மலேசியன்ஏர் லைன் 370″.

மலேசியன்ஏர் லைன் 370

முன்னுரை –  தெளிவத்தை ஜோசப்

ஒரு கால் நூற்றாண்டுக்கு சற்றுக் கூடுதலாகவே கால்நடை வைத்தியராக அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் திரு.நோயல் நடேசன் அவர்கள் எழுத்துத்துறையுடன் அதே ஆண்டுகாலம் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுபவர்.

‘திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேசமுடியாமற்போன சிறுவனைப்போன்று நானும் எனது வாழ்விடத்தில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்’ என்று தனது எழுத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகின்றார் திரு.நடேசன். (வண்ணாத்திக்குளம்-முன்னுரை).

2003 ல் 15 வருடங்களுக்கு முன்பு என்றால் 1988 என்று ஆகிறது. கால் நூற்றாண்டுக்கு மேலாக, எழுத்து, இலக்கியம், பத்திரிகைத்துறை என்று அனுபவம் கொண்டுள்ள இவர், தனது அனுபவங்களை எழுத்து வடிவில் நூல்களாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வண்ணாத்திக்குளம் (தமிழ் – ஆங்கிலம்) – நாவல்
உன்னையே மையல்கொண்டு (தமிழ் – ஆங்கிலம்) – நாவல்
அசோகனின் வைத்தியசாலை – நாவல்
வாழும் சுவடுகள் (2 தொகுதிகள்) அனுபவப்பதிவுகள்
இந்த ஐந்து நூல்கள் மூலம் இலக்கிய வாசகர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள நடேசனின் ஆறாவது நூலாக வரும் இந்த நூல் அவருடைய சிறுகதைத் தொகுப்பு. ஆறாவது நூல் என்றாலும் இது அவருடைய முதல் சிறுகதை நூல் என்பது குறிப்பிடக்கூடியது.

நாவலில் தோன்றி சிறுகதைக்கு வந்ததுதான் உரைநடையின் வரலாறு. அந்த வரலாற்றின் அடிப்படையிலேயே நாவலில் ஆரம்பித்து சிறுகதைக்குள் வந்து சேரந்திருக்கின்றார் நடேசன்.

நடேசனின் எழுத்தும், பேச்சும் நட்பும் என்னைக் கவர்ந்துள்ள காரணத்தால் அவருடைய ஒரு சில சிறுகதைகளை அவ்வப்போது பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். ஆனாலும், இந்தத் தொகுதியின் அனைத்துக் கதைகளையும் ஒன்று சேர இந்த முன்னுரைக்காக வாசித்த போது எனக்குள் நிறையவே லயிப்பும் வந்தது, வியப்பும் வந்தது.

பல்துறை அறிவுத்துறையுடன், கலையழகைக் கொண்டுவரும் உரைநடை மொழிலாவகம், வாழ்க்கையைப் போலவே இலக்கியமும் பன்முகத்தன்மைகொண்டது என்பதை ஒவ்வொரு படைப்பினூடாகவும் பகிரும் விதம் லயிப்பு.

ஒரு சிறுகதை எழுதுவது என்பது அப்படி ஒன்றும் லேசான காரியமில்லை. ஒரு சிறுகதை எழுதுபவருக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும். ஜெனிவாவில் இருந்து அல்ப்ஸ் மலையேறும் பயணம், ரெட்லைட் எரியா, காணாமல் போன மலேசியா விமானத்தைத் தேடி கோலாலாம்பூர் என்று எத்தனை..எத்தனை உலகம், எத்தனை..எத்தனை அனுபவம் என்பது வியப்பு.
அனுபவங்களைச் சொல்வது என்பது வேறு. பதிவு செய்வது என்பது வேறு. பொதுவாகவே எழுத்துக் கைவந்த எல்லோராலும் செய்ய முடிவது இது. ஆனால் தனது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கின்ற ஆளுமை. அந்த ஆளுமையுடன் நடேசன் அவர்களின் அனுபவப்பகிர்வு மேலும் வியப்புத்தருவது.

பெரும்பாலான ஈழத்துப் புனைகதைகள் பேரினவாத ஆக்கிரமிப்பு, அரச இயந்திரத்தின் இராணுவ அடக்குமுறைகள், தமிழர் தேசத்தின் விடுதலைக்கான ஆயுதக்குழுக்களின் ஆராதனை போன்ற பொதுமைத்தன்மையான அடையாளத்தில் இருந்து வேறுபட்டு, வாசகனை பிரத்தியேக இன, மத, தேச குடும்ப உறவுகள் மற்றும் நானாவித உணர்வுக்குமிழ்கள் உடனான வாசிப்பனுபவத்துக்கு இட்டுச் செல்கின்ற வித்தியாசமான படைப்புக்கள் இவை.
ஜமீல் பரவசத்துடன் வீட்டுக்குள் வந்தான். ஆயிஷா வேலைக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்றான். ராணவத்தில் சேரச்சொல்லி அவனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆமியில் சேர்ந்து ஏன் சண்டை பிடிக்கோணும் என்கின்றாள் ஆயிஷா. எங்களை இப்படி அகதிகளாய் ஊர் விட்டு ஊர் வந்த அலையவிட்டவர்களைப் பழிக்குப் பழி வாங்க இதுவே நல்ல சந்தர்ப்பம் என்கின்றான் அவன். சரி சண்டைக்கு போவதுதான் என்று நீங்க முடிவெடுத்தா நான் என்ன செய்ய. என்னையும் பிள்ளைகளையும் நாகலிங்கண்ணை வீட்டுல விட்டுட்டு போற இடத்துக்குப் போங்கோ…சண்டை முடிஞ்சாப்பிறகு வாங்கோ…. நாகலிங்கண்ணை செல்வராணி அக்கா போல் எத்தனை பேர் இருக்காங்க… அன்டைக்கு அவுங்க இல்லாம, என்னையோ பிள்ளைகளையோ பார்த்திருப்பீங்களா….

‘பிள்ளைத் தீட்டில்’ வரும் கணவன் மனைவி உரையாடல் இது.
ஜமீல் கொழும்புக்குபோன நேரம் ஆயிஷாவுக்கு பிரசவ வலி கண்டது. நாகலிங்கம் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவர் மனைவி செல்வராணி அவளுடன் இருக்கின்றாள். ஆயிஷாவுக்கு கத்திபோட்டு பிரசவம் நடக்கிறது. அன்றுதான் முஸ்லிம்கள் அனைவரையும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியெற்றுகின்றார்கள். நாகலிங்கத்தாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புண்ணுடன் நோவுடன் இருக்கும் ஆயிஷாவை காதும் காதும் வைத்ததுபோல் தன் வீட்டுக்கு கொண்டுவந்துவிட்டார். சிறிதே நேரத்துக்குள் இயக்கம் வந்தது. ‘நீங்கள் ஒரு முஸ்லிம் குடும்பத்தை வீட்டில் வைத்திருப்பதாக …. ‘ நாகலிங்கம் அந்தப் பெண்ணின் நிலைமையை விபரிக்கின்றார். பிறப்புவாசலில் கத்தி வச்சிருக்கு எழும்பியிருக்க முடியாத நிலை என்று கெஞ்சுகிறார். அது எங்கட பிரச்சினை அல்ல தாயையும் பிள்ளையையும் அனுப்பிவிட்டு வரச்சொல்லித்தான் எங்களது மேலிடத்துக் கட்டளை.

ஆயுதக்குழுக்களின் கொடுமைகளை மட்டும் நடேசனின் படைப்புக்கள் காட்டவில்லை. தங்களது அதிகார இருப்புக்காக மக்களை குரலற்ற மௌனிகளாக்கிவிடும் தன்மை அரச படைகளிடமும் இருப்பதை மிகத்துல்லியமாக காட்டும் கதை ஆற்றோரக்கிராமத்தில் அவர் துரோகி என்பது.
சலவைப்பெண்ணான ராசாத்தியை அடைவதற்காக கிராம எல்லையில் இராணுவ கேம்ப் அமைத்து அத்தனை மக்களையும் துன்புறுத்தி கொடுமைப்படுத்தும் செனவிரத்னவை சித்திரிக்கும் கதை இது.
இந்த நூலின் ஒவ்வொரு கதையும் அதற்கேயுரிய தனித்துவத்துடன் புதுமையான வாசிப்பு சுகானுபவத்தைத் தருகின்றது.

தற்கொலைப் போராளி என்றொரு கதை. பாலத்திறப்புக்கு வரும் முக்கியஸ்தருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போராளி பற்றியது. நம்மில் எத்தனை பேருக்கு ஒரு தற்கொலை போராளியின் ஆயத்தம், செயற்பாடுகள் நிகழ்விடத்துக்குக்கொண்டு செல்லும் சிரமம் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது?
இந்தக்கதையை எழுதாமல் கூட அவர் இருந்திருக்கலாம். அந்த இடத்திற்காக வேறு ஏதாவதொரு கதையை எழுதியிருக்கலாம். அவருடைய பரந்த அனுபவத்துக்கு அது சாத்தியமேயாகும். ஆனாலும் அவர் இதை எழுதியிருக்கின்றார். எந்தவொரு சிக்கலான விடயம் என்றாலும் அதை பதிவுக்குள் கொண்டுவரும்போதே ஒரு உரையாடலுக்கான வழி திறக்கும்.
‘தொலைபேசி’ என்ற கதையில் சாந்தனின் பேஸ்புக் குறிப்புகள் பற்றிக் கோடிடுகின்றார். எனது பாடசாலை பராயத்து நண்பனும் விடுதலைப்புலிகளின் பக்தனுமான காந்தனும் எனும் குறிப்புடன்.

ஒரு எழுத்தாளன் எழுதவதையும் விடவும் கூடுதலான வாசகனாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவன் நான். திரு.நோயல் நடேசன் அவர்கள் அதற்கான சாட்சியாக திகழ்பவர். தனது வாசிப்புக்கும் தேடலுக்குமான ஒரு கருவியாகவே தனது எழுத்தை பயன்படுத்துகின்றார் என நினைக்கின்றேன்.
‘எனது வாசிப்பு அறிவுக்கு வித்திட்டவர் எனது தாய் வழிப்பாட்டனார். எனக்கு ஆறு வயதிருக்கும். கண்பார்வையை இழந்துவிட்ட அவருக்காக வீரகேசரியையும் கல்கியையும் நான் உரத்து வாசிக்க வேண்டியவனாகினேன். சிவகாமியின் சபதம் தொடர்கதையை எனது பாட்டனார் என் வாசிப்பின் மூலம் கேட்டு ரசித்தவர். இந்த வாசிப்பு பணியை நான் ஒரு தொல்லையாகவும் கருதினேன்’ என்று குறிக்கின்றார் நடேசன். (வாழும் சுவடுகள் – தொகுதி 2 என்னுரை)

புனைவு இலக்கியத்துக்கான வெளியீட்டு சாதனமே மொழிதான். ஓவியத்துக்கு வண்ணம் போல இலக்கியத்துக்கு மொழி முக்கியம். படைப்பு இலக்கியத்தின் மொழி கருத்தை மட்டுமல்ல அனுபவத்தையும் வெளிக்கொண்டு வரும் சக்திகொண்டதாக இருக்க வேண்டும் என்கின்றார் தமிழ்த்துறை வரலாறு எழுதிய வேதசகாயகுமார். பண்டித மொழிநடை உரைநடைக்குள் பாரதிக்கு முன்பே வந்துவிட்டதாகக் குறிக்கும் அவர் ‘ சௌந்தர்ய உணர்வற்ற ஒட்டகங்களுக்கு ஏற்ற நடை அத என்று புதமைப்பித்தன் குறிப்பதாகவும் பண்டித தளத்தில் இருந்து விடுபட்டாலும் படைப்பிலக்கியத்துக்கு ஏற்ற நடையாக கல்கியின் மொழிநடை இருக்கவில்லை என்கின்றார்.
ஆறேழு வயது நடேசனுக்கு கல்கியின் சிவகாமி சபதம் மொழிநடைதான் தொல்லைக் கொடுத்திருக்கும் போல தெரிகிறது.

படைப்பிலக்கியத்துக்கான மொழிநடையை மணிக்கொடியூடாக உருவாக்கிக்கொண்டதில் பெரும்பங்கு புதுமைப்பித்தனுடையது.
தன்னுடைய படைப்புகளுக்கான மொழிநடையை உருவாக்கிக்கொள்வதில் நோயல் நடேசனும் அபார வெற்றியீட்டுகின்றார். நான் வாசித்த அவரின் முதல் இரண்டு நாவல்களின் மொழி நடைக்கும் இந்தச்சிறுகதைகளின் மொழிநடைக்கும் நிறையவே வேறுபாடுகள் தெரிகின்றன. அவருடைய படைப்புகளின் வெற்றிக்கான பெரும்பங்கு இந்த மொழிநடைக்கேயுரியது.
‘உன்னை நீ நேசிப்பது போலவே மற்றயவர்களையும் நேசி’ என்றார் இயேசு. மற்றையவர்களை மட்டுமல்லாமல் விலங்கினங்களையும் நேசிக்கும் பரந்த மனம் கொண்டவர் இந்த விலங்கு மருத்துவர். இவ்வுலக வாழ்க்கை மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. மிருகங்களுக்கும் அது உரித்தானது என்று நம்புகிறவர் திரு.நடேசன். ஒரு மிருக வைத்தியராக மட்டும் இயங்காமல் இலங்கையில் இனப்போராட்டத்தின் விளைவாக உருவான அகதிகள் விவகாரம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தீவிரமாகச் செயற்படுகின்றவர். தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த வேளையிலும் பிறகு அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்ற் பின்பும் இப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பவர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து கண்டியில் உயர் கல்வி கற்று புலம்பெயர்ந்து இப்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நடேசன் அவர்கள் மனித நேயத்தைத் தேடும் தனது எழுத்துக்கள் மற்றும் மனித நேயப்பணிகள் மற்றும் மனித உரிமைப்பணிகள் மூலம் மனிதனால் சாத்தியமாகக் கூடிய சகலதினதும் எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றார் என்பது முக்கியமானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: