பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு

QLD   Function. 08doc.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Mountommaney என்னுமிடத்தில் அமைந்த Centenary Community Hub மண்டபத்தில் நிகழ்ந்த கலை – இலக்கிய சந்திப்பு அரங்கில் மூத்த தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் இணைந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காலை அமர்வில் மெல்பனிலிருந்து வருகை தந்த கலை – இலக்கியச்சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் டொக்டர் நடேசன், சங்கத்தின் துணைச்செயலாளர் கவிஞர் ஆவூரான் சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஸ்ரீநந்தகுமார் ஆகியோர் கட்டுரைகள் சமர்ப்பித்து உரையாற்றினர்.

ஆவூரான் சந்திரன் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா இயக்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
டொக்டர் நடேசன் படைப்பு இலக்கியத்தில் தொழில் சார்ந்த அனுபவப்பதிவு என்ற தலைப்பிலும் , ஸ்ரீநந்தகுமார் தமிழ் இலக்கியத்தில் ஆன்மீகம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

மதிய விருந்தோம்பலையடுத்து இரண்டாவது அமர்வு திருமதி சாரதா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வின் முதல் நிகழ்ச்சியாக நூல் அறிமுக அரங்கு இடம்பெற்றது.

ஸ்ரீநந்தகுமார் எழுதிய பிரணா சக்தியும் மனிதவளமும் நூலின் அறிமுக உரையை திரு. ஸ்ரீராம் ஹரிஹரன் நிகழ்த்தினார். சிறப்பு பிரதிகளை திரு. பரமநாதன்இ திருமதி வாசுகி சித்திரசேனன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
டொக்டர் நடேசனின் நூல்களான வண்ணாத்திக்குளம் – உனையே மயல்கொண்டு – அசோகனின் வைத்தியசாலை – மற்றும் வாழும் சுவடுகள் ஆகியனவற்றை ஆவூரான் சந்திரன் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

கருதரங்கில் சங்கத்தின் செயலாளர் முருகபூபதி தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும் என்ற கட்டுரையை சமர்ப்பித்தார். இக்கட்டுரையை வாசிப்பதற்கு முன்பதாக இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இக்கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பண்பாட்டியல் குறிப்பு என்ற ஆவணப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பேராசிரியர் கா. சிவத்தம்பி வாழ்ந்த காலத்தில் அவரது உரையுடன் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆவணப்படத்தை இயக்கியவர் கனடாவில் தற்பொழுது வதியும் கலைஞர் மூர்த்தி.

கவிதையரங்கில் திருமதி சாரதா ரவிச்சந்திரன் மற்றும் வாசுகி சித்திரசேனன் ஆகியோர் கவிதைகளை சமர்ப்பித்தனர்.

இளம்தலைமுறையைச் சேர்ந்த செல்விகள் ஓவியா பவனேந்திரகுமார் மற்றும் செல்வி ரூபிணி முகுந்தன் ஆகிய இருவரும் இணைந்து வழங்கிய தமிழ் ஆரம் நிகழ்ச்சி நடந்தது. கன்னித்தமிழும் கணினித்தமிழும் என்ற தலைப்பில் இவர்கள் இருவரும் அபிநயத்துடன் பேசியும் பாடியும் ஆடியும் வித்தியாசமான ஆனால் சிறப்பான ஒரு நிகழ்வை வழங்கினர்.
தமிழின் தோற்றம் வளர்ச்சி இன்றைய யுகத்தில் தமிழ் எவ்வாறு ஊடகங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்பதை கவிதை நயத்துடன் அவர்கள் இருவரும் சமர்ப்பித்தனர். இந்தப்பிரதியை எழுதியவர் திருமதி வாசுகி சித்திரசேனன்.
செல்வி ஜெயலக்ஷ்மி சித்திரசேனன் எழுதிய நான் யார்? என்ற பரிசுபெற்ற சிறுகதையை தானே வாசித்து சமர்ப்பித்தார்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினரும் இச்சந்திப்பு அரங்கை பிரிஸ்பேர்ணில் ஒழுங்குசெய்தவருமான திரு. முகுந்தராஜ் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கை நடத்தினார்.

எதிர்காலத்தில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு மற்றும் எதிர்காலத்தில் நடத்தவுள்ள தமிழ் எழுத்தாளர் விழா தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. சங்கத்திற்கென ஒரு இணையத்தளத்தை ஆரம்பிப்பது காலத்துக்கு காலம் பிரிஸ்பேர்ணில் அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகளை நடத்துவது எனவும் மெல்பன் – சிட்னி – கன்பரா – பிரிஸ்பேர்ண் உட்பட ஏனைய மாநிலங்களில் வதியும் கலை – இலக்கிய சுவைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்கத்தக்க ஒன்று கூடல்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் திரு – திருமதி பவனேந்திரகுமார் – திரு. பரமநாதன் – திரு. பழனித்தேவர் உட்பட பலர் உரையாற்றினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: