ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்

படித்தோம் சொல்கிறோம்

முருகபூபதி

Sharmila_Seyyid_JP_1703450e

இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவடைந்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்த்தும் ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்

shar
சமீபகாலத்தில் நான் படித்த சில நாவல்கள் யாவும் சுமார் நாநூறுக்கும் மேற்பட்ட அல்லது அதற்குக்கிட்டவாக வரும் பக்கங்களைக்கொண்டிருந்தன. இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் புலம்பெயர் சூழலில் அத்தனை பக்கங்களையும் படித்து முடிக்க தேவைப்படுவது நேரமும் ஆர்வமும் பொறுமையும்.

இன்றைய யுகத்தில் ஒரு தேர்ந்த வாசகனுக்கு இவை மிகவும் அவசியம் எனக்கருதுகின்றேன்.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்த போர் முடிந்து இ ந்த மே மாதத்துடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போரை தொடர்ந்து நீடிப்பது எவ்வளவு பெரிய கொடூரமோ அந்தளவு கொடூரம்தான் அது முடிவடைந்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை மீளக்கட்டமைத்துக்கொள்வதுமாகும்.

ஸர்மிளா ஸெய்யத்தின் முதலாவது நாவல் உம்மத் அந்தச்செய்தியைத்தான் அழுத்தமாகப்பதிவுசெய்கிறது. ஸர்மிளா ஸெய்யத் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களும் செறிந்து வாழும் ஏறாவூரில் 1982 இல் பிறந்தவர். இதழியல் கல்வி முகாமைத்துவம் உளவியல் துறையில் பயின்றவர். பத்திரிகை ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அத்துடன் சமூகச்செயற்பாட்டாளர்.

இந்தப்பின்புலத்தில் அவர் சிறகு முளைத்த பெண் என்ற கவிதைத்தொகுதியையும் முன்னர் வெளியிட்டிருப்பவர்.
கவிதைத்தொகுப்புக்கு சிறகு முளைத்தபெண் என்ற பெயரைச்சூட்டியிருப்பவர் இந்த உம்மத் நாவலில் தவக்குல் என்ற சிறகு முளைத்த பெண்ணையே படைத்துள்ளார். ஒரு சுதந்திரப்பறவை பெண்ணாக இருக்கும்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் சவால்கள் கொலை அச்சுறுத்தல்கள் புறக்கணிப்புகள் – அவளது இயலாமை தர்மாவேசம் இரக்க சிந்தனை பாதிக்கப்பட்ட பெண்களிடத்தில் பரிவு பெற்றவர்கள் சகோதரிகளிடத்தில் வற்றாத நேசம் இவையாவும் இரண்டறக்கலந்த முழுமையான பாத்திர வார்ப்பு தவக்குல்.

யோகா இயக்கத்தில் இணைந்து போரில் காலை இழந்தவள். தெய்வானை போராளியாகவிருந்து இறுதியில் சரணடைந்து விடுவிக்கப்பட்டு அன்றாட வாழ்வில் இணையத்துடிப்பவள்.

இந்த மூன்று பெண்களுக்கும் காதல் வருகிறது. தவக்குல் (சுபியான்) யோகா ( சாதுரியன்) தெய்வானை ( சமிந்த என்ற இராணுவன்) இந்தப்பெண்கள் மூவரினதும் காதல் – நாவல் முடியும் முன்பே நிராசையாகிறது.
இந்நாவலில் இந்த மூன்று பெண்களின் குடும்பத்தின் பாத்திரங்களுடன் தன்னார்வத்தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர்கள் சிலரும் வருகிறார்கள். ஒவ்வொரு பாத்திரங்களையும் அதனதன் இயல்பிலேயே விட்டுவிடுகிறார் ஸர்மிலா ஸெய்யத்.

பிரதான பாத்திரங்களான தவக்குல் – யோகா – தெய்வானை ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் இஸங்கள் தெரிந்தவர்கள் அல்ல. அதனால் இந்நாவலில் எவரும் சோஷலிஸ யதார்த்தப்பார்வை இருக்கிறதா? என்று பூதக்கண்ணாடி வைத்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

போர்க்காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணத்தை 1987 இற்கு முன்னர் பார்த்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர் 2009 இல் போர் முடிந்தபின்னர் சில தடவைகள் இந்த மாகாணங்களுக்குச் சென்றேன்.
வன்னியில் – முள்ளிவாய்க்கால் – நந்திக்கடல் வரையும் சென்று திரும்பினேன். இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு பல ஆண்டு காலமாக (1989 முதல்) உதவிவரும் நான் சம்பந்தப்பட்ட அமைப்பின் கல்வி சார்ந்த பணிகளுக்கு சென்றேன்.

போரிலே கணவன்மாரை இழந்த பெண்கள் .

தந்தையை இழந்த பிள்ளைகள் (மாணவர்கள்)

உடல் அங்கங்கள் இழந்து மாற்றுத்திறனாளிகளாகத் துடிப்பவர்கள்.

முன்னாள் போராளிகள்.

இந்த நான்கு தரப்பாரினதும் வாழ்வாதாரம்தான் மனச்சாட்சியுள்ளவர்களின் முன்னால் தற்பொழுது விஸ்வரூபமெடுத்துள்ளது என்று எனது பல பத்திகளில் தொடர்ந்து எழுதிவந்தேன்.

ஸர்மிலாவும் தனது உம்மத் நாவலில் அந்த விஸ்வரூபத்தையே முன்மொழிந்திருக்கிறார். இந்நாவலைப்பற்றி என்னை எழுதத்தூண்டிய காரணிகள் அவைதான்.

உம்மத் என்றால் என்ன?

உம்மத் என்ற அரபுச்சொல்லானது சமூகம் – மனிதக்கூட்டம் போன்ற அர்த்தங்கள் தரக்கூடியது எனச்சொல்கிறார் ஸர்மிலா ஸெய்யித்.

சமூகம் என்பது நாலுபேர் என்பார்கள். நாலுபேர் நான்கு விதமாக கதையாடல் செய்வது இந்தச்சமூகத்தில்தான். நாவல் சமூகத்தைத்தான் பேசுகிறது. அதில் இஸ்லாமியர் தமிழர் சிங்களவர் அனைவரும் வருகின்றனர்.
தமிழ்நாடு காலச்சுவடு வெளியிட்டுள்ள இந்நாவலின் பின்புற அட்டையில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் மூன்று பந்திகளில் முதலாவதையும் மூன்றாவதையும் இங்கு மீளவும் குறிப்பிடுகின்றேன்.

1. உம்மத் இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர் இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டிருக்கிறது.

3. போருக்குப்பிந்தைய காலமும் மனிதர்கள் மீண்டெழுவதற்குப் பாதகமாகவே இருக்கிறது என்பதை வலியுறுத்திச்சொல்கிறது உம்மத். இஸ்லாமிய அடிப்படைவாதம் – தமிழ்த்தேசிய வாதம் -சிங்களப்பேரினவாதம் என்று எல்லா வாதங்களும் முடக்கியிருக்கும் இலங்கைச்சூழலில் இந்த உண்மையைச்சொல்ல அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்தத் துணிவு நாவலாசிரியருக்கு இயல்பாகவே இருக்கிறது.
ஆயுதம் ஏந்திய இயக்கம் மற்றும் சமூகம் குறித்தும் உறவுகள் பற்றியும் இந்நாவல் கேள்விகளை பக்கம் பக்கமாக எழுப்பிக்கொண்டிருக்கிறது. அந்தக்குரல் அதிர்வுகளை தரவல்லது.

உள்நாட்டில் போர் முடிவுற்றதும் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை நம்பி வந்து கடுமையாக உழைத்து மக்களின் நலன்களுக்காக ஊண் உறக்கம் பராது அலைந்து திரிபவர்களுக்கு சமூகத்திடமிருந்தும் புலனாய்வுப்பிரிவுகளிடமிருந்தும் நெருக்கடிகள் தோன்றியதும் அவர்களை சாதுரியமாக கைகழுவிவிடும் போக்கையும் இந்நாவல் சித்திரிக்கிறது.

இறுதியில் தொண்டர்களை கையறு நிலைக்குத்தள்ளிவிட்டு ஒதுங்கிவிடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்நாவலில் கேள்விக்குட்படுகின்றன.

தவக்குல்லிடம் அவளது சமூகம் பற்றி எழும் கேள்வி:- (பக்கம் 257) ஹராம் – ஹலால் என்பதில் அவளுக்கேகூட சந்தேகங்கள் இருந்தன. ஹராம் என்பது இஸ்லாமிய அடிப்படைக்கோட்பாட்டில் மிக முக்கியமான விவகாரமென்றே அவள் அறிந்துவைத்துள்ளாள். ஹராம் – ஹலால் பிராணிகளை அறுப்பதற்குரிய ஒன்றாக மட்டுமே சமூகக்கட்டமைப்பில் பார்க்கப்படுகிறது. உண்மையில் ஹராம் – ஹலால் கலாசாரத்திலும் பொருளாதாரத்திலும் பார்க்கப்பட வேண்டியது. ஹராமான வழியில் சம்பாதித்துப்பெற்ற பிராணியை ஹலாலான முறையில் அறுத்துவிட்டால் மட்டும் அது ஹலால் ஆனதாக ஆகிவிடாது. இந்த நூதனத்தை உள்வாங்கி விளங்கியவர்களா இன்றைய முஸ்லிம்கள் என்பதில் தவக்குல் சந்தேகம் கொண்டிருந்தாள்.

அனைத்து இன சமூகங்களிடமும் உள்ள ஆத்மீக உணர்வு பொதுவானது.
என்ன கஷ்டங்கள் வந்தாலும் இறைவன் கைவிட மாட்டான் என்று நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வது. துயரம் தொடர்ந்தால் எல்லாம் அவன் விட்ட வழி என்று தேற்றிக்கொள்வது.
தவக்குல்லின் வாப்பா ஹபீப்பிடம் அவ்வப்பொழுது இந்த எண்ணம்தான் அவரது மொழியில் வெளிப்படுகிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியில் சுயதொழில் வாய்ப்பு பெறும் தெய்வானையை அவள் முன்னாள் போராளி என்ற காரணத்தினால் புலனாய்வுப்பிரிவு பின்தொடர்கிறது.

போரில் காலை இழந்து குடும்பத்தினாலும் புறக்கணிக்கப்பட்ட யோகாவுக்கு பரிந்துபேசி அடைக்கலம் கொடுக்க முன்வரும் பூவரசு என்ற சித்தாண்டி மாமாவே அவளை வன்கொடுமைக்கு ஆளாக்கிவிடுகிறான்.
யோகா அதிலிருந்து மீள வழி தெரியாமல் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொளுத்தி தற்கொலை செய்துகொள்கிறாள்.
இந்த இரண்டு தமிழ்ப்பெண்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக அள்ளும் பகலும் உழைத்த தவக்குல் கொலை அச்சுறுத்தலினால் தனது பாசம் மிக்க தந்தை ஹபீப்பையும் தீயவர்களிடம் பலிகொடுத்துவிட்டு அந்நியம் புறப்பட்டுச்செல்கிறாள். அந்தச்சுதந்திரப்பறவை தயாகம் விட்டு பறந்து செல்கிறது
இந்த மூன்று பெண்களின் வாழ்வின் அவலத்தையே இந்நாவல் பேசுகிறது.

அந்நியமாதல் இம்மூன்று பெண்களுக்கும் வேறு வேறு வடிவங்களில் நிகழ்கிறது.
இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்பெற்றபோதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் வெகுதூரம் கடந்துசெல்லவேண்டியிருக்கும் செய்தியை முப்பத்திமூன்றே வயதான ஸர்மிலா ஸெய்யத் இயல்பாகவே இந்நாவலில் பதிவுசெய்துள்ளார்.

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: