நடேசன்
இந்தியாவில் பெரியார் தேசியவனத்தில் 2014 ஜனவரியில் புலியை பார்க்க இரண்டு நாட்கள் வாகனத்தில் சென்றபோது அங்கே புலி கண்ணுக்கு தென்படவில்லை. உண்மையிலேயே இப்படிச் சென்று பார்ப்பதற்கும் அதிஷ்டம் தேவைதான். ஒரு வழிகாட்டியோடு நானும் மனைவியுமாக காட்டுக்குள் சில கிலோமீட்டர் கால்நடையாக சென்றபோது புலி வந்து சென்ற அடையாளத்தை பார்க்க முடிந்தது.
புதிதாக கிடந்த புலியின் மலத்தை பார்க்க முடிந்தது.
புலியின் மலம் என எப்படித் தெரியும்?
நான் பார்த்தபோது ஈரலிப்போடு காயாமல் மலம் நீள்வடிவில் அதாவது துண்டுகளாகாமல் இருந்தது. அம்மா தேங்காய் இல்லை என்று துருவல் இடையில் போடாமல் குழாயில் புட்டை அவித்து சுளகில் வெளித்தள்ளினால் அது எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
அதற்குக் காரணம் புலி தனது உடலை நாவால் நக்கி சுத்தம் பண்ணுவதால் உள்ளே செல்லும் மயிர்கள் இரும்புக்கம்பி கொன்கிறீட்டை இணைப்பதுபோல் மலத்தை ஒன்றிணைக்கும். பெரும்பாலும் இறைச்சியை உண்டபின்பு வெளிவரும் மலத்தில் இரத்தத்தில் இருந்து இரும்புத்தாது படிவதனால் கருமையாக இருக்கும்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் தங்கள் இயக்க சின்னமாக புலித்தலை பதித்த கொடியை இந்தியாவில் தயாரித்து வெளியிட்டார்கள். அது தமிழ்நாட்டில் இருந்த சோழப்பேரரசின் அடையாளம்;.
ஆனால் – விடுதலைப்புலிகளை இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளும் சிக்கள மக்களும் பிரத்தியேகமாக சிங்களப் பத்திரிகைகளும் விடுதலைப்புலிகளை கொட்டியா என சிங்களத்தில் அழைத்தார்கள்;.
இலங்கையின் வனப்பிரதேசத்தில் வாழும் லெப்பேட் (leopard) என்ற சிறுத்தையே கொட்டியாவென்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இலங்கை சிங்களவர்கள்; புலியைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
இலங்கையில் சிறுத்தைகள் வாழும் யால மற்றும் வில்பத்து தேசியவனங்களில அவற்றைப் பார்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கில் உலகமெங்கும் இருந்து உல்லாசப்பிரயாணிகள் வருகை தருவார்கள்.
இம்முறை குருகர் பார்க்கில் மதிய நேரத்தில் ‘அதோ அந்த மரத்தில் சிறுத்தை இருக்கிறது’ என வழிகாட்டியும் சாரதியுமான மார்லின் சுட்டிக்காட்டியபோது அது எனக்குத் தெரியவில்லை.
தொலை நோக்கி கெமராவால் பார்த்தபோது ஏதோ மங்கலாகத் தெரிந்தது. இங்கே வாகனத்தில் இருந்து இறங்க முடியாது என்பது கட்டுப்பாடு.
இந்தியாவில் புலிப்புழுக்கையை பார்க்க முடிந்தது. இங்கு அதுவும் கிடையாதோ என நினைத்தேன்.
தொடர்ந்து எமது வாகனம் சென்றது.
சிறுத்தைகளைப் பற்றிய விடயங்கள் மனதில் குமிழியிட்டன.
சிங்கம் புலி சிறுத்தை ஜகுவார் பனிச்சிறுத்தை முதலான ஐவகை மிருகங்கள் ஒரே கிளையை சேர்ந்தவை. இவை எல்லாம் பந்தர்( Panther) ) என்ற இனத்தை சேர்ந்தவை.
பொது பேச்சு வழக்கில் பெரும் பூனைகள்(Big cats ) எனவும் சொல்லப்படும். அமெரிக்காவில் நிறமூர்த்த குறைபாடால் (Melenistic defect) ) கருப்பு பந்தரையும்; (Black Panther) ) ஆசியாவில் ஆபிரிக்காவில்(Black Leopard ) கருப்பு சிறுத்தைகளையும் காணமுடியும்.
சிறுத்தைகளைப் பார்ப்பது இலகுவான விடயமல்ல. மற்றைய வேட்டையாடும் மிருகங்களில் இருந்து வித்தியாசமானது. தனிமையாக கரந்துறைவதனாலும் வேட்டைக்கு இரவில் செல்லுவதாலும் இவற்றைப் பார்ப்பது கடினமானது.
சிறுத்தை பெரும்பாலும் ஆண்-பெண் சேர்க்கை காலத்தை தவிர்ந்த காலங்களில் தனிமையாகவே பல கிலோ மீட்டர் தூரம் திரிவது வழக்கம். பகல் நேரங்களிலும் மரங்களில் இலகுவாக ஏறி அமர்ந்திருப்பதால் இவற்றைக் கண்டுகொள்வது கடினம்.
ரோஜா மலரின் அமைப்பில் (Rossettes) புள்ளிகள் தலையில் இருந்து பின்பகுதிவரையில் உடலில் அமைந்திருந்தாலும் கால்களில் வட்டமான புள்ளிகளாகவும் வயிற்றுப்பகுதியில் எதுவும் அற்று மறைந்து விடுகின்றன.
இந்தப் புள்ளிகள்தான் மரங்களில் தனியாகவும் கரந்துறைவதற்கும் இலைகளோடு இலைகளாக மறைந்திருக்கவும் உதவுகிறது.
சிறுத்தைகளின் மிருதுவான ரோமமும் அத்துடன் அதன் அழகிய தோலும்தான் காலம் காலமாக மனிதர்களின் வேட்டைப் பொருளாகின. மற்ற மிருகங்களை வேட்டையாடும் சிறுத்தைகளுக்கு மனிதர்கள் மட்டுமே எதிரி.
நீளமான உடலுடன் குட்டையான கால்களும் பரந்த முகத்தையும் கொண்டவை.. வாலின் நுனியில் வெள்ளை நிறம். வாலை நிமிர்த்தியபடி புதர்களுக்குள்ளே செல்லும்போது வேட்டையாடவில்லை என்பது செய்தியாக இருப்பதால் மான் வர்க்க மிருகங்கள் போன்றவை அதனைப்புறக்கணித்துவிட்டு மேயும். புலியின் வால் கீழிருந்தால் அது வேட்டைக்குத் தயார் என்பதறிந்து மற்றைய மிருகங்கள் எச்சரிக்கையாகிவிடும் என்று எங்கோ படித்திருந்தேன்.
60 கிலோவில் இருந்து 90 கிலோ நிறையான ஆபிரிக்க சிறுத்தைகள் சிவப்பு பொன்மஞ்சள் மற்றும் இரும்பு நிறம் என பல்வேறு வர்ணத்தில் காணப்படுகின்றன.
பூனை போல் போத்தல் பிறஸ் போன்று முள்ளமைந்த ஆண்குறியால் உடலுறவில் பல தடவை ஈடுபட்டு கருத்தங்கிய பின்பு இரண்டரை மாதம் கர்ப்ப காலம்.
பெண்சிறுத்தைகள் பாறைகளின் இடைவெளிகள் கற்குகைகளில் சராசரியாக மூன்று குட்டிகளை ஈனும். ஆண் சிறுத்தை அந்தப் பிரதேசத்தை மற்றைய ஆண் சிறுத்தைகளில் இருந்து பாதுகாப்பதை மட்டும் செய்யும். குட்டிகளைக் கொன்றால் பெண் சிறுத்தை மீண்டும் உடலுறவுக்கு தயாராகும் இரகசியம் பற்றி அவை அறிந்து வைத்திருப்பது தந்தை சிறுத்தைக்கு தெரியும். அத்துடன் காட்டு நாய்கள் மற்றும் ஹைனா போன்றவற்றிலும் இருந்து குட்டிகளைப் பாதுகாப்பதும் அவசியம்.
உணவைப் பொறுத்தவரை சிறுத்தைகள் பல வகையான உணவுவகைகளை உண்பதால் பல நாடுகளில் வேறுபட்ட சுவாத்தியங்களில் வாழக்கூடியதாக உள்ளன. மான் வர்க்கத்திலிருந்து பன்றி ஓணான் பறவைகள் மற்றும் மலத்தில் வாழும் வண்டுகள் என எதையும் தவறவிடாமல் உண்பன.
மரத்தில் ஏற முடிவதால் குரங்குகளும் சிறுத்தைகளிடம் அகப்பட்டுக்கொள்ளும். இந்தியாவில் காடுகள் அழித்து விவசாயம் செய்யப்படுவதால் சிறுத்தைகளின் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படும்போது வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும். தென்னாபிரிக்காவில் உணவுக்குப் பஞ்சமில்லை என்பதால் இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை.
ஆங்கிலேயரை எதிர்த்த சூலு இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆபிரிக்காவில் கவசூலு நத்தால் பிரதேசத்தை ஆண்டவர்கள். அப்பொழுது சூலு மன்னன் தனது வீரர்களிடம் எப்படி பன்றியின் கோரப்பற்களின் தாக்குதலில் இருந்து சாதுரியமாகத் தப்பி அதன் கழுத்தின் கீழ்பகுதியை சிறுத்தை கடித்து கொலை செய்கிறதோ அதே போல் நீங்கள் ஆங்கிலேயரின் துப்பாக்கிகள் தாக்குமுன்பு அவர்களை கொலை செய்யவேண்டும் என பயிற்சி தந்ததாக எமது சூலு வழிகாட்டி கூறினான்.
இதைவிட சிறுத்தைத் தோலை வீரத்தின் அடையாளமாக நினைப்பதால் கவசூலு நத்தால் பிரதேசத்தில் ஏராளமான சிறுத்தைகள் கொல்லப்படுவதும் அவற்றின் தோல்களை உரிப்பதும் நடைமுறையில் இருந்தது.
தற்போது இவை குறைந்து விட்டதால் சிறுத்தைகள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதாகவும் அவை அதிகம் குட்டிகளை ஈனுவதும் உறுதி செய்யப்படுகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. .தென்னாபிரிக்காவில் சிறுத்தைகளுக்கு நல்ல எதிர்காலம் தெரிந்தது. இந்த நிலைமை மற்றைய தென்னாபிரிக்க நாடுகளிலோ உலகில் சிறுத்தைகள் வாழும் மற்றைய நாடுகளிலோ இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
சிறுத்தைகள் எந்த மிருகத்தையும் பறவையையும் வேட்டையாடுவதாலும் இறந்த உடல்களை உண்பதாலுமே தொடர்ச்சியாக வாழ்கிறது. மற்ற மிருகங்கள் அதற்கு எதிரியில்லை. ஆனால் மனிதர்கள் காலம் காலமாக அவற்றை வேட்டையாடுவதால் மற்றைய நாடுகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டுவருகிறது.
உலகத்தின் பல நாடுகளில் சிறுத்தைகள் சிறிய உடலமைப்பு வித்தியாசத்துடன் வாழ்கின்றன. ஆனாலும் சிறுத்தைகளைப் பற்றி அதிக அளவில் ஆராய்ச்சிகள் தென்னாபிரிக்காவிலேயே நடந்திருக்கிறது.
தென்னாபிரிக்காவில் சிறுத்தைகளுடன் சீட்டா (Cheetah) என்பனவும் வாழ்விடத்தை உபயோகிக்கின்றன. சீட்டா பல விதத்தில் வித்தியாசமானது. அவற்றின் கால் நகங்களை உள்ளே சிறுத்தைபோல் இழுக்க முடியாது. அத்துடன் முகத்தின் இருபகுதியிலும் இரண்டு கோடுகள் உள்ளன. தோலில் ரோஜா மலரின் அமைப்பில் அல்லாது வெறும் புள்ளிகளுடன் நீளமான கால்களைக் கொண்டவை.
சிம்பாப்வேயில் சிறுத்தைகளைப் பார்ப்பதற்கு இரவு வேளையில் வாகனத்தில் சென்றபோது பிரகாசமான வெளிச்சத்தை காட்டுக்குள் செலுத்தும்படி அந்த வழிகாட்டி கூறினார். வேட்டையாடி உண்ணும் மிருகங்களின் கண்களின் உள்ளே அமைந்திருக்கும் விசேட விழிப்படலம் (Tapetum Lucidum பிரகாசமாகத் தெரியும். இந்த கண்ணின் அமைப்பு குறைந்த ஒளியில் பார்வையை அதிகப்படுத்தும். இதனால் இரவில் வேட்டையாடுவதற்கு உதவுகிறது. ஆனால் அதிகமாக பிரகாசமான வெளிச்சத்தை செலுத்தும்போது அதன் கண்கள் பார்க்கும் சக்தியை இழந்து குருடாகி அதே இடத்தில் அவை நிற்கும். பல மணிநேரமாக நாங்கள் லைட்டை அடித்தபோதும் அங்கு எந்த சிறுத்தையும் எமக்குத் தென்படவில்லை.
சிங்கம் – கழுதைப்புலி (Hyena) என்பன சிறுத்தையால் வேட்டையாடப்பட்ட மிருகத்தை பறித்துண்பன. இதைத் தவிர்க்க தனது எடையிலும் மூன்று மடங்கு எடையான வேட்டையாடிய மிருகத்தை வாயால் கடித்தபடி மரத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து அதனால் சாப்பிட முடிகிறது. மிகவும் பலமாக விருத்தியாகியுள்ள தோள்த்தசைகள் இதற்கு உதவுகின்றன.
சிறுத்தைகளை காண்பதே கடினமானபோது அவை வேட்டையாடியதை உண்பதை காண்பதற்கான அரிய சந்தர்ப்பம் தென்னாபிரிக்காவின் குருகர்காட்டில் வாய்த்தது. அதுவும் தெருவோரத்தில் என்பது நம்பமுடியாத விடயம்தான்.
மாலை முழுவதும் குருகர் காட்டினுள் வாகனத்தில் அலைந்து பல மிருகங்களையும் பார்த்தபின்னர் எமது வாகனம் மாலை ஏழு மணியளவில் பொழுதுசாயும் நேரத்தில எமது இருப்பிடத்திற்கு திரும்பியபோது நாங்களும் களைப்படைந்திருந்தோம். திறந்த வாகனம் என்பதால் ஆபிரிக்க கோடை வெய்யில் உற்சாகத்தை உறிஞ்சிவிட்டது.
ஓடிக்கொண்டிருந்த வாகனம் எதிர்பாராமல் நின்றது. வாகன சாரதி தனது கையில் இருந்த பிரகாசமான லைட்டை அடித்தபோது எமது வாகனத்தில் இருந்து ஐந்து மீட்டர் முன்பாக தார்பாதையின் ஓரத்தில் புதிதாக வேட்டையாடப்பட்ட பன்றியின் கழுத்தில் இருந்து இரத்தம் வழிய சிறுத்தை உண்டு கொண்டிருந்தது.
பன்றியின் பின்பகுதியில் சிறிதளவு தசை ஏற்கனவே காணாமல் போயிருந்தது. எமது வாகனத்தைப் பற்றியோ வெளிச்சத்தைப்பற்றியோ எதுவித கவனமும் அற்று தனது உணவை அது உண்டது.
‘அப்படியே மரத்தின் பின்னால் பார்க்கும்படி’ சாரதி கூறியதும் அருகில் தலையை திருப்பியபோது மரத்தின் மறைவில் வேறு ஒரு சிறுத்தை நிற்பது தெரிந்தது. ‘இது ஆண். இரண்டும் சேர்ந்து வேட்டையாடிவிட்டு எம்மை கண்டு ஆண் சிறுத்தை விலகிப்போய்விட்டது.’
வேட்டையை மிகவும் பசியுடன் உண்ணும் அந்த பெண் சிறுத்தையை கிட்டதட்ட பதினைந்து நிமிடங்கள் வரையில் பொச்சை தீர படங்கள் எடுக்க முடிந்தது.
சிறுத்தைக்கு மட்டுமா எங்களது பகுத்தறிவு மற்றும் ஏனைய புலன்கள் எல்லாம் இறுதியில் உணவைப் பெறுவதிலே முடிவதுதான் இயற்கையின் படைப்பின மகத்தான இரகசியம் என்பதை அந்த வனத்திலும் நினைத்துககொண்டேன்
மறுமொழியொன்றை இடுங்கள்