அருணாசலம் அண்ணை சமீபத்தில் எழுவைதீவில் இறந்து விட்டார் என அறிந்தபோது உடனே கவலை வரவில்லை. பிறந்த உடனே இறப்பு நிச்சயமாகிவிடுகிறது. இறுதி மூச்சுவரையும் பிறந்த மண்ணை விட்டு வெளியேற விரும்பாத கடைசி மனிதரை அந்த ஊர் இழந்து விட்டது என்ற நினைப்பே இந்தக் குறிப்பை எழுதவைக்கிறது.
மூன்று ஆண்டுகளின் முன்பு எழுவைதீவு வைத்தியசாலை திறப்புவிழாவின்போது அங்கு சென்ற என்னை கையில் இழுத்;துக் கொண்டு சென்று ‘அந்த தெற்குப் பகுதி காணியை விற்பதென்றால் எனக்கு விற்பனை செய்’ என்றார்.
சிரித்தபடியே ஓமென்றேன். மனதுக்குள் எழுவைதீவை விட்டு ஓடுபவர்கள் மத்தியில் காணிகளை வாங்கி அந்த மண்ணில் வாழ்வதற்கு தனது முதிய வயதில் அவர் நினைத்தது அவர் மீதான எனது மதிப்பை அதிகரித்தது. எழுவைதீவில் அவரது வீட்டு மதில் மட்டும்தான் கற்சுவர் எழுப்பி சீமெந்தால் பூசப்பட்டு எழுந்து நின்றது.
சாதாரண மனிதராக வாழ்ந்தாலும் அவரது வாழ்க்கை நிறைவானது. நான் கடைசியாக எனது மனைவியுடன் எழுவைதீவிற்கு சென்றபோது எண்பது வயது நெருங்கிவிட்டது என சொன்னதாக நினைவு. ஓன்பது பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்த போதும் உவர்மண் தீவை விட்டு விலகாமல் பிடிவாதமாக வாழ்ந்தவாறு மனைவியுடன் புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
எங்கள் எழுவைதீவில் காலையும் மாலையும் மட்டும் மோட்டார் பொருத்திய வள்ளத்தில் போக்குவரத்து செய்யமுடியும். மற்றைய நேரத்தில் அவசரமாக யாழ்ப்பாணம் போவதற்கு அல்லது பொருட்களை யாழ்ப்பாணம் கொணடு செல்ல அல்லது சீமெந்து போன்ற பொருட்களை எடுத்துவர படகுகள் என்ற பாய்மரவள்ளங்களைத்தான் நாம் நம்பவேண்டும். அந்தப் பாய்மரவள்ளங்களை ஓட்டுபவர்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருவர் பாய்மரவள்ளங்கள் வைத்திருந்து தனிப்பட்ட முறையில் ஓட்டுவார்கள். இந்த வள்ளங்கள்தான் எங்கள் ஊரில் இருந்து பனை ஊமல் நார்க்கடகம் பனங்கிழங்கு முதலான பனை உற்பத்தி பொருட்களையும் கருவாடு தேங்காய் என்பனவற்றையும் ஊர்காவற்றுறைக்கு ஏற்றிச் செல்லும்.
அப்படியான வள்ளங்களை ஓட்டியவர்கள் இருவர் மாத்திரமே. ஒருவர் வேலுப்பிள்ளை மாமா மற்றவர் அருணாசலம் அண்ணை. இருவரும் அம்மாவழியில் இரத்த உறவினர்கள். சில தடவை எனக்கு நோய்வந்தபோது அவர்கள் படகுகளை அம்புலன்சாக ஓட்டிருக்கிறார்கள். இதை ஊரில் வள்ளம் கட்டுவது என்போம். வடகைக்கு கார் பிடிப்பது போல். குறைந்தது இரண்டுபேர் வேண்டும்.
வள்ளத்தின் சுக்கானைப்பிடிப்பவர் தண்டையல். பாய்மரத்தை ஏற்றுவதற்கும் பின்பு காற்றிற்கு ஏற்றவாறு திருப்புவதற்கும் சிலவேளை பாய்மரத்தை தண்ணீர்; அடித்து நனைப்பதற்கு உதவியாள் இருப்பார். வேலுப்பிள்ளை மாமா நான் மிக சிறுவயதில் இருந்தபோது இறந்துவிட்டார். எஞ்ஜின் போட்டுகள் வரும் வரையும் தொழில் செய்தவர் அருணாசலம் அண்ணைதான்.
எங்களது ஊரில் பத்துப் பிள்ளைகளை பெற்று வளர்ப்பது சாதாரணமான காரியமில்லை. மூத்தமகன் எனது வயது மங்களேஸ்வரன். யாழ். இந்துக்கல்லுரியில் ஹொஸ்டலில் தங்கிப்படித்தான்.
பிற்காலத்தில் பிள்ளைகள் கனடா – ஐரோப்பா சென்றிருந்தாலும் அங்கு சென்றும் அவர்களோடு அங்கிருக்கப் பிடிக்காமல் திரும்பி வந்து பிடிவாதமாக எழுவைதீவில் வாழ்ந்தார்.
எனக்கு அவரில் பிடித்த விடயம் – கடைசிவரையும் தானே உழைத்து சிக்கனமாக வாழ்ந்தார். அதுமட்டுமல்ல எனக்குத் தெரிந்தவரை சுருட்டு மதுபானப்பழக்கமும் அவரிடம் இருக்கவில்லை.
கற்பக தருவாக எங்கும் நிறைந்த பனை தென்னையும் இருக்கத்தக்கதாக பக்கத்து ஊரான அனலைதீவில் இருந்து அருமையான புகையிலை கிடைக்கும்போது கள்ளும் சுருட்டும் பாவிக்காமல் ஓறுத்து வாழ்ந்தவர்கள் எமது ஊரில் மிக அரிது
எழுவைதீவில் வைத்தியசாலை கட்டுவது சம்பந்தமாக நான் அங்கு சென்றால் அவரது வீட்டில்தான் நான் தங்குவது மட்டுமல்ல எனது நண்பர்களான பத்திரிகையாளர் முருகபூபதி வைத்தியசாலையை கட்டி முடித்த பொறியியலாளர் சூரியசேகரம் என சேர்ந்து தங்கியிருக்கிறோம். எண்பது வயதான காலத்திலும் எங்களுக்கு தேவையானவற்றை தந்து உபசரித்தார்.
வாழ்க்கையில் நிறைவோடு வாழ்ந்தவருக்கு தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் மங்களேஸ்வரனையும் மகள் சிவமணியையும் சிறிய இடைவெளியில் பறிகொடுத்தது மிகப் பெரியசோகம். புத்திரசோகம் நிச்சயமாக அவரிடமிருந்து சில வருடத்தை பறித்துவிட்டது என நினைக்கிறேன்.
எழுவைதீவுக்கு ஒவ்வொருமுறை சென்றாலும் அவரைப் பார்த்துப் பேசுவேன். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியை இணைத்த தலைமுறையின் கடைசி முடிச்சாக அவர் மட்டும் இருந்தார். அந்த நூற்றாண்டின் மறுபாதியினர் பரதேசிகளாக ஆகிவிட்டது காலத்தின் கட்டாயம். இந்த நிலையில் அருணாசலம் அண்ணை தனியொருவராக மட்டும் போகவில்லை ஒருதலைமுறையாக மறைந்துவிட்டார்.
மீண்டும் நான் ஊர் செல்லும்போது அவரது வெற்றிடம் நிச்சயமாக பெரிய வெறுமையாக எனக்குத் தோற்றமளிக்கும
மறுமொழியொன்றை இடுங்கள்