இந்தியா ருடேயில் அசோகனின் வைத்தியசாலைஅறிமுகம்(Slightly edited version)
கலிங்கத்தை வெற்றி கொண்ட அசோகச்சக்கரவர்த்தியே உலகில் முதலாவது மிருக வைத்தியத்தைத் தொடக்கி வைத்தவர் என்கிறது வரலாறு. பெரும்போரிலே ஈடுபட்ட அசோகச்சக்கரவர்த்திக்கு அந்த நாட்களில் பெரிய சவாலாக இருந்தது, போரில் ஈடுபடுத்திய யானை, குதிரைகளுக்கு ஏற்படும் காயங்கள். இந்தக் காயங்களைக் குணப்படுத்தினால்தான் யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் பலமாக வைத்திருக்க முடியும். ஆகவே மிருக வைத்தியத்தை ஆரம்பிப்பதைப்பற்றி அசோகச்சக்கரவர்த்தி சிந்தித்தார். இதுவே பின்னாளில் மிருகவைத்தியத்துறையாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவியது என்கிறார்கள். இதை இன்னொரு விதமாகச் சொல்வோரும் உண்டு. போரின் வெற்றியை மனதளவிலும்கூடக் கொண்டாட முடியாமல் மக்களின் உயிரிழப்புக் குறித்து ஆழ்ந்த கவலையடைந்த அசோகச்சக்கரவர்த்தி புத்தமதத்தைத் தழுவிக்கொண்டார்.
அதன்பிறகு அன்பு மார்க்கத்தை போதிக்க முன்வந்ததுடன் எந்த ஒரு விலங்கும் பிராணியும் நோயுற்றால் அதற்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அவர் பின்பற்றிய அன்பு மார்க்கத்திலிருந்து தோன்றியது. இந்த நோக்கத்தின்படியே மிருகங்களுக்கான வைத்தியசாலையை உருவாக்கினார் அசோகன். ஆகவே, அசோகன்தான் உலகிலேயே முதலாவது மிருகங்களுக்கான வைத்தியசாலையை உருவாக்கிய முன்னோடி என்று. எப்படியோ மிருகவைத்தியத்துறையை உண்டாக்கியவர் அசோகரே.
விலங்குகளும் பிராணிகளும் ஏனைய உயிரினங்களும் மனிதர்களைப்போன்று வாய்பேச முடியாத ஜீவன்கள். ஆனால் அவற்றை நாம் நேசிக்கிறோம். என்றாலும் ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நம்மூரில் வளர்ப்பதைப்போல ஏதோ எப்படியோ என்று யாரும் வளர்ப்பதில்லை. அவற்றின்மீது பொழிகின்ற அன்பும் எடுக்கின்ற கரிசனையும் நாம் நம் சகமனிதர்களுக்குக் கொடுப்பதையும் விடப் பல படிகள் மேலானது. அங்கே மிருகங்களுக்கிருக்கும் உரிமைகளும் வசதிகளும் கூட அப்படித்தான். அசோகச்சக்கரவர்த்தி காட்டிய அன்பையும் விட, கருணையையும் விட ரொம்ப அதிகம். ஆஸ்திரேலியாவிலிருக்கும் டாக்டர் நடேசன் எழுதியிருக்கும் மூன்றாவது நாவலான ‘அசோகனின் வைத்தியசாலை’யில் இதையெல்லாம் நாம் அனுபவமாகப் பார்க்கலாம். மனிதர்களுக்கும் பிராணிகளுக்குமிடையிலான உறவையும் வாழ்வையும் நடேசன், ரொம்ப நுணுக்கமாகச்சித்திரிக்கிறார். இதில் வரும் கொலிங்வூட் என்ற பூனை வெறுமனே ஒரு பிராணியல்ல. அது பேசும் பூனையாக – இந்த நாவலின் மையப்பாத்திரங்களில் ஒன்றாக இந்த நாவலை நகர்த்திச் செல்லும் மையப்புள்ளியாக உள்ளது. கொலிங்வூட், அந்தரங்கமாக எல்லாவற்றையும் அறிந்துணரும் வல்லமையோடு படைக்கப்பட்டுள்ளதால் நாவலின் இன்னொரு மையப்பாத்திரமான சிவா சுந்தரம்பிள்ளையை வழிநடத்திச் செல்லும் உணர்திறனை வழங்குகிறது.
செல்லப்பிராணிகளான நாய்களுக்கும் பூனைகளுக்கும் மருத்துவம் செய்யும் வைத்தியசாலையில் சிவா சுந்தரம்பிள்ளை என்ற ஈழத்தமிழர் ஒருவரும் டாக்டராக வேலை பார்க்கிறார். ஆஸ்திரேலிய வாழ்க்கை முற்றிலும் வேறானது. அதன் சவால்களும் வேறானவை. இலங்கையிலும் இந்தியாவிலும் மிருக வைத்தியத்துறையில் அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலிய மிருகவைத்தியத்துறையில் அது முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. ஆஸ்ரேலியாவின் சட்டங்களும் நடைமுறைகளும் மனித உறவுகளும் கூட வேறுபட்டிருக்கின்றன. சிவா சுந்தரம்பிள்ளையின் எதிர்பார்ப்புகளையெல்லாம் சுக்குநூறாகி விடும் அளவுக்கு புதிய இடம் மட்டுமல்ல, நிகழ்ச்சிகள் மாறியுள்ளன. மனிதர்கள் வேறுபட்டிருக்கிறார்கள். பிறந்த நாட்டை விட முன்னேறிய – பல்சமூகங்கள் வாழ்கின்ற – நாடொன்றில் வாழக்கூடிய ஏதுநிலைகளும் சாத்தியங்களும் அதிகம். வாழ்க்கை சுலபமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலை நெருக்கடிகளின் முன்னே நிறுத்தப்படுகிறது.
இந்த வேறுபாடுகளோடு எப்படி தன்னைப் பொருத்திக்கொண்டு நிலைப்பட முடியும்? அதன் சவால்கள் என்ன? என்று சிவா சுந்தரம்பிள்ளை தவிப்பதையும் மனித இயல்பின்படி சூழலின் விதி சிவா சுந்தரம்பிள்ளையைத் தகவமைப்பதையும் நடேசன் நாவலில் காட்சிப்படுத்துகிறார்? இன்றைய புதிய உலக ஒழுங்கில் கட்டவிழும் பண்பாடும் வாழ்க்கையும் இப்படித்தான் புதிய புதிய எல்லைகளை நோக்கி விரியத்துடிக்கின்றன. அப்படிப் புதிய எல்லைகளை நோக்கி விரியத்துடிக்கும்தோறும் பிரசவ வலியைப்போல இரத்தப்பெருக்கும் வலியும் ஏற்பட்டே தீரும் என்று நாவலின் காட்சிகளில் காண்கிறோம். இப்படி இந்த நாவல் புதிய திணையொன்றில், கட்டவிழும் வாழ்க்கையையும் பண்பாட்டையும் பேசுகிறது.
தமிழ்வாழ்க்கை பன்னெடுங்காலமாக அமைந்த புலமும் அறிந்த புலமும் நமக்கு நன்கு பரிச்சியமானது. அது தமிழர்களாகிய நாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து புழங்கி வரும் புலம். சங்க இலக்கியத்திலிருந்து இன்றுவரை பேசியும் படித்தும் பழகியும் வரும் புலம். நமது மூளையத்தின் பதியன்கள்வரையில் இந்தப் புலம் பரிச்சியமுடையது. ஆனால், ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவலில் வரும் புலம் நாமறிந்த புலமல்ல. புதிய உலக ஒழுங்கில் புதிதாக தமிழுக்கு அறிமுகமாகி வரும் புலம் இது. ஆகவேதான் இது புதியதொரு திணையாகவும் உள்ளது.
மிருகங்களைப்பற்றி அறிந்திருக்கிறோம். மிருக வைத்தியத்தைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால்> மிருக வைத்தியசாலையில் ஒரு நாவல் களமாகியிருப்பதைப்பற்றி தமிழில் அறிய முடியவில்லை.
இந்தக் குறையைத் தீர்க்கக்கூடியமாதிரி டாக்டர் நடேசன் இந்தப் புதிய நாவலை எழுதித் தமிழுக்குத்தந்திருக்கிறார். நிச்சயமாக இது புதிய நாவல்தான்.
தமிழ் வாழ்வு அமைந்திராத பிறத்தியான வாழ்களமொன்றில், புதிய நிலப்பகுதியொன்றில் பிராணிகளின் வாழ்வையும் மனித வாழ்க்கையையும் இணைக்கும் நாவலொன்றை இதற்கு முன் தமிழில் அறியவில்லை நாம். இந்த இரண்டு வகையிலும் இது புதிய நாவலாகவே உள்ளது.
‘மிருகங்களின் நோயுலகத்துக்குச் சமானமாக ஓடுவது இந்த வைத்தியசாலை ஊழியர்களின் உள்ளரசியல். காமமும் பொறாமையும் தொழில்போட்டியும் புரிதலின்மைகளும் நட்பும் கலந்து உருவாகும் ஒரு விளையாட்டாக அது நாவலின் உடலெங்கும் விரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஓர் ஆளுமையை வாழ்க்கைப்புலத்தை வரலாற்றுப் பின்னணியை முன்வைக்கிறது நாவல்.
அராபியர்கள், ஐரோப்பியர்கள், சீனர்கள் என பல்வேறு இனங்களில் இருந்து அந்தப் புதிய நிலத்தில் வாழ வந்த சமூகங்களின் பிரதிநிதிகள் அவர்கள். எளிய உறவு விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்த சித்திரிப்பு நாவல் விரிய விரிய ஆஸ்திரேலியாவின் சமூக அரசியல் வாழ்க்கையின் சித்திரமாகத் தென்படுகிறது’ என இந்த நாவலுக்கு ஜெயமோகன் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுவது முற்றிலும் உண்மை என்பதை நாவலை வாசிக்கும்போதே உணர்கிறோம்.
உலகில் எங்கே நாம் சென்றாலும் அங்கெல்லாம் ஏதோ வகையில் சிக்கல்களும் முரண்களும் போட்டிகளும் பிரச்சினைகளும் ஒதுக்கல்களும் நட்பும் நேசமும் துரோகமும் ஒடுக்குதலும் போராட்டமும் இருந்தே தீரும் என்ற உண்மை இந்த நாவலின் வலுவான சாட்சியம். (ஈழத்திலிருந்து) திக்கெட்டும் சென்று கலைச்செல்வம் கொண்டு வரும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் நடேசன் முதல்வரிசையில் உள்ளார். அ. முத்துலிங்கம் ஒரு வகை என்றால் நடேசன் இன்னொரு வகை. தமிழுக்கும் நமக்கும் இது புதுவகை.
அசோகனின் வைத்தியசாலை (நாவல்) – நடேசன் (ஆஸ்திரேலியா) மகிழ் வெளியீடு. விலை 300.00 (இந்திய ரூபாய்)
விற்பனை உரிமை: கருப்புப்பிரதிகள்> B 55> பப்ப மஸ்தான் தர்கா> இலாயிட் சாலை> திருவல்லிக்கேணி> சென்னை 600 005. மலைகள்.காம்> சேலம்.
இலங்கையில் – மகிழ்> 754 கனகராஜா வீதி> திருநகர் வடக்கு. கிளிநொச்சி> இலங்கை.
மறுமொழியொன்றை இடுங்கள்