( ஜோர்ஜ் ஓர்வெல்)
தமிழாக்கம்:கந்தையா குமாரசாமி
மூன்று இரவுகளுக்குப் பின்பாக நித்திரையில் பன்றிப்பெரியவர் அமைதியுடன் மரண யாத்திரையை மேற்கொண்டார். அவருடைய உயிரற்ற உடல், பழமரமொன்றின் அடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பங்குனி மாத முற்பகுதியில் இது நடந்தது. அடுத்த மூன்று மாதங்களாகப் பல்வேறு மர்மமான செயற்பாடுகள் நடைபெற்றன. பன்றிப்பெரியவரின் சொற்பொழிவு விலங்குகளுக்கு வாழ்க்கையைப்பற்றி முற்றுமுழுதான புத்திசாலித்தனமான புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. பன்றிப்பெரியவரால் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட புரட்சி எப்பொழுது நடைபெறப்போகின்றது என்று தெரியாதென்றாலும் தங்கள் வாழ்வுக்கால வரையறைக்குள் அது நடக்குமா என்று சிந்திக்கவேண்டிய அவசியம் இல்லாததால் புரட்சிக்காகத் தங்களைத் தயார் படுத்தவேண்டியது தங்கள் தலையாயகடமை என்பதைத் தெளிவாகக் கண்டுகொண்டார்கள். விலங்குகளில் மிகவும் புத்திசாலித்தனமான பன்றிகளிடம் மிருகங்களுக்குக் கற்பிக்கும் தொழிலுடன் ஒழுங்கமைக்கும் பொறுப்பும் இயல்பாகவே வீழ்ந்தது. ஜோன்ஸ் அவர்களால் விற்பனைக்காக வளர்க்கப்படும் நெப்போலியன் ஸ்னோபோல் என்றழைக்கப்பட்ட இரண்டு ஆண்காட்டுப்பன்றிகள் எல்லாவற்றையும் விடச் சிறந்தனவாகக் காணப்பட்டன. நெப்போலியன் பன்றி மிகப் பெரிய உருவமுள்ள ஓரளவு பயங்கரமான பேர்க்க்ஷயர் இனத்தை சேர்ந்த ஒரேயொரு காட்டுப்பன்றியாகும். அது அதிகம் பேசாத தனது இஷ்டப்படி நடக்கும் குணாதிசயம் கொண்டது.
ஸ்னோபோல் பன்றி விரைவான பேச்சுடன் உற்சாகமுள்ள பன்றியாகும். எனினும் நெப்போலியன் பன்றியைப் போன்று குணத்தளவில் அல்லாததாகக் கருதப்பட்டது. பண்ணையிலுள்ள மற்றைய ஆண் பன்றிகளெல்லாம் இறைச்சித்தேவைக்காக வளர்வனவாகும். அவைகளுள் ஸ்குவீலர் என்ற பெயர் கொண்ட சிறிய கொழுத்த பன்றி மிகவும் பிரபல்யமானதாகும். அதனுடைய வட்டவடிவமான கன்னங்கள் பிரகாசமான விழிகள் சுறுசுறுப்பான அசைவுகள் கீச்சிடும் குரல் யாவரையும் கவரத்தக்கன. மிகக் கஷ்டமான ஒரு விடயத்தைப்பற்றி அலசும்போது ஒருபக்கத்திலிருந்து மற்றப்பக்கத்திற்குத் தன்வாலை ஆட்டி அனுசரித்துக்கொள்வது அப்பன்றியின் வாதாடும் கெட்டித்தனத்தைக் காண்பிப்பதாகும். ஸ்குவீலர்பன்றியிடம் வெள்ளை நிறத்தைக் கறுப்பு நிறம் என்று நிரூபிக்கக்கூடிய கெட்டித்தனம் உள்ளது என்று மற்றவர்கள் புகழ்ந்தார்கள். இம்மூன்று மிருகங்களும் வயதான பன்றிப்பொரியவரின் கற்பித்தலைப் பூரணமான ஒழுங்குமுறைச் சிந்தனைக்கோவையாக விவரணப்படுத்தி மிருகவர்க்காபிமானம் என்று பெயரிட்டனர். பல நாட்களில் இரவு வேளைகளில் ஜோன்ஸ் துயின்ற பின்பாகத் தானியக் களஞ்சியத்தில் இரகசிய சந்திப்புகளை ஏற்படுத்தி மிருக வர்க்காபிமானக் கொள்கைகள் பற்றி மற்றைய மிருகங்களுக்கு விவரணப்படுத்தினார்கள். ஆரம்பகாலத்தில் மந்தபுத்தியுடனும் அக்கறையின்மையுடனும் சந்திப்பை மேற்கொண்டார்கள்.
அந்த மிருகங்களில் சிலர் தங்கள் எஜமானனான ஜோன்ஸ் அவர்கட்கு விசுவாசமாயிருக்க வேண்டிய கடப்பாடுபற்றி எடுத்துக் கூறினர்.அத்துடன் ஜோன்ஸ் தங்களுக்கு உணவளிப்பதாகவும் அவர் அகன்றுவிட்டால் பட்டினிகிடந்து சாகவேண்டிவரும் என்றும் கூறினர். நாங்கள் இறந்த பின்பாக நடைபெறுபதைப்பற்றி ஏன் நாங்கள் கவனத்திலெடுக்கவேண்டும் என்றும் இந்தப்புரட்சி நடைபெறுங்கால் நாங்கள் அதற்காக உழைத்தாலும் சரி உழைக்காவிட்டாலும் சரி அதனால் என்ன மாற்றம் ஏற்படப்போகின்றது என்று வேறு சிலர் கேட்டனர். மிருகவர்க்காபிமான ஆர்வத்துக்கு இத்தகை வாதங்கள் நேரெதிரிடையானவை என்று அவர்களைத் திருப்திப்படுத்துவதற்குப் பன்றிகள் மிகுந்த பிரயாசை எடுக்கவேண்டியிருந்தது. புரட்சிக்குப் பின்னர் சர்க்கரை கிடைக்குமா என்ற மிகமட்டமான கேள்வியை வெண்ணிறப் பெண்குதிரை முதன்முதலாகக் கேட்டது.இந்தப் பண்ணையில் சர்க்கரை தயாரிப்பதற்கு வேண்டிய சாதனங்களில்லாததால் சர்க்கரை கிடைக்காது. மேலும் உனக்குச் சர்க்கரை அவசியமில்லை. உனக்குத் தேவையான கடலையும் வைக்கோலும் கிடைக்கும் என்று திடத்துடன் பன்றிகள் கூறின. தன்னுடைய பிடரிமயிரில் தொடர்ந்தும் நாடாக்கள் அணிவதற்கு அனுமதியளிப்பீர்களா என்றும் அது கேட்டது.
தோழரே! நீ விருப்புக்கொண்டுள்ள அந்த நாடாக்கள் அடிமைத்தனத்தைக் காண்பிக்கும் ஒரு அடையாளச் சின்னமாகும். சுதந்திரம் நாடாக்களை விட மிகவும் பெறுமதியானது என்பதை உன்னால் விளங்கிக்கொள்ள முடியாதா?
பெண்குதிரை அதற்குச் சம்மதம் தெரிவித்ததாயினும் திருப்தியடைந்ததாகக் காணப்படவில்லை. அப்பன்றிகள் பழக்கப்பட்ட அண்டங்காக்கைகளின் பொய்யுரைகளைத் தோற்கடிக்கப் பலத்த முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஜோன்ஸின் செல்லப்பிராணியான அண்டங்காக்கை ஒரு வேவுபார்க்கும் உளவாளியென்பதோடு அழகாகக் கதையளக்கும் வல்லமை கொண்ட கோள்சொல்லும் ஒரு பட்சியாகும். வெள்ளியங்கிரிமலை(கற்கண்டுமலை) என்றழைக்கப்படும் ஒரு பூடகமான நாட்டைப்பற்றித் தனக்குத் தெரிந்திருப்பதாக அண்டங்காக்கை உரிமை கொண்டாடியது. அம்மலை முகில்களுக்கு அப்பாலுள்ள வானவெளிக்குச் சிறிது தூரத்தில் உள்ளதாகச் சொன்னது. அந்தக் கற்கண்டுமலையில் வருடம் பூராவும் வெண்ணிற முப்படையிலைகள் கொண்ட செடிகள் பூத்துக்கொண்டேயிருக்கும் எனவும் சொன்னது. அம்மலையின் புதர்களில் கற்கண்டும் ரொட்டியும் வளர்கின்றது என்றும் கூறியது. மிருகங்கள் அண்டங்காக்கையை வெறுப்பதற்குக் காரணம் அது வேலையொன்றும் செய்யாமல் கட்டுக்கதை சொல்வதாலாகும். சில மிருகங்கள் கற்கண்டுமலை இருப்பதாக நம்பின. அத்தகைய ஒரு இடம் இல்லையென்று கடுமையாக வாதாடி அவைகளைத் தம்வழிக்குக் கொண்டுவரப் பன்றிகள் படாதபாடுபடவேண்டியிருந்தது.
வண்டியிழுக்கும் ஜோடிக் குதிரைகள்தான் அவர்களின் நம்பிக்கைக்குரிய சீடர்களாகும். இவையிரண்டும் சுயமாகவே சிந்திக்கும் ஆற்றல் இல்லாத காரணத்தினால் பன்றியைத் தனது குருவானவராக ஏற்றுக்கொண்டபின்னர் பன்றி கூறியதை அப்படியே ஜீரணித்து மட்டரகமான விவாதங்களுடன் மற்றைய விலங்குகளுக்குப் பரப்பின. தானியக் களஞ்சியத்தில் நடைபெறும் இரகசிய கூட்டங்களுக்குத் தவறாது சமூகமளித்த வண்டியிழுக்கும் ஜோடிக்குதிரைகள் இங்கிலாந்தின் விலங்குகளே என்ற பாடலைக் கூட்டம் முடியும் தருணத்தில் பாடின.
மிகவும் இலகுவாக யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர்ப் புரட்சி ஏற்பட்டுவிட்டது. கடந்த வருடங்களாக ஜோன்ஸ் ஒரு கடும்பிடியான பண்ணை எஜமானனாயிருப்பினும் தகுதிபெற்றவராகவே விளங்கினார. எனினும் பிற்காலத்தில் அவர் தீயவழிகளில் செல்லத்தொடங்கிவிட்டார். நீதிமன்ற வழக்கொன்றில் பணமதிகம் இழந்ததன் பின்னர் அவர் மனமுடைந்துபோய் மிதமிஞ்சிய அளவு மதுபானம் அருந்தக் கற்றுக்கொண்டார். பகல் நேரம் முழுவதினையும் குசினியிலுள்ள சாய்மனைக்கதிரையில் படுத்தவண்ணம் மதுவகைகள் குடித்துக்கொண்டும் புதினப் பத்திரிகைகள் படித்துக்கொண்டும் இடையிடையே அண்டங்காக்கைக்குப் பியரில் தோய்த்த பாண் துண்டுகளைப் போட்டவண்ணம் நேரத்தைச் செலவழித்தார். அவருடைய பணியாட்கள் சோம்பேறிகளாகி நேர்மையற்றவர்களாக இருந்தார்கள். வயல்களெங்கும் களைகள் வளர்ந்தன. கட்டிடங்கள் கூரைகள் திருத்தமின்றியிருந்தன. பயிர்கள் கவனிப்பாரற்று இருந்தன. மிருகங்கள் அரைகுறையுணவுடன் பட்டினியாக வாழ்ந்தன.
ஆனிமாதம் வந்து புல்வயல் காய்ந்து அறுவடை செய்யக் காத்திருந்தது. ஒரு சனிக்கிழமையன்று ஜோன்ஸ் விலிங்டன் நகருக்குப் போய் அங்குள்ள றெட் லயன் கிளப்பில் அளவுக்குமீறிக் குடித்ததினால் ஞாயிற்றுக்கிழமை மதியம்வரை பண்ணைக்குத் திரும்பமுடியவில்லை. அவரது பணியாட்கள் அதிகாலை பசுக்களிடமிருந்து பாலைக் கறந்த பின்னர் மிருகங்களுக்கு உணவு கொடுப்பதைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் முயல்வேட்டையாடச் சென்றுவிட்டனர். ஜோன்ஸ் திரும்பிவந்து உடனயாக விருந்தினர் அறையிலுள்ள கட்டிலில் உலகப் புதினங்கள் பத்திரிகை முகத்தை மூடிக்கொண்டிருக்க நித்திரையானதால் மாலை நேரம் வந்தும் பண்ணை மிருகங்களுக்கு உணவு கொடுக்கப்படவில்லை. மிருகங்களால் பசி தாங்க முடியவில்லை. பசுமாடுகளில் ஒன்று உணவறைக் கதவைத் தனது கொம்பினால் இடித்துத் தள்ளியதும் மற்றைய மிருகங்கள் உட்புகுந்து தானியங்கள் வைத்துள்ள பாத்திரங்களிலிருந்து உணவைக் காலிசெய்யத் தொடங்கின. அச்சமயத்தில்தான் ஜோன்ஸ் நித்திரைவிட்டு எழுந்தார். அடுத்த நிமிடம் அவரும் அவருடைய பணியாட்கள் நால்வரும் சவுக்குகளுடன் உணவறைக்குச் சென்று நாலாபக்கமும் விளாசத்தொடங்கினார்கள். இத்தண்டனையைக் கடும்பசி கொண்ட மிருகங்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. முன்கூட்டியே திட்டமிடாதபோதிலும் தங்களை பட்டினி போட்டு வாட்டிவதைக்கும் மனிதர்களை ஒருமனதாகத் தாக்கத் தொடங்கினார்கள். ஜோன்ஸ்ம் அவரது பணியாட்களும் நாலாபக்கத்திலிருந்தும் தாங்கள் உதைக்கப்படுவதையும் கொம்புகளால் குத்தப்படுவதையும் அவதானித்துக் கொண்டார்கள். நிலைமை கட்டுக்கடங்காத அளவுக்குப் போய்க்கொண்டிருந்தது. இதற்கு முன்பாக மிருகங்கள் இந்த மாதிரி நடந்துகொள்வதைக் கண்டதில்லை. தங்கள் இஷ்டம் போல அடித்தும் துன்புறுத்தியும் பழக்கப்பட்ட அவர்களுக்கு மிருகங்களின் இந்தத் திடீர் அதிரடி எழுச்சி அவர்களுடைய புத்திச்சாதுர்யத்தைப் பெருமளவில் குறைத்தன. ஒரிருகணத்தில் தாங்கள் எதிர்த்தாக்குதல் தொடுப்பதைக் கைவிட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அந்த ஐவரும் ஒரு நிமிடத்துக்குப்பின்னர் பிரதான வீதிக்குச் செல்லும் வண்டிப்பாதையை நோக்கி ஓடிக்கொண்டிருக்க மிருகங்கள் வெற்றிப் பெருமிதத்துடன் அவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டிருந்தன.
திருமதி.ஜோன்ஸ் படுக்கையறை யன்னலூடாக இந்த அனர்த்தம் நடைபெறுவதை அவதானித்துவிட்டு அவசர அவசரமாகச் சில சாமான்களைத் தனது கம்பளப் பைக்குள் திணித்துக்கொண்டு வேறொரு பாதையால் பண்ணையைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். அண்டங்காக்கை தனது இருப்பிடத்திலிருந்து சிறகடித்தவண்ணம் துள்ளி எழும்பி அடித்தொண்டையால் கத்தத் தொடங்கியது. இந்த இடைவேளையில் ஜோன்சையும் அவரது பணியாட்கள் நால்வரையும் பிரதான வீதிக்குத் துரத்திவிட்டு தங்களின் பின்னாலிருந்த 5 தடைச்சட்டங்கள் கொண்ட வாயிலை மூடி அடைத்துவிட்டன. எனவே என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளுமுன்பாகவே வெற்றிகரமாகப் புரட்சி நடாத்தி முடிக்கப்பட்டு ஜோன்ஸ் விரட்டப்பட்டு மனோ பண்ணை விலங்குகளின் வசமானது. சில நிமிடங்கள்வரை விலங்குகளால் தங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை நம்பவேமுடியவில்லை. அவைகள் முதன் முதலரகப் பண்ணையின் எல்லைகள் ஓரமாக எங்காவது மனிதன் யாராவது ஒளிந்திருக்கின்றானா என்று நிட்சயப்படுத்துவதற்காக அணிவகுத்து நாலுகால் பாய்ச்சலில் துள்ளிக்குதித்தபடி ஓடிச் சென்றன. அதன்பின்னர் அவை பண்ணைக் கட்டிடங்களுள் நுழைந்து தங்களின் வெறுப்புக்கு உள்ளான ஜோன்சின் ஆட்சியாளரின் கடைசி எச்சசொச்சங்களை அழித்தொழிக்கச் சென்றன. குதிரை லாயத் தொங்கலிலுள்ள குதிரைக்கவச அறையை உடைத்து உள் நுழைந்து அங்கு காணப்பட்ட மூக்கணாங்கயிறுகள், நாய்ச்சங்கிலிகள், கடிவாளமிடும்அலகுகள், பன்றிகளையும் செம்மறிகளையும் காயடித்து வீரியமற்றதாக்குவதற்கு உபயோகப்படுத்தப்பட்ட விதம்விதமான கொடிய கத்திகள் யாவையும் எடுத்துக் கிணற்றுக்குள் போட்டன. கடிவாளவார், குதிரைக்கயிறு, சுருக்குக்கயிறு, கண்மறைக்கும் திரை ஆகியவையும் கட்டடங்களை அடுத்துள்ள வெளியில் எரிந்து கொண்டிருக்கும் குப்பைகூள நெருப்பில் போடப்பட்டன. சவுக்குத்தடிகளுக்கும் அந்தக் கதியே கிடைத்தது. சவுக்குகள் நெருப்பில் எரிவதைக் கண்ணுற்ற விலங்குகள் சந்தோஷத்தில் துள்ளிப் பாய்ந்து கொண்டாடின. பண்ணை வேலை நாட்களில் குதிரைகளின் பிடரியிலும் வாலிலும் கட்டிக் கவர்ச்சி காண்பிக்கும் வண்ணநாடாக்களை ஸ்னோபோல் பன்றி எரியும் நெருப்பில் வீசியது. அந்த நாடாக்கள் மனிதர்களின் உடையணிகளாகவே கணிக்கப்படவேண்டும் என்றும் மிருகங்கள் நிர்வாணமாகவே செல்லவேண்டும் என்றும் அது கூறியது. இதைக் கேட்டவுடன் வண்டியிழுக்கும் குதிரை கோடைகாலத்தில் காதுகளை மொய்க்கும் ஈக்களைத் துரத்த அணியப்பட்ட ஒரு சிறிய வைக்கலால் உருவாக்கப்பட்ட தொப்பியொன்றைக் கொண்டுவந்து மற்றையவையோடு எரிவதற்காக நெருப்புக்குள் வீசியெறிந்தது.
சிறிது நேரத்துள் ஜோன்ஸ் அவர்களை ஞாபகப்படுத்தும் சாதனங்கள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன. பின்னர் நெப்போலியன் பன்றி உணவுகளஞ்சிய அறைக்கு சகலரையும் அழைத்துச் சென்று எல்லோருக்கும் வழமையிலும் பார்க்க இருமடங்கு நவதானியங்களையும் ஒவ்வொரு நாய்க்கும் இரண்டு சிறு ரொட்டிகளையும் பகிர்ந்தளித்தது. அதன்பின்பாக தொடர்ச்சியாக ஏழு முறைகள் இங்கிலாந்தின் விலங்குகளே என்ற பாடலைப் பாடின. பின்பு இரவுத் தங்கலுக்கான இடத்திற்குச் சென்று முன்னொருகாலமும் இல்லாத நிம்மதியுடன் நித்திரை கொண்டன.
வழமைபோல அதிகாலை துயில்விட்டு எழுந்து சடுதியாக நடைபெற்ற பிரகாசமான சம்பவத்தை ஞாபகத்தில் கொண்டு பசும் புல்வெளிக்கு ஒற்றுமையுடன் விரைந்தன. புல்வெளிக்குச் செல்லும் வழியில் பண்ணையின் பெரும் பகுதியை நோட்டம்விடக்கூடிய ஒரு மேட்டுநிலம் இருந்தது. விலங்குகள் அந்த உயரமான இடத்திற்கு விரைந்து சென்று நிர்மலமான அதிகாலை ஒளியில் தங்களைச் சுற்றியுள்ள பிரதேசத்தை உற்றுப்பார்த்தன. அவைகளால் பார்க்கககூடிய அப்பிரதேசங்கள் யாவும் அவைகளுக்குச் சொந்தமானவையாகிவிட்டது என்ற அந்த எண்ணத்தினாலேற்பட்ட பரவசத்தினால் சுழன்று மிரண்டு துள்ளிப் பாய்ந்து மகிழ்ச்சியின் எழுச்சி காட்டிக் கொண்டாடின. பனியில் உருண்டும், வாய்கொள்ளுமளவு கோடைக்கால இனியபுல்லை மேய்ந்தும், கருமண் கட்டிகளைக் காலால் உதைத்தும், அக்கட்டிகள் தரும் சுகந்த மணத்தை நுகர்ந்தும் மகிழ்ந்தன. அதன் பின்பாகச் சுற்றுலாச் சென்று உழுநிலங்கள் புல் விளையும் வயல்கள் பழத்தோட்டங்கள் குளம் முட்கள் நிறைந்த இடங்கள் அனைத்தையும் வாயடைத்த வியப்புடன் கண்ணோட்டம் விட்டன. அவைகள் யாவும் இதற்கு முன்னர் காணாத ஒன்றாகவும் அவை தங்களுக்கே உரித்தாகிவிட்டதை நம்பமுடியாதவையாகத் தடுமாறின. பின்பாகப் பண்ணைக்கட்டிடங்களின் முன்பாகத் திரண்டு சென்று பண்ணைவீட்டுவாசல் கதவுக்கு முன்பாக மௌனமாக நின்றன. அதுவும் அவர்களுக்குச் சொந்தமாயினும் அவை உள்ளே செல்லப் பயந்தன. ஒரு சில வினாடிகளின் பின்பு நெப்போலியனும் ஸ்னோபோலும் தலையால் முட்டிக் கதவைத் தமது தோள்வலிமையால் திறந்ததும் மிருகங்கள் வரிசையில் நின்று எதனையும் குழப்பாமல் மிகவும் கவனத்துடன் அணிவகுத்து நடந்து சென்றன. அவைகள் கால்விரல் நுனியில் நடந்த வண்ணம் குசுகுசுப்பதிலிலும் பார்க்க உரக்கப் பேசாமல் நம்ப முடியாதளவு சுகபோகப் பொருள்களான இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட நவீன மெத்தைக்கட்டில்கள் அழகுபார்க்கும் நிலைக்கண்ணாடிகள் கம்பளங்கள் ஆகியவற்றை ஆச்சரியத்தோடு உற்றுநோக்கியவண்ணம் ஒவ்வொரு அறையாகச் சென்றன. அவைகள் மாடியிலிருந்து திரும்பிவரும் சமயம் பெண்குதிரையான மொல்லி மட்டும் காணப்படவில்லை. மிருகங்கள் திரும்பிப்போய்ப் பார்த்தபொழுது மொல்லி மிகவும் சிறந்த படுக்கையறையில் நின்றது. மொல்லி ஒரு நீல நாடாவை திருமதி.ஜோன்ஸின் அலங்காரக் கண்ணாடி மேசையிலிருந்து எடுத்துத் தன்னுடைய கழுத்துக்கெதிராக் வைத்துக்கொண்டு முட்டாள்தனத்துடன் நிலைக்கண்ணாடியில் தன் அழகை இரசித்துக் கொண்டிருந்தது. மற்றமிருகங்கள் அதனை வெகுவாகக் கண்டித்துவிட்டு வெளியேறின. குசினியில் தொங்கிக்கொண்டிருந்த பன்றிகளின் பதனிடப்பட்ட தொடைஇறைச்சித் துண்டுகள் மண்ணில் புதைப்பதற்காகக் கொண்டுசெல்லப்பட்டன. வண்டியிழுக்கும் குதிரையின் கால் குளம்பினால் பியர் இருந்த மரக்கூஜா உதைக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டது. இவை தவிர அந்த வீட்டிலுள்ள பொருட்கள் வேறெதுவும் சேதமாக்கப்படவில்லை. அந்தப் பண்ணைவீட்டைப் பொருட்காட்சி நிலையமாக மாற்றிப் பாதுகாப்பதென அந்த இடத்திலேயே ஏகமனதான தீர்மானம் எடுக்கப்பட்டது. எந்தவொரு மிருகமும் அந்த வீட்டில் எக்காலகட்டத்திலும் வசிப்பதில்லை என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. காலை உணவை மிருகங்கள் உண்டபின்பாக ஸ்னோபோலும் நெப்போலியனும் அவர்களை மீண்டும் அழைத்தன.
தோழர்களே! இப்பொழுது நேரம் காலை 6.30 மணி. பகல் நேரம் நீண்ட காலம் இது. இன்று நாம் புல்அறுவடையை ஆரம்பிப்போம். அதற்கு முன்பாகக் கவனிக்க வேண்டிய சங்கதியொன்று உள்ளது என்று ஸ்னோபோல்பன்றி கூறியது. கடந்த 3 மாதங்களாகத் தாங்கள் எழுதிப் படித்த ஜோன்ஸின் பிள்ளைகளுக்குச் சொந்தமான பழைய எழுத்திலக்கணப் புத்தகத்தின் உதவியுடன் தாங்கள் கற்றதாகவும் அவை குப்பைக்குவியலுக்குள் வீசப்பட்டுக் காணக்கிடப்பதாகவும் பன்றிகள் வெளிப்படுத்தின. நெப்போலியன் பன்றி கறுப்பு வெள்ளை நிற வர்ணப்பூச்சுத் தகரங்களை எடுத்துவரும்படி சொல்லிவிட்டுப் பிரதான வீதியில் உள்ள 5 தடைபோடப்பட்ட வாசல்கதவை நோக்கிச் சென்றது. பின்னர் அழகாக எழுதுவதில் பெயர் போன ஸ்னோபோல்பன்றி தூரிகையைப் பாதத்தால் எடுத்து வாசல்கதவின் மேல்பக்கத்தில் எழுதியுள்ள மனோபண்ணை என்ற வாசகத்தை அழித்துவிட்டு விலங்குப்பண்ணை என்று மாற்றம் செய்தது. இனிமேல் இந்தப் பெயரே வழங்கப்படவேண்டும் என்று பன்றிகள் கூறின. அதன் பின்பாக விலங்குகள் பண்ணைக் கட்டிடங்களுக்குச் சென்றனர். நெப்போலியனும் ஸ்னோபோலும் ஏணியொன்றைக்கொண்டுவரும்படி கூறியதும் அவ்வேணி தானியக் களஞ்சியச்சுவரில் சாத்திவைக்கப்பட்டது. பன்றிகள் கடந்த 3 மாதங்களாகக் கற்றபடி மிருகவர்க்காபிமானக் கொள்கைகளைச் சுருக்கி 7 நீதிக்கட்டளைகளாக ஆக்கியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்த 7 நீதிக்கட்டளைகளும் சுவரில் பொறித்து அந்த விலங்குப்பண்ணையிலுள்ள விலங்குகள் பறவைகள் யாவும் அதற்கமைய வாழவேண்டுமென்பது மாற்றமுடியாத சட்டமாக ஏற்படுத்தப்பட்டது. ஸ்னோபோல் பன்றி ஏணியில் சமநிலைபேணச் சிறிது சங்கடப்பட்டு ஏறி நிற்க ஸ்குவீலர்பன்றி ஏணிப்படிகளில் சிறிது கீழே நின்றுகொண்டு வர்ணப்பூச்சுத் தகரங்களை வைத்திருக்கச் சுவரில் ஸ்னோபோல் பன்றி எழுதுவதில் ஈடுபட்டது. 7 நீதிக்கட்டளைகளும் 30 யார்களுக்கு அப்பாலிருந்து தெளிவாகப் பார்க்க்கூடியதாகத் தார் பூசப்பட்ட சுவரில் பெரிய வெள்ளை எழுத்துக்களில் காணப்பட்டன.
அந்த 7 நீதிக்கட்டளைகளாவன:
1. இரண்டு கால்களில் நடமாடும் எவரும் விரோதிகளாகும்.
2. நான்கு கால்களில் அல்லது இறக்கைகளுடன் செல்பவை நண்பர்களாகும்.
3. எந்த விலங்கும் உடைகள் அணியக்கூடாது.
4. எந்த விலங்கும் மெத்தைக் கட்டிலில் துயிலக்கூடாது.
5. எந்த விலங்கும் மதுபானவகைள் அருந்தக்கூடாது.
6. எந்த விலங்கும் மற்றைய விலங்கினைக் கொல்லுதல் ஆகாது.
7. சகல விலங்குளும் சமமான உரிமை கொண்டவை.
இவ்வாசகங்கள் அழகாக எழுதப்பட்டிருந்தாலும் ஓரிரு இடங்களில் எழுத்துத் தவறு காணப்பட்டது. ஸ்னோபோல் பன்றி அவ்வாசகங்களை மற்றவர்களின் நன்மைக்காக உரத்து வாசித்துக் காட்டியது. சகல விலங்குகளும் சம்மதத்திறகு அறிகுறியாகத் தலையை ஆட்டின. கெட்டிதனமுள்ளவை அந்த நீதிக்கட்டளைகளை மனனம் பண்ணத் தொடங்கின.
பூச்சுத்தூரிகையைப் புல்வயலுக்குள் விட்டெறிந்தது ஸ்னோபோல் பன்றி. தோழர்களே! இனிமேல் நாங்கள் ஜோன்ஸ்ம் அவரது ஆட்களும் செய்துகாட்டியதிலும் பார்க்க விரைவாகப் புல்அறுவடையில் கவனம் செலுத்துவோமாக என்று உரத்துச் சப்தமிட்டது. இந்தத் தருணத்தில் அசௌகரியமாகக் காணப்பட்ட 3 பசுமாடுகள் பலத்த சப்தத்தில் கதறின. அவைகளின் முலைகள் வீங்கிப்பருத்திருந்தன. 24 மணிநேரமாகப் பால் கறக்கப்படவில்லை என்பதைக் காணக்கூடியதாயிருந்தது. பன்றிகள் வாளிகள் கொண்டுவரும்படி கூறினார்கள். பன்றிகளின் பாதங்கள் பால் கறப்பதற்கு ஏற்றதாயிருந்ததால் ஓரளவு வெற்றிகரமாகப் பாலைக் கறந்தன.
5 வாளிகள் நிறைய நுரைக்கும் தடிப்பான பாலை விலங்குகள் சிரத்தையுடன் அவதானித்தன. அந்தப் பாலுக்கு என்ன நடக்கப்போகின்றது என்று யாரோ கேள்வி எழுப்பினார்கள். ஜோன்ஸ் சில சமயங்களல் எமது உணவில் கலப்பதுண்டு என்று கோழிகளிலொன்று கூறியது. வாளிகளுக்கு முன்பாக நின்றுகொண்டு தோழர்களே! அதைப்பற்றி யாரும் கவலைப்படவேண்டாம் . அவ்விடயம் நன்கு கவனிக்கப்படும். அறுவடை மிகவும் முக்கியமானது. தோழர் ஸ்னோபோல் பன்றியார் உங்களை வழி நடத்துவார். நான் சில நிமிடங்களில் உங்களைத் தொடர்வேன். முன்னே செல்லுங்கள் தோழர்களே ! காய்ந்த புல்வயல் உங்களைக் காத்துக் கொண்டிருக்கின்றது என்று கத்திக் கூறியது நெப்போலியன் பன்றி. அவ்வாறே விலங்குகள் அனைத்தும் புல்வயலில் அணிதிரண்டு அறுவடையை ஆரம்பித்தன. மாலை நேரம் திரும்பிவந்த நேரம் அந்தப் பால் காணாமல் போய்விட்டதை விலங்குகள் அவதானித்தன.
தொடரும்