முருகபூபதி யின் சொல்லியே தீர வேண்டிய கதைகள்

முருகபூபதி யின் சொல்ல மறந்த கதைகள் அல்ல
சொல்லியே தீர வேண்டிய கதைகள்
முக்காலத்தையும் உணர்ந்துகொள்வதற்கான சிந்தனைப்புலத்துக்கு இட்டுச்செல்லும் சமூகக் கரிசனைக் கதைகள்

Karunakaran
கருணாகரன்

Murugapoopathy Book Cover

முருகபூபதி எழுதியிருக்கும் “சொல்ல மறந்த கதைகள்“ நம்முடைய சமகால எழுத்துகளில் மிகுந்த கவனத்திற்குரியதாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தக் கதைகள் ஒரு காலகட்டத்தின் உண்மை மனிதர்களையும் உண்மையான நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நமது சமகால அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியதாக இவை உள்ளன. அத்துடன் சர்வதேச ரீதியான அனுபவங்களையும் நிகழ்ச்சிகளையும் வரலாற்றுச் சம்பவங்களையும் உள்ளடக்கியுள்ளன.
வரலாற்றின் முக்கியமான ஆளுமைகள், முக்கியமான சம்பவங்கள், வரலாற்று மனிதர்கள் முதற்கொண்டு மிகச் சாதாரண மனிதர்கள் வரையில் சகலதரப்பினருடைய கதைகளும் பேசப்பட்டுள்ளன. . முருகபூபதி இவற்றை ஒரு பத்திரிகையாளராகவும் ஒரு இலக்கியப்படைப்பாளியாகவும் இணைந்து நின்று நல்லதோர் வெளிப்பாட்டு மொழியில் எழுதியிருக்கிறார்.

இதேவேளை ஏறக்குறைய முருகபூபதி சுய வரலாற்றையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பல காரணங்கள் “சொல்ல மறந்த கதைகளைக் கவனப்படுத்துகின்றன. இது இந்தக் கதைகளின்பால் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. இது தனியே வாசிப்பின்பத்தையோ சுவாரசித்தையோ தருவதுடன் மட்டும் நிற்கவில்லை. அதற்கப்பால், நாம் பயணித்த வழியின் அனுபவம், இப்பொழுது நாங்கள் நிற்கின்ற மையம், இனிப் பயணிக்க வேண்டிய திசை போன்ற முக்காலத்தையும் உணர்ந்து கொள்வதற்கு உதவுகின்றது.
இந்த முக்காலத்தையும் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை பூபதி நமக்குத் தருகிறார். இந்தக் கதைகள் மையங்கொண்டுள்ள காலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தக் கதைகளின் வழியாக கடந்த காலத்தில் மீள் பயணம் செய்து தம்மை மீள்பார்வை பார்ப்பதற்கும் புதிய தலைமுறையினர் கடந்த காலத்தை அறிந்து ஆராய்வதற்கும் இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. இதற்காக நாம் பூபதிக்கு நன்றி சொல்லவேண்டும்.

பொதுவாகக் கதைகளைச் சொல்வதிலும் கேட்பதிலும் இன்பமுண்டு. அப்படியென்றால், கதைகளுக்கு அந்த இன்பத்தை அளிக்கின்ற சிறப்பான குணமுண்டு என்றே அர்த்தம். கதைகள் எப்பொழுதும் உண்மையை உணர்த்துகின்றன. பொய்களை அடையாளம் காட்டுகின்றன. நம்முடைய அனுபவங்களையும் பிறருடைய அனுபவங்களையும் இணைத்தும் தொகுத்தும் சொல்கின்றன. இதன்வழியாக நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த மாதிரியான சிறப்பான குணங்களால்தான் உலகெங்கும் கதைகள் உள்ளன.
எனவேதான் கதை சொல்லும் மரபும் கதை கேட்கின்ற மரபும் எங்கும் ஆதியிலிருந்து இன்னும் உள்ளது. கதையின்றி எதுவும் இல்லை, யாரும் இல்லை என்பதே உண்மை. எல்லாவற்றுக்கும் கதையுண்டு. எவருக்கும் கதை உள்ளது. முருகபூபதி சொல்கின்ற இந்தக் கதைகள் புனைகதைகள் அல்ல. உண்மைக் கதைகள். ஆனால், அவர் ஒரு புனைகதை எழுத்தாளர். பத்திரிகையாளர் என்ற அடையாளத்துக்கும் அப்பால் பூபதியின் அடையாளமும் பங்களிப்பும் புனைகதையில்தானுண்டு. இதுவரையில் ஐந்து சிறுகதை நூல்களையும் ஒரு நாவலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் பூபதி.

இதைத்தவிர, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், நேர்காணல்கள், கட்டுரை நூல்கள் என பூபதியினுடைய 20 புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. சில சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மதகசெவனெலி (சிங்களம்)
சுமையின் பங்காளிகள் (சிறுகதைகள் – சாகித்திய விருது 1976) பறவைகள் (நாவல் – சாகித்திய விருது 2002) இரண்டு தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப்பரிசைப் பெற்றிருக்கிறார்.

நாற்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டேயிருக்கும் பூபதி நமக்கு இன்னும் வியப்பூட்டிக்கொண்டேயிருக்கும் எழுத்தாளரே. அந்த வகையில் இங்கே பூபதி இன்னொரு வகையான எழுத்தை நமக்குத் தருகிறார். இது நாங்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒன்று.
ஏனென்றால், இன்று இணைய வெளியில் பெருகியுள்ள தமிழ் எழுத்துகள் ஆதாரங்கள், அடிப்படைகள், ஒழுங்கு நெறிகள் எல்லாவற்றையும் சிதைக்கின்ற அளவுக்கு ஒரு விசச்சூழலாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இணையத்தில் வருகின்ற கவனிக்கத்தக்க எழுத்துகளைக் கூட இந்த விச வகையான எழுத்துகள் பெருந்திரையென விரிந்து மறைக்க முற்படும் அபாய நிலையே காணப்படுகிறது. ஒழுங்கு முறையான – அடிப்படைகளை உள்ளடக்கிய – ஆதார நிலைப்பட்ட எழுத்துகளைப்பற்றிய அக்கறை எழுதுவோருக்கும் இல்லை. அவற்றைப் பிரசுரிப்போருக்கும் இல்லை.

முன்னர் இருந்த பிரசுரவெளி வேறுபட்ட பண்பைக் கொண்டிருந்தது. அப்பொழுது இதழ்களும் பத்திரிகைகளும் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கைக் கொண்டிருந்தன. அல்லது பொறுப்புச் சொல்லப்பட வேண்டிய ஒரு நிலையைக் கொண்டிருந்தன. இதைச் சில சந்தர்ப்பங்களில் சில இதழ்கள் மீறிச் செயற்பட்டாலும் பெரும்பாலும் ஒரு கருத்தை முன்வைக்கும்போதும் தகவல்களைச் சொல்லும்போதும் அவற்றுக்கான பொறுப்பை ஏற்கும் நிலை இருந்தது. அப்படியில்லாதபோது அதைச் சுட்டிக்காட்டி எழுதக்கூடிய நிலை – எதிர்வினையாற்றக்கூடிய நிலை காணப்பட்டது. ஆனால் இப்பொழுது இணையம் உண்டாக்கியிருக்கும் சாத்தியங்கள் தனி நபர்களும் தங்களுக்கென்று தனியான இணையம் வழியான வெளியீட்டை உண்டாக்க முடியும் என்பதால் பொறுப்பு, நியாயத்தன்மை என்பவற்றைப் பற்றிய கடப்பாடுகள் எதுவுமில்லாமல் எதையும் எப்படியும் எழுதலாம் என்ற நிலையை உண்டாக்கியிருக்கிறது. இதனால் பெரும்பாலான எழுத்துகள் வெற்றுக்கோதுகளாக, தவறான தகவல்களைக் கொண்டவையாக உள்ளன.
இந்த நிலை வாசகர்களுக்குப் பெரும் பாதிப்பைத் தருகின்றது. இதிலிருந்து வேறுபட்டதாக முருகபூபதியின் இந்த எழுத்துகள் உள்ளன. இவையும் பெரும்பாலும் இணைய வெளியில் பிரசுரமாகியிருந்தவையே.

ஆனால் – தமிழ் இணைய வெளியின் பொதுத்தன்மையில் இருந்து விலகி. வாசகரை உயர்நிலை நின்று சிந்திக்கும் பண்பில் எழுதப்பட்ட எழுத்துகளாக இவை உள்ளன. முருகபூபதி ஏற்கனவே முறைப்படுத்தப்படுத்தப்பட்ட ஊடகத்தில் பணியாற்றியவர். சமூகக் கரிசனையோடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயற்பட்டவர். இடதுசாரிச் சிந்தனைத்தளத்தில் இயங்கியவர். முதிர்ச்சியடைந்த படைப்பாளி. மனிதாபிமானச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர். இந்த அடிப்படைகள் பூபதியின் எழுத்துகளில் பொறுப்பையும் சர்வதேசியத் தன்மையையும் விரிந்த பார்வையையும் உண்டாக்கியிருக்கின்றன.

எனவே வாசகர்கள் பூபதியிடமிருந்து பெறுமதியான பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. “சொல்ல மறந்த கதைகள்“ என்ற இந்தக் கதைகள் (இவை கதைகளா, கட்டுரைகளா, பத்திகளா, சுயவரலாற்றுப்பதிவா? எந்த வடிவத்தில் இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம் என்ற கேள்வியும் உண்டு) வழியாக ஈழத்தமிழருக்கான அரசியலை, இலங்கையர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை, உலகளாவிய நிகழ்ச்சிகளின் வழியான அனுபவங்களை, இலங்கைச் சமூகங்களுக்காக தங்களை ஒப்புக்கொடுத்து வாழ்ந்த மனிதர்களை, ஆளுமைகளை எல்லாம் அறிய முடியும்.
உதாரணமாக முக்கியமான ஒரு ஆளுமை – இலங்கையின் முன்னாள் பிரதமராக இருந்த தஹநாயக்கவைப் பற்றிய பதிவு. கற்பனையிலும் எட்டாத மனிதரான தஹநாயக்க, மிகச் சிறந்த தலைவர். உயர்ந்த பண்பாளர். தேர்தலில் தோல்வியைத் தழுவிய செய்தியை அறிந்தவுடன், தான் இருந்த பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறி சாதாரண மனிதராக பஸ் நிலையம் சென்று பஸ்ஸில் ஏறிப்பயணித்து ஊர் திரும்பிய தஹநாயக்கவைப்பற்றிச் சொல்லும்போது அன்றைய காலிமுகத்திடலையும் சமூக அரசியற் சூழலையும் தான் அப்போதிருந்த நிலையையும் சேர்த்துச் சொல்லி விடுகிறார்.

இதைப்போல இன்னொரு பதிவு – “காவி உடைக்குள் ஒரு காவியம்“ என்ற தலைப்பில் பௌத்த துறவியான வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோவைப்பற்றி உள்ளது. ரத்ன வண்ஸ தேரோ எப்படித் தமிழையும் தமிழர்களையும் இலங்கையையும் நேசித்தார் என்பதை விரிவாகச் சொல்கிறது. ஒரு தேரோவைப்பற்றிய தனிச்சித்திரம் என்பதற்கு அப்பால், இலங்கையின் இன, மத, மொழி, இலக்கிய விடயங்களை மையப்படுத்தி இந்தப் பதிவு உள்ளது. பொதுவாக இலங்கையில் பௌத்த பிக்குகளைப்பற்றிய தமிழ்மனப்பதிவு எதிர்மறையானது.
சிங்கள இனவாதத்தைத் தாங்குகின்ற தூண்களாகவும் தூண்டுகின்ற திரிகளாகவும் பிக்குமார் சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்குச் சில காரணங்களும் இருந்தன. இதையும் பூபதி சொல்கிறார். “எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சிங்களத்தேசியத்திற்காகவும் தனது அரசியல் தேவைகளுக்காகவும் இலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இருக்கவேண்டிய பிக்குகளை அரசியலுக்குள் கொண்டுவந்தார். பின்னர் அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுடப்பட்டு இறந்தார் என்பது பழையசெய்தி. அவரது மறைவு வாரிசு அரசியலுக்கும் வித்திட்டது என்பதும் கடந்துபோன செய்தி. இன்று இலங்கை பாராளுமன்றத்துக்குள் ஹெல உருமய என்ற கட்சியின் பிரதிநிதிகளாக பிக்குகள் காவி உடையுடன் பிரவேசித்திருக்கின்றார்கள். இலங்கையின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பலமான சக்தியாகவும் அவர்கள் மாறிவிட்டார்கள்…..“ என. இதேவேளை பூபதி இந்தப் பொது அனுபவத்தை மறுத்து, வேறு மாதிரிகளும் உண்டென்று சொல்கிறார்.

பூபதியின் அணுகுமுறையே பொது மனப்பாங்கில் உள்ள குறைபாடுகளுக்கும் விழிப்பின்மைக்கும் எதிரானதுதான். ஒரு படைப்பாளியின் இயங்குதளம் அப்படித்தான் இருக்கும். ஒரு ஊடகவியலாளரின் இயக்கமும் அப்படித்தான் செயற்படும். மாறுதல்களை உண்டாக்கும் விதமாகச் செயற்படுவது. புதிதை உருவாக்க முனைவது என்ற வகையில் இது இருக்கும்.
பூபதி மாறுதல்களை உண்டாக்குவதற்காக எழுத்திலும் செயற்பாட்டிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர். எனவேதான் அவருடைய எழுத்துகள் மாறுதல்களை நோக்கியதாக உள்ளன. இந்த நூலிலுள்ள அத்தனை பதிவுகளும் இப்படித்தான் உள்ளன. இதுதான் இந்தப் பதிவுகளின் சிறப்பு. ஒன்றின் ஊடாகப் பலவற்றையும் அறிய முடிவது. இதைப் பூபதியே சொல்கிறார்,

“ வாழ்க்கை அனுபவங்களின் இருப்பிடம். படைப்பாளி அந்த இருப்பிடத்தை தனக்குள் வைத்திருக்கமாட்டான். அந்தப்படைப்பாளி ஒரு பத்திரிகையாளனாகவும் பயணித்திருப்பானேயானால் ‘இருப்பிடங்கள்’ அம்பலமாகிவிடும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏராளமான சொல்ல மறந்த கதைகள், சொல்லப்பயந்த கதைகள், சொல்ல மறுத்த கதைகள், சொல்ல வேண்டிய கதைகள் நெருடிக்கொண்டுதானிருக்கும்“ என்று.
உண்மைதான். பூபதியின் அனுபவங்கள் வித்தியாசனமானவை. அவர் ஒரு பத்திரிகையாளராகவும் இலக்கியப்படைப்பாளியாகவும் செயற்பாட்டு இயக்கங்களில் இணைந்திருப்பவராகவும் ஒரு புலம்பெயரியாகவும் இருப்பதால் ஏராளமான – வேறுபட்ட அனுபவங்களை உடையவராக உள்ளார்.
இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த பூபதி முழு இலங்கையிலும் அனுபவம் கொண்டவர். பூபதியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கின்ற காலம், இலங்கை கொந்தளிக்கத் தொடங்கிய காலமாகும். ஆகவே, பூபதி சொல்லுகின்ற இந்தக் கதைகளின் காலமும் பெரும்பாலும் இலங்கையின் நெருக்கடிகள் நிறைந்த காலமாகவே உள்ளன.
இனமுரண்களும் ஆயுதக்கிளர்ச்சிகளும் இனப்போரும் புலப்பெயர்வம் நெருக்கடியான வாழ்க்கையும் நிறைந்தவையாகவே உள்ளன. இந்த நிலைமைகளையும் இந்தப் பதிவுகள் உள்ளடக்கியுள்ளன. இந்த நூலை வாசிக்கும்போது கடந்த நாற்பது ஆண்டுகால இலங்கையின் அரசியல். பொருளாதார, சமூக, பண்பாட்டு அம்சங்களை அறியக் கூடியதாக உள்ளது. அதேவேளை உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளின் விளைவுகளையும் அறிய முடிகிறது.
இதற்கும் நல்ல உதாரணங்கள் உள்ளன. “எதிர்பாராதது“ என்ற பதிவில், “ ஐநூறு ஆண்டுகால பழமைவாய்ந்த புனித பஸில் கதீட்ரல் தேவாலயம் மாஸ்கோ கிரம்ளினில்தான் இருக்கிறது. சோசலிஸத்திற்காக பாடுபட்ட மேதை லெனினின் பொன்னுடலும் இருக்கிறது. முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளிவாசலும் இருக்கிறது. இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் எத்தனை குடியரசுகள் எத்தனை சுயாட்சிக்குடியரசுகள், எத்தனை சுயாட்சிப்பிராந்தியங்கள் அங்கிருந்தன என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த சோஷலிஸ சோவியத் யூனியன் இன்று இல்லை என்பதும் எதிர்பாராததே“ என்று சோவியத் யுனியன் பற்றிய சித்திரத்தை வரைகிறார்.
இன்னொரு பதிவில், இலங்கை இந்திய உடன்படிக்கைக்காலம் பற்றி எழுதப்பட்டுள்ளது. வேறொன்றில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காகக் காத்திருப்பதைப்பற்றியும் அவருடனான முருகபூபதியின் உறவைப்பற்றியும் அந்த நட்புக்காலம் பற்றியும் சித்திரிக்கப்பட்டுள்ளன. வேறொரு பதிவில், ஜே.வி.பி கிளர்ச்சி பற்றியும் அந்தக் காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மனம்பெரியயைப்பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

இன்னொன்றில் வியட்நாம் அமெரிக்க யுத்தத்தின்போது நேபாம் குண்டுத்தாக்குதலுக்குள்ளாகிய சிறுமி கிம்புக் பற்றிய பதிவு. இந்தப் பதிவு என்னை மிகவும் பாதித்தது. இதில் பூபதியின் விவரிப்பு உச்சமானது. பாருங்கள், ஒரு பகுதியை – மாஸ்கோ ஹோட்டல் கொஸ்மோஸ் மாநாட்டு மண்டபம் திரையரங்கைக்கொண்ட விஸ்தீரனமானது.அன்று நாம் அங்குசென்றபோது அந்த மாநாட்டு மண்டபம் ஒரு சர்வதேச நீதிமன்றமாக உருமாறியிருந்தது. ஏகாதிபத்தியமும் அதன் அச்சுறுத்தல்களும் அடாவடித்தனங்களும் மூன்றாம் உலகநாடுகளையும் வறிய மற்றும் வளர்முக நாடுகளையும் எவ்வாறு பாதித்தன – அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையெல்லாம் அதில் பாதிக்கப்பட்டவர்கள், நேரில் கண்டவர்கள், சம்பவங்களை ஆய்ந்தறிந்த ஆய்வாளர்கள் தமது வாக்கு மூலங்களில் சமர்ப்பிக்கவுள்ளனர் என்ற தகவல் அந்த நீதிமன்றத்தினுள் பிரவேசித்தபோது எமக்குக்கிடைத்தது.

ஏழு நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் நீதிபதிகளாக அன்று செயற்பட்டனர். பதினைந்து நாடுகளின் பிரதிநிதிகள் தத்தம் நாடுகளில் ஏகாதிபத்தியம் செய்த அடாவடித்தனங்களையும் நாசகாரச்செயல்களையும் வாக்குமூலமாக விபரித்தனர்.
நிகழ்ச்சி அறிவிப்பாளர், “ இனி அடுத்து ஒரு குறுந்திரைப்படம் காண்பிக்கப்படும்” என்றார்.
அந்த நீதிமன்றம் இருளில் மூழ்கியது.
மேடையிலிருந்த அகலத்திரையில் தோன்றியது வியட்நாமில் அமெரிக்க விமானங்களின் நேபாம் குண்டு வீச்சுக்காட்சிகள். பதட்டத்துடன் பார்க்கின்றோம். ஒரு சிறுமியும் சிறுவனும் மேலும் சில குழந்தைகளும் உடல் தீப்பற்றி எரிய கதறிக்கொண்டு ஓடுகிறார்கள். நெஞ்சத்தை உருக்கும் காட்சி. அச்சிறுவனின் உடலில் ஆடைகள். ஆனால், அந்த அழகிய சிறுமியோ எரிந்த ஆடைகளை களைந்து விட்ட நிலையில் எரிகாயங்களுடன் கதறிக்கொண்டு ஓடிவருகிறாள். அவளைக்காப்பாற்றவேண்டும் என்ற உணர்வு எம்மை உந்தித்தள்ள ஆசனத்தின் விளிம்புக்கு வந்துவிடும்போது ‘ நாம் வியட்நாமில் இல்லை. அந்தக்கொடுமையை காண்பிக்கின்ற ஒரு நீதிமன்றத்தில் இருக்கிறோம்’ என்ற பிரக்ஞையை தருகிறது அந்த நீதிமன்றத்தில் மெதுவாகப்படரும் மின்வெளிச்சம்.
அரங்கில் மயான அமைதி. மேடையில் அந்தக்காட்சியை காண்பித்த திரை மேலே சுருண்டு சென்றுவிடுகிறது. மேடையிலும் தற்போது ஒளி பரவுகிறது.
இளம் கத்தரிப்பூ நிற ஆடையில் தேவதையாகத்தோன்றுகிறாள் ஒரு அழகிய சிறுமி. கைகூப்பி, கையசைத்து தன்னை தனது பெயர்சொல்லாமலேயே அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். யார் இந்த சின்னத்தேவதை? எங்கோ வெகு சமீபத்தில் பார்த்த முகமாக இருக்கிறதே என்று நினைவுப்பொறியில் ஒரு மின்னல்.
வியட்நாமில் ‘ட்ராங்பேங்’ என்ற கிராமத்தில் நேபாம் வீசப்பட்டபோது எரிகாயங்களுடன் ஓடிய அதே சிறுமி, பதின்மூன்று வருடங்களின் பின்னர் எமது கண்முன்னே…..மேடையில்….

ஆசனத்திலிருந்து எழுந்தோடிச்சென்று மேடைக்குத்தாவி அந்தச்சிறுமியை அணைத்துக்கொள்கின்றேன். எனது கண்கள் பனிக்கின்றன. அவளது கரங்களை தீண்டுகின்றேன். குளிர்ந்த நிலையில் எரிகாயத் தழும்புகளுடன் அந்தக்கரங்கள். என்னைத்தொடர்ந்து பலரும் மேடைக்கு வந்துவிடுகிறார்கள்.
“நான் உயிர் பிழைப்பேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் எமது வியட்நாம் நாட்டின் வெற்றிவிழாவை கண்டதும் எனது பாக்கியம்தான். எமது வெற்றியின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முடித்துக்கொண்டு இங்கே உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்” என்றார், எங்களையெல்லாம் கவர்ந்த வியட்நாம் தேவதை கிம்புக்.
பூபதியின் எழுத்துகளில் வேகமும் தகவல்களும் நிறைந்திருப்பது ஒரு அடிப்படையான பண்பாக உள்ளது. இதற்குக் காரணம் அவர் பத்திரிகையில் பணியாற்றியதாக இருக்கலாம். பத்திரிகையில் எழுதும்போது தகவல்களைத் திரட்டி அவற்றை Story ஆக்க வேண்டிய அவசியம் உண்டு. ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் இதற்காக வாய்ப்பை பூபதிக்குக் கொடுத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இதனால், தன் வரலாற்றை அடியோட்ட ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் பதிவுகள், புறவுலகைப்பற்றிய கதைகளாகவும் வரலாற்றின் பதிவாகவும் சமதளத்தில் உள்ளன.
இந்தப் புத்தகத்தை நீங்கள் மிக எளிதாக வாசித்து விடலாம். முருகபூபதியின் எழுத்து உங்களை அப்படியே ஆகர்சித்து விடும். ஆனால், இதில் எழுதியிருக்கும் விடயங்கள் உங்களை மிக ஆழமான சிந்தனைப்புலத்துக்கு இட்டுச்செல்லும். நல்ல எழுத்துகளின் இயல்பு இது. இதையெல்லாம் தந்திருக்கும் முருகபூபதிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
0000000

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: