அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் பட்டதாரியாகினர்.
விரைவில் பட்டமளிப்பு விழா.
சிலர் தொழில் வாய்ப்பு பெற்றனர், சிலர் மேற்கல்வி தொடருகின்றனர்.
பயனடைந்த மாணவர்கள் கல்வி நிதியத்திற்கு பாராட்டு
இலங்கையில் நீடித்த முப்பது ஆண்டுகால போரினாலும் 2004 ஆம் ஆண்டு இறுதியில் கிழக்கிலங்கையில் நிகழ்ந்த சுனாமி கடற்கோள் அநர்த்தத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் பயின்றவாறு அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் புலமைப்பரிசில்களை பெற்றனர்.
அவுஸ்திரேலியாவிலும் ஏனைய சில நாடுகளிலிருந்தும் உதவும் இரக்கமுள்ள அன்பர்களின் தொடர்ச்சியான ஆதரவினால் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வறிய நிலையிலிருந்த மாணவர்கள் பயனடைந்தனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்திலும் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களிலும் இந்நிதியத்தின் உதவி பெற்ற பல மாணவர்கள் தற்பொழுது பட்டதாரிகளாகி தொழில் வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் சில மாணவர்கள் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்று புலம்பெயர்ந்தனர்.
கடந்த சில வருடங்களாக மூன்று கட்டங்களில் இம்மாணவர்கள் பட்டதாரிகளாகியுள்ளனர். இவர்களில் இறுதியாக கல்வி நிதியத்தின் உதவி பெற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 18 பேர் கடந்த 2014 டிசம்பர் மாதத்துடன் தமது பட்டப்படிப்பினை பூர்த்திசெய்துள்ளனர்.
இவர்களுடான கலந்துரையாடலும் இறுதிக்கட்ட நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் அண்மையில் செங்கலடியில் அமைந்துள்ள தேவாலய மண்டபத்தில் இம்மாணவர்களின் தொடர்பாளரும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் தலைவருமான திரு. த. கணேஸ் தலைமையில் நடந்தது.
மாணவர்களின் இணைப்பாளர் செல்வி டிலானி தனராஜ் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்தார். இந்நிகழ்வில் கல்வி நிதியத்தின் ஸ்தாபகரும் நிதியத்தின் நடப்பாண்டு துணை நிதிச்செயலாளருமான திரு. லெ. முருகபூபதி நிதியத்தின் சார்பில் உதவிவரும் அன்பர்களினால் வழங்கப்படும் நிதிக்கொடுப்பனவுகளை மாணவர்களிடம் சேர்ப்பித்தார்.
இரண்டு மாணவர்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் தமது பல்கலைக்கழக கல்வியை பூர்த்திசெய்யவிருப்பதாகவும் ஏனையோர் கடந்த டிசம்பர் மாதம் கல்வியை நிறைவு செய்துள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கான சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்ச்சியான உதவியினால் தாம் கல்வியை இடைநிறுத்தாமல் தொடர்ந்ததாகவும் தமக்கு உதவிய அன்பர்களும் நிதியத்தின் அமைப்பாளர்களும் காலத்துக்கு காலம் கிழக்கிலங்கை வருகை தந்து தங்களது நலன்களை கவனித்தமை பெற்றோர் – பிள்ளைகள் உறவுக்கு ஒப்பானது என்றும் நிகழ்வில் நன்றி தெரிவித்து உரையாற்றிய மாணவர்கள் குறிப்பிட்டனர்.
தற்பொழுது பட்டதாரிகளாகியிருக்கும் தாம் இலங்கையில் எந்தப்பகுதியில் எதிர்காலத்தில் வாழ நேரிட்டாலும் எதிர்பாராத விதமாக புலம்பெயர நேரிட்டாலும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் போன்று தாமும் வறிய நிலையில் இருக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வருவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இலங்கை மாணவர் கல்வி நிதியம் தமக்கு முன்மாதிரியாக இயங்கியமையினால் நிதியத்தின் ஊடாக தமக்கு உதவிய அன்பர்களுக்கு நன்றியும் பராட்டும் தெரிவிக்கும் கடிதங்களையும் இந்நிகழ்வில் அவர்கள் சமர்ப்பித்தனர்.
அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கல்வி நிதியத்தின் தொடர்ச்சியான உதவியுடன் பயின்ற அனைத்து மாணவர்களின் சார்பிலும் நன்றி தெரிவிக்கும் அடையாள நினைவுச்சின்னமும் மாணவர்கள் தரப்பில் திரு. லெ. முருகப+பதியிடம் கையளிக்கப்பட்டது.
பிரியாவிடை நிகழ்வாக இடம்பெற்ற இந்த மாணவர் ஒன்றுகூடலில் சில மாணவிகள் கண்கள் பனிக்க கருத்துரையாற்றினர்.
செல்விகள் ஹர்சிகா, துஷ்யந்தனி, ஜெயராதா, சுஹாசினி, நாகராணி, பிரசாந்தினி, தர்ஷினி, டிலானி, கலைமதி, மைத்ரேயி, செல்வன்கள் ஜெயசங்கர், பிரபாகரன், ஜனகன், குமணன், ஜனார்த்தனன், சரத்குமார், சஸீஸ்குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்