ஆண்மை விருத்திக்கு காண்டா மிருகத்தின் கொம்பு

Black Rhino

நடேசன்
50 வயதான மிஸ்டர் லி வான் அவர்கள் ஹொங்கொங் சீன மருந்து கடைக்குச்சென்று தனது குறி ஒழுங்காக சுடவேண்டும் என்பதற்காக மருந்து கேட்கிறார். அங்கேயுள்ள சீன மருத்துவர்

‘இப்பொழுதுதான் புதிதாக வெள்ளைக் காண்டாமிருகத்தின் கொம்பு ஒரு கிலோ வந்தது. அதில் சில சீவல்களை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டுவிட்டு மனவியுடன் உறவாடுங்கள். பத்து இரவுகள் தொடர்ச்சியாக சாப்பிடுங்கள். அதன் பின்பு இளைஞராகிவிடுவீர்கள்’ என்று பத்து சரைகளைக் கொடுத்தார்.

மிஸ்டர் லி வான் பத்து அமெரிக்க நூறு நோட்டுகளை எடுத்து மருத்துவ ச்செலவாக கொடுக்கிறார். மிஸ்டர் லீ வான் வீடு சென்றதும் இரவு தேனில் கரைத்து உண்டுவிட்டு மனைவியை நெருங்கும் தருணத்தில்அவருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் வருகிறது. ஏற்கனவே மனைவியிடம் அவருக்கு நல்ல பெயரில்லை. அவரது நிலைமை எப்படியிருக்கும்?

இது ஏன்நடந்தது?

காண்டாமிருகத்தை மயக்கமருந்து ஏற்றிய சன்னம் உள்ள துப்பாக்கியால் சுட்டு மயக்கிய பின்பு அதனது இரண்டு கொம்பிலும் ஓட்டையை துளைத்து மிருகங்களின் உண்ணிமருந்தை அதற்குள் செலுத்திவிடுகிறார்கள் . அந்த மருந்து கொம்பில் பரவி விடுகிறது. இப்படியாக செய்யப்பட்ட காண்டாமிருகத்தை கொலை செய்துவிட்டு அதன் கொம்பை கறுப்புச்சந்தையில் விற்று விடுகிறார்கள்.
ஒரு கிலோ காண்டாமிருக கொம்பு ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட அதிகமானது. அப்படியான கொம்பு ஒன்றின் சீவல்தான் மருத்துவர் வழங்கி வாந்தியையும் வயிற்றோட்டத்தையும் மிஸ்டர் லி வானுக்கு கொடுத்தது.

காண்டா மிருகத்தை கொல்வதை தடுப்பதற்காக இவ்வளவு தூரம்போக வேண்டியுள்ளது.
காண்டாமிருகத்தின் கொலையைத் தடுக்க சிம்பாப்வே தென் ஆபிரிக்க காடுகளில் எடுக்கும் நடவடிக்கைகளை நேரில் பார்த்த போது எனக்கு மனதில் உதித்த கற்பனைக் கதை.
மேலே படியுங்கள்.
White Rhino (1)

ஆபிரிக்க காட்டுக்குள் மாலை ஆறுமணியிருக்கும் – எதிரே சூரியன் அழகான சிவந்த பந்துபோல் திரண்டு மறைவதற்கு தயாரானபோது அதைப்படம் எடுப்பதற்காக வாகன சாரதியை வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். உடனே வாகனம் நின்று விட்டுது. அரைநிமிடத்தில் படத்தை எடுத்து முடிந்தம் ‘நன்றி’ என்றபோது அருகில் இருந்த டென்மார்க் பெண் என்னைப் பார்த்து தனது வாயில் கையை வைத்து அமைதி என சைகை காட்டினாள்.

எதிரே 1500 கீலோவுக்கும் குறைவில்லாத ஒரு கருப்பு காண்டாமிருகம் எமது வாகனத்தை நோக்கி வேகமாக 100 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. பார்த்ததும் எனக்கு இதயத்தில் இரத்த ஓட்டம் உறைந்து விட்டது. கமராவின் துரப்பார்வை லென்சை அகலப்பார்வை லென்சுக்க்கு மாற்றிய போது இன்னும் அருகாக அது வந்திருந்தது. கருத்த வாளிப்பான மயிரற்ற தோல்கொண்ட அதனது உடம்பில் வயிற்றுப் பகுதியில் சேறு படிந்திருந்தது. தங்களை மறைத்துக் கொள்வதற்காக அவை செய்வது. தூரப்பார்வையில் ஆபிரிக்க எருமை போல் இருந்தாலும் அதன் தலை சிறிதாக நீளமானது. கால்கள் கட்டையானவை.

இப்பொழுது ஐம்பது மீட்டர் தொலைவில் அது வந்தபோது அதனது கண்கள் தெரிந்தது, அது எம்மைப் பார்க்கவில்லை. நிலத்தைப் பார்த்தபடி வந்தது. பல வருடங்களாக அவை நடந்து வந்த பாதையில் எமது வாகனம் நிற்கிறது என்ற விடயம் மட்டும் எனக்குப் புரிந்தது. காண்டா மிருகத்திற்குரிய முன் பின்னாக அமைந்த இரண்டு கொம்புகளைக் காணவில்லை. காரணத்தை கேட்க முடியவில்லை. ஏற்கனவு காட்டு மிருகங்களை பார்க்கும்போது பேசக்கூடாது என்பது எமக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு.
மிக அருகில் வந்ததும் மேலும் பயம் அதிகரித்தது. எனது மனைவி என்னோடு ஒட்டிக் கொண்டாள். அந்த வாகனத்தில் எட்டுப்பேர் இருந்தார்கள். அது தாக்கினால் அந்த வாகனம் தாங்காது. மேலும் சுற்றிவர ஆள் உயரத்திற்கு மேல் அடர்த்தியாக வளர்ந்த முற்புதர்கள் நிறைந்த காடு. மிகவும் அண்மையில் அதாவது மிருகங்களின் பாதுகாப்பு பிரதேசம் என்ற இடத்திற்கு அது வந்துவிட்டது. அன்னியர்களை தாக்கவேண்டும் அல்லது அந்த இடத்தை விட்டு ஓடவேண்டும். இதுவே இயற்கையின் நியதி. அருகே வந்ததும் என்னால் தாங்கமுடியவில்லை. ‘இன்னும் அருகில் வருமா? என முணுமுணுத்தேன்.

‘சத்தம் கேட்டால் அருகே வரும் ‘ என்றான் அந்த வழிகாட்டி.

அந்தக் கணத்தில் அது எம்மை ஏறெடுத்து பார்த்தது. கண்கள் அகலமானது கழுத்தின் தசைகளில் விறைப்பு ஏற்பட்டது போன்ற தோற்றம். அதனது இரண்டு மூக்குத் துவாரங்களும் பெரிதாக விரிந்தன. இரண்டு காதுகளும் எம்மை நோக்கி நிமிர்ந்து அன்ரனாவாகின. இப்படியான நிகழ்ச்சி அரை நிமிடம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். பின்பு இடது புறத்தில் திரும்பி முற்புதர் காட்டுக்குள் திரும்பியதும் எனக்கு மீண்டும் இரத்த ஓட்டம் வழமைக்குத் திரும்பியது.
வாகனத்தின் எஞ்சின் இரைந்திருந்தாலோ அல்லது அதிக பேச்சு சத்தம் கேட்டிருந்தாலோ அது தரித்து நின்று மேலும் எம்மை அவதானித்து ஆராய்ந்தோ அருகாமையில் வந்திருக்கும்.’ என்றான் எமது வாகன சாரதி.

‘இதனது இரண்டு கொம்புகள் எங்கே…?

‘சில மாதங்களின் முன்பு அரிந்து எடுத்து விட்டோம்.’

‘இரண்டு கொம்புகளும் நாலு கிலோ இருக்கும். ஒரு கிலோ 95000 டொலருக்கு மேல் விலையாகும். அதாவது தங்கத்தின் விலையை விட அதிகம். அதற்காக இந்த காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன. தென்னாபிரிக்காவில் உள்ள குருகர் வனத்தில் கடந்த சில வருடத்தில் 3000 மேல் கொல்லப்பட்டுள்ளன. இதைத் தடுக்க கொம்பு அரிவதை மேற்கொள்கிறோம்.

‘காண்டாமிருகங்கள் குருகர் தேசியவனத்தில் கொல்லப்படுகின்றன. இந்த தேசிய வனம் 350 கிலோ மீட்டர் பரப்பில் மொசாம்பிக் எல்லையாக இருக்கிறது. தற்போதைய சட்டத்தின்படி இதை செய்பவர்களில் பத்து வீதமானவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குறைந்த தண்டனை மட்டுமே கிடைக்கிறது. இதனால் துணிந்து சட்டத்தை மீறுவதும் நடக்கிறது. அண்டை நாடான பொட்சுவானாவில் வனக்காவலாளிகளிடம் போராயுதங்கள் இருப்பதால் – காட்டுக்குள் அத்துமீறுபவர்களை சுடுவதற்கும் அதிகாரம் உள்ளது. அதேமாதிரியான சட்டத்தை தென் ஆபிரிக்காவிலும் மாற்றும்படி கேட்கிறார்கள் வனப்பாதுகாப்புத் துறையினர்’
நான் தென் ஆபிரிக்காவில் நின்றபோது பத்திரிகையில் ஒரு வினோதமான செய்தி பார்த்தேன். வியட்னாமிய தூதரகத்திற்கு தென்னாபிரிக்க மக்கள் தங்கள் நகங்களை வெட்டி அனுப்பவேண்டும் என ஒரு முக்கியமான வனவிலங்கு பாதுகாப்பில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர் ஒருவர் சொல்லியிருந்தார்.

காண்டாமிருகத்தின் கொம்புகள் நமது நகம் தலைமயிர் போன்று கரற்றின் உடல் புரதத்தில் (Keratin) வளருபவை. கொம்புகள் பாதுகாப்பிற்கும் உணவைத் தேடி நிலத்தையும் கறையான் பற்றைத் தோண்டுவதற்கும் உதவுபவை. மேலும் நகம் தலை முடிமாதிரி தொடர்ந்து வளரும்தன்மை கொண்டவை. இவற்றை அரிந்து விடும்போது அவை மனிதர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் உணவைத் தேடுதலிலும் மற்றைய மிருகங்களிடம் இருந்த அபாயங்களை எதிர்நோக்குகின்றன.
இப்படியான நகம்போன்ற பொருளுக்கு புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவ தன்மை இருப்பதாகவும் ஆண்மையை பெருக்கும் தன்மை இருப்பதாகவும் சீனர் மற்றும் வியட்நாமியர்கள்;; நம்புகிறார்கள். இதற்காக பெருமளவு பணத்தை கொடுப்பதற்கும் தயாராக இருப்பதால் ஆபிரிக்காவில் ஏழை மக்கள் காண்டாமிருகத்தை சுட்டுக் கொல்கிறார்கள்.

ஆபிரிக்காவில் இரண்டுவகைக் காண்டா மிருகங்கள் வசிக்கின்றன. அதேபோல் ஆசியாவில் இந்தியா யாவா மற்றும் சுமாத்திராவிலும் உள்ளன. ஆக மொத்தம் ஐந்து வகையுள்ளது. இதில் சுமாத்திராவில் வசிப்பதற்கு மட்டும் இரண்டு ஆபிரிக்க வகைபோல இரண்டு கொம்புகள் உள்ளன. வெள்ளை காண்டா மிருகத்தின் நெற்றியில் அமைந்திருப்பது நீளமானது. கருப்பில் அப்படியான விதியில்லை. வெள்ளைக் காண்டாமிருகம் சாதுவானது.

ஆசிய காண்டா மிருகங்களும் மிகவும் அருகிவருகின்றன.
ஆபிரிக்க காண்டாமிருக இனங்களில் ஒன்று கருப்பு மற்றது வெள்ளை. குருகர் காட்டில் வெள்ளைக் காண்டா மிருகம் உண்மையில் வெள்ளை நிறமில்லை. சாம்பல் நிறமானதும் கருப்பை விடப் பெரியதுமானது. ஆண் விலங்கு 2500 கிலோ இருக்கலாம். காண்டா மிருகங்கள் உண்மையில் குதிரை வரிக்குதிரை போன்றவற்றிற்கு தூரத்து உறவானவை.

மனிதர்கள் போல் காண்டாமிருகத்திற்கும் மனிதரைத்தவிர எதிரிகள் இல்லை. 50 கிலோ குட்டியாக பிறந்த உடன் காண்டா மிருகம் இருப்பதால் சிங்கம் வேட்டையாடுகிறது. சில சமயங்களில் யானைகள் முக்கியமான ஆண் யானைகள் காண்டா மிருகத்தை தாக்குவது வழக்கம். முக்கியமாக கோடைகாலத்தில் நீர்நிலைகளில் நீருக்கு போட்டி ஏற்படும்போது காண்டாமிருகங்கள் யானைகளின் தந்தத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றன.

காண்டாமிருகம் வயதிற்கு வருவதற்கு 5-6 வருடங்களும் பின்பு என்றரை வருடங்கள் அதனது கர்ப்பகாலம். ஒரு குட்டியை பூட்டுவிட்டு இரண்டு வருடத்தின்மேல் பாதுகாத்துக்கொண்டிருப்பதால் மீண்டு கற்பமடைவது தாமதமாகிறது. இவை எல்லாவற்றாலும் காண்டாமிருகத்தின் இனப்பெருகம் மெதுவாக நடக்கிறது. இந்தகாலகட்டத்தில் ஆண் காண்டாமிருகம் விரட்டப்பட்டு தனியாக திரிவதுதான் வழக்கமாகும்.

சமீபத்தில் சீனா தனது மருந்துக்கடைகளில் காண்டாமிருகத்தின் கொம்பு வைப்பதை தடைசெய்துள்ளதால் – தற்பொழுது வியட்நாமே இதுவிடயத்தில் முக்கிய கறுப்பு சந்தையாக மாறி இருக்கிறது. வியட்நாமிய ஆண்களுக்கு வயகராவை அறிமுகம் செய்வதன் மூலமே காண்டாமிருகங்கள் உயிர்வாழ முடியும் என்பது தற்போதைய நிலையாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: