ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்

கருணாகரனின்
ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்- ஈழத்தமிழர் எதிர்காலத்தை இறந்த காலமாக்காமல் இருப்பதற்கு தொடர்ந்து மறுவாசிப்பு செயயவேண்டியது நூல்
images

நடேசன்

கவிஞர்கள் காலம் காலமாக ஒரு மொழியின் சொந்தக்காரர்கள். அதாவது நிலத்தினை பயிர்செய்யும் விவசாயிபோல். ஒவ்வொரு சமூகத்திலும் மொழியை அவர்கள் உடமையாக வைத்திருப்பதால் அந்த மொழியை பாவிக்கும் சமூகம் அவர்களை நம்பி காலம் காலமாக இருக்கிறது. மற்றவர்கள் அவர்களிடம் இருந்து கடன்வாங்கி மொழியை பாவிக்கிறார்கள்

ஏன் தெரியுமா?

சமூகத்தின் கதையை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது கவிஞர்களேதான். எழுத்து வடிவம் வருமுன்பே வாயினால் பாடினார்கள். நாங்கள் பாணர்கள் என்றோம் ஆங்கிலத்தில் (Bard) என்பார்கள்.

இந்து வேத சுலோகங்கள் மற்றும் ஹீப்ரு மொழியின் பழைய கோட்பாடுகள் என்பன இப்படியாக வந்தவைதான்.
உலகத்தில் முதலாவதாக எழுதப்பட்ட கவிதை வடிவம் என நம்பப்படும் சுமேரியர்களின் Epic of Gilgamesh. களிமண் தட்டுகளில் கி.மு. 2800 இல் இருந்த மொசப்பத்தேமிய மன்னனைப் பற்றிய கதையாகும்
குருட்டுப் பாடகனாக ஹோமர், கிரேக்க மொழி பேசுபவர்களின் இலியட், ஓடிசி என கதைகளை வாயால் சொன்னார். காலம் காலமாக வாய்வழியான பாடல்கள் இதிகாசமாகியது. அதேபோல் பாரத தேசத்து கதைகள் மகாபாரதம் ஆனது.

கதை சொல்லுபவர்கள் கதைகளை தாள லயத்திற்கு ஏற்ப சொல்லுவார்கள். காரணம் கேட்பவர்களுக்கு இனிமையாக இருப்பது மட்டுமல்ல வாயால் சொல்லி காதால் கேட்கும்போது மூளையில் அந்த சொற்கள் இலகுவாக பதிவாகின்றன. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கும்போது கேட்பவர்களுக்கு இது புரியும்.
பிற்காலத்தில் எழுத்து வடிவம் வந்ததால் மனமகிழ்விற்கு பாடும் பாடல்கள் ஒரு பகுதியாகவும், கதை சொல்லும் கவிதைகள் வேறாகவும் உருவாகின. இவைகளே நம் இதிகாசப் பாடல்கள்

பிற்காலத்தில் கதைசொல்லுவதற்கு நாடகம் மற்றும் நாவல் வடிவங்கள் தற்பொழுது சினிமா என்றாகிவிட்டதால் கவிதைகள் இலக்கிய வடிவத்தின் கூறுகளான படிமம்(Allegory) , முரண்ணகை (Irony) , பொருள்மயக்கம் ((Ambiguity) என்பவற்றைக் கொண்;டு மற்றைய இலக்கியவடிவமான நாடகம், நாவலோடு சேர்ந்து விடுகிறது.

தற்காலத்தில் பாடல்கள் சந்தங்களுடனும்,  கவிதைகள் மவுனமான வாசிப்பிற்காகவும் படைக்கப்படுகின்றன. இதுவே பாடலாசிரியர்கள் கவிஞர்கள் என இரு வகையினர் நம்மிடையே இருப்பதன் காரணம்.

டி.எஸ் எலியட் அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் பலகாலம் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்ஷியப் புரட்சி நடந்தது ( இதை புரட்சி என சொல்லமுடியாது: ரஷ்ய மன்னன் ஏற்கனவோ பராளுமன்றத்திடம் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது) அங்கு ஏராளமானவர்கள் உயிர்க் கொலை செய்யப்பட்டதுடன் பலர் பட்டினியாலும் மாண்டார்கள்.

பியதோர் தாஸ்தாவெஸ்கியின் (Fyodor Dostoevsky)) மனைவி ஏழு நாட்கள் உணவு இல்லாமல் இருந்து பின் எதிர்பாராமல் கிடைத்த பாணைத்தின்று பின்பு தண்ணீரை குடித்ததால் வயிறு வீங்கி உயிர் இழந்தார்;.
டி . எஸ் எலியட்;டைப் பொறுத்தவரை ரஷ்ஷியாவில் தொடங்கிய வன்முறையின் அனல் ஐரோப்பாவையும் கருக்கிவிடும் என்ற காரணத்தால் மனம் வெம்பினார். அதனது விளைவே அவரது புகழ்பெற்ற பாடல் பாழ்நிலம் (Wasteland) உண்மையாகவே மனிதர்களை நேசிக்கும் அந்தக்கவிஞர் எழுதியது இந்தக்கவிதை:

APRIL is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing
Memory and desire, stirring
Dull roots with spring rain.
Winter kept us warm, covering 5
Earth in forgetful snow, feeding
A little life with dried tubers.

அந்தக் கவிதையில்
இலண்டன் பாலம் விழுகிறது (London bridge is falling down. falling down Falling down))
இதில் கேர்புரங்கள் சாய்கின்றன

ஜெருசலோம் ஏதென்ஸ் அலக்ஸாண்ரியா
வீயன்னா இலண்டன்…

இவரது அந்தக்கவிதையில் புராதன மனித நாகரீகத்தில் உன்னத நகரங்களான ஜெருசலேம் ஏதென்ஸ் அலக்ஸாண்ரியாபோல் லண்டனும் வீயன்னாவும் அழியப்போகிறது என அவர் கவலைப்படுகிறார்
இறுதியில் சமஸ்கிருதமொழியில் சாந்தி சாந்தி என முடிக்கிறார்.

வன்முறையின் விளைவுகளை பார்த்து உள்வாங்கியதால் டி .எஸ் எலியட் கண்ணீரால் எழுதிய வரிகள் அவை.
இலங்கையில் வன்னியில் யுத்த அழிவினால் ஏற்பட்ட பாழ்நிலத்தை பாடியவர் கவிஞர் கருணாகரன். அவரது ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்

கவிதை நூல். இதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் யுத்த காலத்தில் அங்காங்கு வெளிவந்தன. அதே வேளையில் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் வாழ்ந்த சாட்சியாகவும் அவரது கவிதைத்தொகுப்பு அமைந்துள்ளது. அங்கு நீடித்த போரை – ஹபிள் ரெலஸ்கோப்பால் (Hubble telescope) பார்த்த மற்றவர்களில் இருந்து அவர் முற்றாக வேறுபடுகிறார்.

நூலை என் மேசையில் வைத்துவிட்டு பல நாட்களுக்கு பின்பாக சில பக்கங்களை பார்த்தபோது சில வரிகள் எனது மனதில் ஊசிபோல் ஊடுருவின.

இந்தக் கவிதைகளில் எதுகை மோனை சந்தம் என்று எதுவுமில்லை. ஆனால் வன்னி மண்ணில் நடந்த போரின் அழிவுகள் நிழல்களாக படிந்திருந்தது. தாய்மாரின் கண்ணீரிலும் குழந்தைகளின் குருதியிலும் தோய்ந்;து எழுதிய சரித்திரம் எனது கண்ணில் நிலப்பாவாடையாக விரிந்தது.
போரின்போது இரண்டு தரப்பும் பொய்களை சொல்லியது. கேட்டால் பரப்புரை என்பார்கள்;. மக்களுக்கு எழுதிய பத்திரிகைகள் பார்வையாளராக இல்லாமல் யுத்தத்தின் பங்குதாரராக, பாரதப்போர் கண்ணனாக, ஆயுதம் ஏந்தாத போராளிகளாகினர். பத்திரிகைகளில் போராளிகளதும் அரசாங்கத்தரப்பினதும் சாதனைகளை மட்டும் எழுதியபோது உண்மையை அறியமுடியாத நாம் இலக்கியத்தின் துணையுடன் தேடுவதற்கு இந்தக் கவிதைகள் உதவுகின்றன. அன்னம்போல் பாலை மட்டும் நுகர்வோர்க்கான கவிதைகள் இவை

இந்த கவிதைத் தொகுப்பிற்கு நிலாந்தன் எழுதிய முன்னுரை மிகவும் பெறுமதி வாய்ந்தது.

கருணாகரனின் கவிதைகள் இரு தரப்பினருக்கும் இடையில் சாண்ட்விச்சாக நசிபட்ட மக்களை பிரதிபலிப்பதாக கூறும் நிலாந்தன்; – மேலும் பாண்டவர்கள் பாஞ்சாலியை பணயம் வைத்தது போல் மக்களை வைத்து போர்க்களத்தில் சூதாடியதாகவும் அதேநேரத்தில் அரசாங்கத் தரப்பினர் போர் அரங்கில் மக்களை புண்ணில் இருந்து சீளை பிதுக்கி எடுத்ததாகவும் அந்தப் பின்புலத்தில் இந்த கவிதைகள் பின்னப்பட்டதாகவும் எழுதி இருக்கிறார்.
சமூகம் என்பது ஆடையைப்போல் பல வர்ண நூல்களால் நெசவு செய்யப்படுகிறது. ஆனால் பின் அது அழியும் போது மீண்டும் நூலாக அழிகிறது. நோந்து நூலாகினார்கள் மக்கள் என்பது, போரால் அழிந்த மக்களுக்கு மிகவும் பொருத்தமான படிமம்.

போரால் சிதைந்தவர்களுக்கு இந்தக் கவிதைத்தொகுப்பு மருந்தாக வேண்டுமென்கிறார் நிலாந்தன்.

நூறாண்டுகளின் பேச்சுக்குரல்

எனது கனவுகள்
நூற்றாண்டின் அகாலத்திலா
ஒரு முள்ளில்
சிக்கிக்கொண்ட வரலாறை
எதுவரையில் கொண்டலைவது

இந்த வரிகள் தமிழ் மக்கள்மேல் அவர்களது தலைவர்களால் சுமத்தப்பட்ட சுமையை இறக்கமுடியாமல் கொண்டலையும் இனத்தைப் பற்றி பேசுகிறது . சுமையை தூக்கித்தலையில் வைத்தவர்கள் போய் சேர்ந்துவிட்டாலும் எமது சமூகம் சொந்த ஊரிலும் மட்டுமல்ல நன்றியுடன் இன்னமும் தலையில் சுமந்து கொண்டு அயலூரிலும் அலைவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அதேகவிதையில் மேலும் இரு வரிகள்:

வீரக்கனவுகள் ஒவ்வொரு வீட்டிற்கும் மரணத்தை பரிசளிக்கும்போது
நான் ஒரு சப்பாத்தினுள் நசிந்து கிடந்தேன்
இந்த வரிகள் மக்கள் ஆயுதங்களின் முன்னால் வலிமையிழந்திருப்பதை சொல்லுகிறது.

போர்க்களத்தின் பரிசு

அன்று மயானத்தில் இருந்து திரும்பியவுடன்
இன்னொருசாவுச் செய்தி வந்து அழைத்தது
மறுபடியும் மயானத்துக்கு வருக என்று

யாரும் வீரரில்லை
சாவிற்கு காத்திருக்கும் வாழ்விற்கு முன்னே
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவனின் மனநிலையை குற்றமும் தண்டனையில் மிக அழகாக விவரிக்கிறார். மரணம் நிச்சயமான நிலையில் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வது சாவதற்கு சமனானது.

முதற்காலம்

ஆழற்ற தெருக்கள்
மூடப்பட்ட பள்ளிவாசல்கள்
திறந்தபடியேயான வீடுகள்
வடமாகாணத்தில்; இருந்து இஸ்லாமிய சகோதர்கள் 24 மணிநேரத்தில் விரட்டப்பட்டதை பற்றியது.

ஆய்க்கினை

எதிர்காலம் குறித்த ஒரு சொல்லை ஏற்கமுடியாத வீரத்தினை
முன்னே
நான் ஏறிவேன்
நாயின் மலத்தை இந்த வரலாற்றின் விதி முன்னே
இங்கே நாம் பார்ப்பது கவிஞரின் ரௌத்திரம் கொள்ளும் ஆன்மாவை.

அகாலம்

என்னிடம் முகமூடி செய்யும் நுட்பமில்லை
ஆதனால்
நண்பர்கள் அன்னியர்களாகி விடுகிறார்கள்
அல்லது பகைவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

இந்த வார்தைகளின் அர்த்தத்தை நான் என் சொந்த வாழ்க்கையில் அனுபவிக்கிறேன்.

பனையடி வினை

ஓவ்வொரு பனையாய் முறிகிறாய்
முறிந்த பனைகள் தளிர்ப்பதுண்டோ

யாழ்ப்பாணவாழ்வை நிமிர்ந்த பனையுடன் படிமமாக்கியவை பலரது கவிதைகள், எழுத்துகள். ஏன்… யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் முறிந்தபனையும் இதையேதான் சொல்கிறது. கருணாகரனது உவமானம் அதற்கும் மேல் செல்கிறது.

வன்னி 2008

நாங்கள் கண்ணீரைக் காய்ச்சிக் குடித்தவாறு
ஒரு காலத்தை வளர்த்தோம்
கண்ணீரே பெரும்சுவையானது பலருக்கும்
கசப்பெனும் மது ருசிக்குமல்லவா
அது போல்த்தான்
கண்ணீரும் ருசிக்கத் தொடங்கியது.
நினைப்பே இனிப்பாகிறது பின்பு போதையாகிறது.

அபாயவெளி

கல்லாலாக்கப்பட்ட முகங்களை
முத்தமிடத்துடிக்கும் தாயொருத்தியின் நிழல்
கண்ணீரில் மிதக்கக்கண்டேன்
அப்போது கல்லாக்கப்பட்ட முகங்களிலிருந்து
பீறிட்டெழுந்தது ரத்தம்

மாவீரர்கள் சமாதிகளை தரிசிக்கும் தாய்மார்களை குறித்து இந்த வரிகள்

கடலே காற்றே கொதிநிலமே….

ஒடுங்கிச் சிறுத்த அந்தக்கடற்கரையில்
மலமும் மனிதர்களும் ஒன்றாக மிதந்துகொண்டிருக்கிற நாட்களில்
பகல் வந்தது இரவு வந்தது
யாரும் எதையும் கவனிக்கவில்லை
அங்கே நினைவுகளையும் கனவுகளையும் இழந்த மனிதர்கள்
ஊர்ந்து கொண்டிருந்தார்கள் பூச்சிகளாய்

எதுவரை

அந்தக்காலைநேரத்தில்
கொண்டுவந்து இறக்கப்பட்டோம்
இலக்கங்களாக

மதிப்பு

ஒரேயொரு தடவை மட்டும் அகதிகள்
மதிக்கப்படுகிறர்கள்
தேர்தல் வரும்போது
தேடிவருகிறார்கள் ‘விருந்தாளிகள்;” எங்களிடம்
கையும் காலும் இல்லாத எங்களிடம்
பக்கத்துக் கூடாரத்தில் இருக்கும் இரண்டு கைகள் இல்லாத பெண்ணிடம்
வந்த விருந்தாளி கேட்டார்
எப்படியம்மா நீ வாக்களிக்கப்போகிறாய்
ஆருக்குப்போடப்போகிறாய்?

மூன்று இலட்சம் தமிழ் மக்களை 2009 இல் அகதிமுகாம்களில் வைத்துக்கொண்டு வவுனியா நகரசபை தேர்தலை அரசாங்கம் நடத்தியபோது அதில் போட்டியிட்டார்கள் தமிழ் அரசியல்வாதிகள்- அவர்களுக்கு இதைவிட அசிங்கமாக சொல்வதற்கு தமிழில் வார்த்தை தேவையில்லை.

வளராத மரம் மற்றும் பிறள்வைக் குறித்து

புண்ணைத் தோண்டுவதை குறித்து என்ன சொல்கிறீர்? என் ஆசிரியர் கேட்டார்.
கூடவே மருந்து போடுவதை பற்றியும் மேலும் அவர் கேட்டார்
வளராத மரத்திற்கு நீர் ஊற்றுவதை பற்றி விளக்குக அமைதியை நோக்கி செல்லும்போது முரண்பாட்டை வளர்க்கலாமா?

அரசியல்வாதிகளுக்கான கேள்விகள் கொண்ட கவிதை

சாவரங்கு

இது முள்ளிவாய்கால் மக்களது அவலங்களைப்பற்றிய கவிதை. இதைப்படிப்பதோ இதைப் பற்றி பேசுவதோ இலகுவானது அல்ல. இரண்டு நாட்கள் இடைவெளிவிட்டுப் படித்தேன். முள்ளில் நடப்பது போல் இருந்தது.

வெட்ட வெளியிற் சனங்கள் நின்றார்கள்
பதுங்கு குழியில் தலைவர்கள் இருந்தனர்
பதுங்கு குழியில் மதகுருக்கள் இருந்தனர்
பதுங்கு குழியில் அதிகாரிகள் இருந்தனர்
பதுங்கு குழியில் தளபதிகள் இருந்தனர்

( அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம், மெல்பனில் நடத்திய தமிழ்க்கவிதை அனுபவப்பகிர்வு நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)

“ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்” அதற்கு 3 மறுமொழிகள்

  1. ரஷ்யாவில் நடந்த அக்டோபர் சோஷலிஸ புரட்சியை – புரட்சி எனச்சொல்ல முடியாது என சொல்கிறீர்கள். ஆனால் – ஜார் மன்னனின் வீழ்ச்சியை ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்றுதான் பாரதியும் கவிதை எழுதினார். வரலாற்றாசிரியர்களும் அவ்வாறுதான் எழுதிவருகிறார்கள். ஜார் மன்னன் ரஷ்யாவின் நிருவகத்தை பாராளுமன்றத்திடம் ஒப்படைத்தான் எனச்சொன்னாலும் அதற்கு மூலகாரணமாக இருந்தது லெனின் தலைமையில் நடந்த புரட்சிதானே?
    முருகபூபதி

    1. 1917 ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தனது முடியுரிமையை மட்டுமல்ல மகனது உரிமையைத;துறந்து சகல அதிகாரங்களையும் பாராளமன்றத்திற்கு (Duma))கொடுக்கப்பட்டது.. இதன்பின் மென்சுவிக்களை அதிகம் பாராளமன்றம் இரஸ்சியாவை நடத்திக்கொண்டிருக்கும்போது லெனின் தலைமையிலான போல்ஸவிக்கள் பாரளமன்றத்தை கலைத்து ஏற்கனவே முடியரசு கலைக்கப்பட்டமுன்னாள் ஜாரையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்தது புரட்சி என வர்ணிக்க முடியாது ஆட்சியை கைப்பற்றியது என சொல்லாம். அந்தகாலத்தில் பாரதியார் தனக்குத் தெரிந்த உண்மையை வைத்து யுகப்புரட்சி என எழுதினானர்.. அது பிழையல்ல எல்லோரும் தெரிந்ததை வைத்துதானே முடிவெய்கிறோம் பின;பு உண்மை தெரிய மாறுகிறோம். தெரிந்த பின் பழயதை வலியுறுத்துவதுதான் தவறு.

  2. Wonderful. Thank you very much your responsible regarding the book.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: