மீட்டாத வீணையும் – தொப்புள்கொடியும் வழங்கிய நித்தியகீர்த்தி

unnamed

முருகபூபதி
அவுஸ்திரேலியாவில் இலக்கியத்துறையில் ஈடுபாடுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வருடாந்தம் ஒன்று கூடச்செய்யும் தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு மெல்பனில் நான் ஒழுங்குசெய்து அதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியிலிருந்து நண்பர் கலாமணி ( தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் அதன் ஆசிரியர் பரணீதரனின் தந்தையார்) தமது குடும்பத்தினருடன் வந்து எமதில்லத்தில் தங்கியிருந்தார்.
கலாமணி தமது பூதத்தம்பி இசைநாடகத்தை எழுத்தாளர் விழாவில் மேடையேற்றுவதற்காகவும் விழாவில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் உரையாற்றுவதற்காகவும் வருகைதந்திருந்தார். கலாமணி தற்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியிலிருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு முதலாவது எழுத்தாளர் விழா அழைப்பிதழ்களுக்கு முகவரிகளை எழுதி முத்திரைகளை ஒட்டிக்கொண்டிருந்தபொழுது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நண்பர் கலாமணிதான் எடுத்தார்.
பூபதி —- நித்தியகீர்த்தி என்று ஒருவர் பேசுகிறார் என்றார் கலாமணி.
யார்—-மீட்டாத வீணை எழுதிய நித்தியகீர்த்தியா? எனக்கேளுங்கள் என்றேன்.
கலாமணியும் கேட்டார். மறுமுனையில் – அவர் தான்தான் மீட்டாதவீணை நாவலை எழுதியவர் என்று தன்னை அறிமுகப்படுத்தியபொழுது தொலைபேசி ரிஸீவரை எனது கைக்கு எடுத்தேன்.
உங்களை நான் பார்த்ததே இல்லை. பல வருடங்களுக்கு முன்னர் நீங்கள் எழுதி வீரகேசரி பிரசுரமாக வெளியான மீட்டாத வீணை நாவல் படித்திருக்கிறேன். அதன் பிறகு உங்கள் எழுத்துக்களையும் காணவில்லை. உங்களையும் காணவில்லை. – என்றேன்.
ஆமாம். நான் லண்டன் – சிம்பாப்வே – நியுசிலாந்து என்று உலகம் சுற்றிவிட்டு இப்போது அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறேன். தங்களின் எழுத்தாளர் விழா பற்றிய செய்தியை அறிந்துதான் தங்களுடன் தொடர்பு கொள்கிறேன். உங்களையெல்லாம் சந்தித்தால் மீண்டும் இலக்கியப்பிரவேசம் செய்யும் உந்துதல் கிடைக்கும் என நம்புகின்றேன்.

நிச்சயமாக – இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரன் தமது மனைவியுடன் வருகிறார். சிட்னி – கன்பரா – மெல்பன் எழுத்தாளர்களும் வருகிறார்கள். அவர்களையெல்லாம் சந்திக்கலாம். நீங்கள் அவசியம் வருகைதரவேண்டும். வந்தால் உங்களுக்கு ஒரு பணியையும் தருவேன். – எனச்சொன்னேன்.
சொல்லுங்கள் முடிந்தால் செய்கிறேன்.

போர்க்காலத்தால் புலம்பெயர்ந்த தமிழர் – என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. அதனை எழுதிய அரவிந்தன் என்பவர் தற்போது மெல்பனில் அகதிகள் தடுப்பு முகாமில் இருக்கிறார். அவரால் வந்து பேச முடியாது. அந்தக்கட்டுரையை நீங்கள்தான் வாசிக்கிறீர்கள். – என்றேன்.
இன்னும் நாங்கள் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. அதற்கிடையில் நீண்டகாலம் தெரிந்த ஒருவருடன் உரையாடுவதுபோன்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறீர்களே?
இலக்கியவாதி அப்படித்தான் இருப்பான். வாருங்கள். உங்கள் வரவுக்கு காத்திருக்கின்றோம். – என்றேன்.
06-01-2001 ஆம் திகதி மெல்பனில் முதலாவது எழுத்தாளர் விழாவில் நித்தியகீர்த்தியை முதல் முதலில் சந்தித்தது முதல் 10-10-2009 ஆம் திகதி அவருக்கு தமிழக மாத இதழான யுகமாயினியை கொடுப்பதற்காக அவரது வீட்டுக்குச்சென்றது வரையிலான சுமார் எட்டு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களும் நான்கு நாட்களும் நாமிருவரும் உடன்பிறந்த சகோதரர்களாகவே பரஸ்பரம் பாசத்தை பரிமாறியிருக்கிறோம்.
2009 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி இரவு மாரடைப்பால் மெல்பனில் அவர் காலமானார். செய்தி அறிந்ததும் வேலைத்தலத்திலிருந்து பதறியடித்துக்கொண்டு ஓடினேன். ஒரு நல்ல இலக்கியசகோதரனை எதிர்பாராமல் இழந்துவிட்டசோகம் இன்றுவரையில் தொடருகிறது.
அந்தநேசிப்பு ஆத்மார்த்தமானது. எனக்கு 2003 இல் மாரடைப்பு வந்தபொழுது ஓடிவந்து பார்த்து தேறுதல் சொல்லிச்சென்றவரை அதேபோன்றதொரு மாரடைப்புக்கு அவர் இலக்கானபொழுது அவரை பூதவுடலாகத்தான் என்னால் பார்க்கமுடிந்தது.

2001 இல் முதலாவது எழுத்தாளர் விழாவில் தி.ஞானசேகரனை அவர் சந்தித்தமையால் சிறந்த பலன்களையும் பெற்றார். அவரது மீட்டாத வீணை பிரதி அவரிடம் இல்லை என்ற கவலையை முதல் சந்திப்பின்போது அவர் – ஞானசேகரனிடம் தெரிவித்தார். செங்கை ஆழியானிடம் நிச்சயமாக இருக்கும். இலங்கை சென்றதும் எடுத்து அனுப்புகின்றேன். என்று வாக்குக்கொடுத்த ஞானசேகரனும் சொன்னபடியே செய்தார். நித்தியகீர்த்தி மறைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும் அந்த உதவியை என்னிடம் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
தனக்கு காணமல்போன ஒரு பிள்ளை கிடைத்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது – அந்த மீட்டாத வீணை பிரதி கிடைத்தது என்று பல சந்தர்ப்பங்களில் அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

நித்தியகீர்த்தி சிறுகதை – நாவல் – விமர்சனம் – நாடகம் – பத்தி எழுத்துக்கள் என எழுதியிருப்பவர். மெல்பனுக்கு வந்தபின்னர் சில நாடகங்களை எழுதி இயக்கியிருக்கும் அவர் அவற்றில் நடித்துமிருக்கிறார். நியூசிலாந்தில் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் தமிழ்த்திரைப்படங்களை தருவித்து காண்பித்து அதன்மூலம் நிதி திரட்டி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணிகளுக்காக வழங்கியிருக்கிறார்.

தாமும் ஒரு திரைப்படத்தை நியூசிலாந்தில் தயாரித்ததாகவும் பின்னர் சில காரணங்களினால் தயாரிப்பு வேலைகளை நிறுத்திவிட்டதாகவும் என்னிடம் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். அந்தப்படம் பாதியிலேயே நின்றுவிட்ட வருத்தமும் அவரிடம் இருந்தது.

இலங்கையிலிருந்த காலத்தில் சில சிறுகதைகள் எழுதியிருப்பதாகவும் ஆனால் பிரதிகள்தான் கைவசம் இல்லை என்பார். புலப்பெயர்வுதான் பல படைப்புகள் கையை விட்டுப்போனதற்கான காரணம் என்பார்.
ஞானம் இதழ் வெளியானதன் பின்னர் அவரும் அதன் சந்தாதாரரானார். ஞானத்தில் அவரது சிறுகதையொன்றுக்கு முத்திரைக்கதை தகுதியும் கிடைத்தது. இந்தத் தகவல் எனக்கு கிடைத்தபொழுது அதனைத்தெரிவிக்க அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது அவர் நியூசிலாந்தில் தாயாரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்தார். ஒரேசமயத்தில் அனுதாபத்தையும் வாழ்த்தையும் தெரிவிக்கவேண்டிய தர்மசங்கடமான நிலை எனக்கு வந்தது.
எமது எழுத்தாளர் விழாக்களில் – இலக்கிய சந்திப்புகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டதுடன் ஆக்கபூர்வமாகவும் ஒத்துழைப்பு வழங்கினார். ஞானம் இதழில் வெளியான அவரது சிறுகதைக்கு இலங்கையில் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் (தகவம்) பரிசு கிடைத்து பரிசளிப்பு விழா கொழும்பில் 26-4-2008 ஆம் திகதி நடந்தபோது அதே நாளில் அவுஸ்திரேலியாவில் சிட்னியில் எமது எட்டாவது எழுத்தாளர் விழா நடந்துகொண்டிருந்தது.

எனது தொடக்கவுரையில் இந்தத்தகவலை குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தபொழுது சபையில் கரகோசம் எழுந்தது. குறிப்பிட்ட தகவம் பரிசுத்தொகையையும் ஏதேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணிக்கு வழங்குமாறு ஞானம் ஆசிரியருக்கு தகவல் அனுப்பினார்.

நித்தியகீர்த்தி – எட்டாவது எழுத்தாளர் விழாவில் ‘தமிழ் உணர்வை அடுத்த தலை முறைக்கு எடுத்துச்செல்லல்: சவால்களும் உத்திகளும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார்.
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினராகவும் அங்கம் வகித்திருக்கும் நித்தியகீர்த்தி தமிழ்த்தேசியத்திலும் தீவிர பற்றுறுதியுடன் செயல்பட்டவர்.
2009 ஆம் ஆண்டு எமது ஒன்பதாவது எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையிலிருந்து இலக்கியவாதி தெளிவத்தை ஜோசப் அவர்களை நாம் அழைத்திருந்தோம். தெளிவத்தைக்கு 75 வயது. அதனால் அவருடைய பயணத்துக்கு காப்புறுதி பெறவேண்டிய சூழ்நிலை வந்தது. நித்தியகீரத்தியே அந்த முக்கியமான பணிசம்பந்தமாக எமக்கு ஆலோசனை வழங்கி தெளிவத்தைக்கு அந்தப்பயணத்தில் காப்புறுதிக்கும் ஏற்பாடு செய்துதந்தார்.

அவர் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவர். அவர் எழுதிய ஆங்கிலச்சிறுகதையொன்றுக்கும் இங்குள்ள மாநகர சபை பரிசு வழங்கி பாராட்டியிருக்கிறது. இறுதியாக அவர் எழுதி தமிழ் நாட்டில் பிரசுரமான தொப்புள்கொடி நாவல் வெளியீடு – 2009 அக்டோபர் 18 ஆம் திகதி நடைபெறவிருந்தது. அதற்கான சகல ஏற்பாடுகளையும் விக்ரோரிய ஈழத்தமிழ்ச்சங்கத்தின் ஊடாக செய்திருந்தார். நூற்றுக்கணக்கான தமிழ் அன்பர்களுக்கும் இலக்கியச்சுவைஞர்களும் மின்னஞ்சல் மார்க்கமாக விழா அழைப்பிதழையும் அனுப்பியிருந்தார். இங்குள்ள தமிழ் வானொலி ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்திருந்தார். இலங்கையில் ஞானம் இதழுக்கும் தமிழ்நாட்டில் யுகமாயினி இதழுக்கும் தொப்புள்கொடி நாவலின் பிரதிகளை ஏற்கனவே பதிப்பாளர் மூலம் கிடைக்கவும் செய்திருந்தார்.
இறுதியாக நான் அவரை சந்திக்கச்சென்றபோது அவர் தமது வீட்டின் பின் வளவில் புல் வெட்டிக்கொண்டிருந்தார். என்னைக்கண்டதும் புல்வெட்டும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு இலக்கியம் பேசிக்கொண்டிருந்தார். அவரது வளவில் எலுமிச்சையும் தோடையும் காய்த்துக்குழுங்கின.

இலைகளை மறைத்துக்கொண்டு செழித்துக்காய்த்திருந்த மஞ்சள் எலுமிச்சைகளையும் தோடம்பழங்களையும் பார்த்துவிட்டு – நித்தி உங்கள் மனதைப்போன்றே அவையும் தாராளமாக விளைந்திருக்கின்றன. – என்றேன்.
அவர் சிரித்தார். விடைபெற்றேன். 2009 அக்டோபர் 15 ஆம் திகதி அவர் நிரந்தரமாகவே விடைபெற்றார். அவரது அந்தச்சிரிப்பு இன்னமும் எனது கண்களுக்குள்.

மறைந்த செய்தி அறிந்து மனைவியுடன் அவரது வீடு சென்றேன். அவரது பூதவுடல் மருத்துவ மனையில். யாழ்ப்பாணம் சென்றிருந்த அவரது மனைவிக்கு தகவல் அனுப்பி அவர் புறப்படுவதாக அறிந்தோம். மகன் அருண் மாத்திரம் அவர் மரணிக்கும் தருவாயில் அருகில் இருந்திருக்கிறார். மாரடைப்பு வந்திருப்பதற்கான அறிகுறியை பரிசோதித்த மருத்துவர்கள் சொன்னதும், நித்தியகீர்த்தி தமது மகனிடம் —- பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பார்கள். அதனால் தொப்புள்கொடி வெளியீட்டு விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாது போகலாம். அதற்காக விழாவை ஒத்திவைக்கவேண்டாம். திட்டமிட்டவாறு விழாவை நடத்தச்சொல்லி நண்பர்களுக்கு சொல் —- என்றாராம்.
ஆனால் – தனக்கு முன்னே மேல் உலகம் சென்றுவிட்ட தனது தாயாரிடம் தொப்புள்கொடி உறவைத்தேடி அவர் புறப்பட்டுவிட்டார்.

அவரது மறைவுக்கு சில வருடங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து மெல்பனுக்கு வருகை தந்திருந்த நூலகரும் இலக்கியவாதியுமான என். செல்வராஜாவுக்கு அவரது வீட்டில் இராப்போசன விருந்து கொடுத்தார். பொதுவாக இங்கே விருந்துகளின்போதுதான் பரஸ்பரம் யார்யாருக்கு என்ன என்ன நோய்கள் இருக்கின்றன எனக்கேட்போம். அன்றும் நான் எனக்குள்ள உடல் உபாதைகளைச்சொல்லிவிட்டு — உங்களுக்கு எப்படி? — என்று அவரிடம் கேட்டேன். எனக்கு என்ன இருக்குது எண்டே தெரியாது. ஆனால் நான் தினமும் பெட்மிண்டன் விளையாடுறனான். அதுவே நல்ல தேகப்பயிற்சிதானே —- என்றார்.

நித்தியகீர்த்தி இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பும் பெட்மிண்டன் விளையாடிவிட்டுத்தான் வீடு திரும்பியிருந்தார்.
எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்று அடிக்கடி சொல்லும் எனக்கு நித்தியகீர்த்தியும் அந்த வாக்கை மெய்ப்பித்துவிட்டு சென்றுவிட்டார். அவரது மறைவைப்பற்றி எதுவுமே தெரியாத அந்த தோடை — எலுமிச்சை மரங்கள் தொடர்ந்தும் பூத்துக்காய்த்துக்கொண்டுதானிருக்கின்றன.
எமது பத்தாவது எழுத்தாளர் விழா மெல்பனில் மீண்டும் 2010 இல் நடைபெற்றபொழுது சர்வதேச கவிதை, சிறுகதைப்போட்டிகளை நடத்தினோம். எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர் நண்பர் கே.எஸ். சுதாகரன் குறிப்பிட்ட போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராக இயங்கினார்.
குறிப்பிட்ட போட்டிகளில் சிறுகதையில் முதலாம் இரண்டாம் பரிசுகளை நித்தியகீர்த்தியின் ஞாபகார்த்தமாகவே வழங்கினோம். அவரது மனைவி திருமதி மாலதி நித்தியகீர்த்தி விழாவுக்கு வருகைதந்து குறிப்பிட்ட பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
எமது சங்கத்தின் எழுத்தாளர் விழா 2001 ஆம் ஆண்டு முதல் தங்கு தடை ஏதும் இன்றி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
2001 ஆம் ஆண்டில் முதல் விழாவில் எம்முடன் இணைந்துகொண்ட நித்தியகீர்த்தி இன்றும் எம்முடன் நினைவுகளில் இணைந்து வந்துகொண்டுதானிருக்கிறார்.
—-0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: