( இறுதி அத்தியாயம்)
அவுஸ்திரேலியாவில் மிருகவைத்தியராக வேலை செய்யும் போது சகவைத்தியரான ஹாசன் (லெபனானை சேர்ந்தவர்) அரேபிய மொழியில் எழுதப்பட்ட புராதன அறுவை சிகிச்சை புத்தகமொன்றை காட்டினார். அதில் 4000 வருடங்களுக்கு முன்பு உபயோகிக்கப்பட்ட சத்திரசிகிச்சை உபகரணங்களின் படங்கள் இருந்தன. அவற்றில் பல தற்போதும் உபயோகிக்கப்படும் உபகரணங்களைப் போன்று இருந்தது, இவற்றில் முக்கியமாக கண் சத்திரசிகிச்சைக்கு பாவித்தவை அச்சொட்டாக தற்கால உபகரணங்களைப் போன்று இருந்தன.
வைத்திய முறைகள் எல்லா சமூகங்களின் வரலாற்றில் ஏதோவிதமாக வளர்நது இருக்கிறது. வைத்தியர்கள் சில சமூகத்தில் மதத்தோடு சேர்ந்து இருக்கும்போது வளர்ச்சியடைந்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கல்வி, மற்றும் எழுத்தறிவு மதகுருமார்களிடமே காலம்காலமாக இருந்தது. விவசாயிகள், கைத்தொழிலாளர் மற்றும் போர்வீரர்களுக்கு கல்வியறிவு தேவையற்றதாக இருந்தது.
சீன வைத்திய முறையான அக்கியுபங்சர், மற்றும் மூலிகை வைத்தியம் புராதனமானது, அது சீன சமூகத்தில் அதிக மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது, 4500 வருடங்களுக்கு முன்பு மனிதர்களிலும் மிருகங்களிலும் பாவிக்கப்பட்ட எலும்பாலான அக்கியூபங்சர் ஊசிகள் அகழ்வாய்வில் சீனாவின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அக்கியூபங்சர் புள்ளிகளைக் கொண்ட யானையின் வரைபடம் கண்டெடுக்கப்பட்டதாக சீன மருத்துவக் குறிப்பொன்றில் உள்ளது. இதே காலத்தில் இந்தியாவிலும் ஆயுர்வேதம் நடைமுறையில் இருந்தாலும் பிரிதானிய காலனித்துவத்தில் பாவனை குறைந்து கொண்டு விட்டது.
சீனா ,இந்திய மருத்துவ முறைகள் முழுமையாக ((Holistic) நோயாளியைப் பார்க்கின்றன. உடலில் நோய் ஏற்படும் போது சமநிலையில் மாற்றம் ஏற்படுவதாக கணிக்கப்படுகிறது. இதற்கு அப்பால் தொற்று நோய் என்ற கருத்து இல்லை. உதாரணமாக சீன தேச மருத்துவத்தில் நரம்பு மண்டலம் என்பது இல்லை. ஆனால் நரம்பு வியாதிகள் உள்ளன. அத்துடன் குணப்படுத்த வழிகளும் உண்டு. இதே போல் ஆயுர்வேதத்திலும் காலிலும் ,முதுகிலும்,வாய்வினால் நோ ஏற்பட்டதாக நாம் கூறுவோம் .
மேல்நாட்டு வைத்திய முறையில் உடலின் பகுதி பகுதியாக பார்க்கப்படுகிறது. மேற்கத்ததைய மருத்துவத்தில் நோய்கள் ஏற்படும்போது பல்வேறு காரணங்கள் உள்ளன. உடலில் புற்றுநோய் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதி வெட்டி அகற்றப்படுவது மேற்கத்தைய முறையாகும். ஆனால் கீழைத்தேச மருத்துவம் மொத்த உடலில் ஏற்படும் சமநிலை மாற்றத்தின் வெளிப்பாடு என்கிறது.
தற்போது நாம் படித்து பயன் பெறும் மேற்கத்தைய மருத்துவத்தின் தொடக்கப்புள்ளியான இடத்தை கிரேக்கம் என்றுதான் பலகாலமாக சொல்லிவந்தோம். அதை ரோமானியர் எடுத்து லத்தின் மொழியில் எழுதியதால் மேற்கத்தய மருத்துவத்தின் மொழி இலத்தீன் ஆகியது. ஆனால் கிரிக்கர்கள் எங்கிருந்து மருத்துவத்தை எடுத்தார்கள் என ஆராயும்போது தோற்றவாய் எகிப்தாகிறது.
அறுவை சிகிச்சைமுறை 4000 வருடங்களுக்கு முன்பாக எகிப்திலும் தோன்றியதாக கூறப்படுகிறது. அதை கிரேக்கர் தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறர்கள். அலக்சாண்டரின் படையெடுப்புக்கு முன்பாக கிரேகர்கள் எகிப்தில் வாழ்ந்தும் எகிப்திய படைகளில் வீரர்களாக இருந்திருகிறார்கள் ( கிரேக்க நாடு அக்காலத்தில் இல்லை பல நகரங்கள் அரசாக இருந்தது.)எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட பல குறிப்புகள் இவற்றை தெளிவாக்குகின்றன. பப்பரசியில் மருத்துவகுறிப்புகள் பல உள்ளன. வைத்தியர்கள் உடற்பிரிவாக அதாவது கண் ,மூக்கு, பெண்மருத்துவம் என்பது உருவாகியது எகிப்திலேயாகும்.
அக்கால எகிப்திய மருத்துவம் இருபிரிவுகளால் ஆனது. தற்கால வைத்தியம் போல நோய்குறிகளை வைத்து வைத்தியம் செய்வது.இதை கிளினிக்கல் மருத்துவம் (Clinical medicine)என்போம். இதில் முறிவுகள் காயங்கள் வலிகளைக் குணப்படுத்வது. இரண்டாவது நம்பிக்கைகள். அதாவது மந்திரங்கள் அடிப்படையில் வைத்தியம் செய்வது போன்றதாகும். பொதுவாக கூறினால் எமது கிராமப்புறங்களி பேயோட்டுதல் என்பது போன்றது. இதற்கு முக்கிய காரணம் எகிப்திய வைத்தியர்கள் கோயிலில் உள்ள மதகுருமார். இவர்களே சமூகத்தில் முக்கியமானவர்களாகவும் படித்தவர்களாகவும் இருந்தார்கள். இந்த மதகுருக்கள் இருக்கும் இடம் எகிப்திய கோயில்களாகும். நோயுற்வர்கள் கோயில்களுக்கு சென்று வைத்தியம் பெறுவார்கள். இந்தக் கோயில்களில் இருந்து புனித நீர் நோய் தீர்க்கப் பயன்படும். அதாவது புனித நீர் என்ற கருத்தாக்கம் இந்த எகிப்திய கோவில்களில் இருந்து வந்தது. நான் பிரான்ஸ் நாடு சென்றபோது லோட்ஸ்மாதாவின் (Our Lady of Lourdes) புனித நீரை எடுப்பதற்கு எத்தனையோ காத்திருந்தார்கள். எகிப்திய கோவில்களில் நோயுற்றவர்கள் படுத்திருந்து கனவு காண்பதன்மூலம் நோய் குணமடைவதாகவும் குறிப்புகள் உள்ளது.
எகிப்திய மருத்துவத்தை மூன்று தெய்வங்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் இந்த தெய்வங்கள் எகிப்தின் ஆணிவேரான ஐதீகக் கதையில் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர்.
மூன்று கடவுள்களில் முக்கியமானது சிங்கத்தலையை உடைய பெண் தெய்வம் செக்மெற் (Sekhmet). இதை பற்றிய ஐதீக கதையுள்ளது. மனிதர்கள் செய்யும் தவறான காரியங்களால் கோபமடைந்த ரே(Re) மனித குலத்தை சங்காரம் செய்வதற்காக செகமெற்றை அனுப்பிய பின்பு ரே மனம் மாற்றமடைந்துவிட்டாலும் கோபத்துடன் புறப்பட்ட செகமெற்றை தடுத்து நிறுத்தமுடியாது என்பதால் சிவப்பு நிறம் கலந்த மதுவைக் செகமெற்றுக்கு கொடுத்த போது அதை மனிதர்களின் இரத்தம் என எண்ணி குடித்ததால் ஏற்பட்ட மதுவின் மயக்கிதால் மனிதர்களை கொல்வதில் இருந்து செகமற் தடுக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்பாக சேகமெற் மருத்துவர்களின் தெய்வமாகிறது.
எழுத்துக்கு பொறுப்பான ரொத் தெய்வம்(Toth) ஐபிஸ் பறவையின் தலை கொண்ட ஆண் தெய்வம். இதுவும் முக்கிய ஐதீகத்தோடு தொடர்பானது. ஐபிஸ் தனது மம்மியாக்கிய ஒசிரஸ் மூலம், ஹோறஸ் என்ற குழந்தையை பெறுவதற்கு உதவியது. பிற்காலத்தில் ஐபிஸ் குழந்தையாகிய ஹோறஸ் ,உடன் மறைந்து வாழ்ந்த காலத்தில், சிறு குழந்தையாக ஹோறஸ் இருந்தபோது, தேள் கொட்டிபோது ரொத் காப்பாற்றியது. சேத்துடனான சண்டையில் ஹோறஸின் கண்ணில் ஒரு பகுதி தொலைந்து போகிறது. இதை ரோத்தே கொடுத்து ஹோறஸ் கண் பெற்றதாக ஐதீகம் சொல்கிறது. எகிப்தியர்களுக்கு வருடத்தில 365 நாட்களைக் கொடுத்ததும் ரோத்தே.
மூன்றாவது தெய்வம் ஐசிஸ் என்ற தாய்த் தெய்வம் எப்படியாக எகிப்திய மருத்துவத்தில் சம்பந்தப்பட்டது என்பதும் ஐதீக கதை உள்ளது. மகாபாரதத்தில் குந்திதேவி தனது பிள்ளைகளுடன் ஒழிந்து மறைந்து வாழ்த காலம்போல் ஐசிஸ்க்கு ஏற்ப்பட்டது. பாலைவனத்தில் ஒளிந்து வாழ்வது கடினமான காரியம. பாலைவனத்தில் வாழும் மிகவும் விசத்தைக் கொண்ட ஏழு தேள்களின் துணையுடன் ஹோறஸ் குழந்தையுடன் பயணம் செய்த ஐசிஸ், இரவில் தங்குவதற்கு ஒரு வீட்டின் கதவைத் தட்டியபோது குழந்தையுடன் உள்ள ஒரு பெண் கதவைத் திறந்தாள். குழந்தையுடன் ஐசிஸ்யையும் ஏழு தேள்களையும் பார்த்து பயந்து அந்தப்பெண் இவர்களுக்கு இரவில் தங்குவதற்கு இடம் தர மறுத்தபோது கூட வந்த ஒரு தேள் ஆத்திரம்கொண்டு மற்றய ஆறு தேள்களின் விசத்தையும் தனது வசமாக்கி, ஏழு தேள்களின் விசத்தை வாலில் தேக்கிக்கொண்டு, அந்த வீட்டில் இருந்த பெண்ணின் குழந்தைதை கொட்டிவிட்டன. இருந்தக் குழந்தை இறந்து விட்டது. இதைப் பார்த்த தாய்த்தெய்வமான ஐசிஸ் இரக்கமடைந்து தனது ஆற்றலால் அந்த இறந்த குழந்தையை உயிர்ப்பித்தாள்.
முக்கிய எகிப்துவ மருத்துவ முறைகள்
மாட்டு ஈரலை மாலை கண்ணுக்கு பயன்படுத்துதல் (Vit. A.deficency)
எலும்பு முறிவுகளை அறியவும் குணப்படுத்தும் முறைகள்.- உலகத்திலே பெரிய பிரமிட், சமாதி மற்றும் கோயில்கள் போன்ற கட்டிடவேலைகளை செய்த நாட்டில் தொழிலாளர்கள் எலும்பு முறிவுகளையும் காயங்களையும் சந்தித்திருப்பார்கள். ஆரம்பத்தில் மதுவை வலி நிவாரணமாக பாவித்து பிற்காலத்தில் அபினை பாவித்தார்கள். குழந்தைகள் வயிற்று வலியை குணப்படுத்த கொடுத்த மருந்தில் அபின் இருந்தது.
கருத்தடை உறைக்காக (condom) ஆட்டின் சிறுகுடலில் இருந்து எடுக்கப்படும் சவ்வு பயன்படுத்தப்பட்டது.
முதலையின் சாணி (Vaginal Pessaries) Spermicide ஆக பாவிக்கப்பட்டது. (சிரிக்க வேண்டாம். நிச்சயமாக வேலை செய்ததாம்)
ஓர் மருத்துவ சஞ்சிகையின் குறிப்பின்படி ஐந்தாவது அரச வம்சம் ( 5th Dynasty)சேர்ந்த அரசனின் அரச வைத்தியரின் சமாதி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. Dr. Skar என்ற இவரது சமாதியில் இருந்த பல வர்ண சித்திரங்கள் இவரது செல்வத்தையும் செல்வாக்கையும் விளக்குகின்றன. இந்த சமாதியில் உடலை வெட்டுவதற்கும், தைப்பதற்கும், பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கரண்டி போன்ற பல அறுவை சிகிச்சைக்கான ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த வைத்தியரின் சமாதி அரசனின் சமாதிக்கு அருகில் உள்ளது. இவரது சமாதிக்குள் சென்று வந்த கட்டுரையாளர் உலகத்தின் முதலாவது வைத்தியரின் அறைக்குள் சென்று வந்தேன் என கட்டுரையை முடிக்கிறார்.
தெய்வங்களைப் காப்பாளர்களாக கொண்டு 3000 வருடங்கள் மேலாக எகிப்திய காலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக வளர்ந்து தற்போது உலகமக்கள் எல்லோருக்கு பயன்படும் எகிப்திய மருத்துவத்துடன் இந்த கட்டுரைத்தொகுதி முடிவடைகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்