எறிகணை வீச்சுக்குப்பலியான எழுத்தாளன் நெல்லை க.பேரன்

திரும்பிப்பார்க்கின்றேன்
மனைவி பிள்ளைகளுடன் எறிகணை வீச்சுக்குப்பலியான எழுத்தாளன் நெல்லை க.பேரன்
துளிர்க்கத்துடித்த ஒரு மனிதனின் ஓலம்

NellaiKPeran முருகபூபதி

சங்கத் தமிழாலே தாலட்டுப்பாடி எந்தன்
தங்கக் குழந்தையை நான் நித்திரையாக்கிவிட்டால்
திடீரென்று கேட்கும் வெடிச்சத்தம் எங்கோ—
அர்த்த ராத்திரியில் ஆசையாய் மணம் முடித்த
அன்பு மனையாளைக் கட்டியணைத்து
ஒரு முத்தம் தரவென்று
சிந்தையில் நினைத்திட்டால் கேட்கும் ஒரு குண்டுச்சத்தம்
நெஞ்சு கலங்கி என் வேட்கையும் கலைந்து மிக்க
வேதனையோடு நான் முகத்தைத் திருப்பிடுவேன்
குண்டுகள் வந்து கூரையைத் துளைத்தாலும் என்று
கட்டிலின் அடியினிலே பிள்ளையை பெண்டிலை நான்
தள்ளியே சாக்கால் மூடிப் பதுங்கியே பதகளிப்பேன்
கறுப்புக் கழுகுகள் ஆகாயத்தில் வட்டமிட்டால்
ஐயோ வென்று அலறும் இதயம்
எப்பெப்ப என்னென்ன — எங்கேயோ என்றெல்லாம்
எண்ணி ஏங்கித் தீய்ந்து கருகி
உருகி வாடும் பாழும் இதயம்
துளிர்க்கத் துடிக்கும் – ஆனால் நாட்டிலோ
ஈரளிப்பு இல்லையே —
1987 ஆம் ஆண்டு எங்கள் பேரன் எமக்களித்த கவிதை இது. நான்கு ஆண்டுகளில் – அதாவது 15.7.1991 ஆம் திகதி நள்ளிரவில் பேரன் – இந்தக் கவிதையை நினைத்திருப்பாரா? தனது அன்பு மனையாள் உமாதேவியையும் – செல்வமகன் உமாசங்கர் மற்றும் செல்வமகள் சர்மிளாவையும் சாக்கால் மூடி கட்டிலின் அடியிலே தள்ளிக் காப்பாற்ற முனைந்திருப்பாரா—?
எவருமே அறிந்திருக்க மாட்டார்கள்.

படையினரின் ஆட்லறி எறிகணைத் தாக்குதலின்போது தனது மனைவி மக்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விட்டார் எங்கள் நெல்லை க. பேரன். இரத்தத்தை உறையவைத்து – நெஞ்சமதை அடைக்க வைத்து வெடித்துச் சிதறிய விம்மல்கள் எத்தனை — எத்தனை?

செய்தி கேட்டு – கலங்கிப் போனேன்.

ஆறுதல் தெரிவித்து கடிதம் எழுதவும் மனைவி மக்களை விட்டுச் செல்லாமல் உடன் அழைத்துச் சென்று விட்டார் எங்கள் நெல்லை க. பேரன்.
அப்பொழுது எம்மையெல்லாம் உலுக்கிய சம்பவம் அந்த முழுக்குடும்பத்தின் அகால மறைவு.
பேரம்பலம் என்ற இயற்பெயர் கொண்டவர். வடமராட்சியில் நெல்லியடியில் 1946 இல் பிறந்தார். தனது எழுத்துலகில் ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டு நெல்லை. க. பேரன் ஆனார். 1991 இல் தமது 44 வயது அற்பாயுளில் எங்களையெல்லாம் விட்டு மறைந்தார்.

பேரன் பத்திரிகை நிருபராக எழுத்துப் பணியை ஆரம்பித்து ஆக்க இலக்கியகாரனாக பரிமளித்தவர். தபால் திணைக்களத்திலும் பின்பு சிறிது காலம் குவைத்திலும் பணியாற்றியவர்.
எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே நூலிழை வித்தியாசம்தான். இரண்டு தரப்பாருக்குமே பொறுப்புணர்வும் தார்மீகக் கடமைகளும் இருக்க வேண்டும்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் – பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரையில் பணத்துக்காக பேனை பிடிப்பவர்கள் அபூர்வம். இலக்கியத்துறையில் எழுத்தையே முழு வாழ்க்கைக்குமான தொழிலாகக் கொண்டவர்கள் கூட இங்கு பெருமளவில் சம்பாதித்தவர்கள் அல்லர். எழுதியவை வெளிவந்தாலே போதும் என்றளவில் ஆறுதல் அடைந்தவர்களே அநேகம்.

பேரனும் எழுதினார். செய்திகள் – கட்டுரைகள் – சிறுகதைகள் – நாவல் – கவிதை – அறிக்கைகள் – பேட்டிகள் – இப்படியாக பலதும் எழுதிக் குவித்தவர் பேரன். பேரனின் எழுத்துக்களை – குறிப்பாக கதைகளைக் கூர்ந்து படித்தால் – அவை நடைச்சித்திரமாகவே காட்சியளிக்கும். செய்திகளும் அறிக்கைகளும் எழுதிப் பழகியதனாலோ என்னவோ அவரது சிறுகதைகளும் சில சமயங்களில் அவ்வாறு அமைவதுண்டு.

இது – பத்திரிகையாளர்களுக்கு – ஆக்க இலக்கியம் படைக்கும்போது நேர்ந்துவிடும் அபாயம்தான். பேரனும் இந்த அபாயத்தில் சிக்குண்டார்.
எனினும் பேரனின் இலக்கிய வரவுகள் :- ஒரு பட்டதாரி நெசவுக்குப்போகிறாள் – சத்தியங்கள் (சிறுகதைகள்) விமானங்கள் மீண்டும்வரும் – வளைவுகளும் நேர்கோடுகளும் (குறுநாவல்கள்) பேரனின் கவிதைகள் – சந்திப்பு – நேர்காணல் தொகுப்பு.

இவர் அங்கம் வகித்த கொழும்பு – கலை இலக்கிய நண்பர் கழகத்தின் மாதாந்த சந்திப்புகளில் இவரது எழுத்துக்கள் விமர்சிக்கப்பட்டன. அச்சந்திப்புக்களை தனது வளர்ச்சிக்கு உரமாக்கிக் கொண்டவர் பேரன்.

பழகுவதற்கு இனியவரான பேரன் – கூட்டங்களுக்கு வந்தால் – கூட்டத்தின் செய்திகள் – நிச்சயம் ஏதாவது ஒரு இதழிலோ பத்திரிகையிலோ வெளியாகும் என திடமாக நாம் நம்பலாம்.

மனிதர்களுடன் பழகுதல் இனிய பண்பு. இந்தப் பண்பை இவரிடமும் நான் கற்றேன். இந்தப் பண்பை எல்லோரிடமும் (படைப்பாளிகளிடம்) காண்பது அரிது.
1972 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரையில் – இடையில் அவர் சில காலம் மத்திய கிழக்கில் பணிபுரிந்த காலம் தவிர்ந்து – அவருடன் பழகிய சந்தர்ப்பங்கள் பசுமையானவை.

மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் விழாவுக்குச்சென்று திரும்பிய எனக்காக 1986 நவம்பரில் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் நண்பர் ஸ்ரீதரசிங் நண்பர் டொமினிக் ஜீவாவுடன் இணைந்து மூத்த எழுத்தாளர் வரதர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தேநீர் விருந்தொன்றை ஏற்பாடுசெய்தார். அதில் கலந்து கொண்டு என்னை வாழ்த்திப் பாராட்டிய பேரனை – அச்சந்திப்பின் பின்பு நான் சந்திக்கசந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதுவே இறுதிச் சந்திப்பு.

எழுத்தாளர்கள் – எழுதவேண்டும். எழுதாதவர்கள் எழுத்தாளர்கள் அல்ல. இறைக்க இறைக்கத்தான் தண்ணீர் ஊற்றெடுக்கும். இறைக்காத கிணறு நாறும். அதுபோல்தான் எழுத்தும். தொடர்ந்து எழுதாமல் விட்டால் – பின்பு எழுதுவதற்கு சோம்பலாக இருக்கும். எழுத்துக்கு சோம்பல்தான் முதல் எதிரி.
பேரன் அன்றையதினம் எனக்கு வழங்கிய புத்திமதிகள் இவை. படைப்பாளிகள் அனைவருக்கும் பொருந்தும் அறிவுரைகள்.

வடமராட்சியில் பிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுதியொன்று உயிர்ப்பு என்ற பெயரில் வெளிவந்த சமயம் – அங்கு பிறந்து – வெளி இடங்களில் நீண்டகாலம் வாழ்ந்த சோமகாந்தனின் (ஈழத்துச் சோமு) சிறுகதை அதில் இடம்பெறாமல் விட்டமை குறையெனக் கூறப்பட்டபொழுது இந்தத்தவறுக்கு பேரன்தான் பொறுப்பு என சிலரால் பொறுப்பற்ற முறையில் குற்றம் சுமத்தப்பட்டது.
இத்தவறு தற்செயலானது என ஒப்புக்கொள்ள குற்றம் சுமத்தியவர்கள் தயங்கினார்கள். பேரன் இவ்வாறு திட்டமிட்டு சோமுவை புறக்கணித்திருக்கமாட்டார் என்றே இப்பொழுதும் என் மனம் சொல்கின்றது.

இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியாவது (இவரும் வரமராட்சியைச் சேர்ந்தவர்) ஆரம்பத்தில் இதனைச் சுட்டிக் காட்டியிருந்தால் சோமுவின் கதையும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் – என்று சிவத்தம்பியில் நான் பழியைப் போட்டேன்.

சிவத்தம்பிக்கும் – சோமுவுக்குமிடையே நிழல்யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது.
எனினும் – அந்தத் தொகுதி – குறிப்பிடத்தகுந்தது. பேராசிரியர் சிவத்தம்பியின் விமர்சனக் கோட்பாடுகள் திசைதிரும்புவதை சமிக்ஞையிட்ட முன்னுரை அது.
தனது பெயரில் – தான் பிறந்த ஊரையும் இணைந்துக் கொண்டு இலக்கிய உலகில் தன்னை பதிவு செய்துகொண்ட பேரன் – அந்த ஊரையும் அங்கு வாழ்ந்த மக்களையும் நேசித்த மாண்பு அவரின் பணிகளில் துலக்கமானது.

அல்வாயில் வழக்கமாக மாதாந்தம் நடக்கும் அறிவோர் கூடலில் இறுதியாக கலந்துகொண்ட பேரன் அன்றையதினம் கையொப்பம் இடும் கோவையில் தனது பெயரை பதிவு செய்யவில்லையாம். நிகழ்ச்சி முடிந்து மாலையில் அவர் அனைவரிடமும் விடைபெற்றுச்சென்றார். அன்றையதினம் இரவு காலன் ஆட்லறியின் உருவத்தில் வந்து அவரது நெல்லியடி இல்லத்தை பதம் பார்த்தான்.
சொந்த மண்ணில் சொந்தங்களைக் கதறவைத்து எம்மையெல்லாம் கலங்க வைத்துப் பிரிந்த பேரனின் இழப்பு ஒரு புறத்தில் ஆழ்ந்த சோகமாயிருந்தாலும் மறுபுறத்தில் சிறிய மன ஆறுதல். ஏனென்றால் தனது உயிருக்குயிரான மனைவி மக்களுடன்தான் அவர் சென்றார். தனித்து அல்லவே.

எங்கள் தாயக மண்ணில் இன்றும் காணாமல் போனவர்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்கள் நெல்லை க. பேரன் தன்னையும் தனது குடும்பத்தையும் எவரும் தேடவேண்டாம் ஒன்றாகவே நிரந்தரமாக போய்விட்டோம் என்ற செய்தியை தந்துவிட்டார்.
இலங்கையில் நீடித்தபோர் இப்படியும் அதிர்வுதரும் செய்திகளை வரலாற்றில் பதிவுசெய்திருக்கிறது. எனவே – இனியும் போர் வேண்டாம் என்பதுதான் எம்மைவிட்டுப்பிரிந்தவர்கள் எம்மவர்களுக்கு அழுத்தமாக பதிவுசெய்யும் உண்மையாகும்.
letchumananm@gmail.com
—0—-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: