அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிய இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்ற மாணவி செல்வி பாமினி செல்லத்துரை தமது பட்டப்படிப்பை நிறைவு செய்துகொண்டு கொழும்பில் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் பணியாற்றினார். தொடர்ந்தும் மேற் கல்வி கற்று தற்பொழுது பிரதி கல்விப்பணிப்பாளராக நுவரேலியா பிராந்தியத்திற்கு தெரிவாகியுள்ளார். தாம் மேலும் முதுகலை (M . A) பட்டப்படிப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியை நீர்கொழும்பில் அண்மையில் நடந்த பொது நிகழ்வில் மேடையில் தோன்றி சொல்லியிருக்கும் செல்வி பாமினி செல்லத்துரையுடன் ( பச்சை வண்ண சாரி அணிந்திருப்பவர்) நிற்பவர் செல்வி வி. லோஜினி. இவரும் கல்வி நிதியத்தின் உதவி பெற்று பட்டதாரியாகி தற்பொழுது ஆசிரியராக பணியாற்றுகிறார்.
செல்வி பாமினிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து முதலில் உதவிய அன்பர் மருத்துவ கலாநிதி (அமரர்) நாகரத்தினம். அவரது மறைவுக்குப்பின்னர் அவரது பேரன் நவீன் நடேசன் உதவி வழங்கினார். செல்வி வி. லோஜினிக்கு திரு. திருக்குமரன் (மெல்பன்) என்ற அன்பர் உதவினார்.
செல்வி பாமினிக்கு தந்தையார் இல்லை. செல்வி லோஜினிக்கு தாயார் இல்லை என்பது மேலதிக தகவல். இருவரும் மிகவும் வறிய நிலையிலிருந்து முன்னேறியவர்கள். கல்வி மாத்திரமே அவர்களின் மூலதனம். அவர்களின் செயலூக்கமே அவர்களின் ஆத்ம பலம்.
மாணவர் சமுதாயத்திற்கும் அவர்களுக்கு உதவும் அன்பர்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமான செய்தி.
(தகவல் : முருகபூபதி – துணை நிதிச்செயலாளர் இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா)
மறுமொழியொன்றை இடுங்கள்