மதம் என்பது அதனது இனப்பெருக்க வேட்கையின்போது ரெஸ்ரெஸ்ரோன் ஹோர்மோனால் ஏற்படும் சீற்றம் என்பது தெரிந்தாலும் அதன் அடையாளமே அந்த கறுப்பு திரவம் என்பதை தெரிந்துகொண்டேன்.
பல வருடங்கள் முன்பாக மிருகக்காட்சிசாலையொன்றில் அடைத்து சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருந்த யானை ஒன்று தொடர்ச்சியாக தலையை ஆட்டியபடி நிற்பதை கண்டபோது அந்த யானை ஏதோ ஒருவகையான மன அழுத்தத்தில் அப்படி செய்கிறது என்பது புரிந்தது. உண்மையில் யானைகளின் இடம் காடுகளே. ஆனால் மனிதர்கள் அவைகளை ரோம சாம்ராச்சிய காலத்து அடிமைகளாக சிறைப்பிடித்து வைத்திருப்பதையும் பின்பு அவை அந்த அடிமைத்தனத்தை ஏற்க பழக்கப்படுத்துவதும் தெரிந்தது. ஒரு முறை தாய்லாந்து சென்றபோது யானை சவாரி செய்யும் சந்தர்ப்பத்தை தவிர்த்தேன். காரணம் யானைகளை பழக்கும் முறையை வீடியோவில் பார்த்தபோது பழக்குபவர்கள் யானைகளுக்கு மிகவும் துன்பத்தை கொடுத்தார்கள். யானைகள் கூட்டமாக காட்டில் திரிவன. நிச்சயமாக காட்டில் இயற்கை சூழலில் பல கிலோமீட்டர் ஒவ்வொரு நாளும் நடந்து சந்தோசமாக இருக்கவேண்டியவை. அவ்வாறு சுதந்திரமாக நடமாடும் விலங்குகளை சிறிய இடத்தில் அடைத்தல் சித்திரவதையே.
சம்பேசி ஆபிரிக்காவின் தென்பகுதியில் சாம்பியாவில் உருவாகி பின்னர் மொசாம்பிக்கின் ஊடாக இந்துசமுத்திரத்தில் வந்து கலக்கும் பெரிய நதி. இந்த நதியில் இருந்துதான் பிரசித்திபெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகிறது. அதைப் பார்க்கச் சென்ற ஆபிரிக்க பயணத்தில், எனக்கு கிடைத்த அரிய அனுபவம் கிட்டியது. மாலை நேரத்தில் ஒரு படகில் சம்பேசி ஆற்றில் போய் கொண்டிருந்தபோது நீலவானத்தில் சிவப்பு கோளமாக மறையும் மாலை சூரியனை படம் எடுப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்பொழுது படகில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பு என்னைக் கவர்ந்தது. படகில் பல நாட்டவர்கள் இருந்ததால் பல மொழிகளில் பேசியபடி ஓரே இடத்தைப் பார்த்தார்கள். அந்த அற்புதமான காட்சி பல காலத்திற்கு மனதை விட்டு விலகாது
எமது படகு செல்லும் இடத்திற்கு சிறிது தூரத்தில் சம்பேசி நதி இரண்டாகி சிறிய தீவை உருவாக்கிவிட்டு கடந்து சென்றது. அந்தத் தீவு மிகவும் பசுமையான சோலை. பலவித மரங்களால் நிறைந்து அரைகிலோ மீட்டருக்கு அந்தத் தீவு தெரிந்தது. நதியின் ஓருபக்கம் அடர்ந்த காடு. மற்றைய பகுதி எமது ஹோட்டல் இருந்த விக்டோரியா நகரம்.
காட்டில் இருந்து தீவுக்கு செல்வதற்கு கொம்பன் யானையொன்று நதியில் மெதுவாக இறங்கியது கண்ணுக்குத் தெரிந்தது. பின்பு பல நிமிடம் தண்ணீருக்குள் மறைந்துவிட்டது. ஆனால் பின்பு இடைக்கிடை தும்பிக்கையின் நுனி மட்டும் காற்றையும் தண்ணீரையும் மத்தாப்புபோல் ஊதிவிட்டு மறைந்துவிடும். இப்படியாக நீந்தி அரைக்கிலோமீட்டர் அகலமான நதியைக் கடந்து அந்தத் தீவில் சென்று பச்சைப்புதர்கள் மத்தியில் மறைந்தது. நாம் சென்ற காலம் கோடைகாலம் அந்தத் தீவில் உள்ள பச்சைத்தளைகளைத் தேடி அவை போயிருக்கவேண்டும். யானைகள் நதியில் நீந்தும் என அறிந்தாலும், யானையின் நீந்தும் ஆற்றலைப் பார்க்க முடிந்தது இதுவே முதல் தடவை. அதைவிட தனது நீளமான தும்பிக்கையை மனிதர்கள் மூங்கில் குழாயை பாவித்ததுபோல் பாவித்தது பரவசமான காட்சி.
யானையின் உறுப்புக்களான நீளமான மூக்கு தும்பிக்கையாகவும் மேல் கடவாய் பல் இரண்டும் தந்தமாகவும் மாறுபட்டதால் யானைகள் தனித்தன்மையானவை. தற்பொழுது அந்த வகுப்பை சேர்ந்த எந்த உயிரினமும் இல்லை பரிணாமத்தில் யானைகளின் நேரடியான உறவான வூலி மமுத் 8000 வருடங்களுக்கு முன்பாக அழிந்து விட்டது.
யானைகள் காட்டில் அதிக அளவு எதிரிகள் இல்லாதவை என்பதால் அறுபத்தைந்து வருடங்கள் வாழ்கின்றன. நீண்ட காலம் வாழ்வதால் அவற்றின் நினைவுத்திறன் குரங்குகள் மற்றும் மனிதக் குரங்குகளுக்கு ஒப்பானது. உணவு கிடைக்கும் இடங்கள் ஆபத்தான இடங்கள் வரட்சிகாலங்கள் மற்றும் பருவகாலங்கள் என்பவற்றை அவை நினைத்து வைத்திருப்பது அவற்றின் உயிர் வாழ்;தலுக்கு அத்தியாவசியமாகிறது. இதனது தொடர்ச்சியே நமது நாடுகளில் யானையை துன்புறுத்தியவர்களை அவை பழிவாங்குதலுமாகும்.
தென்னாபிரிக்க குறுகர் தேசியவனத்தில் முட்கள் கொண்ட அக்காசி மரத்தில் பட்டைகளை உரித்து சாப்பிடுவதைப் பார்த்தேன். முள்ளுகளை தவிர்த்து சிறிய மலர்களை உண்ணும திறன் உள்ளவை என அறிந்திருந்தாலும் நேரில் பட்டைகளை உரிப்பதை பார்த்தபோது வியப்பாக இருந்தது. நாம் கைகளால் உரித்தால் கூட அவ்வளவு அழகாக உரிக்கமுடியாது. வரட்சியான கோடைகாலத்தில் உணவு குறைந்து போகும் அதனால் இந்த பட்டை உரிப்பு நடக்கிறது. தந்தமும் தும்பிக்கையும் இதற்கு உதவுகிறது
யானைகள் நமக்கு தெரிந்தவரை தனது தும்பிக்கையை இரைதேடவும் எதிரிகளிடம் இருந்து தம்மை பாதுகாக்கவும் உபயோகிக்கின்றன. வட்டமான தசைகளாலான இந்தத் தும்பிக்கை மூக்கும் மேலுதடும் சேர்ந்து உருவாகியது தும்பிக்கையின் உள்ளே இரண்டு முக்குத்துவாரங்கள் அமைந்துள்ளன. அவை பத்து – பன்னிரண்டு லீட்டர் தண்ணீரை உள்ளடக்கும். ஆயிரத்துக்கு மேற்பட்ட தசைகளால் வட்டவடிவமாகவும் ஸ்பிங்கு போலவும் அமைந்து மிகவும் பலத்தைக் கொடுப்பதோடு, தொடுகைக்கு ஏற்ற நுண்ணுர்வையும் அளிக்கிறது. தும்பிக்கையின் உள்ளேயும் நுனியிலும் உள்ள மயிர்கள் இவற்றிற்கு உதவும். அதேபோல் எப்பொழுதும் முனை ஈரலிப்பாக இருப்பதால் அதிக தூரத்தில் இருந்து மணத்தை மோப்பம் அறிந்துகொள்ளும். இதைவிட தும்பிக்கை சத்தத்தை எழுப்பும் உறுப்பாக தொழில்படுகிறது. தும்பிக்கையை தூக்கி பிளிறும் சத்தம்; நாம் கேட்கக் கூடியது. ஆனால் யானைகள் நாம் கேட்காத அளவில் குறைந்த சத்தம் எழுப்பி தங்களிடையே தகவல்களைப் பரிமாறும். இதைவிட தும்பிக்கைக்கு சேற்றில் இருந்து தண்ணீரை வடிகட்டுதல் சதுப்பு நிலத்தில் நடக்க முடியுமா என அறிதல் முதலான பல பயன்பாடுகள் உள்ளது.
கோரைப் பற்களே தந்தங்களாகின்றன. கடைவாயில் உள்ள பற்களே பல்லின் மொத்த அமைப்பாக உள்ளது. வாயில் கடவாய் பற்களே உணவு உண்ண உதவுகிறது. யானைகளின் வாழ்க்கையில் மூன்றுமுறை பற்கள் விழுந்து முளைக்கும். கடினமான மரங்களையும் அவை தின்பதால் கடவாய் பற்கள் தேய்ந்து போகிறது. முளைக்கும் பற்கள் கடைவாயின் உட்புறத்தில் இருந்து வெளியே தள்ளப்படும். மூன்றாவது முறையாக பற்கள் தேயும்போது அவற்றால் உணவு உண்ணமுடியாது.
அக்காசி மரத்தில் பட்டைகளை உரித்தல்
ஆபிரிக்க யானைக்கு அழகைக் கொடுப்பது அதன் காதுகளே. காதுகள் யானைகளுக்கு மிகவும் முக்கியமானவை. மென்மையான தோல் இருபக்கமும் இருப்பதால் இங்கு ஏராளமான இரத்த குழாய்கள் அமைந்துள்ளன. 20 வீதமான உடல் பரப்பை கொண்டு இருப்பதாலும் காதின் தோல் மென்மையாக இருப்பதால் உடல் வெப்பத்தை குளிரப் பண்ணும் ஏர்கண்டிசன் கருவியாக தொழில்படுகிறது. சுளகுபோல் வீசுவதும் அற்காகத்தான். அதிக சூரியஒளியின்போது காதுகள் கருப்புக் கண்ணடிகள்போல கண்ணை மறைத்து பாதுகாக்கிறது.
குருகர் தேசியவனத்தூடாக போகும்போது கூட்டம் கூட்டமாக பாதையில் யானைளை எதிர் கொண்டோம். எமது சாரதி வாகனத்தின் இஞ்சினை அணைத்ததும், அவை வாகனத்தின் அருகாமையில் எதுவித சிரத்தையும் அற்றபடி பார்த்துச் சென்றன. அதனால் அவற்றில் ஆண் பெண் யானைகளை துல்லியமாக அவதானிக்க முடிந்தது. பெண்ணுக்கு பின்கால்களின் இடையில் யானையின் உடல் பருமனுக்கு பொருந்தாத இரு சிறிய முலைகள் இருந்தன. ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் உள்ளது. இரண்டு வயதில் வளரும் இந்தத் தந்தம் ஒப்பீட்டு அளவில் பெண்ணுக்கு சிறிது மெலிந்த தோற்றம் கொண்டது.
முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவில் பெரியார் தேசிய வனத்தில் ஒரு ஆண் யானையை எதிர் கொண்டோம். அப்போது அது எம்மை நோக்கி வந்தபோது சாரதி ஜீப் எஞ்ஜின் சத்தத்தை அதிகமாங்கினார். யானை எமக்கு எதிரே நின்றபடி தும்பிக்கையை உயர்த்தி காதை சுளகுபோல் வீசி எம்மை நோக்கி பிளிறியது. சத்தத்துடன் வாகனம் முன்னேறியபோது அது பின்வாங்கியது. அந்த யானை எமது வாகனத்தை தனது எதிரியாக நினைத்தது தெரிந்தது. ஆனால் குருகர் தேசியவனத்தில் வாகனத்தை நிறுத்தியதும் எம்மைக் கடந்து அமைதியாக சென்றது. அந்த விதத்தில் தென் ஆபிரிக்காவில் மிருகங்களின் மனநிலையை அறிந்து தொழில்படுகிறார்கள் என்பது புரிந்தது. வனவிலங்குகள் பற்றிய அதிகமான விஞ்ஞான ஆராய்வுகள் அங்குள்ள பல்கலைக் கழகங்களில் நடைபெறுகிறது.
யானைகள் குட்டிகளோடு கூட்டமாக பாதையை கடந்து செல்லும் காட்சிகள் அழகானவை. முக்கியமாக கோடைகாலத்தில் அவை நீர்நிலைகளைத் தேடி செல்வதை நாங்கள் சென்றிருந்த கோடைகாலத்தில் அவதானித்தோம்.
—-0—
மறுமொழியொன்றை இடுங்கள்