கடலின் அக்கரை போனவர்களின் கனவுகள் ஆயிரம்

Boat People
முருகபூபதி

ஒருநாள் குளிர் காலைப்பொழுது. மெல்பன் நகரிலிருந்து விமான நிலையத்திற்கு பிரிஸ்பேர்ண் சென்ற மனைவியை அழைத்துவருவதற்காக பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன். மனைவி பிரிஸ்பேர்ணிலிருந்து மெல்பனுக்கு புறப்படுவதற்கு முன்னர் எனது கைத்தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டாள்.
தான் விமானம் ஏறிவிட்டதாக தகவல் சொன்னாள். நானும் மெல்பன் விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருப்பதாக சொன்னேன்.

இந்த உரையாடல் சில கணங்களில் முடிந்து எனது கைத்தொலைபேசியை அணைத்தபொழுது எனக்கு முன்னாலிருந்த ஒரு பத்து வயதுச்சிறுமி என்னைப்பார்த்து நீங்கள் தமிழா? எனக்கேட்டாள். நான் திடுக்கிட்டுவிட்டேன். முகத்தில் புன்னகையை உதிரவிட்டவாறு ஓம் என்றேன்.

அவள் அருகில் சுமார் ஏழுவயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்தான் அதற்குப்பதில் சொல்லுமாப்போல் நாங்களும் தமிழ்தான் என்று கீச்சுக்குரலில் சொன்னான்.
அந்தக்குழந்தைகளுக்கு என்னுடன் உரையாடவேண்டும் போலிருந்ததை அவர்களின் பரவசமான முகம் காண்பித்தது.
எனக்கு ஓரளவு புரிந்துவிட்டது.

இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள் ? எனக்கேட்டேன்.

ஸ்கூலுக்குப்போகிறோம் என்றும் தாங்கள் தங்களது பெற்றோர்களுடன் அவுஸ்திரேலியாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் படகில் வந்ததாகவும் சொன்னார்கள்.
அந்தக்குழந்தைகளின் உருவமும் வெளிப்படையான குரலும் என்னை நெகிழச்செய்துவிட்டன.
இலங்கையில் மட்டக்களப்பிலிருந்து வந்திருப்பதாகவும் தாய் தந்தை 3 வயதில் ஒரு தம்பி தங்களுடன் சேர்த்து மொத்தம் ஐந்துபேர் என்றும் சிறிதுகாலம் டார்வின் மாநிலத்தில் ஒரு தடுப்புமுகாமில் தங்களை வைத்திருந்ததாகவும் தற்பொழுது வெளியே விட்டிருப்பதாகவும் அருகில் புரோட்மெடோஸ் என்ற நகரத்தில் ஒரு வீட்டில் இருப்பதாகவும் படகுப்பயணத்தில் கடலில் இருபத்தியொரு நாட்கள் கழிந்ததாகவும் அந்தச்சிறுமி அழகிய தமிழில் சொன்னாள்.
எனக்கு அவள் பேசப்பேச மனதுக்குள் இனம்புரியாத கலக்கமும் பச்சாதாபமும் ஊறத்தொடங்கியது. தொண்டையும் அடைத்தது.
அவள் – அடுத்து என்னிடம் கேட்ட கேள்விக்குப்பதில் சொல்லத்தெரியாமல் ஒரு கணம் திணறிப்போனேன்.
எங்களை இங்கே தொடர்ந்து இருக்க விடுவாங்களா? எனக்கேட்டாள்.
அதைப்பற்றி இப்பொழுது யோசிக்க வேண்டாம் அம்மா. உங்களுக்கு இருப்பதற்கு வீடும் கொடுத்து அம்மா அப்பாவுக்கு செலவுக்கும் பணம் தருகிறார்கள்தானே அதனால் எந்தக்கவலையும் இல்லாமல் நன்றாகப்படியுங்கள். நீங்கள் நன்றாகப்படித்தால் அதுபோதும்.
– எனச்சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் படிக்கும் பாடசாலை பற்றி கேட்டேன். பாடசாலை நன்றாக இருப்பதாகவும். சில சினேகிதர்கள் கிடைத்திருப்பதாகவும். ஆனால் அவர்கள் பேசும் ஆங்கிலத்தை உடனடியாக புரிந்துகொள்வதுதான் சிரமம் என்றும் அந்தச்சிறுமி சொன்னாள்.
எல்லாம் போகப்போக சரியாகிவிடும். நன்றாகப் படியுங்கள். பஸ் பயணங்களில் கவனமாக இருக்கவேண்டும். ஏறும்பொழுதும் இறங்கும்பொழுதும் தெருவைக்கடக்கும்பொழுதும் அவதானம் தேவை – என்று ஒரு காலத்தில் சுமார் 20 வருடங்களின் முன்னர் எனது குழந்தைகளுக்குச் சொன்னதைச்சொன்னேன்.
அவர்கள் இறங்கவேண்டிய இடம் வந்ததும் எழுந்து – நாங்க வாரோம் அய்யா எனச்சொல்லிவிட்டு விடைபெற்றார்கள்.
அந்தக்காலைப்பொழுதில் குளிர்காற்றுடன் அந்தக்குழந்தைகள் எனக்கு கையசைத்துக்கொண்டு சென்ற காட்சி இன்னும் மனக்கண்ணில் படிந்திருக்கிறது.
ஆனால் – அந்தச்சிறுமி என்னிடம் கேட்ட அந்தக்கேள்விக்கு மாத்திரம் எனக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.
அதே கேள்வியுடன்தான் நானும் என்னைப்போன்று இந்த கடல் சூழ்ந்த கண்டத்துக்கு வந்த ஆயிரமாயிரம் பேரும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்தோம்.
எங்களை இங்கே இருக்கவிடுவார்களா? மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வி.
ஒரு காலத்தில் இந்தியவம்சாவளி மக்களை ‘கள்ளத்தோணி’ என்று ஏளனம் செய்தவர்கள் இருந்தார்கள். நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு காட்சியில் இப்படி ஒரு வசனம் — “என்னை கள்ளத்தோணி…..கள்ளத்தோணி….. எண்டு சொல்றாங்க…… நான் கடலையே பார்த்ததில்லீங்க”
காலம் சுழன்றது.

இலங்கையில் போரின் உக்கிர தாண்டம் தொடங்கியதும் தமிழ் மக்கள் படகுகளில் இராமேஸ்வரம் தனுஸ்கோடி கீழக்கரை மார்க்கமாக தமிழ்நாடு மண்டபம் முகாமுக்கு ஆயிரக்கணக்கில் சென்றார்கள்.

காலம் மீண்டும் சுழன்றது.

முப்பது ஆண்டுகாலப்போர் முடிவுக்கு வந்தபின்னரும் மக்கள் படகுகளில் ஏறினார்கள். இந்தியாவுக்கு அல்ல. அவுஸ்திரேலியாவுக்கு.
படகுகளில் அவர்கள் வந்த மார்க்கம் மலேசியா இந்தோனேசியா.
ஆனல், இவர்களை எம்மவர் போன்று கள்ளத்தோணி என்று சொல்லாமல் Boat People என்று நாகரீகமாக இங்குள்ள வெள்ளை இனத்தவர்களும் இந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்களும் அழைக்கின்றனர்

எனது அப்பாவும் ஒரு காலத்தில் அதாவது 1940 களில் தமிழ்நாடு பாளையங்கோட்டையிலிருந்து சில நண்பர்களுடன் ‘தோணி’ ஏறித்தான் புத்தளம் கற்பிட்டியில் கரையொதுங்கினாராம்.

அமெரிக்காவையும் கியூபாவையும் அவுஸ்திரேலியாவையும் கண்டு பிடித்தவர்களும் படகுகளில் வந்தவர்கள்தான்.
இந்தியாவிலிருந்து தனது தோழர்களுடன் இலங்கை வந்த விஜயனும் படகில்தான் பயணித்தான். கடலோடிகள் கண்டுபிடித்த நாடுகள்தான் அநேகம்.
சுமார் 227 ஆண்டுகளுக்கு முன்னர் கப்டன் குக் என்பவர் படகொன்றில்வந்து கண்டு பிடித்த கண்டம்தான் இந்த அவுஸ்திரேலியா. இங்கிலாந்திலிருந்து குற்றவாளிகளை படகில் ஏற்றிவந்து இறக்கும் தேசமாக இருந்த இந்த கங்காரு நாட்டை கைதிகள் கண்டடைந்த நாடு எனவும் சொல்வார்கள். இன்று இந்தப்பெரிய தேசம் பல் தேசிய இனங்கள் சங்கமித்த பல்லின கலாசார நாடாக மாறிவிட்டது.

நான் அன்று காலைப்பெழுதில் சந்தித்த அந்த இரண்டு குழந்தைகளும் இந்த இனங்களுக்குள் இணைந்துவிட்டார்கள்.

கடந்த சிலவருடங்களுக்குள் நூற்றுக்கணக்கான படகுகள் அவுஸ்திரேலிய கடல் பிராந்தியத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து பதவியிலிருந்த லேபர் மற்றும் தற்பொழுது பதவியிலிருக்கும் லிபரல் அரசுகளுக்கு பெரிய தலையிடியாகிவிட்டது. இங்கு அனைத்து ஊடகங்களிலும் மிக முக்கிய செய்தியாகிவிட்டது இந்த படகு மக்கள் விவகாரம்.
தேர்தல் காலத்தில் பிரசாரத்துக்கும் இந்தப்படகு மக்களின் பிரச்சினையும் பேசுபொருளாகியது.
இலங்கைக்கும் மலேசியா இந்தியா இந்தோனேஷியாவுக்கும் இது பாரிய பிரச்சினையாகிவிட்டது.
அவுஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இந்த அகதிகள் விவகாரம் வாதப்பிரதிவாதமாகியுள்ளது.

படகுகளில் வந்தவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருந்து அவர்களை விசாரிக்க குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளை மேலதிகமாக நியமித்துள்ள அவுஸ்திரேலியா அரசு, நாட்டுக்குள் ஏராளமான இலங்கைத்தமிழர்கள் வந்தமையினால் தமிழ்-ஆங்கில மொழி பெயர்ப்பாளர்களையும் அதிகாரிகளுடன் அந்த முகாம்களுக்கு அழைத்துச்செல்கிறது.
சில வருடங்களுக்கு முன்னரும் இப்படித்தான் ஒரு படகில் சுமார் 83 இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வந்துவிட்டார்கள். அவர்களும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டார்கள். நான் வசிக்கும் மெல்பனிலிருக்கும் சில மனித உரிமை அமைப்புகள், இங்குள்ள குடிவரவு திணைக்கள வாயிலில் ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த இளைஞர்களுக்கு இந்த நாட்டிற்குள் வருவதற்கு அரசு அனுமதிக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. அதில் நானும் பல சிங்கள தமிழ் அன்பர்களும் கலந்துகொண்டோம். தடுத்துவைக்கப்பட்ட அந்த இளைஞர்களுக்காக தமிழ்த்திரைப்பட சி.டி.க்களும் தமிழ் பத்திரிகை, இதழ்கள், புத்தகங்களும் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஊடாக கொடுத்து அனுப்பினேன்.

அரசுக்கு பலதரப்பிலும் விடுக்கப்பட்ட அழுத்தத்தினால் அந்த இளைஞர்களுக்கு இந்த நாட்டுக்குள் வருவதற்கும் இந்த நாட்டு வதிவிட உரிமை கிடைப்பதற்கும் அனுமதி கிடைத்தது.
அவர்களில் சிலரைச்சந்தித்துமிருக்கின்றேன். நான் அங்கம் வகிக்கும் ஒரு மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச அகதிகள் வாரம் ஒன்றில் அந்த இளைஞர்களுக்காக ஒரு வரவேற்பு இராப்போசன விருந்தையும் இசை நிகழ்ச்சியையும் ஒழுங்கு செய்தது. ஆனால் – விரல் விட்டு எண்ணக்கூடிய இளைஞர்கள்தான் வந்தார்கள்.
வராதவர்கள் சொன்ன காரணம் “ நாம் இப்போது அகதிகள் இல்லை”
எனக்கு, ‘ஆறு கடக்கும் வரைதான் அண்ணன், தம்பி கதை’ தான் ஞாபகத்துக்கு வந்தது.

குறிப்பிட்ட 83 தமிழ் இளைஞர்களுக்கும் இந்த நாடு அகதி அந்தஸ்து கொடுத்து இங்கு வாழ்வதற்கும் அனுமதித்தபின்னர், ஆட்களை படகுகளில் கடத்தும் வியாபாரிகள் அதிகரித்தனர்.
இலங்கை – இந்தியா உட்பட சில நாடுகளிலிருந்தும் உயிரைப்பணயம்வைத்து வந்தவர்களில் நான் அன்று சந்தித்த இரண்டு குழந்தைகளும் அடக்கம்.
கொலம்பஸ்ஸ_ம் வாஸ்கொட காமாவும் இபுண் பட்டூடாவும் கப்டன் குக்கும் இப்படித்தான் ஒரு காலத்தில் உயிரைப்பணயம் வைத்து வந்து நாடுகளை கண்டு பிடித்திருப்பார்கள்.
அவர்கள் காட்டிய வழியில் வந்தவர்கள் நடந்து உருவாக்கிய ஒற்றையடிப்பாதைகள்தான் இன்று பெரிய வீதிகளாகவும் அகலப்பாதைகளாகவும் துரிதகதி ஓட்டத்துக்குரிய Free Way களாகவும் எமது பயணத்திற்கு உதவுகின்றன.
அவ்வாறு முன்னொரு காலத்தில் இந்தக்கண்டத்துக்குள் வந்தவர்கள் சுமந்து வந்த கனவுகள் ஆயிரம். அவற்றில் எத்தனை நனவாகின என்பது அவரவர்க்கே வெளிச்சம்.
எங்களை இங்கே இருக்க விடுவாங்களா? என்ற அந்தக்குழந்தைகளின் அந்தப்பெறுமதியான ஆயிரம் கனவுகளுடன் இணைந்த கேள்வியைத்தான் தடுப்பு முகாம்களுக்குள் இருப்பவர்களும் தற்காலிக விசா அடிப்படையில் வெளியே விடப்பட்டு அரச உதவியுடன் பராமரிக்கப்படுபவர்களும் தினம் தினம் பொழுது விடிந்ததும் தமக்குத்தாமே கேட்டுக்கொள்வதுடன் பிறரைச்சந்திக்கும் பொழுதும் கேட்டுக்கொள்கிறார்கள்.
பல நாட்கள் உப்புக்காற்றை சுவாசித்தவாறு உயிரைப்பணயம் வைத்து அரைகுறை உணவுடன் உறக்கம் இன்றி படகிலே வாந்தியும் எடுத்து கரையை தொடுவோமா என்று ஏக்கப்பெருமூச்சுவிட்டவாறு கடவுளே எங்களை காப்பாற்று என்ற ஓயாத ஓலத்துடன் வந்து சேர்ந்தவர்களின் கனவுகள் ஆயிரம்தான்.
அந்தக்காலைப்பொழுதில் பாடசாலைக்குச்செல்லும்பொழுதும் அந்தக்குழந்தையிடம் கல்வி பற்றிய சிந்தனையை விட தொடர்ந்தும் இங்கே இருக்கமுடியுமா என்ற சிந்தனைதான் அதிகமாக இருந்தது.

விடைதெரியாத அந்தக்கேள்வியை நானும் ஒரு காலத்தில் ஆயிரம் கனவுகளுடன் கடந்து வந்திருக்கின்றேன்.
அதுபோன்று அந்தக்குழந்தைகளும் அந்தக்கனவுகளைக்கடந்து வேறு கனவுகளை சுமக்கும் காலம் வரவேண்டும்.
அந்தக்குழந்தைகள் தமது பெற்றோருடன் படகில் வந்த பாதையை மறக்கமாட்டார்கள். அதனால் அவர்கள் செல்லும் பாதை இருட்டாக இருக்கமாட்டாது எனத்திடமாக நம்புகின்றேன்.
—0—
(நன்றி : யாழ்ப்பாணம் ஜீவநதி (ஜூன்2014) இதழ்)
பிற்குறிப்பு: அவுஸ்திரேலியாவுக்கு படகில் வந்து அண்மையில் தீக்குளித்து உயிர்துறந்த அகதி இளைஞன் லியோர்சின் சீமான்பிள்ளை நினைவாக இந்தப்பதிவு)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: