ஆபிரிக்காவுக்கு மட்டுமே உரிய மிருகமாக மட்டுமல்லாது சவானாக் காடுகளில் வளரும் முட்களைக் கொண்ட முக்கிய மரமான அக்கேசியாவின்(Acacia) இலையை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வதற்காக மட்டுமே பரிணாமமெடுத்துள்ள ஒட்டகச்சிவிங்கியை பார்த்தபோது – இவ்வளவு பெரிய உடம்பிற்கு சிறிய தலையிருப்பதென்றால் நிச்சயமாக அதன் புத்தி மட்டமாகத்தான் இருக்கவேண்டுமன்ற நினைப்பே ஆரம்பத்தில் எனது மனதில் ஏற்பட்டது.
குருகர் தேசிய வனத்தில் எமது ஜீப்பை கண்ட ஒவ்வொரு முறையும் அக்காசிய மரங்களின் மேற்பகுதியை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எங்களை அந்த ஒட்டகசிவிங்கி பார்க்கும்போது எனக்கு அன்னியோன்னியமான உணர்வு தோன்றியது.
சிறுவயதில் மெலிந்த உருவத்தில் நீளமான கால்களுடன் உயரமாக இருக்கும்போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அந்தப் பெயரால் என்னைக்கூப்பிடுவார்கள். மற்ற மிருகங்கள் வேகமாக நகர்வதால் அவற்றைச் சிரமப்பட்டு பார்ப்பது மட்டுமல்ல படம் எடுப்பதும் சிரமமானது.
கலர்போட்டோவிற்காக படைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் கொண்டது இந்த சிவிங்கிகள். எங்களைப் பார்த்தபடி நின்று தம்மை விளம்பர மொடலாக அவை போஸ் கொடுக்கும்.
ஒன்பது உப பிரிவுகளைக்கொண்ட ஒட்டகசிவிங்கிக்கென்று பல பிரத்தியேகமான உடல் அமைப்புகள் இசைவாக்கமடைந்துள்ளன. ஒவ்வொரு ஓட்டகசிவிங்கியின் தோல் பிரத்தியேக வர்ணத்துடன் இருப்பதுடன் வளரும் போது அவற்றின் நிறமும் மாற்றமடையும்.
அவை புல் மேயாதபடியால் அவற்றுக்கு முன்பற்கள் இல்லை. கிட்டத்தட்ட தாத்தாவின் பொக்கைவாய்தான். கொடுப்பு பல்லுகள் உணவை அரைக்கின்றன. மிகவும் நீளமான நாக்கு ( 2அடி) முன் உதடுகளும் முட்தடிகளை வளைத்து அங்குள்ள இலைகளை மட்டும் நூட்பமாக தின்பதற்கு ஏதுவானவை.
முட்களில் இருந்து வாயை பாதுகாக்க மிகத்தடிப்பான பதனிடப்பட்ட தோல்போன்ற வாயின் உட்தோல் சிறிய முளைகளுடன் (Papillae) உள்ளது. ஓட்டகசிவிங்கியின் தோல் மிகத்தடிப்பானவையாக இருப்பதால் முட்கள் உண்ணிகளிடத்திலும் இருந்து பாதுகாப்பை பெறுகின்றன. ஆபிரிக்காவில் ஒட்டகசிவிங்கிகளின் உடலில் இருக்கும் உண்ணியை தின்று மட்டும் உயிர்வாழும் (oxpecker) ) பறவை இனம் வாழ்கிறது.
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மட்டும் ஆறடிக்கு மேலாக இருக்கும் போது இதயத்தில் இருந்து எப்படி இரத்தம் மூளையை நோக்கி பாய்ச்சப்படுகிறது ?
அதாவது கிணற்றில் இருந்து தண்ணீர் டாங்கிக்கு நீர் அனுப்புவதற்கு வோட்டர் பம்பு மாதிரி எதாவது உண்டா என்ற கேள்வி பலகாலமாக மிருக வைத்தியரான எனக்கு எழுந்தது.
தற்போதைய தகவலின்படி எமது இதயத்தில் ஏற்படும் அழுத்தத்திலும் ஆறுமடங்கு அழுத்தத்துடன் குருதி மேல்நோக்கி தள்ளப்படுவதுடன் மனித இதயத்திலும் பார்க்க இரண்டு தடவை அதாவது நிமிடத்துக்கு 150 தடவைகள் இதயம் துடிப்பது தெரிகிறது.
அதற்கு ஏற்ப இதயத்தின் சுவர்கள் மிகத் தடிப்பான தசையாலானவை. இரத்த அழுத்தத்தை சமாளிக்க இரத்தக் குழாய்கள் மிக கடினமான எஸ்-லோன் குழாய்கள்போல் தடிப்பாக இருக்கிறது. மேலே தலைக்குப் போன இரத்தம் வேகமாகத் திரும்பினால் தலை சுற்றிவிடும். இரத்தம் அருவியில் இருந்து தண்ணீர்போல் இறங்காமல் கழுத்து நாளத்தில் வால்வுகள் மெதுவாக ஓடவிடுகின்றனவாம்.
அதேபோல் காலுக்குச் செல்லும் இரத்தம் வால்வுகள் மூலம் மெதுவாகச் செல்கிறது. இப்படியாக அதிக இரத்த அழுத்தத்துடன் இயங்கினாலும் ஒட்டகசிவிங்கிகளுக்கு இரத்த அழுத்த வியாதியோ அல்லது பாரிசவாதமோ (stroke) வருவதில்லை.
மிருகங்களின் கண்களில் நிறங்களை பகுத்துப் பார்க்கும் தன்மை அவற்றின் மிக அரிது. எல்லாவற்றிற்கும் கறுப்பு வெள்ளை சினிமாதான். ஆனால் ஓட்டகசிவங்கி மட்டுமே வானவில்லை பகுத்து நிறத்தைப் பார்க்கும். பெரிதான கண்ணால் முன்புறம் மட்டுமல்ல பின்புறமும் பார்க்கும் வல்லமை அவற்றுக்கு இருப்பதால் வேட்டையாடும் மிருகங்களான சிங்கம் சிறுத்தைகளிடமிருந்து தனது குட்டிகளைப் பாதுகாத்துக்கொள்ளும்;. ஒரு குட்டி மட்டும் போடும் பெண்சிவிங்கி அவற்றை இரண்டு வருடங்கள்வரை பாதுகாக்கும். பின்னங்காலால் விடும் உதையால் சிங்கத்தின் தாடை எலும்பு உடைந்துவிடும்.
இதனால் வளர்ந்த சிவிங்கிக்கு எதிரிகள் குறைவு. ஆனால் குட்டிகளை சிங்கங்கள், சிறுத்தைகள், காட்டு நாய்கள் தின்றுவிடுகின்றன. 25 வீதமான குட்டிகள் பிழைத்து பெரிதாவதில்லை.
ஒட்டகசிவிங்கிகள் காட்டில் உள்ள நீர்நிலைகளுக்கு பாதுகாப்பின் நிமித்தம் நீர் அருந்த செல்வதும் குறைவு. குனிந்து குடிக்கும்போது ஆபத்தை எதிர் கொள்ளவேண்டிவருமே…? அவைகள் உண்ணும் இலைகளில் அதிக நீர்த்தன்மையுள்ளது.
குருகர் வனப்பூங்கா வழிகாட்டி சொன்ன விடயம் ஆச்சரியமானது. மரணத்தை கவலையுடன் நினைவு கூர்வது மனித இனத்திற்கு மட்டும் உரித்தான தனியுரிமையல்ல.
‘சிங்கத்திடம் தனது குட்டியை பறிகொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நான்கு நாட்கள் நகராத பெண்சிவிங்கியை மற்றைய பெண்சிவிங்கி பக்கத்தில் நின்று ஆறுதல் அளித்ததாம்.’
மனிதர்கள் நான்கு நாட்கள் மரணத்தை கொண்டாடுவது போல் அல்லவா இது இருக்கிறது? பொதுவாக அதிக நட்கள் வாழும் மிருகங்களிடம் உணவு மற்றும் பாதுகாப்பு காரணத்தால் மனப்பதிவுகள் பாதுகாக்கப்படும். இதனாலேயே யானைகளிடம் ஞாபக சக்தி அதிகமாக இருக்கிறது. ஒட்டக சிவிங்கிகள் 30 வருடத்துக்கு வாழ்பவை.
நத்தையின் தலையில் உள்ளதுபோல அமைந்த ஓட்கசிவிங்கியின தலையில் இருக்கும் கொம்புகள் அமைந்துள்ளன. அவற்றை ஆரம்பத்தில் பார்த்தபோது அதனை ஆராய்வது அநாவசியம் என நினைத்தேன். ஆனால் அதைப் பற்றிய தகவல்களைத் தேடியபோது ஆண் சிவிங்கிகள் மற்றைய ஆண் சிவிங்கிகளுடன் மோதுவதற்கு தலையில் அமைந்த இந்த கொம்புகளை சுத்தியலாக பாவிக்கும் என அறிந்துகொண்டேன். மேலும் அவற்றின் நீளமான கழுத்துகள் உடலுறவுக்கும் முந்திய உரசல் விளையாட்டிற்கு உதவுகிறது. அவ்வேளையில் ஒன்றை ஒன்று பின்னியபடி இருக்கும். நமதூர் தேனீர்க்கடைகளில் முன்னால் அமர்ந்து கைகளைப் பிடித்து தமது புஜபல பராக்கிரமத்தை பரிசீலிக்க சிலர் முனைவதைப் போன்று பெண் சிவிங்கிகளை அடைவதற்காக ஆண் சிவிங்கிகள் தங்கள் பலத்தை கழுத்தால் பரீட்சிக்கும். கொம்பால் அடிப்பதிலும் கழுத்தால் கழுத்தை திருகுவதாலும் இளம் ஆண் சிவிங்கிகள் முதிர்ந்த சிவிங்கியால் விரட்டப்படுகின்றன. இந்த உடலுறவுக்கான பலப்பரீட்சையில் கொம்புகள் உடைவதும் இரத்தம் சிந்துவதும் நடக்கும்.
பெண் சிவிங்கிகளுக்கும் கொம்பு இருந்தாலும் அவை ஆண்களில் இருந்து சிறிது வித்தியாசப்படும்.
வழக்கமான ஒரு கேள்வி இருக்கிறது. ஒட்டகசிவிங்கிக்கு எத்தனை கழுத்து எலும்புகள்…? எல்லா மிருகங்களின் கழுத்தைப்போல் சிவிங்கிகளுக்கும் ஏழு எலும்புகளே உள்ளன. ஆனால் ஒவ்வொரு எலும்பும் ஒரு அடிக்கு மேல் உயரமாக இருப்பதோடு முதல் கழுத்தெலும்பும் கடைசி கழுத்தெலும்பும் தலை பலகோணத்தில் திரும்புவதற்கு ஏதுவான மூட்டாக அமைந்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களால் அவை படுத்து உறங்குவது மிகக்குறைவு. நின்றபடி இளைப்பாறுவது வழக்கம். ஆனாலும் தலையை விலாவில் வைத்தபடி இரவிலும் நண்பகலிலும் இரைமீட்பதோடு உறங்கும்.
வாயின் முன்பகுதியில் பற்கள் இல்லாமல் நிளமான நாக்கும் அதற்கேற்ப உதடும் இருப்பதால் முள்மரத்தில் இருந்து தனியாக இலையைப் பறித்து உண்ணுவதோடு பழம் மலர்கள் பட்டைகள் என ஒரு நாளைக்கு 35 கிலோ உணவை ஓட்டகச்சிவிங்கிகள் உண்கின்றன.
முக்கியமாக உயர்ந்த மரங்களில் இலை தின்பதால் மற்றைய மிருகங்களோடு அவற்றுக்கு உணவுக்குப் போட்டியில்லை. குடைபோன்று சவானாக் காடுகளில் வளரும் அக்காசிய மரங்களை நாங்கள் அவுஸ்திரேலியாவில் வட்டில்(Wattle) மரங்கள் என்போம்.
அக்கேசிய அவரை இனத்தை சேர்ந்ததால் இலைகள் சிறிய இலைகள்
அதிக புரதசத்துக் கொண்டவை. பெரும்பாலான நேரத்தை உணவுண்பதிலே ஓட்டகசிவிங்கிகள் செலவிடும். அதிலும் பெண் சிவிங்கிகள் இனப்பெருக்க நோக்கத்திற்காக மரங்களின் உச்சியில் உள்ள கொழுந்துகளை தேர்வு செய்து உண்பன.ஆண் சிவிங்கிகள் கீழ்பகுதியில் முற்றிய இலைகளையும் பட்டைகளையும் உண்ணும்
இப்படியான விசேட தன்மைகளைக் கொண்ட ஓட்டகச்சிவிங்கிகளை ஆபிரிக்காவில் கண்ட ஜுலியஸ் சீசரில் தொடங்கி ஐரோப்பியர்கள், காலம் காலமாக தங்கள் நாடுகளுக்கு கொண்டுவந்து மிருகக்காட்சிசாலை என்ற பெயரில் சிறைவைப்பது நடக்கிறது. அதையே இப்பொழுது எல்லா நாட்டவர்களும் பின்பற்றுகிறார்கள். ஓட்டகசிவிங்கி போன்ற வனவிலங்குகள் எக்காலத்திலும் நகரவாசியாவது முடியுமா?
—-0—
மறுமொழியொன்றை இடுங்கள்