நடேசன்
டாக்டர் கெங்காதரன் மரணமடைந்துவிட்டார் என்றதும், அவரை பற்றி பலவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றியது. அவர் ஒரு புல்லங்குழல் வித்துவான். பலதடவை எனது சிறுவயதிலும் பின்னர் எனது ரீன் ஏஜ் பருவத்திலும் எனக்கு வைத்தியராக சிகிச்சையளித்தவர். அவரது மகளை பல்கலைக்கழகத்தில் நன்கு பரிச்சயமான எனது நண்பர் குமரன் தங்கராஜா மணம்முடித்து மெல்பனில் வாழ்கிறார். டொக்டர் கெங்காதரன் 95 இடப் பெயர்வில் இருந்து இறுதியுத்தம் முடிவுற்றவரையில் வன்னிமக்களிடையே தனது மருத்துவசேவையை மேற்கொண்டவர். தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை மற்றவர்களுக்காக செலவிட்டும் வாழ்க்கையில் பலவற்றை சாதித்துமிருக்கும் இந்த சாதனையாளருக்கு எனது இரங்கல் அவசியமற்றதுதான். அவர் எனக்கு ஒருகால கட்டத்தில் சிகிச்சையளித்தவர் என்பதற்கு அப்பால் அவரைத் தனிப்பட்டரீதியில் அதிகம் அறியாதவன்.
எனினும் அவர் தொடர்பான எனது அனுபவம் இங்கு ஒரு பதிவாகிறது.
இலங்கை இந்திய போன்ற மூன்றாம் உலகநாடுகளில் வைத்தியர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் எண்ணப்படுவார்கள். வைத்தியர்கள் குறைவாகவும், மருத்துவக் காப்புறுதி அற்றும் அரசாங்கத்தின் சுகாதார அமைப்புகள் சீர்பெற்று இயங்காதபோது, தனிப்பட்ட வைத்தியர்களின் கடமையுணர்வில் சாதாரண மக்கள் தங்கியிருக்க வேண்டி உள்ளது.
இந்தக்குறைபாட்டால்; ஏற்பட்ட சிந்தனை ஒரு கலாச்சார கூறாக மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களிடமும் தொடர்கிறது. வெளிநாட்டுக்கு வந்த இலங்கை இந்தியர்கள் இந்த சிந்தனையை தங்கள் பிள்ளைகளில் செலுத்தி வைத்தியதுறையை நோக்கித் தள்ளுகிறார்கள். மருத்துவம் எல்லோருக்கும் பொருத்தமாக அமைவதில்லை.
மேற்கு நாடுகளில் மருத்துவம் மற்றைய தொழில்கள்போல் ஒரு தொழிலே. தேவைக்கு அதிகமாக மருத்துவர்கள் இருப்பதால் அவர்கள் போட்டியிடவேண்டும். ஏதாவது வைத்தியத்தில் தவறுவிடும்போது கோர்ட்டில் நிற்பதும், சிறை செல்வதும் நடக்கிறது. மருத்துவத்துறை மன அழுத்தத்தையும்; கொடுக்கும் தொழில்.
இலங்கையில் எழுவைதீவில் எங்கள் குடும்பம் இருந்தகாலத்தில் என்னோடு மற்றைய நான்கு சகோதரங்களும் பிறந்தது மூளாய் வைத்தியசாலையில்தான். எங்களுக்கு ஊரில் வைத்தியசாலை இருக்கவில்லை. அதனால் உடல்நலம் குன்றியதும், பாய்மரப் படகு கட்டி காரைநகரில் வந்து இறங்கி பின்பு மூளாய் வைத்தியசாலை செல்வது எமது குடும்ப வழக்கம். ஊர்மக்களும் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அப்படி பலமுறை சிகிச்சைக்காக சிறுவயதில் படகில் சென்றது மனதில் பதிவாக இருக்கிறது. அங்கு உள்ள வார்டுகள் அறைகளாக இருக்கும். ஒரு ரூபாயில் இருந்து ஐந்து ரூபா என அக்காலத்தில் வார்டுகள் நோயாளிகளின் பொருளாதாரத்திற்கு ஏற்ப இருந்தன. அப்படியான எல்லா வார்டுகளிலும் தங்கி வைத்தியம் பெற்றிருக்கிறேன்
கேரள வைத்தியர் சாக்கோ என்பவர் நான் பிறந்தவேளையில் பிரசவம் பார்த்தாக அம்மா கூறுவார். பின்பு டொக்டர் சம்பந்தர், டொக்டர் கெங்காதரன் என வைத்தியர்கள் பலரோடும் வைத்தியசாலையோடும் எங்கள் உறவுகள் எங்கள் குடும்பம் யாழ்ப்பாணத்தில் குடியேறும் வரை தொடர்ந்தது.
நாங்கள் வளர்ந்ததும் பின்பு நோய்கள் குறைந்துவிட்டன. அம்மாவைத் தவிர நாங்கள் பலகாலமாக வைத்தியர்களிடம் செல்வது குறைவு.
எங்கள் குடும்பத்தில் மற்றைய யாழ்ப்;பாணத்தவர்கள்போல் அல்லாது தெய்வ பக்தி குறைவு. கோயில் விரதம் கடவுளின் படங்கள் என்பது சிறுவயதில் எனக்கு அந்நியமானது. அம்மாவின் பெற்றோர் கிறீஸ்தவ மிசனரியினரால் படித்தவர்கள் என்பதும் அதற்குக்காரணமாக இருக்கலாம். தந்தையின்வழி சைவர்கள்கள் என்பதால் இரண்டு மதங்களிலிருந்தும் விலகியிருந்திருக்கலாம். யேசுவும் முருகனும் அற்றதால் அந்த இடத்திற்கு எங்கள் இளமைகாலத்து மூளாய் வைத்தியர்கள் மட்டும் அம்மாவின் மனதில் போற்றும் தெய்வங்கள்போல கடைசிவரையும் பேசப்பட்டவர்கள்.
நான் பதினொராவது வகுப்பில் இந்துக்கல்லூரியில் படித்தகாலத்தில் எனது காதல் தொடங்கியது. எனது காதலியை பார்த்துவிட்டு எனது நண்பனுடன் மொக்கன் கடை எனப்படும் பிரசித்தி பெற்ற கடையில் அன்று இரவு சாப்பிட்டேன். நான் மட்டும் பிஸ்கேக் எனப்படும் பெரிய மாட்டிறச்சி துண்டை சாப்பிட்டேன். சாப்பிடும்போதே அந்த இறைச்சி வெண்டைக்காயின் பசைபோல் இழுபட்டதும் எனக்கு அது பழைய இறைச்சி என்பதை உணர்த்தினாலும் அந்த இறைச்சியின் சுவையால் அதனைத் தவிர்க்காமல் சாப்பிட்டேன்.
ஒரு கிழமையில் எனக்கு காய்ச்சல் வாந்தி என்று தொடங்கி கடுமையானதால் அக்காலத்தில் மூளாய் வைத்தியராக இருந்து ஓட்டுமடத்தில புதிதாக நேர்சிங்ஹோம் நடத்திய டொக்டர் கெங்காதரனது வைத்தியசாலையில் சேர்கப்பட்டேன். தைபோயிட்- சல்மனல்லா கிருமியால் உருவாகியதாக கண்டுபிடிக்கப்பட்டது. மொக்கன்கடை சாப்பாடே அந்த கிருமியின் உறைவிடம். நான் இரண்டு கிழமைகள் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டேன்.
சிறுவயதில் செங்கமாரி பொக்குளிப்பான் என்ற மதிப்பிற்குரிய நோய்களும் ஆஸ்மா பேதி என சிறிய நோய்களுமாக பலநோய்களால் பீடிக்கப்பட்ட என்னை இந்த தைபோயிட் மிகவும் வாட்டி எடுத்து யமலேகத்தின் தாழ்வாரத்திற்கு கொண்டு சென்றது.
மீண்டும் குணமாகி நேர்சிங்ஹோமை விட்டு வெளிவரும்போது பத்து கிலோ குறைந்து வீட்டின் உள்ளே வர எனக்கு வீட்டின் கதவு தேவைப்படவில்லை. யன்னல் கம்பிகள் இடையே நுழைந்து வருமளவுக்கு மெலிந்திருந்தேன். தலை மயிரில் கைவைத்தாலோ அல்லது சீப்பினால் வாரினாலோ கத்தை கத்தையாக மயிர்வரும் என்பதால் சீப்பை தவிர்த்தேன்.
அக்காலத்தில் தைபோயிட்டுக்கு எதிரான ஒரே மருந்தான குளோரோபெனிக்கோல் எனக்கு தரப்பட்டது. அந்த மருந்தே அக்காலத்தில் தைபோயிட்டுக்கு இருந்தது. அதையே குடித்து உயிர் பிழைத்தேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நாய் பூனைக்கு காது நரம்பை பாதித்துவிடும் என அவுஸ்திரேலியாவில் குளோரோபெனிக்கோல் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. அந்த குளோரோபெனிக்கோல் கண்டுபிடித்த பெண்விஞ்ஞானியை அவர் இறந்தபோது நன்றியுடன் நினைவு கூர்ந்து எனது வலைப்பூவில் எழுதினேன்.
இந்தக்காலத்தில் காதலிக்க தொடங்கியதால் நர்சிங்ஹோமைவிட்டு வீடு சென்றதும் எனது காதலியை சந்திக்க நினைத்து ஒரு கிலோமீட்டரில் நடக்கும் கிளாசுக்கு வரும்போது சந்திக்கலாம் என சைக்கிளை மிதித்தால் உடலில் மிதிக்க பலமில்லை. ஒரு கிலோமீட்டரில் நான்கு தடவை சைக்கிளை நிறுத்த வேண்டியிருந்தது. மேலும் எனது மெலிந்த தோற்றம் கண்ணாடியில் தமிழ் சினிமா நடிகர் ஓமகுச்சியை விட கேவலமாக தெரிந்தது. எனது மனதில் இந்த காதல் நிலைக்குமா என்ற அவநம்பிக்கையை கொடுத்து, கொஞ்சம் உடம்பு பழையநிலைக்கு வந்தபின் போய் சந்திப்போமா என ஒர் சிந்தனை வந்தாலும் கடந்த மூன்று கிழமையாக எமக்கிடையே எந்த தொடர்புமில்லை என்ற கவலையும் வாட்டியது. அக்காலத்தில் கைத்தொலைபேசியில்லை. வீடுகளில் தெரியாததால் கடிதப்போக்குவரத்தும் சரிவராது. காதலித்தவர்களுக்குத் தெரியும் இந்த ஆரம்பகாலத்தில் மூன்று கிழமைகள் அஞ்ஞாதவாசம் இருத்தல் எவ்வளவு கடினம் என்பதும் மேலும் எங்கு கொண்டுவிடும் என்பதும்.
கடைசியாக நான் அந்த ரியூசன் வகுப்பை அடைந்தபோது எனது காதலி வீடு சென்றுவிட்டார். நான் அவரது வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக சென்று பேச ஒரு மணியாகியது.
எனது உயிர் – காதல் என்பவற்றை காப்பாற்றிய பெருமையை மெல்பனில் டொக்டர் கெங்காதரனை சந்தித்தபோதும் பலர் அருகில் இருந்ததால் சொல்லமுடியவில்லை. தற்பொழுது இதை எழுதி அந்தக் குறையை நிவர்த்திக்கிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்