நாற்பது வருடங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் ஒரு நாள் மதிய உணவின்பின் எமக்கு செய்முறைப் பயிற்சியிருந்தது. பயிற்சியளிக்கும் பேராசிரியர் வரத்தாமதம் ஆகியதால் எம்மிடையே பேசிக் கொண்டிருந்தோம் சில மாணவிகள் மட்டும் தங்களிடையே இரகசியமான குரலில் எதையோ பரிமாறினார்கள்
‘என்ன விடயம்?’ என கேட்டபோது சொல்ல மறுத்ததுடன் மீண்டும சிரித்து ஆவலைத் தூண்டினார்கள்.
அவர்களை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி விடயத்தை அறிந்தபோது எங்களுக்கும் வெட்கம் வந்தது
எனது சகமாணவிகள் அன்று சொல்லிய விடயம் மனத்திரையில் மீண்டும் தென்னாபிரிக்க குருகர் வனத்தினுடாக வாகனத்தில் சென்றபோது மீண்டும் நினைவில் நிழலாடியது.
மாணவிகள் வதியும் விஜயவர்த்தனா ஹோல் இரு மாடிகள்கொண்ட கட்டிடம். அந்தக் கட்டிடத்தின் பின்புறத்தில் கண்டி செல்லும் ரயில் பாதையும் பல்கலைக்கழகத்திற்கான சிறிய சரசவிஉயன என்ற ரயில் நிலயமும் இருக்கிறது. ரயில் பாதைக்கு மேற்புறமாக கண்டி-கலகா வீதி செல்கிறது. வீதியின் கீழ் உள்ள பகுதி ஒதுக்குப்புறமானது. அந்த இடத்தில் நின்றால் விஜயவர்த்தனா ஹோல் மாடி கட்டிடத்து மாணவிகளுக்கு மட்டுமே தெரியும்.
இந்த இடத்தில் தினமும் மதியம் இரண்டு மணிக்குப் பின்னர் தவறாமல் ஒரு மத்தியவயது ஆண் தனது உடையை உயர்த்தி ஆண்குறியை காட்டுவதாக மாணவிகள் கூறினார்கள். நாம் அதைக் கேட்டு சிரித்துவிட்டு யாராவது பயித்தியமாக இருக்கும் என அவர்களது பேச்சைப் புறந்தள்ளினோம். அன்று இப்படி ஆண்களால் அந்தவிடயம் ஓதுக்கப்பட்டது அந்த மாணவிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் எங்களை முறைத்துவிட்டு சென்றார்கள்.
குருகர் தேசிய வனத்தில் செல்லும்போது ஒரு சிறிய பாலத்துக்கு அருகே விடலைப்பருவத்;தில் ஒரு ஆண் பபூன்; பாலத்தில் உள்ள கம்பியில் அழகாக இருந்து கொண்டு தனது ஆண்குறியை மற்றவர்கள் பார்ப்பதற்காக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது.
இருபத்தினாலு நிறமூர்த்த Chromosomes) சோடிகள் கொண்ட வானர இனத்தை சேர்ந்த இவைகளில் ஏதோ காரணத்தால் இரண்டு நிறமூர்த்தம் ஒன்றாகியதால் இருபத்துமூன்று நிறமூர்த்தங்கள் கொண்ட மனிதவர்க்கம் உருவாகி இருக்கிறது என்பது தற்போது தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைவிரல் பகுதி மூட்டுகளாகவும் கட்டைவிரல் மற்றைய விரல்களுக்கு எதிராகவும் அமைந்து இருப்பதால் இலகுவாக பல வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் கருவிகளை நுட்பமாக கையாளக்கூடியதான இயல்பு இருப்பதால் பிறைமேற் என மனிதர்களும் ஏப்ஸ் (கொரில்லாh சிம்பான்சி மற்றும் ஒறங்குட்டான்) அத்துடன் வானரங்களும் அழைக்கப்படுகிறது. ஏப்ஸ் என்பது மனிதக்குரங்கென்ற வார்த்தையால் தமிழில் அழைக்கப்படும் இவற்றிற்கு வால் இல்லை
தெற்கு ஆபிரிக்காவில் மட்டும் பிரத்தியேகமாக உள்ளது சக்மா பபுன்ஸ் என்ற குரங்கு இனம் இவையே குரங்கு இனத்தில் பெரிதானவை. இவை கிட்டத்தட்ட 45 கிலோ எடையுள்ளவை. சாம்பல் நிறத்தில் முக்கியமாக நாய் போன்ற நீளமான கீழ்நோக்கிய முகத்தைக் கொண்டது. எனக்கு பார்க்கும் போது எனது லாபரடோர் நாயின் முகம் நினைவுக்கு வந்தது. மிகவும் பலமான தாடையில் நீளமான சிங்கப்பல் உள்ளது.
மனிதர்கள்போல் பழங்களையும் இறந்த விலங்குகளையும் உணவாக கொள்வதுடன் சந்தர்ப்பம் சரியாக வாய்த்தால் சிறிய மான் வர்க்கத்தின் குட்டிகளையும் சாப்பிட்டுவிடும்
குரலால் மட்டுமல்ல முகம் உடல் என்பவற்றாலும் தமது கூட்டத்தில் செய்தியை பரிமாறிக் கொள்வது எதிரிகளாகிய சிறுத்தைகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. தாய் இறந்து அனாதையாகிய சிறு குரங்குகள் மற்றைய பெண் குரங்குகளால் பாதுகாக்கப்படுவதும் ஆராய்ச்சியாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. இவைகள் ஒரு கூட்டமாக நிலத்தில் திரிவதுடன் ஒரு ஆண் குரங்கு அரேபிய பணக்காரர்களைப்போல் பல பெண் குரங்குகளை தனக்காக வைத்திருக்கும்.
வனத்தில் பல பெண் குரங்குகளுக்கு பின்பகுதி மிளகாய் பழநிறத்தில் சிவந்திருப்பதை அவதானித்தேன். அந்தச்செம்மை நிறம் அவை உடலுறவிற்கு தயார் என்பதற்கான பச்சைக் கொடியாகும். மனிதர்களைப்போல் குரங்குகளால் வர்ணங்களைப் பார்க்க முடிவதால் பெண்குரங்கின் சிவந்த பின்பகுதியையும் ஆணின் சிவந்த ஆண்குறியையும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் பெண் பபூன்கள் கர்ப்பமாகியதும் சிவந்த பின்பகுதி சாம்பல் நிறமாகி விடுகிறது. மற்றைய மிருகங்களில் பெண் மிருகங்கள் வருடத்தில் சிலகாலத்துக்கு மட்டும் உடலுறவுக்கு தயாராகும். ஆனால் இவற்றில் அந்த பிரச்சினை இல்லை. வருடத்தில் எக்காலத்திலும் உடலுறவுக்குத் தயார். பெண் பபூன் உடலுறவிற்கு தயாராகியதும் மற்றைய ஆண் விலங்குகளிடம் கலகத்தை உருவாக்கி அதில் ஆக்கிரோசமான ஆண் பபூன் பெண்ணைத் தனதாக்கும். இதேவேளையில் பல ஆண்களுடன் சண்டையிடும்போது வேறு ஒரு இளம் பபூன் தனது வேலையைக் காட்டுவதும் உண்டு.
நூற்றுக்கு 91 வீதமான நிறமூர்த்தங்கள் மனிதருக்கு சமமானவையாதலால் மனிதர்களின் பல குணங்கள் உண்டு. சமூகமாக திரிவதுடன் குழந்தைகளை பாதுகாப்பதில் ஆண் பபூன், பெண் பபூன்களுடன் சேரந்து இயங்கும். இதைவிட மனிதர்கள்போல் மற்றைய பெண் பபூன்களும் தாய் குரங்குடன் பகிர்ந்து கொள்ளும். பெண் பபூனை உடல்உறவிற்கு எப்படி கணக்குப் பண்ணுதல் என்பதிலும் பல விதமான தந்திரோபாயங்களை பார்க்கமுடியும். இதில் சிலவேளையில் ஆவேசமாகவும் ஆக்கிரோசமாக அடையப்பார்த்;தல் பின்பு அது சரிவராத போது பவ்வியமான நட்புடன் உறவு கொள்ளுதல் என சகல வழிமுறைகளையும் பாவிக்கும.;
ஒன்றுக்கொன்று உரோமத்தில் இருந்து ஒட்டுண்ணிகளையும் உதிர்ந்த உரோமம் அழுக்கு என்பவற்றை எடுப்பது முக்கியமான சமூக நடவடிக்கை. இதன் மூலம் பாசத்தை அன்பை காமத்தை ஒன்றுக்கொன்று வெளிப்படுத்த உதவுகிறது.
கூட்டமாக வாழ்வதால் பபூன்கள் பெரும்பாலான நேரத்தை நிலத்தில் கழிக்கும். அப்பொழுது மிகவும் கவனமாக அவதானிக்கும். சுற்றுப்புறத்தை சிங்கம் சிறுத்தை ஹைனா கழுகு போன்றவற்றின் நடமாட்டத்தை கவனித்தபடி இருக்கும்
குருகர் வனத்தின் சில பபூன்கள் மான்கள் மற்றும் வரிக்குதிரைகள் என்பனவோடு அன்னியோன்னியமாக உலாவுவதைக் கண்டேன். அதைப்பற்றி ஆராய்ந்தபோது பபூன்ன்கள் சிறு குழந்தைகள்போல் உணவை உண்பன. பபூன்கள் மரத்தில் இருந்து மலர் பழம் முதலான அதிக சத்தான உணவை உண்ணும்போது நிலத்தில் சிதறுவதை மான்கள் உண்கின்றன. மேலும் அவற்றோடு இருப்பதால் பொதுவான பாதுகாப்பை பெறுகின்றன. அத்துடன் பெரிய மிருகங்களின் மலத்தில் சமிபாடடையாத சத்தான விதைகளை இவை உண்பதால் ஒன்றுக்கு ஒன்று நன்மையான வாழ்க்கை நடைபெறுகிறது. குட்டிபோடும் காலத்தில் மான்கள் பபூன்களை நம்பாது விரட்டிவிடுகின்றன.
வேவெற் குரங்கு(vervet monkey)
சிம்பப்வேயில் காட்டுக்குள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தையோட்டிய வழிகாட்டி எதிர்பாராத சத்தத்தை கேட்டு வாகனத்தை நிறுத்தியதும் மரத்தில் இருந்து பறவைகள் சிதறிப் பறந்தன. குரங்குகள் இறங்கியோடின மரத்தின் கீழ்ப் பகுதியில் நின்ற இம்பாலா என்ற மான்கள் சிதறி ஓடின.
அவை சிறுத்தையை கண்டு இருந்தால்தான் குரங்குகள் இப்படி அலறும் என்று சொல்லிவிட்டு அந்த மரத்தை பார்த்தான். அப்பொழுது இரண்டு கழுகுகள் அந்த மரத்தில் இருந்து பறந்தன. கழுகுகள் குரங்குக் குட்டிகளை காலால் எடுத்துக் கொண்டு செல்லக்கூடியவை.
வௌற் குரங்குகள் 10-15 கிலோ நிறையான சிறிய குரங்குகள். கறுப்பான தட்டையான முகமும் தாடை கன்னகதுப்பில் நீளமான சாம்பல் உரோமங்களையும் கொண்டவை. இந்தக் குரங்குகளில் உட்பிரிவுகள் பல உண்டு இவற்றின் உடல் நிறம் பல விதமான வர்ணத்தில் உள்ளது. சிம்பாப்வேயில் நான் கண்டவை சாம்பல் நிறமானவை. இவை பழம் கொட்டைகளை உணவாக உண்பதுடன் அதிக நேரம் மரத்திலே வசிப்பன. பபூன்களைப் போலன்றி இவை வருடத்தின் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இனப்பெருக்க நடவடிக்கைகளில் ஈடுபடும். அதாவது உணவுத் தேவைகளை அடிப்படையாக வைத்து இந்தக் குட்டிகள் ஈனும். இவைகள் பழங்களைத்; தின்பதால் தென் ஆபிரிக்க பழத்தோட்டங்களை நாசம் செய்து விடுகிறது. இவற்றிற்கும் வர்ணங்களை பகுத்தறியும் தன்மை இருப்பதால் காய்களைத் தவிர்த்து பழுத்த பழங்களை நாடிச் செல்லும். இதைவிட வெட்டுக்கிளி கறையான் என்பவற்றையும் இந்த குரங்குகள் உணவாக உண்பன.
இவற்றின் சமூக அமைப்பில் மனிதர்களின் இயல்புடன் வேறும் சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. பெண்கள் தங்களது கூட்டத்தை விட்டு விலகாத போது ஆண்கள் மற்றைய கூட்டத்தில் சென்று இனப்பெருக்கம் செய்வதால் இவற்றிடையே உள்ளக கலப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இந்தக் குரங்குகளின் அபாயக் குரல்கள் தனது கூட்டத்தினருக்குள் பரிமாறப்படும் தந்தி போன்றது அதேபோல் தாய் சேய் மற்றும் கூட்டத்துக்குள் உள்ளவைகள் தம்மிடையே பிரத்தியேகமான குரலை வெளிப்படுத்தி தகவல்பரிமாறுவது ஆராய்ச்சியில் அவதானிக்கப்படுகிறது
புஷ்பேபி (Bush baby)
பிறைமேற் (Primates) உயிரின பரிமாணத்தில் மிகவும் ஆதியில் உருவாகியது இந்த புஷ்பேபி என்ற வானரம். இதை தேசியவனத்தில் பார்க்க முடியவில்லை. மிகவும் சிறிதாக வெளவ்வால் போன்று இரவில் மரங்களில் வாழும் இந்த குரங்கை பாரப்பதற்கு ஒரு சிறிய மிருகக்காட்சிசாலைக்கு சென்றேன். இவைகளும் குரலெழுப்பகூடியதுடன் பழங்களையும் விதைகளையும் உண்பன.
இந்த புஷ்பேபிகள் பெரிய பழமரங்களின் சிறிய கிளைகளை தமது தங்குமிடமாக பாவிப்பதனால்; சிறுத்தைகளில் இருந்து தம்மைப்பாதுகாத்துக்கொண்டாலும் மலைப்பாம்பு கழுகிற்கு இரையாகிவிடும். வேவெற் குரங்குபோல் இவையும் அபாயக் குரலெழுப்பும்.
ஆபிரிக்க சவானா காடுகளில் வாழும் குரங்குகளின் வால் நாய்களின் வால்போன்று அசைப்பதற்கும் சமிக்ஞைகளுக்கும் உடல் பாலன்சுக்கும் உதவுமே தவிர பூமத்தியரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ள அடர்ந்த காடுகளில் வாழும் குரங்குகள்போல் வால்களால் கிளைகளைப்பற்றி பிடிக்க முடியாது.
மறுமொழியொன்றை இடுங்கள்