காவலூர் ராசதுரை: பல்துறை வல்லுனர்

திரும்பிப்பார்க்கின்றேன்

மௌனமே மொழியாக முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்துள்ள காவலூர் ராசதுரை வருங்காலத்தில் நாம் கடக்கவிருக்கும் பாதையில் பயணிக்கும் ஆளுமை
முருகபூபதி
Kavaloor Rajadurai

இதுவரையில் நான் எழுதிய திரும்பிப்பார்க்கின்றேன் தொடர்பத்தியில் பெரும்பாலும் மறைந்தவர்களைப்பற்றித்தான் எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரிலும் மறைந்த 12 ஆளுமைகளை பதிவுசெய்துள்ளேன். இந்தத் தொடர் பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது ஒரு இலக்கிய சகோதரி என்னிடம் ஒரு வினாவைத் தொடுத்தார். குறிப்பிட்ட தொடரில் நான் மறைந்த ஆண் படைப்பாளிகளைப்பற்றி மாத்திரம் எழுதியதாகவும் பெண்களைப்பற்றி எழுதவில்லை என்றும் புகார் எழுப்பியிருந்தார்.
பெண்களுக்கு ஆயுள் அதிகம் என்று மாத்திரம் பதில் சொன்னேன். அந்தத்தொடரில் இடம்பெற்றவர்கள் அனைவரும் மறைந்துவிட்ட ஆண் படைப்பாளிகள்தான்.

அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து 27 வருடங்களாகின்றன. கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலப்பகுதியில் நான் நேசித்த – என்னை நேசித்த பலரும் விடைபெற்றுவிட்ட சோகம் தனிப்பட்ட ரீதியில் என்னை தொடர்ந்து வந்துகொண்டுதானிருக்கிறது.

திரும்பிப்பார்க்கின்றேன் தொடரில் தற்சமயம் எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களைப்பற்றியும் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த சில நாட்களாக எனது மனதில் உருவாகிவருகிறது.

காரணம் சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா – குவின்ஸ்லாந்து மாநிலத்தில் எமது தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய கலை இலக்கிய கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் மெல்பனுக்கு திரும்பும் வழியில் சிட்னியிலும் சில நிகழ்ச்சிகள் சந்திப்புகளில் கலந்துகொண்டேன். எனது பயணத்தில் நான் சிட்னியில் சந்திப்பதற்கு பெரிதும் விரும்பியிருந்த ஒருவர் நண்பர் எழுத்தாளர் வானொலி – திரைப்படக் கலைஞர் காவலூர் ராசதுரை.
சிட்னிக்கு செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவரைப்பார்க்காமல் திரும்புவதும் இல்லை. இந்தப்பயணத்தில் ஒருநாள் அவரை சந்திக்கச்செல்வதற்கு முன்னர் அவரது வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.

அவர் தற்பொழுது சிட்னியில் ஒரு முதியோர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி திருமதி ராசதுரை சொன்னபொழுது அப்படியா? என்று பதில் சொல்வதற்கு எனக்கு சில கணங்கள் தேவைப்பட்டது.

அந்த மௌனமான கணங்களில் நான் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தேன்.
காவலூர் ராசதுரை அனுமதிக்கப்பட்டிருக்கும் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் முகவரியைப்பெற்றுக்கொண்டு சிட்னியில் வதியும் ஊடகவியலாளர் நண்பர் சுந்தரதாஸையும் அழைத்துக்கொண்டு விரைந்தேன்.

காவலூர் என்று ஈழத்து இலக்கிய உலகிலும் இலங்கை வானொலி வட்டாரத்திலும் நன்கு அறியப்பட்ட நண்பர் ராசதுரைக்கும் எனக்கும் இடையே நீடித்த நட்புறவுக்கு நான்கு தசாப்த காலம். கடந்துவிட்ட நாற்பது (1974 – 2014) ஆண்டுகளில் எம்முடன் உரையாடி உறவாடி இணைந்து பயணித்த அவர் தற்பொழுது எதுவும் பேச இயலாமல் ஏகாந்தமான மௌனப் பார்வையுடன் சலனங்கள் ஏதும் அற்று நாம் பேசுவதை மாத்திரம் கிரகித்துக்கொண்டு அதற்கு பதில் ஏதும் சொல்ல முடியாத இயலாமையுடன் முகத்தை மலரவைத்தும் துயரம் நெஞ்சில் கப்பியபொழுது இடதுகரத்தால் நெற்றியையும் கண்களையும் மறைத்தவாறு அமைதியாக மூச்சுவிடுகிறார்.

ஆடி அடங்கும் வாழ்க்கை உண்மையிலேயே புதிரானதுதான். ஆனால் அர்த்தமுடன் வாழ்ந்து இயங்கியவர்களின் வாழ்க்கை முன்னுதாரணமானது.
காவலூர் ராசதுரை 1974 ஆம் ஆண்டில் நான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த காலப்பகுதியில் எனக்கு நண்பரானவர். அச்சமயம் அவர் இலங்கை வானொலியில் பணியிலிருந்தார்.

கொள்ளுப்பிட்டி ஹட்சன் வீதியில் அமைந்த அவரது இல்லத்தின் முகவரிதான் அப்பொழுது சங்கத்தின் முகவரியாகவும் இருந்தது. அதனால் அவரது இல்லத்தில் அடிக்கடி நடக்கும் செயற்குழுக்கூட்டங்களில் சந்திப்பேன்.
தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் இரவு கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் காவலூர்.

சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம் 1976 இல் காவலூரின் ஒருவகை உறவு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டது. அந்த நூல் சாவகச்சேரி மட்டுவிலில் திருக்கணித அச்சகத்தில் அச்சிடப்பட்டது. தனது சிறுகதைகளின் மூலப்பிரதிகளை சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனிடம் ஒப்படைத்துவிட்டு தனது பொன்மணி திரைப்பட தயாரிப்பு பணிகளில் அவர் மூழ்கிவிட்டார்.

அச்சிட்டப்பட்ட அவரது சிறுகதைத்தொகுதியை பெற்றுக்கொள்வதற்காக நண்பர் மேமன்கவியுடன் மட்டுவிலுக்குச்சென்றேன். அப்பொழுது மேமன் கவியின் யுகராகங்களும் (புதுக்கவிதை) செ.யோகநாதனின் சிறுகதைத்தொகுதியும் வெளியீட்டுக்கு தயார் நிலையிலிருந்தன.

இந்நூல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்தவர் எழுத்தாளர் சாந்தன்.
மல்லிகை ஜீவா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மூவருடைய நூல்களினதும் வெளியீட்டுவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் காவலூர் அந்த மண்டபத்தின் பக்கமே அன்று வரவில்லை.
பொன்மணி படத்தின் இயக்குநர் தர்மசேன பத்திராஜா மற்றும் அதில் நடித்த டொக்டர் நந்தி – பொறியிலாளர் திருநாவுக்கரசு – திருமதி சர்வமங்களம் கைலாசபதி – மௌனகுரு – சித்திரலேக மௌனகுரு – கமலா தம்பிராஜா – சுபாஷினி ( திரைப்பட நடிகை) முதலானோருடனும் ஒளிப்பதிவாளருடனும் யாழ் குடாநாட்டில் படப்பிடிப்பு வேலைகளில் மூழ்கியிருந்தார்.
பொன்மணி காவலூரின் கதை . அதற்கு திரைக்கதை வசனமும் அவரே எழுதியிருந்தார். அத்துடன் தயாரிப்பு நிருவாகியாகவும் பல பொறுப்புகளை சுமந்தார்.

தனது சிறுகதைத் தொகுதியை நாம் எப்படியும் அச்சிட்டு வெளியிட்டுவைப்போம் என்ற திடமான நம்பிக்கை அவரிடம் இருந்தமையால்தான் அவர் வீரசிங்கம் மண்டபத்தின் பக்கமே வரவில்லை என்றும் பொன்மணி திரைப்படம் – தான் உடனிருந்தால்தான் இயக்குநருக்கும் நடித்தவர்களுக்கும் உற்சாகத்தை தரும் என்றும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொன்னார்

பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்த ராசதுரை ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மட்டுமன்றி வானொலி – தொலைக்காட்சி – சினிமா – மேடை நாடகம் – விளம்பரக்கலைத்துறை முதலானவற்றிலும் கணிசமான பங்களிப்புகளை வழங்கியவர்.

இலங்கையில் சப்ததீவுகள் என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஊர்காவற்றுறையில் கரம்பன் ஊரில் பிறந்த ராசதுரையின் தேவ கிருபையை முன்னிட்டு வாழும் – என்ற சிறுகதை இலங்கையில் தமிழ்க்கல்விப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வருட இலக்கியப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது. குறிப்பிடத்தகுந்த இந்த சிறுகதை இந்தி மொழியில் பெயர்க்கப்பட்டு தர்மயுக் என்ற சஞ்சிகையில் வெளியாகியது. தர்மயுக்- – TIMES OF INDIA பிரசுரமாகும்.
மேற்சொன்ன சிறுகதையும் காவலூர் ராசதுரையின் இதர ஆரம்பகால சிறுகதைகளும் கொண்ட முதற் கதைத் தொகுப்பு குழந்தை ஒரு தெய்வம் – தமிழ்நாட்டில் வெளிவந்தது. நவீன தமிழ் இலக்கியத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்ற பிரபல விமர்சகர் க.நா.சுப்பிரமணியம் (க.நா.சு) இந்நூலை இந்து ஆங்கில இதழில் சிலாகித்து விமர்சித்துள்ளார்.

முதற் கதைத் தொகுப்பிலிருந்து ஈழத்து இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்ட காவலூர் ராசதுரை – இலங்கையில் சுதந்திரன் – வீரகேசரி – தினகரன் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி – தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார்.

தொழில் நிமித்தம் பல பணிகளில் இவர் ஈடுபட்டிருந்த போதிலும் – தீவிரமான வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார்.
இலக்கியத் தேடல் இயல்பு கொண்டிருந்த இவர் – வானொலி ஊடகத்தினுள்ளும் – விளம்பரத்துறையினுள்ளும் பிரவேசிக்கும் வல்லமையும் பெற்றிருந்தார்.
இலங்கையில் பல முன்னணிப் படைப்பாளிகள் – பத்திரிகையாளர்களுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்த காவலூர் – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றினார்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி பின்னாளில் சொந்தமாக வசீகரா என்ற விளம்பர நிறுவனத்தையும் கொழும்பில் நிறுவினார். அந்நிறுவனம் இன்றும் கொழும்பில் இயங்கி வருகிறது.
இலங்கை வானொலி கலையகத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிலர் – இன்று தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் வானொலி ஊடகங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

யுனிசெப் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ள காவலூர் ராசதுரையின் படைப்புக்கள் – நாடகமாக – தொலைக்காட்சி நாடகமாக – சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளன.
கலங்கல் என்ற தொலைக்காட்சி நாடகம் – இலங்கை மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது.

வீடு யாருக்கு? – என்ற நாவல் மேடை நாடகமாகியுள்ளது.
யாழ்ப்பாண கலாசாரத்தை பிரதிபலித்த பொன்மணி திரைப்படம் பல விமர்சகர்களால் – மும்மொழிகளிலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியாக நடைபெற்ற பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஒரே ஒரு ஈழத்தமிழ்ப்படம் பொன்மணி என்பது குறிப்பிடத்தகுந்தது.

SCRIPT NET எனப்படும் பிரித்தானிய தொண்டு நிறுவனத்தால் வளர்முக நாடுகளில் குறுந்திரைப்படத் தயாரிப்புத்துறைக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்கப்பட்ட வேளையில் – சிறந்த திரைக்கதைச் சுவடிகளை தேர்வு செய்யும் குழுவில் காவலூர் ராசதுரை அங்கம் வகித்தார். மேற்படி SCRIPT NET இன் உதவியுடன் தயாரிக்கப்பட்ட சில குறும்படங்கள் – 2006 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த எழுத்தாளர் விழாவில் காண்பிக்கப்பட்டது.

இலங்கை கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய கலாசாரப்பேரவையில் – சிறந்த நாடகங்களை – சிறந்த நாடகப்பிரதிகளை தேர்வு செய்யும் குழுவிலும் காவலூர் ராசதுரை அங்கம் வகித்துள்ளார்.

ஆற்றல் மிக்க இவர் – குழந்தை ஒரு தெய்வம் – ஒரு வகை உறவு ஆகிய கதைத் தொகுதிகளையும் வீடு யாருக்கு? என்ற குறுநாவலையும் – விளம்பரத்துறை தோற்றம் – வளர்ச்சி – வீச்சு – ஆதிக்கம் என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

காவலூரின் மகன் நவீனன் ராசதுரை தந்தையின் சில கதைகளை A Prophet Unhonoured என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
2007 ஆம் ஆண்டு காவலூர் ராசதுரைக்கு 75 வயது பிறந்ததும் அவரது பணிகளை பாராட்டி கௌரவிப்பதற்காக மெல்பனில் அந்த ஆண்டு நடந்த எழுத்தாளர் விழாவுக்கு அழைத்திருந்தோம்.

விழாவின் காலை அமர்வில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் ஆர்வமுடன் கலந்துகொண்டார். மாலையில் நாம் இரவு நிகழ்ச்சிக்கு தயாரான வேளையில் எதிர்பாராதவிதமாக சுகவீனமுற்றார்.

ங்கத்தின் செயற்குழுவிலிருந்த நண்பர் அல்லமதேவன் மெல்பன் ஓஸ்டின் மருத்துவமனையில் பணியாற்றுபவர். உடனடியாக அவருடைய உதவியுடன் காவலூரை மருத்துவமனையில் அனுமதித்தோம்.

இரவு நிகழ்ச்சியில் அவருக்குரிய விருதுக்கான உரையை சட்டத்தரணி ரவீந்திரன் சமர்ப்பித்தார். மருத்துவர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை குறிப்பிட்ட விருதை காவலூரின் சார்பில் பெற்றுக்கொண்டார்.
காவலூர் மறுநாள் மருத்துவமனையிலிருந்து அழைத்துவரப்பட்டார். அன்று மாலையில் அவரை எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையுடன் சிட்னிக்கு ரயிலேற்றிவிட்டேன்.

சில நாட்களின் பின்னர் சிட்னிக்குச்சென்று காவலூரின் மனைவி மக்கள் மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒன்று கூடல் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்து மீண்டும் காவலூரை பாரட்டி கௌரவித்தோம்.

கவிஞர் அம்பி காவலூருக்கு குறிப்பிட்ட விருதினை வழங்கினார். இந்தத்தகவல்களை இங்கு பதிவுசெய்வதற்கு அடிப்படையாகவிருக்கும் காரணம் தெளிவானது.

முன்னுதாரணமான பயனுள்ள வாழ்வை வாழ்ந்த ஒருவரை அவர் வாழும் காலத்திலேயே இனம் கண்டு நாம் கொண்டாடவேண்டும்.

அவ்வாறு எம்மால் கொண்டாடப்பட்ட காவலூர் ராசதுரை தற்பொழுது ஒரு முதியோர் பராமரிப்பு நிலையத்தில் தனது முகத்திலே எந்தச்சலனத்தையும் காண்பிக்காமல் எனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருடன் சற்று உரத்த குரலில் பேசினேன். எனது கரத்தை இறுகப்பற்றியவாறு முகம்மலர்ந்தார். சில செய்திகளை சொன்னபொழுது தனது இடது கரத்தினால் நெற்றியையும் கண்களையும் மூடிக்கொண்டார்.
நண்பர் சுந்தரதாஸ் அருகே தலைகுனிந்தவாறு எனது பேச்சை செவிமடுத்தவாறு காவலூரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றார்.

நாம்தான் வந்து பார்த்துவிட்டுச்சென்றோம் என்பதற்கு அடையாளமாக ஒரு காகிதத்தில் காவலூர் சுகம்பெறுவதற்கு பிரார்த்திப்பதாக எழுதி சுவரிலிருந்த வெண்பலகையில் ஒட்டிவிட்டு விடைபெற்றோம்.

அந்த முதியோர் பராமரிப்பு நிலையத்தை விட்டு வெளியே வந்தபொழுது மனதில் இனம்புரியாத பாரம் ஏறியிருந்தது. சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் மௌனமாக கார் தரிப்பிடத்தை நோக்கி நடந்தேன். எனது ஆழ்ந்த மௌனத்தை கலைப்பதற்காக எனது தோள் மீது கரம்வைத்து நாமெல்லாம் இனிமேல் செல்லவிருக்கும் பாதையைத்தான் காவலூர் கடந்து செல்கிறார் எனச்சொன்னார் சுந்தரதாஸ்.
—0—-
letchumananm@gmail.com

“காவலூர் ராசதுரை: பல்துறை வல்லுனர்” அதற்கு 2 மறுமொழிகள்

 1. Dear Comrade, I highly appreciate your article on Com.Kavaloor Rajadurai. I have an opportunity to meet him in Colombo in the residence of our friend Pararajasingham -Radio Ceylon. Now it is our duty to write on the persons
  who have devoted their life for the well being of the poor masses. I am also from Karampon. Thanks

  Thavapalan Kathiravelu

 2. காவலூர் ராசதுரை – 1967 ஆம் ஆண்டு எழுதிய அ.ந.கந்தசாமியின் மதமாற்றம் நாடகம் தொடர்பாக எழுதிய குறிப்புகள்.
  இலங்கை வானொலியின் ‘கலைக்கோலம்’ என்னும் நிகழ்ச்சிக்காக, தமிழ் நாடக்மொன்றினை விமரிச்க்கும்படி திரு.சீ.வி.ரா[சுந்தரம் ஒரு முறை என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கமைய அந்த நாடகத்தை விமரிசித்தபொழுது, இலங்கையில் நாடகத்துறையை வர்த்தக அடிப்படையில் மூலதனம் போட்டு ஸ்தாபனரீதியாகக் கட்டி வளர்த்தல் சாத்தியம் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தேன். நண்பர் அ.ந.கந்தசாமியுடன் தமிழ் நாடத்துறை பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபொழுது மேற்சொன்ன என் கருத்தை அவரிடம் சொல்லி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டேன். “வர்த்தக ஆற்றலுடையவர்களுக்குக் கலையார்வம் இல்லை; கலையார்வமுள்ளவர்களுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது’ என்று சொன்ன அவர் , ‘என்னுடைய ‘மதமாற்றத்தை’ உமக்குத்த்தருகிறேன்; பணம் எதுவும் வேண்டாம்; உம்முடைய கருத்துச் சரியானதுதானவென்று பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் அதை மேடையேற்றும்” என்றார். அவ்வளவுடன் நில்லாது குறிப்பிட்ட ஒரு தொifயை என்னால் புரட்ட முடியுமானால், நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குத் தம்மால் இயன்ற சகல் உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னார்.
  தமிழ் நாடகத்துறையில் ஈடுபாடுள்ள முத்தையா இரத்தினம், சில்லையூர் செல்வராஜன், லடீஸ் வீரமணி ஆகியோரும் என்னுடைய இந்தப் பரிசோதனைக்கு உதவ முன்வந்தார்கள். நாளடைவில் ஒரு குழுவே திரண்டு விட்டது. ஆயினும் ஏற்கனவே இருப்பதாகச் சொல்லப்படும் எண்ணற்ற நாடக மன்றங்களைப் போல நாமும் ஒரு நாடக மன்றத்தை அமைக்க முற்படவில்லை. எம்முடைய இந்த முயற்சி தமிழ் நாடகத்துறையின் முன்னேற்றம் கருதிச் செய்யப்படும் ஒரு சோதனையே. இந்தச் சோதனை வெற்றி பெற்று, அந்த வெற்றியைக் கண்டு இதைப்போன்ற சிறந்த நாடகங்களை நல்ல முறையில் மேடையேற்ற வேறு மன்றங்களும் முன்வருமானால், அதுவே தமிழ் நாடகத்துறைக்கு நாம் செய்த சேவையென்று மனநிறைவு பெறுவோம்.
  நாடகத்தை நடத்துவதற்கு வேண்டிய செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று முன்வந்ததைத் தவிர நான் பிரமாதமாக வேறொன்றும் சாதித்து விடவில்லை. ஆனால் அப்படி முன்வந்தமையால் பெரிய உண்மையொன்றினை நான் உணர்ந்து கொண்டேன்.
  கலைத்துறையில் உண்மையான ஆர்வமுள்ளவர்களுக்கு அவர்களை, அவர்களின் திறமைகளை, இனங்கண்டு வழிநடத்தக் கூடிய, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான , தலைவர் எவரும் இன்று நம் நாட்டில் இல்லையென்பதே அந்த உண்மையாகும். இருந்திருந்தால் இத்தகைய பரிசோதனை எப்பொழுதே நடைபெற்றிருக்கும்.
  அனுபவத்திலும் திறமையிலும் மற்றேல்லாவகையிலும் என்னிலும் மேலானவர்கள், பல்வேறு பதவிகளிலும், துறைகளிலும் மன்றங்களிலும் உள்ள சிறந்த நடிகர்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து, தங்கள் நேரத்தையும், சொந்தப் பணத்தையும், செல்விட்டு இந்த நாடகத்தைச் சிறப்பிக்க முன்வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னைப் போலவே அவர்களும் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி பற்றி தம்மனவளவில் சிந்தித்து, இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தமையேயாகும். அல்லாவிட்டால் இவ்வளவு திறமைசாலிகளையும் ஒரே குழுவாகத் திரட்ட முடிந்திருக்காது.
  இவர்கள் அனைவருக்கும் என் மன்ப்பூர்வமான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சிறந்த நாடகம் எப்படி அமைதல் வேண்டுமென்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கத்தக்க வகையில் நம்நாட்டின் திறமை மிக்க நடிகர்கள் ‘மதமாற்றத்தை’ இன்று நடித்துக் காட்டுகிறார்கள். அவர்களையும் என்னையும் பொறுத்தவரையில் இந்நாடகம் ஈழத்து நாடகத்துறையில் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாவதற்கான முன்னோடியாகும். அந்த நோக்கத்துடன், ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறோம் என்ற பணிவுடனும் பிரக்ஞையுடனும் இந்த நாடகத்தை ரசிகப் பெருமக்களாகிய உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
  16-5-1967
  நன்றி (பதிவுகள் ]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: