மலேசியன் ஏர்லைன் 370 ((சிறுகதை)

370

நடேசன்
காலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு யாரோ வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டது. சமயலறையில் நின்றவள் வெளியே வந்தாள். பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து மூத்தவளை பாடசாலைக்கும், இளையவளை பல்கலைக்கழகத்திற்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் அனுப்பியிருந்தாள்.
காலை எட்டரைமணிக்கு முன்பாக அதை செய்தால்தான் அவள் தயாராகி தனது வேலைக்குப் போகமுடியும். மருத்துவராக தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் அவசரம் அவளைப் பரபரப்பில் தள்ளியது..

இந்த நேரத்தில் யார் தட்டுகிறார்கள்? செஞ்சிலுவைக்காரரோ இல்லை வேதாகம புத்தகத்தை விற்பவர்களோ? …. முகத்தை முறித்து நான் வேலைக்கு கிளம்புவதற்கு அவசரமாக தயாராகிறேன் எனச் சொல்லவேண்டும் என முணுமுணுத்தபடி கையை இடுப்புத்துணியில் அவசரமாக துடைத்தபடி வாசலை நோக்கி வந்தாள்.

வாசலில் மானிட உருவில் அதிர்ச்சி காத்திருந்தது.

இரண்டு பொலிஸ்காரர் தங்களது நீல யுனிபோர்மில் நின்றனர். அதில் ஒருவர் மத்திய வயதானவர். மற்றவர் இளைஞர். இருவரும் காலை வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு தங்களது கடமை முடிந்தது என மவுனித்தார்கள.; அவர்களுடன் மூன்றாவதாக நின்றவர் சாதாரணமான சிவிலியன் உடையில் கறுத்த கோட்டும் பாண்டும் அணிந்து நீல நிற கழுத்துப்பட்டியை கட்டியிருந்தார். தலையை அசைத்துவிட்டு அவர் இரண்டு அடி எடுத்து உள்ளே வந்து அவுஸ்திரேலிய சுங்க இலாக்காவை சேர்ந்த டேவிட் மிச்சல் என்று தன்னை அறிமுகப்படுத்தினார். மூவரும் உள்ளே வந்தனர்.
சிறிய அறிமுகத்துடன் ‘உங்களுக்கு அதிர்ச்சியான விடயத்தை சொல்லும் கடமை என்மேல் திணிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த சோபாவில் அமருங்கள்” என கூறிவிட்டு சிறிது இடைவெளிவிட்டு காஞ்சனா இருக்கையில் இருக்கும்வரை காத்திருந்தார்.
இதயத்தில் குருதி உறைந்துவிட வெளிறிய முகத்துடன் பதில் பேசாது சோபாவில் அமர்ந்தாள் காஞ்சனா.

சோபாவில் அமர்ந்ததும் ‘உங்களது கணவர் மோகனசுந்தரம், சீனாவுக்கு சென்றாரல்லவா? அவர் சென்ற மலேசியவிமானம் போயிங் 370 காணாமல் போய்விட்டதால் உங்களுக்கு அறிவிக்கும்படி எமக்கு மலேசிய விமானச் சேவை நிறுவனம் மூலம் தகவல் வந்துள்ளது. உங்களுக்கு கோலாலம்பூர் செல்ல அவர்கள் அனுப்பிய விமானச்சீட்டு மற்றும் ஹோட்டல் வவுச்சர் எல்லாம் எம்மிடம் உள்ளது.’- என்றார்.

‘உண்மையாகவா’ என்பதைத் தவிர எல்லா வார்த்தையும் அவளுக்கு ஆங்கில மொழியில் மறந்து விட்டது. மீண்டும் குருதி ஓடத்தொடங்க அவள் முகத்தில் வெளிறிய தோற்றம் மாறி இயற்கையான சிவந்த கன்னக்கதுப்புகள் மீண்டன.

வந்தவர்கள் முன் சோகத்தை முகத்தில் காட்டவேண்டுமென்பதற்காக பாட்டி இறந்த நாள் நினைவை மனதில் வரவழைப்பதற்கு முயன்றாள்.

வயலுக்கு சென்றபோது பாம்பால் கடிக்கப்பட்டபோது கடித்த புடையன் பாம்பை கைத்தடியால் அடித்து கையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து இரண்டாவது நாளில் வைத்தியசாலையில் இறந்த பாட்டி ஒரு வீரங்கனையாக இறந்தது நினைவுக்கு வந்தது. கண்ணீரை வரவழைக்க முடியவில்லை. பாட்டா அவள் பிறக்க முன்பே இறந்துவிட்டார். பெற்றோர்கள் எல்லோரும் உயிருடன் கனடாவில் இருக்கிறார்கள்.

யாரை நினைத்து சோகத்தை வரவழைப்பது?

ஒரே ஒரு சோகமான நினைவு வந்து கண்ணீர் விழியோரத்தில் சூடாக நனைத்தது.
சிறுவயதில் சினேகமாக ஒன்றாக பாடசாலை போய்வந்த பக்கத்து வீட்டு மதியின் நினைவு வந்தது. அவனது மரணம் பரிதாபகரமானது . விடுதலைக்காக ஒரு இயக்கத்தில் சேர்ந்த அவனை, மற்ற இயக்கத்தினர் தலையை வெட்டி அவனது வீட்டுக்கு முன்பாக உள்ள தபால்பெட்டியில் இரவில் வைத்துவிட்டு சென்றதும், அதிகாலை சுவாமி படத்தில் வைப்பதற்காக எதிர்வீட்டு வேலியில் இருந்து இரண்டு செவ்வரத்தை மலர்களை பறிப்பதற்காக பாய்ந்து சென்ற அவளை வரவேற்றது கண்ணீரும் இரத்தம் வடிந்தபடி இருந்த மதியின் தலை. கூச்சலுடன் இடி விழுந்த மரமாகி நின்றவளை அம்மா வெளியே வந்து பார்த்துவிட்டு கைத்தாங்கலாக உள்ளே கூட்டிவந்த பின்பு அவள் பலநாட்கள் அறையை விட்டு வெளியேவரவில்லை. வீட்டைச் சுற்றி கத்தியுடன் யாரோ அலைவதாக ஏங்கியபடி நாட்களை எண்ணினாள்.

அவளைப் பொறுத்தவரை இளம் வயதில் சந்தித்த சோகமான நிகழ்வு. மதியை அவள் அந்தரங்கமாக காதலித்தது அவனுக்கு கூடத் தெரியாது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாத சுமையாக மட்டுமல்ல கண்ணீரால் அழுது கரைக்க முடியாத சோகமது. கண்ணீரை அணை கட்டி சோகத்தை தனக்குள் தேக்குவதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை. பலநாட்களாக என்ன நடந்தது என்று கேட்ட அம்மாவிடம் வயிற்றுக்குள் குத்துகிறது எனச் சொல்லிக்கொண்டு மறைந்து வீட்டின் மூலைகளிலும் கதவு இடுக்குகளிலும் கரப்பான் பூச்சியாகிய நாட்கள் நினைவுக்கு வந்தபோது, கவ்விய சோகத்தை உருக்கி மழைக்கால ஆறாக்கினாள். காஞ்சனா கண்ணீரை பொல பொல என உதிர்த்தாள்.

அவளது கண்களைப் பார்த்துக்கொண்டு பொலிசாரும் சுங்க உத்தியோகத்தவரும் வார்த்தைகளை மறந்து ஊமைகளாகினார்கள்.

தங்கை சீதாவிடம் தொலைபேசியில் அவசரமாக மலேசியா போவதாகவும் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு குறைந்த அளவு உடைகளுடன் ஒரு பேக்கை எடுத்துக்கொண்டு பொலிஸ் வாகனத்தின் பின் ஆசனத்தில் சுங்க அதிகாரியின் பக்கத்தில் அமர்ந்தபடி இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் குறும்செய்தியை அனுப்பினாள்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் உமாவால் பாடசாலையில் படிக்கும் மலரை பார்த்துக்கொள்ளமுடியும். ஏதாவது தேவையெனில் சித்தியின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இனி செய்யவேண்டியதை மட்டும் நினைத்தாள். காஞ்சனா தனது வேலைத்தலத்திற்கு செய்தியை அனுப்பிவிட்டு விமானத்தில் ஏறி கோலாலம்பூர் வந்துவிட்டாள்.

முதல்முறையாக தனியாக பயணித்தாலும் கோலாம்பூரில் மிகவும் இலகுவாக இருந்தது. ஏற்கனவே அரசாங்கத்தால் ஹோட்டல் பதிவு செய்யப்பட்டிருந்து. தொலைபேசியில் மலேசிய விமான நிறுவனத்தினர் தொடர்பு கொண்டனர். முக்கியமான தகவல் வந்தால் தொடர்பு கொள்வோம் என வலியுறுத்தி சொன்னார்கள்.

ஆரம்பநாட்களில், விமான நிலயத்திற்கும் மலேசியா தகவல் தொடர்பு அமைச்சுக்கும் போய் வந்தாள். அங்கு தங்களது உறவுகளை தொலைத்த உறவினர்களின் கண்ணீரும் கம்பலையும் அவளை குறுகுறுக்க வைத்தது. இவர்கள் உண்மையில் தங்களது உறவுகளை மிகவும் நேசித்து இருக்கவேண்டும். இவ்வளவு நாட்கள் தொடர்ந்து அழுவது இவர்களால் எப்படி முடிகிறது? முக்கியமாக சீனமக்கள் பேசியபடி அழுதார்கள். மொழி புரியாது விட்டாலும் அவர்களது கண்ணீர் இதயத்தை அறுப்பதுபோல் இருந்தது. காஞ்சனாவால் அழமுடியாததால் ஏற்பட்ட குற்ற உணர்வு சிவப்பு விளக்காகியதால் விமானநிலையம்; மற்றும் தகவல் அமைச்சிற்கோ செல்வதைத் தவிர்த்தாள.;

நான் ஏன் இங்கு வந்திருக்கவேண்டும்? விமானச் சீட்டை புறக்கணித்து அவுஸ்திரேலியாவில் இருந்திருக்கலாம.; உயிர் உள்ளபோது என்னை நேசிக்காத மனிதனின் உடலை எதற்காக தேடவேண்டும்? ஏற்கனவே என்னில் மட்டுமல்ல பிள்ளைகளிலும் பாசமற்ற உடலாக மட்டும் உலாவிய மனிதனுக்காக நான் ஏன் நாடகமொன்றை ஆடவேண்டும்?
—-
கடந்த ஒருவருடமாக மோகனசுந்தரம் இரண்டு பெண்பிள்ளைகளின் தகப்பனாக நடந்து கொள்ளவில்லை. மூத்தவள் உமா தீவிரமாகப் படித்து மருத்துவத்துறையில் தேர்வாகி மொனாஷ் பல்கலைக்கழகம் செல்வதற்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் அந்த விடயம் நடந்தது. அவளது கழுத்தில் சிறிதாக தெரிந்த கட்டியை வைத்தியரிடம் காட்டியபின் கான்சராக கருதப்பட்டது அந்தக்கட்டி வெட்டி எடுத்தபின்பு மாதக்கணக்கில் வைத்தியம் தொடர்ந்தது. காஞ்சனா – இளையவள் மலரை பாடசாலையில் கொண்டு சென்றுவிட்டு பின்பு வைத்தியசாலைக்கு சென்று உமாவின் கான்சர் வைத்தியம் மாதக்கணக்கில் தொடர்ந்தபோது மோகனசுந்தரத்தின் ஒத்துழைப்போ , கவலையே இருந்தாக தெரியவில்லை. சீதாவும் அவளது கணவர் ரஞ்சித்தும் துணையாக இருந்ததால் பல விடயங்கள் செய்யமுடிந்தது. அவர்கள் இல்லையெனில் மனநிலை கலங்கிப்போயிருப்பாள்.

பலதடவை ரஞ்ஜித்தான் சின்னவள் மலரை பாடசாலைக்கோ விளையாட்டு மைதானத்துக்கோ கூட்டிசெல்வது வழக்கம். இதற்கு அப்பால் சீதா இரண்டு குடும்பத்திற்கும் சமைத்து தருவதுமாக வாழ்க்கையோடியது.

இக்காலத்தில் மோகனசுந்தரம் அவன் ஈடுபட்டிருக்கும் ‘அம்வே” வியாபாரத்திற்கு செல்வதாக பல நாடுகள் சுற்றிக்கொண்டிருந்தான். இக்காலத்தில் கணவன் செய்த உருப்படியான விடயம் வீட்டில் பாதுகாப்பு கமரா பொருத்தி அதை தனது கைத்தொலைபேசிக்கு இணைத்தது மூலம் வீட்டை பாதுகாத்தது மட்டும்தான்.

காஞ்சனாவிற்கு வீட்டின் பாதுகாப்பு பற்றிய கவலை இல்லாமல் வீட்டை மூடிவிட்டு செல்ல அவளால் முடிந்தது. கணனித்தொழில் பயிற்சியில் பட்டம் பெற்ற மோகனசுந்தரத்திற்கு இது பெரியவிடயமில்லை. ஆனாலும் அம்வே வியாபாரம் என நாடுகள் சுற்றும் அவன் செய்தவிடயத்தை பாராட்டவேண்டும். இருபதுவருட திருமண உறவில் பலவிடயங்களை பார்த்தும் பார்க்காமலும் இருந்ததால் குடும்பச்சக்கரம் சுழன்றது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு மோகனசுந்தரம் வேலைபார்த்த கம்பியூட்டர் கம்பனி இழுத்து மூடப்பட்டபோது தனியாக தொழில் நடத்துவதாக நண்பன் ஒருவனோடு ஆரம்பித்த வியாபாரம் பல்லாயிரக்கணக்கில் பணத்தை விழுங்கிவிட்டு படுத்துவிட்டது. நண்பனது கவனக்குறைவு எனக்காரணம் சொன்னாலும் குடும்பத்தின் சேமிப்பை மூலதனமிட்டு நகரின் மத்தியில் வாங்கியிருந்த அபாட்மெண்டை விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது என்று காஞ்சனா ஆறுதல் அடைந்தாள். ஐந்து நாட்கள் வேலைசெய்த காஞ்சனா ஏழு நாட்கள் வேலைசெய்வதன் மூலம் வீட்டின் பொருளதாரம் சீரடையத்தொடங்கியது. உமா முற்றாக கான்சர் குணமடைந்து பல்கலைக்கழகம் சென்றுவந்தாள்.

ஒரு நாள் சனிக்கிழமை அதிகாலையில் பிள்ளைகள் படுக்கையில் உறங்கும் நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவுடனே மோகனசுந்தரம் கேட்டவார்த்தையொன்று காஞ்சனாவை நிலைகுலைய வைத்தது.

‘இனிமேல் ரஞ்ஜித் உதவி செய்யவென்று வரமாட்டான்தானே?’

நெருப்புத்தணலை மிதித்ததுபோல் அவள் நிலைகுலைந்தாள்.

என்ன மனிதன் ? இவனுடன்தானா இவ்வளவு காலம் படுக்கையில் ஒன்றாக படுத்து குடும்பம் நடத்தினோம்?. அன்பு பாசம் என கொட்டிக்கொடுத்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தேனே?
திருப்பி பதில் பேசாது படுக்கையறைக்குள் சென்று தன்னைத் தயாராக்கிக்கொண்டு வேலைத்தலத்துக்கு போய்விட்டாள். அன்றிலிருந்து ஒரு படுக்கையில் படுத்தாலும் விலகி இருந்தாள்
ஒருவிதமாக வைத்தியத்தில் உமா குணமடைந்து பல்கலைக்கழகம் செல்லுவதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடும் காலத்தில் ஒரு நாள் அதிகாலையில் எழுந்து வங்கிக் கணக்கைப் பார்ப்பதற்காக கம்பியூட்டரைத் திறந்தபோது மோகனசுந்தரத்தின் முகநூல் அறிவிப்பு செய்தியாக வந்திருந்தது. முகநூலை திறந்தபோது அதில் தொடர்ச்சியாக ஒரு பெண்ணின் படமும் அதில் எழுதப்பட்ட விடயங்களும் மோகனசுந்தரத்தின் உறவுகளை வெளிப்படுத்தியது. அந்தப் பெண் பிலிப்பைன்ஸில் இருந்தாள்.

இந்த விடயத்தைக் கேட்டு சண்டை பிடிப்பதனால் என்ன பிரயோசனம் என்பதை நினைத்தாள். அவன் ஒத்துக்கொண்டு மன்னிப்புக்கேட்கலாம். இல்லை. இது அப்படியான தொடர்பு இல்லை என மறுக்கலாம். ஏற்கனவே பிரிந்த உறவில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதையிட்டு விவாகரத்து செய்வது எப்படி என கடுமையாக யோசித்;தாள். இக்காலத்திலே மோகனசுந்தரம் சீனாவிற்கு புறப்பட்டான்.
——

கோலாலம்பூரில் இருந்தபடி இந்த விமானவிபத்தில் ஏற்பட்ட நன்மைகளை நினைத்தாள். மிகவும் செலவுடனான விவாகரத்துக்கும் போகத் தேவையில்லை. பிள்ளைகளுக்கு எங்கள் பிரிவால் ஏற்படும் மனக்கசப்பு தேவையில்லை. சொத்துகள் பிரிக்கவோ அல்லது சமூகத்தில் தேவையற்ற அவப்பெயர் தேவையில்லை என நினைத்து சந்தோசத்தடன் கோலாலம்பூரில் ஷொப்பிங் செய்தாள். இரட்டைக்கோபுர பெற்றோனாவில் ஏறி ஐஸ் கிறீம் குடித்துவிட்டு அங்கு தலையை அலங்கரித்து சிறிதாக தெரிந்த நரைத்த தலைமயிர்களுக்கு சாயமிட்டாள். கால்நகங்களை ஓழுங்காக்கி மெருகூட்டினாள். பலவருடங்களாக தன்னை கவனிக்கவில்லை என குறைப்பட்டுக்கொண்டு காஞ்சனா உள்ளத்தில் பதினெட்டுவயதான பெண்ணைப்போல நினைத்து உள்ளத்தை காற்றாடியாக மிதக்கவிட்டாள்.

மலேசிய விமான நிறுவனத்திடமிருந்து அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு கரையில் விமானம் தேடப்படுவதாக அறிவித்தபடியால் மெல்பன் வந்து மீண்டும் பேர்த்துக்கு தனது பணத்தில் சென்றாள்.
ஏன் பேர்த் வந்தேன்? என்ற கேள்விக்கு அவளால் விடைகாணமுடியவில்லை. மோகனசுந்தரத்தின் உடல் கிடைக்காமல் இருக்க வேண்டும் என தனது ஹோட்டலில் இருந்தபடி பிரார்த்தித்தபடி தேடுதல் முயற்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தாள். மழையும் புயலும் வந்த ஒருநாள் தேடுதல் முயற்சி கைவிடப்பட்ட அன்று மிகவும் குதூகலத்துடன் இருந்தாள். ஒரு கிழமையின் பின்பு தேடல் விடயங்கள் கைவிடப்பட்டதும் தனது பிரார்த்தனை நிறைவேறியதாக எண்ணியபடி மீண்டும் மெல்பன் வந்தாள்.

இளம் காலை நேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டுத் தலைநகரான மணிலாவின் அருகாமையில் உள்ள கடற்கரையில் லிடியாவின் மடியில் சாய்ந்தபடி மோகனசுந்தரம் கைத்தொலைபேசியை எடுத்து சுவிச் பண்ணியபோது சந்தோசமாக தனது வேலைக்கு சென்று கொண்டிருந்த காஞ்சனாவின் உருவம் தெரிந்தது.

‘வேசை, இரண்டு வருடமாக முயற்சித்துவருகிறேன். தப்பி விடுகிறாள். ரஞ்ஜித்தோடு கட்டிலில் படுத்திருக்கிறதை ஒரு நாள் படமாக இந்தத் தொலைபேசியில் எடுக்கத்தான் போறேன்’ என்றான் தமிழில்.

‘என்ன டார்லிங் சொன்னீர்கள்’ என்றாள் லிடியா ஆங்கிலத்தில்.

‘ஒன்றுமில்லை. உன் பல்வரிசைகள் இன்று மிக அழகாகத் தெரிகிறது” என கட்டியணைத்தான்.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.