நடேசன்
2005 இல் தென்னாபிரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு ஹொலிவூட் படம் ரேசிங் வித் ஸ்ரைப்பிஸ் (Racing with stripes). மிருகங்களைப் பேசவைத்து குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் குதிரைகள், சேவல்கள் ,ஆடுகள் முதலானவை தோன்றின. இத்திரைப்படம் ஒரு இளம் வரிக்குதிரையையும் அதன் மீது பாசம் கொண்ட தாயற்ற இளம் பெண்ணையும் முக்கிய பாத்திரங்களாகக் கொண்டது.
சூறாவளி திடீரென்று மையம் கொண்டதால் அவசரம் அவசரமாக தாங்கள் தங்கிய இடத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுச் செல்கிறது ஒரு சர்க்கஸ் குழு. அந்தக் குழு அவசரத்தில் ஒரு சிறிய வரிக்குதிரைக் குட்டியை அங்கு அனாதரவாக விட்டுச் சென்று விடுகிறது.
அந்த வரிக்குதிரைக்குட்டி ஓட்டப்பந்தயக் குதிரைகளை பழக்கும் நோலனால் கண்டெடுக்கப்பட்டு அவரது பண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு ஏற்கனவே பல குதிரைகள் வளர்க்கப்படுகின்றன.
அந்தச் சிறிய வரிக்குதிரைக் குட்டியை நோலனின் மகள் சானிங்கிங் ஸ்ரைப்பி என்ற பெயரிட்டு பாசமுடன் வளர்க்கிறாள். அங்கு ஏற்கனவே வளரும் பந்தய குதிரைகளுக்கு ஸ்ரைப்பியை பிடிப்பதில்லை. பொறாமையுடன் எதிர்க்கின்றன. ஆரம்பத்தில் பந்தயக் குதிரைகளால் ஏளனம் செய்யப்படும்போது அதனை சவாலாக எடுக்கும் ஸ்ரைப்பி ரேஸ் ஓட நினைக்கிறது. ஆனால் தோற்கிறது. இறுதியில் சானிங்கின் வற்புறுத்தலில், நோலனால் பயிற்றுவிக்கப்பட்டு கெந்தக்கி ரேஸ் என்ற மிக பிரசித்தியான குதிரைப் பந்தயதில் வெல்கிறது.
இந்தப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்ததால் தென்னாபிரிக்கப் பயணத்தில் வரிக்குதிரைகளைப் பார்த்தபோது அந்தத் திரைப்படம் ஞாபகம் வந்தது. சிம்பாப்வேயியில் சபாறியில் சென்றபோது மாலை உணவுக்காக நடுக்காட்டில் வாகனத்தை நிறுத்திய இடத்தில் இரண்டு வரிக்குதிரைகள் மிக அருகில் வந்து நின்றன.
‘வரிக்குதிரைகளை யாராவது பிரயோசனப் படுத்தியதாக தகவல் உள்ளதா…? ” என்று எமது வழிகாட்டியை கேட்டேன்.
‘அவற்றில் ஏறி குதிரைபோல் சவாரி செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அவற்றின் முள்ளந்தண்டு எலும்புகள் குதிரைபோல் உறுதியானவையல்ல. மற்றும்படி அதற்கு பயிற்சி கொடுப்பது கடினமில்லை’ என்றான்.
ஆனால் ஐரோப்பாவில் வெள்ளை வரிக்குதிரைகள் பயந்த சுபாவம் கொண்டவை என்பதனால் வரிக்குதிரையை குதிரையுடன் இனப்பெருக்கம் செய்து வண்டியோட்டவும் சவாரி செய்யவும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயற்சி செய்தார்கள்
நான் பார்த்த வரிக்குதிரைகள் எல்லாம் சோடியாகவே காட்டில் நின்றன. நான் அருகில் சென்று பார்க்க முற்சித்தபோது ஆண் – பெண் வித்தியாசம் பெரிதாக வெளியே தெரியவில்லை. அருகில் நெருங்கிப்பார்த்தபோது பெண்உறுப்பு பின்பகுதியில் தெரிந்தது. ஆணின் குறி குதிரைக்கு இருப்பதுபோன்று பெரிதாகத் தெரியவில்லை. ஆண் வரிக்குதிரை பெண்வரிக்குதிரையிலும் சற்றுப் பெரிதாக இருந்தது.
வரிக்குதிரையின் கோடுகள் எப்பொழுதும் வியப்பானவை. இடது வலது பகுதிகள் கண்ணாடி விம்பம்போன்று இருக்குமென நினைத்தேன். ஆனால் அப்படி இருக்கவில்லை. வேட்டையாடும் மிருகங்களின் கண்களில் இருந்து தப்புவதற்காக இந்தக்கோடுகள் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. மேலும் விலங்குகள் குறித்து படித்தபோது கருப்புக்கோட்டில் நுண்ணிய இரத்தகுழாய்கள் செறிந்தும் வெள்ளைக்கோட்டில் குறைந்தும் இருப்பதால் அதன் உடலின் வெப்பம் சீராக்கப்படலாம் என நம்பப்படுகிறது. மேலும் இந்தக் கோடுகளின் தன்மையால் ஒட்டுண்ணி பூச்சிகளின் தாக்கம் குறைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் கோடுகள் எங்களது கைரேகை போல் தனித்தன்மையானவை.
வரிக்குதிரைகள் குதிரைகளைப்போல் நடக்கும். ஓடும் பாயும் ஆனால் குதிரைபோல் வேகமாக ஓடாதபோதிலும் அதிக தூரம் ஓடுவதற்கான பலம் கொண்டவை. மேலும் எதிரியிடம் இருந்து தப்பிக்க குறுக்கு மறுக்காக ஓடக்கூடியது. மேலும் முன்னங்கால்களால் எழுந்து தாக்கும்தன்மை, இவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன.
தெளிவான செவிப்புலனுடனும் கூர்மையான பார்வையும் கொண்டது மட்டுமல்லாமல் இரவில் இருட்டில் கூர்ந்து பார்க்ககூடிய திறனும் இருப்பதனால் இவை வேட்டை மிருகங்களில் தம்மை பாதுகாத்துக்கொள்கின்றன.
குதிரையைபோல் நின்றபடியே உறங்கும் தன்மையும் வரிக்குதிரைக்குண்டு. வரிக்குதிரையை பறவைகள் பபூன்கள் அதனைச்சுற்றி இருக்கும் பிரதேசங்களிலேயே கண்டேன். அதன் காரணம் இவை பொது எதிரி வரும்போது சத்தமிட்டு வரிக்குதிரையை எச்சரிக்கின்றன.
காலம் காலமாக வரிக்குதிரையின் தோலின் கவர்ச்சியால் மனிதர்கள் அவற்றை வேட்டையாடுகிறார்கள்.
குருகர் காட்டில் பல தடவை வரிக்குதிரைகளை பார்த்துவிட்டு ஜோகன்ஸ்பேர்க்கில் மிகவும் பிரசித்திபெற்ற காணிவொரூஸ் என்ற பிரபலமான அசைவ உணவகம் சென்றேன். அங்கு கிட்டிய அனுபவம் புதியது. அங்கு பெரும்பாலும் மான் இனங்கள், வரிக்குதிரை மற்றும் முதலை முதலானவற்றின் வதக்கிய இறைச்சியை பரிமாறினார்கள். மேசையில் இருந்து உணவருந்தும்; போது இரும்புக்கம்பியில் ஆட்டையும் மாட்டையும் குத்தி வாட்டிய இறைச்சியை கொண்டு வந்தபோது என்னால் சுவைக்க முடிந்தது. மான் வகைகள் வந்தபோது மறுத்தேன். கடைசியில் மிகவும பெரிய தொடையொன்றை பரிசாரகர் கொண்டுவந்தபோது, என்ன? என்று கேட்டேன்.
‘வரிக்குதிரை’ என்றார்.
அப்போது ஏற்கனவே உண்ட ஆடும் மாடும் வெளியே வருவதான உணர்வு வரவும், அந்த உணவு விடுதியின் பாத்ரூம் நோக்கிச் சென்றேன்.
ஆட்டையும் மாட்டையும் உணவாக ஏற்க முடியுமானால் – ஏன் வரிக்குதிரையின் மாமிசத்தையும் உண்ணமுடியாது…?
எல்லாம் பழக்கதோசம்தான்.
மறுமொழியொன்றை இடுங்கள்