மிருகங்களின் மம்மிகள்.

mummified-egyptian-cats

மம்மியாக்கப்பட்ட பூனைகள்
நடேசன்
எங்கு சென்றாலும் தவறாமல் மியூசியங்களைத்; தேடிச்செல்லும் எனக்கு – ரொரண்ரோ மியூசியத்தில்தான் முதல்தடவையாக மம்மிகளைப் பார்க்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு கனடா சென்றபோது ரொரண்ரோ மியூசியத்தில் மனித மம்மிகளோடு வளர்ப்பு மிருகங்களான நாய் பூனைகளையும் மம்மிகளாக அங்கு நான் கண்டேன். பூனைகளை எகிப்தியர் தெய்வமாக வணங்கினார்கள் எனவும் படித்திருந்தேன்.

crocadile mummies
மம்மியாக்கப்பட்ட முதலைகள்
மிருகமருத்துவரான எனக்கு மேலும் இதைபற்றி அறிய ஆவல் ஏற்பட்டது. எகிப்திற்கு சென்றபோது இவற்றை அறிந்து கொள்வதற்கான பொருத்தமான சந்தர்ப்பம் கிடைத்தது. கெய்ரோ மியூசியத்தில் பல வகையான மிருகங்கள் மம்மியாக்கப்பட்டு காட்சிப் பொருளாக இருந்தன.

வளர்ப்பு மிருகங்களில் பூனைகளை எகிப்தியர் வணங்கியதாக கூறப்படுவது தவறு என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்.. வட எகிப்தில் போர் கடவுளாக வழிபடும் பெண் தெய்வம் பஸ்டி (Baste). அந்தப் பெண் தெய்வத்தின் படிமமாகத்தான் பூனைகளின் சிலைகள் எகிப்திய கோயில்களில் இருந்தன. கெய்ரோ மியூசியத்திலும் வெங்கலத்தால் செய்யப்பட்ட அழகிய சிலைகளைக் காணமுடிந்தது.

பூனைகள் தானியங்களை அழிக்கும் எலிகளை வேட்டையாடுவதால் மனிதர்களோடு வீட்டு மிருகமாக வசித்தன. விவசாயநாடான எகிப்தில் – சமூகத்தில் மேலான ஒரு இடத்தை பூனைகள் பெற்றிருந்தது உண்மையே. செல்வந்தர்களால் வளர்க்கப்பட்ட பூனைகள் ஆராதிக்கப்பட்டதாகவும் அத்துடன் அரண்மைனையில் வளர்ந்த பூனைகள் ஆபரணங்களை அணிந்திருந்ததாகவும் தெரியவருகிறது.

நைல் நதி வழியாக அபு சிம்பல் போகும் வழியில் மம்மியாக்கப்பட்ட ஏராளமான முதலைகள் கண்காட்சிக்காக ஒரு இடத்தில் இருந்தன. அத்துடன் பல முதலைத்தலை கொண்ட தெய்வத்தின் சிற்பங்களையும் எகிப்தின் பல இடங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. முதலைகள் எகிப்திய ஐதீகக்கதைகளோடு தொடர்பானவை. சேபெக் (Sobek) என்பது முதலை உருவமான காவல் தெய்வமாகும். ஹோறஸ்(Horus) தெய்வத்திற்கும் மாமனாகிய செத்திற்கும்(Set) இடையில், தந்தையை கொல்வதற்காக நடந்த சண்டையில் ஹோறஸ்க்கு சேபெக் உதவியது.

நைல் நதியில் நீர்பாசனத்தில் விவசாயம் செய்து வாழ்ந்த எகிப்திய மக்கள் நதியில் முதலைகள் ஏராளம் வாழ்வதால் நதியின் நீர் ஓட்டத்தையும் வெள்ளப் பெருக்கையும் மற்றும் வரட்சியையும் முதலைகளே கட்டுப்படுத்துவதாக நம்பினார்கள். இதனால் முக்கிய இடத்தை வகித்தன. எகிப்திய கலாசாரத்தில் உடல் பலத்திற்கும் அதீத காமத்தின் அடையாளமாக முதலைகள் உருவகிக்கப்பட்டது.

முதலைகள் தங்களது சிறிய குட்டிகளை தங்களின் வாயில் வைத்து மற்றைய மிருகங்களுக்கு உணவாகாமல் பாதுகாக்கும். முலையூட்டி மிருகங்களைத் தவிர்ந்து குட்டிகளைப் பாதுகாப்பது முதலைகளே.

முதலைகளின் வாயில் சிறிய குட்டிகளை வைத்து முதலை மம்மியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிமமே எகிப்தியர் முதலையை பாதுகாக்கும் காவல் தெய்வமாக உருவகப்படுத்திய காரணம். அத்துடன் சேத்தினால் துண்டுகளாக்கப்பட்ட ஓசிரசின் உடலை நைல்நதியில் கொண்டு செல்லப்பட்டபோது அவற்றை ஒன்று சேர்த்து ஐசிஸ்க்கு கொடுத்தது சேபெக் என்ற முதலைத் தலை கொண்ட தெய்வம்தான் என்பதாக எகிப்தியர் நம்பினார்கள்.

செல்வம் படைத்த எகிப்தியர்கள் நீர்த்தேக்கங்களை அமைத்து முதலைகளை வளர்த்தனர். அவை இறந்தபின்பு அவற்றை மம்மியாக்கம் செய்தார்கள். ஒருவர் இறந்து மம்மியாக்கப்படும்போது அவரது வளர்ப்பு முதலையும் மம்மியாக்கப்பட்டு அவரது சமாதியில் வைக்கப்படும்.

பல காரணத்துக்காக எகிப்தியர்கள் மிருகங்களை மம்மியாக்கினார்கள். முக்கியமாக இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெறுவார்கள் என்பதால் அவர்களின் தேவைக்காக சமாதிகளில் உணவும் மம்மியாக வைக்கப்பட்டது. துட்டன்காமனின் சமாதியை திறந்தபோது அரசனுக்கு பிடித்தமான வாத்து உணவுக்காக மம்மியாக்கப்பட்டு இருந்தது.

இறந்தவர்களின் செல்லப்பிராணிகளும் அவர்களது தோழமைக்காக மம்மியாக்கப்பட்டிருக்கும். இதில் நாய் பூனை குரங்குகள் மான்கள் என்பன அடங்கும்.

மூன்றாவதாக இறைவனுக்கு பலி கொடுத்த மிருகங்களையும் மம்மியாக்கி சமாதியில் வைத்தார்கள். இது கிரேக்கர்கள் காலத்தில் மிகப்பிரபலமானது. கோயில்களுக்கு யாத்திரை செய்பவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பறவை, மீன் என்பனவற்றை மம்மியாக்கி அதை சிறு மண்குடுவையில் வைத்து வேண்டுதல் செய்வார்கள். இதில் ஐபிஸ் (Ibis )பறவை, மீன் மற்றும் பூனைகள் மில்லியன் கணக்கில் மம்மியாக்கப்பட்டு தெய்வங்களுக்கு படைக்கப்பட்டன. கிரேக்கர் எகிப்திற்குச் சென்று வேண்டுதல் செய்ததாக பல குறிப்புகள் கிரேக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எகிப்திய தெய்வமான ஓசிரஸ் (Osirus) ) துண்டாக்கப்பட்டு நைல்நதியில் சேத்தால்எறியப்பட்டபோது அந்த உடலின் ஆண்குறியைத் தவிர மற்றைய பகுதிகள் மீட்கப்பட்டன. அந்த ஆண்குறியை நைல் நதியில் வாழும் மீன்கள் உண்டுவிட்டன. இதனால் மீன்கள் காலம்காலமாக மம்மியாக்கப்பட்டு தெய்வத்திற்கு படைக்கப்படுகிறது.

பிரித்தானியர்கள் – எகிப்தில் பூனைகள் மம்மியாக்கப்பட்டு புதைக்கப்பட்ட பெரிய சவக்காலையைக் கண்டு அதை அள்ளிக்கொண்டு கப்பலில் இங்கிலாந்துக்கு எடுத்;துச் சென்று அரைத்து விவசாய உரமாக்கியதாகவும் அதில் சில பூனை மம்மிகளை எக்ஸ்ரேயில் பார்த்தபோது அந்தப் பூனைகள் இளவயதாகவும் கழுத்து முறிக்கப்பட்டோ அல்லது தலையில் அடித்தபின்போ மம்மியாக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. இந்தப் பூனைகள் ஏதோ சடங்கிற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நான்காவது காரணத்தால் மம்மியாக்கப்பட்ட மிருகம் எபிஸ் காளையாககும். மிருகம் ஒன்று எகிப்தியரால் வணங்கப்பட்டது என்றால் அது எபிஸ் (Apis) என்ற நமது ஊர் நந்தி போன்ற காளைமாடாகும். இந்த காளைக் கன்று தாய்ப்பசுவில் வானத்தில் இருந்து வந்த மின்னலால் சினையாக்கப்படுவதாக நம்பினார்கள். இந்தக் காளை பற்றிய குறிப்பு சரித்திர ஆசிரியர் ஹொரடிற்றசால் எழுதப்பட்டுளள்து. குறிப்பிட்ட அங்க இலட்சணங்கள் பொருந்திய சிறிய கன்றுப் பருவத்தில் இந்த காளைக் கன்று தேடிக் கண்டுபிடிக்கப்பப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்படும். இந்தக் காளைமாடு வாழும்காலத்தில் எகிப்தியரின் ஆதித்தெய்வத்தின் படிமமாக வணங்கப்படும்.

ஒருகாலத்தில் ஒரு எபிஸ் காளை மட்டுமே வாழும. அண்ணளவாக முப்பது வருடம் வாழும் இந்தக் காளைமாடு இறந்தவுடன் அதை மம்மியாக்கம் செய்து அதை விசேடமான சமாதியில் வைக்கும் சடங்கின்போது எகிப்திய அரசன் அங்கு பிரசன்னமாவதும் மற்றும் அந்த நிகழ்ச்சியும் வரலாற்றில் பதிவாக்கப்படும். இந்த மம்மியாக்கத்தின் குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் மம்மியாக்கம் செய்யப்படும்போது இந்த விடயங்கள் கடவுளுக்கு செய்யப்படுவதாக பப்பரசில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் மம்மியாக்கத்தின் பின் இந்தக் காளை மாடு கல்லினால் செதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்படும். இந்தச் சம்பவங்களின் பதிவு எகிப்திய வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது.

இப்படியான எபிஸ் காளைகளை வைக்கும் சமாதி செறப்பியம் எனப்படும். இந்த இடம் மெம்பிஸ். இதைப் பற்றிய சுவையான கதை ஹொரடிற்றசால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரசீக (இன்றைய ஈரான்) மன்னன் கம்பேசி எகிப்தை வென்றதும் அங்கிருந்து எத்தியோப்பியாவை நோக்கி படையெடுத்து சென்றபோது பாலைவனத்தில் அவனது இராணுவம் அழிந்தது. மீண்டும் திரும்பி மெம்பிஸ் வந்தபோது எகிப்தியர்கள் எபிஸ் காளையை ஊர்வலமாக கொண்டு சென்றனர். தமது தோல்வியை எகிப்தியர்கள் கொண்டாடுவாக எண்ணி மன்னன் கம்பேசி ‘இதுதான் உங்கள் தெய்வமா? ’ என வாளால் குத்தியதாக எழுதப்பட்டுள்ளது.

கிளியோபாற்றா சிறுமியாக இருந்தபோது எபிஸ் காளையை பார்ப்பதற்காக அவளது தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எபிஸ் காளை மட்டுமே எகிப்தியரால் வணங்கப்பட்ட ஒரே ஒரு மிருகம் என்று தற்போதைய எகிப்தியல் ஆராச்சியாளர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.
(தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: