என் நினைவில் எஸ்.பொ

நடேசன்LateSPonnuthurai
எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு நான் அவருடன் உரையாடினேன்.

‘சுகமில்லை என கேள்விப்டடேன்”

‘ஓம் ஈரலில் பிரச்சினை’
‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’

‘அது சரிதான்’ என்று மெதுவான சிரிப்பு தொலைபேசியில் கேட்டது.

‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’
.
‘அதுதான் அநுரா பார்க்கிறான்’

‘அம்மாவாலும் அநுராவாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனது மனைவியின் தமையன். சமீபத்தில் சுவாசப் புற்றுநோயால் இறந்தவர் .வாழ்க்கையில் மனிதன் தண்ணியோ சிகரட்டோ வாயில் வைக்காதவர். நோய்கள் எவரையும் விட்டு வைப்பதில்லை’

‘உண்மைதான்;’ என்று எனது தொலைபேசி உரையாடலை முடித்தேன். நான் அறிந்தவரையில் அவரது ஈரல் நோய் – லிவர் சிரோசிஸ் எனத் தவறாக நினைத்திருந்தேன்.

பின்பு அநுராவுடன் பேசியபோது அவர் கோமா நிலைக்கு போய்விட்டார் என்பதை அறிந்தேன்.
அவர் நோயுற்றிருந்தபொழுது சந்திப்பதற்கு நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை அந்த ஏமாற்றம் நான் மரணிக்கும் வரையில் தொடரும்.

தமிழ் இலக்கிய தோட்டத்தில் எஸ்.பொ. என்ற பொன்னுத்துரை நீண்டு பருத்து அறுபது வருடங்கள் ஓங்கிவளர்ந்து கிளைவிட்ட வேப்பமரம் போன்றவர். அவரால் வெளிவந்த பிராணவாயுவை சுவாசித்து எழுதத் தொடங்கிய என் போன்றவர்களின் கையைப் பிடித்து இலக்கியத்தின் ஏடு தொடக்கியவர்;. இந்தப்பயணத்தில் பல வருடங்கள் மனதளவில் என்னுடன் துரோணராக வந்தவர். சிலவேளையில் சிலருக்கு வேப்பம் கசப்பாக இருந்தாலும் ஈழத்து இலக்கியதில் முக்கிய பாவனைப்பொருளாக அவர் இருந்தார்.

இப்படிப்பட்ட எஸ்.பொ. வை ஆரம்பகாலத்தில் நான் எனது நண்பனின் தந்தையாகவே சந்தித்தேன். எனது மனைவியும் அநுராவும் அவுஸ்திரேலியவில் மருத்துவ பரீட்சைக்கு படித்தகாலத்தில் அவரைச் சந்தித்தேன் அதற்கு முன்பு எஸ்.பொ.வை சந்தித்ததில்லை.
புத்தக தொகுப்பாளர்

பிற்காலத்தில் அவுஸ்திரேலியாவில் உதயம் நடத்திய காலத்தில் நான் எழுதிய வீட்டு மிருகங்கள் மருத்துவ அனுபவம் பற்றிய கதைகளை ‘தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத பகுதியை நீ எழுதி இருக்கிறாய்” எனச் சொல்லி அவற்றை புத்தகமாக பிரசுரிக்க என்னை தூண்டினார். அதன்பின் என்னால் மதவாச்சிக் குறிப்புகளாக பலகாலத்தின் முன்பு எழுதி கிடப்பில் இருந்த கை எழுத்துப்பிரதியை வண்ணாத்திக்குளமாக்க தூண்டினார். அதன்பின் எனது இரண்டு புத்தகங்களை பதிப்பித்தார்.
சாதாரணமாக நான் எழுதிய வாக்கியத்தை இப்படி மாற்று… அப்படி மாற்று… என்பதன் மூலம் அவற்றை அழகுறச் செய்வார். ஒரு சம்பவம் இன்னமும் நினைவுக்கு வருகிறது.

உனையே மயல் கொண்;. நாவலில் கடைசிப்பகுதியில்

‘ஜுலியா சார்ள்சின் தொடர்பு நிரந்தரமானதா…?

‘என்பதற்கு பதிலாக அவள் சிரித்த போது, கேட்கக்கூடாத கேள்வியை கேட்டதுபோல் இருந்தது’
என நான் எழுதியிருந்தேன்

அதை ‘பறவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை என்று நல்லாயன் கூறிய உவமை நினைவுக்கு வருகிறது எனச் சொல்லி மார்பு குலுங்க சிரித்தாள் எனப் பேனையால் திருத்தி எழுதி அனுப்பினார்.

அவரது வசனத்தை சேர்க்க எனக்கு ஆரம்பத்தில் சுயகௌரவம் தடுத்தாலும், அந்த இலக்கிய உவமையின் அழகு மட்டுமல்ல ஆழமும் அந்த வரிகளை இணைத்துக்கொள்ளச்செய்தது.
உனையே மயல் கொண்டு நாவலின் முகப்பு அட்டையில் பெண்ணின் அரைநிர்வாணப்படத்தருகே ஆலமிலையும் புத்தரின் படத்தையும் பதிந்து அதனை எனது அங்கீகாரத்திற்கு அனுப்பியபோது அதை நீக்கச் சொன்னேன்.

அப்பொழுது எந்த தடையும் சொல்லாமல் அதனை நீக்கினார்.

எனது நான்கு புத்தகங்களில் அவர் திருத்தலும் நீக்கலும் சேர்த்தலும் செய்ததைப் பார்த்தபோது மிகச்சிறந்த மொழிவடிவத்தை தெரிந்து கொண்டேன். எஸ்பொ. திறமையான மொழிச்சிற்பி (Wordsmith).

கடைசியாக எனது அசோகனின் வைத்தியசாலை நாவலை அவரிடம் கொடுக்காது வேறு ஒருவரிடம் பதிப்பித்தபோது என் மனதில் மிகவும்; நெருடலாக இருந்தது.

ஜனநாயகவாதி

‘எனது அரசியல் வித்தியாசமானது. ஆனால் உனது அரசியல்படி நீ நடக்கிறாய்’ என்பார்.

தமிழர்களில் அரசியலில் வித்தியாசமானவர்கள் ஒன்றாக பழகுவது கிடையாது. அப்படிச் சிலர் இருந்தாலும் உள்ளன்போடு நட்பாக இருப்பது இல்லை. மனதில் பல விடயங்களை வைத்துக்கொண்டு பழகும் ஜனநாயகப் பண்பாடு நமது சமூகத்தில் இன்னமும் வேர்விடவில்லை. வித்தியாசமான சிந்தனையுள்ளவனை குறைந்தபட்சம் மனதிற்குள் பலதடவை கொலை செய்வார்கள். பெண்ணானால் கற்பனையில் பாலியல் பலவந்தம் செய்யும் எமது சமூகத்தில் எஸ்.பொ.வின் நாகரீகம் என்னைப் பொறுத்தவரை மிகப்பிடித்தது.

நாங்கள் இருவரும் பேசும்போது ஈழ அரசியல் பேசுவது கிடையாது. எந்தக்காலத்திலும் எனது புத்தகத்தில் எதுவித வசனங்களையும் எஸ்.பொ. தமது அரசியலுக்காக நீக்கியது கிடையாது. எனது முதலாவது வாழும்சுவடுகளில் விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதலை எதிர்த்து உருவகக் கதை எழுதியிருந்தேன். அதேபோல் வண்ணாத்திக்குளம்; – இலங்கை இனரீதியான அரசியல் பிளவு இரு இனங்களின் அரசியல் தலைமைகளால் ஏற்படுத்தப்பட்டது மட்டுமே , தமிழ் – சிங்கள இனத்தில் பிரிவினை இல்லை என எழுதிய நாவல். என்னுடன்; பலவருடம் படித்த நண்பன் டொக்டர் இரகுபதி ‘ நீ… சிங்களவன்களுக்கு வால்பிடிக்க எழுதி இருக்கிறாய் ” எனச் சொல்லிவிட்டு உனையே மயல்கொண்டு நாவலை சிலாகித்தான்.

அரசியல் வித்தியாசத்திற்காக கொலை செய்யும் சமுகம் – நடேசனைப்புறக்கணி என்று காலம் காலமாக வானொலியில் சிலர் கூப்பாடு போட்டகாலத்தில் சிட்னிக்கு என்னை அழைத்து பலரது எதிர்ப்புக்கள் மத்தியில் எனது புத்தகத்தை வெளியிட்டவர் எஸ். பொ.

இலக்கியவாதி

ஈழத்தில் எழுத நினைப்பவர்கள் கடந்த ஐம்பது அறுபது வருடத்தில் அவரைக் கடந்துதான் செல்லமுடியும். அவரது இடம் தனித்துவமானது, மிகவும் உயரத்தில் உள்ளது.
தமிழ் இலக்கியத்தை பொழுதுபோக்காக எழுதுபவர்கள் வயிற்றுப்பசிக்காக எழுதுபவர்கள் ஆயுதமாக எழுதுபவர்கள் முதலான பலவகைப்பட்டவர்கள் மத்தியில் எஸ்.பொ ஒரு தவமாக எழுதியவர். கணனியின் யுகத்திலும் தொடர்ச்சியாக பேனையால் அசுரவேகத்தில் எழுதுபவராக இருந்தார்.
அவருடன் உரையாடுவது இனிமையான அனுபவம். பல எழுத்தாளர்கள் பேசும்போது மற்றவர்களுக்கு பேசச் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. ஆனால் எஸ்.பொ.வுடன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும் உரையாடமுடியும். அவரது சிறுகதைகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கின்றேன் . யாழ்ப்பாணத்தின் கலாச்சார அகப்புறத்தன்மைகளை எடுத்துகாட்டுவதில் அவரை மிஞ்சியவர் இல்லை. அந்த வகையில் நனவிடைதோய்தல் முக்கியமான நூலாகும். அவரை யாழ்பாணத்து பாணன் என ஜெயமோகன் அழைத்தது மிகப்பொருத்தமாகும்.

மொழிபெயர்ப்பாளர்

தமிழில் மொழிபெயர்ப்பது என்பது மொழியை தமிழ்ப்படுத்துவது என்பது மட்டுமே புரிதலாக மொழிபெயர்ப்பு பத்தகங்கள் உள்ளன. மூலமொழியின் கலாச்சாரம் எமது மொழியில் மாற்றப்படவில்லையானால் வாசிப்பது மிகக் கஷ்டமாகும். அவுஸ்திரேலியாவில் இருந்த ஒருவனுக்கு மட்டுமே ரஷ்ஷிய அதிபர் புட்டினை ‘ ‘ Shirt Front பண்ணுவேன்” என அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அபோட் கூறியது நெஞ்சில் கையை வைப்பேன்; என்ற அர்த்தத்தை தரும். ஆனால் அந்த அர்த்தம் புட்டினுக்கே புரிந்திராது.

சில வருடங்களின் முன்னர் போட்ரெயிட் டோரியன் கிறே என்ற ஓஸ்கார் வைல்டின் தமிழ் மொழிபெயர்ப்பான அழியாத ஓவியம் நூலை சென்னை விமானநிலயத்தில் வாங்கிவிட்டு அதன் சில பக்கங்கள்கூட படிக்க முடியாமல் அங்குள்ள குப்பைக்கூடையில் போட்டுவிட்டேன். ஆனால் ஹால என்ற எஸ்.பொ.வின் ஆபிரிக்க மொழிபெயர்ப்பு நாவல் மிகவும் தரமான தமிழ் நாவலாக இருந்தது. ஆபிரிக்காவில் அவர் இருந்ததால் அவரால் அந்தக்கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளமுடிந்தது.

அவரது இலங்கை காலத்து இலக்கிய விடயங்கள் எனக்கு தெரியாத போதும் – வழக்கமான சிந்தனையோட்டத்திற்கு எதிரான தொடர்ச்சியான அவரது போராட்டம் அவரை மதிக்கச் செய்கிறது. மார்க்சிய இரும்பு உள்ளாடையை அணிந்தபடி மற்றவர்களுக்கு பிரம்பெடுத்து வழிகாட்டிய பேராசிரியர்களை எதிர்ப்பது இலேசான விடயமல்ல. பலவற்றை இழந்து தனித்து நிற்பதும் இலகுவானதல்ல. எஸ்.பொ எழுத்துலகில் விருதுகள் பெறாததற்கு இதுவே காரணம். விருதுகளுக்கும் பொன்னாடைகளுக்கும் தலைவணங்காமல் முன்னுதாரணமாக இருந்த ஈழத்து எழுத்தாளர் அவர் என்பது பெருமைக்குரிய விடயம்.

தமிழ் இலக்கிய உலகில் ஒருவன் எதுவித விருதுகளும் கிடைக்காமல் தொடர்ந்து எழுதுகிறானோ அவன் கூர்ந்து பார்க்கப்படவேண்டியவன் என்பது எனது கருத்து.

ரீன் ஏஜ் வயது பெண் பிள்ளைகள் முரண்டுபிடித்து கதவை அடித்து மூடுவதும், நிலத்தில் விழுந்து புரளுவதும், சாப்பிடாமல் விடுவதும்,, மற்றும் தன்னை அலங்கரிக்காது கல்லூரி செல்வது போன்ற சில சின்ன விடயங்களையும் இலக்கிய மேதையான எஸ்.பொ. வில் பார்த்தேன். இந்த இயல்பை ஆங்கிலத்தில் Tantrum எனலாம். யாராவது ஏதாவது எழுதியோ சொல்லியோ விட்டால் வெகுண்டெழுந்துவிடுவார். நான்கூட ஒரு முறை சொன்னேன் காலில் ஒரு கல்லு குத்தியது என்றால் – அதனைத் தூக்கி எறிந்துவிட்டுப் போவது இல்லாமல் அந்த கல்லைக் குத்தி தூளாக்குவது என்ன பிரயோசனம்…? எனது கருத்தை ஏற்காதபோது சிரிப்பால் புறந்தள்ளுவார்.

இவ்வளவு திறமைகள், தெளிவு, உலக சிந்தனை கொண்ட எஸ்.பொ. தனது ஆற்றலுக்கு ஏற்ற அளவு தமிழ் இலக்கியத்தில் படைத்தாரா…? என்னும் கேள்வியை கேட்டால் நான் இல்லையென்றுதான் சொல்வேன். அவரது ஆங்கில அறிவும் மொழிவளமும் முற்றாக பாவிக்கப்படவில்லை. இதனால் அவருக்கு நட்டமில்லை. எம் தமிழுக்கே நட்டம்.

கடந்த சில காலங்களில் அவர் சேர்ந்த தமிழ்த் தேசியம் மலட்டுத்தன்மையானது. அதைவிட அவரோடு சேர்ந்து கோஷம் போடுபவர்கள் அவரது ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கு இடராக இருந்தார்கள் என்பது எனது கணிப்பு. ஆனால் அது அவருக்கும் தெரியும். அவரது கடைசிப் படைப்பான மாயினி நாவல் – அரசியற் கோட்பாட்டிற்காக இலக்கியம் படைக்க எவ்வளவு மேதையான ஒருவன் முன்வந்தாலும் அது இறுதியில் ஒரு கட்சி அறிக்கையைப்போலத்தான் முடியும் என்பதற்கு உதாரணம்.

எஸ்.பொ. என்ற மனிதனை இலக்கியவாதியாக பார்ப்பற்கு அப்பால் சொந்தவாழ்வில் சோகங்களை சுமந்தவர். அவரது நிலையில் எத்தனையோ பேர் மூலையில் சுருண்டுவிட்டிருப்பார்கள். தமிழ் இலக்கியம் அவரது ஒரு காலாகவும் அம்மா அநுரா இருவரும் மறுகாலாகவும் அவரை தொடர்ச்சியாக இயக்கினார்கள்.

கடைசியாக எஸ்.பொ. என்ற ஈழத்து இலக்கியவாதியின் இடத்தை பல தசாப்தங்களுக்கு ஈடு செய்யமுடியாது. ஆனால் – அவர் விட்டுச் சென்ற அவரது இலக்கியம் என்றும் எங்களுடன் இருக்கும். அதைக் கொண்டாடுவோம்.

“என் நினைவில் எஸ்.பொ” மீது ஒரு மறுமொழி

  1. //தமிழ் இலக்கிய உலகில் ஒருவன் எதுவித விருதுகளும் கிடைக்காமல் தொடர்ந்து எழுதுகிறானோ அவன் கூர்ந்து பார்க்கப்படவேண்டியவன் என்பது எனது கருத்து.//உண்மை .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: