துட்டன்காமன் எகிப்தில் சிலநாட்கள் 18:மம்மியின் சாபம்.

Opening_of_the_Mouth_-_Tutankhamun_and_Aja
வாய் திறத்தல்- அய் வலது பக்கத்தில் -இடது இறந்த துட்டன்காமன்

நடேசன்

எகிப்திய அரசர் மற்றும் முக்கியமானவர்களது சமாதிகள் யாவும் மம்மியோடு வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்களுக்காக கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதால் மம்மிகளையும் சமாதிகளையும் வைத்து எகிப்திய சரித்திரத்தை மீளாய்வு செய்த எகிப்திய ஆராய்ச்சியாளர்களுக்கு 1922 நவம்பர் 4 ஆம் திகதி மிகப் பெரிய திருப்பமாக கிடைத்தது துட்டன்காமனின் மூடப்பட்ட சமாதி. இதை கண்டுபிடித்தவர் ஹவாட் காட்டர் என்ற பிரித்தானியர்.

இவரது கண்டு பிடிப்பு பற்றிய தகவல் டைம் இதழின் முகப்பட்டையில் அக்காலத்தில் வெளிவந்தது. துட்டன்காமனும் ஹவாட் காட்டரும் எகிப்திய வரலாற்றை நாமெல்லாம் புரிந்துகொள்ள உதவியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

மன்னர்களின் சமவெளியில்(Valley of the Kings at Luxor) உள்ள இந்த சமாதியுள் பிரவேசித்தபொழுது தற்காலிகமாக நிலத்தில் மரங்களினால் செய்த படிகளில் கீழ்நோக்கிச் சென்றேன். மலையை கீழ்நோக்கி குடைந்து உருவாக்கப்பட்ட இந்த சமாதியின் உள்ளே செல்லும் வழி சுரங்கப்பாதைபோல் இருந்தாலும் வழியில் உள்ள சுவர்கள் சித்திரவேலைப்பாடுகளால் காணப்பட்டது.
king_tut-298x300
துட்டன்காமன் மனைவியுடன்

கழுகு தலையுடைய ஹோறஸ் தெய்வமும் ஓநாய் தலையுடைய அனுபிஸ் தெய்வமும் அந்த சித்திரங்களில் முக்கியமாக காணப்பட்டது. அதன் பின்னர் பார்த்த முன்னறை சுத்தமாக இருந்தது. பின்னறையில் பளிங்குக் கல்லாலான பிரேதப் பெட்டியும் காணப்பட்டது. அந்தப் பெட்டியிலும் சித்திர வேலைப்பாடுகள் உண்டு. துட்டன்காமனது உடல் மட்டுமே இன்னமும் பளிங்குப் பெட்டியில் பாதுகாப்பாக அந்த சமாதியில் வைக்கப்பட்டிருந்தது. சமாதியில் இருந்த மற்றைய பொருட்கள் எல்லாம் கெய்ரோ மியூசியத்தில் உள்ளன.

கெய்ரோ மியூசியத்தில் துட்டன்காமனின் பிரிவில் பார்வையாளர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. ஜனநெருக்கடியால் தொடர்ச்சியாக முன்னோக்கித் தள்ளப்பட்டோம்.

சமாதியை ஆரம்பத்தில் ஹவாட் காட்டர் திறந்தபோது மூன்று பெட்டிகளில் உள்ளே மம்மிகள் இருந்தன. மிக உள்ளே 156 கிலோ தங்கத்தாலான பிரேதப்பெட்டியில் மம்மி இருந்தது.. அந்த தங்கப்பெட்டி விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு, வெள்ளிக் கைப்பிடிகள் நான்கு பக்கமும் கொண்ட மரப்பெட்டியுள்ளே வைக்கப்பட்டிருந்தது. இந்த மரப்பெட்டி பளிங்குக்கல் பெட்டியுள்ளே இருந்தது. இப்படியாக மூன்று பெட்டிகள் மம்மிக்காக பாவிக்கப்பட்டிருந்தன.

மம்மியில் அலங்கரிக்கப்பட்ட 150 விலையுயர்ந்த ஆபரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆபரணங்களின் நுட்பமான வேலைப்பாடுகளைப் பார்த்தபோது அக்காலத்து எகிப்திய பொற்கொல்லரை எண்ணி வியக்காமல் இருக்கமுடியாது. இதைவிட துட்டன்காமனது சிம்மாசனம் மற்றும் அவனது இரதம் என ஏராளமான பாவித்த பொருட்கள் இருந்தன.

துட்டன்காமனது சமாதியுள் இல்லாத ஒரே பொருள் மன்னனின் மணிமுடி மட்டுமே. அது அவனுக்குப்பின்னர் வந்த அடுத்த மன்னனுக்குத் தேவையான பொருளாகும்.

ஹவாட் காட்டர் இந்த சமாதியை கண்டுபிடித்தது ஒரு கதையாகும். எகிப்திய அரச பதிவுகளில் இருந்து தெரியவருவது – பெண்ணரசியான ஹற்சபுட் (Hatshepsut) அடுத்து வந்த அரசனால் அழிக்கப்பட்டதுபோல் அக்நாட்டன் என்ற அரசனும் அவனது மகன் துட்டன்காமனும், அதன்பின் சில வருடங்கள் மட்டும் எகிப்தை ஆண்ட அய் (Ay) என்ற பிரதமர், ஆகியோரது பதிவுகள் பிற்காலத்தில் துட்டன்காமனக்கு இராணுவத்தளபதியாக இருந்த ஹோறேம்ஹெப் (Horemheb) என்ற அரசனால் அழிக்கப்பட்டது.

வரலாற்றில் இல்லாத அழிக்கப்பட்ட அரசனது கடைசிச் சடங்குகளில் பாவிக்கப்பட்ட மதுக்கிண்ணம் மற்றும் கோப்பை முதலான சில பாத்திரங்களில் துட்டன்காமனின் பெயர் எழுதப்பட்டிருந்தது வேறு ஒரு எகிப்தியலாளரால் கண்டு பிடிக்கப்பட்டதால் துட்டன்காமனது சமாதியை கண்டு பிடிப்பதற்கான முயற்சியை எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்தார்கள்.

பிரித்தானிய பிரபு ஒருவர் வீதி விபத்தில் காயமடைந்தபின்பு எகிப்தின் அஸ்வான் பிரதேசத்தில் வந்து இளைப்பாறும்போது பணத்தை எகிப்திய அரசாங்கத்திற்கு கொடுத்து சமாதியை அகழும் உரிமையைப் பெற்றார். அதற்குப் பொறுப்பாக ஏற்கனவே எகிப்தில் தொல்பொருட் பகுதியில்வேலை செய்த அவர் ஹவாட் காட்டரை நியமித்தார். இந்த தேடுதல் முதலாம் உலக யுத்தம் தொடங்கியதால் தடைப்பட்டது.

KV 62 என்ற இந்த சமாதி ஆதிகாலத்தில் கட்டிட வேலையாளர் இளைப்பாறும் சிறிய குடிசையொன்றை அகற்றும்போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சமாதியின் வாசல் முழுமையாக மூடப்பட்டு அக்காலத்தில் சமாதியை மூடியவர்கள் வைத்த முத்திரையுடன் காட்சியளித்தது. உள்ளே சென்றபோது சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மூன்று கட்டில்கள் மற்றும் ஏராளமான பொருட்க்கள் முன்னறையில் இருந்தன. அதைக் கடந்தபோது மம்மி வைக்கப்பட்ட பளிங்குப் பெட்டி இருந்தது.
துட்டன்காமனது மம்மி, மம்மியாக்கம் செய்ய எண்ணெய்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தப்பட்டபொழுது அவனது உடல் பிரேதப் பெட்டியோடு ஓட்டிக்கொண்டதால் அந்த மம்மி இரண்டாக வெட்டி எடுக்கப்பட்டது.

மம்மியை எடுத்து பிரேதபரிசோதனை செய்தபோது துட்டன்காமன் இறக்கும்போது அவனுக்கு பத்தொன்பது வயது என்று கணிக்கப்பட்டது. அவனது பற்களும் எலும்புகளும் அவனது வயதை மதிப்பிட்டது.

துட்டன்காமன் என்ற இந்த இளம் எகிப்திய அரசனின் மரணம் அரண்மனையில் பதவிக்காக நடந்த ஒரு அரசகொலையாக இருக்கலாம் என பலர் கருதுகிறார்கள். அதற்கான நியாயங்களையும் சந்தர்ப்ப சாட்சியங்களையும் வைத்து ஆராயும் பொழுது மிகவும் விறுவிறுப்பான துப்பறியும் கதையின் சாயல் உள்ளது.

துட்டன்காமன் – ஆக்கனாட்டன்(Akhenaten) என்ற எகிப்திய அரசனின் இரண்டாவது மனைவியின் மகன். அகிநாட்டனது முதல்மனைவி பேரழகியான நெபிரட்டிக்கு(Nefertiti) பல பெண்குழந்தைகள் பிறந்தன. அகிநாட்டானுக்கு இரண்டு மனைவிகள் என நம்பப்படுகிறது. துட்டன்காமன் பிறந்தபோது தாய்((Kira) இறந்து விடுகிறாள். ஆக்கனாட்டன் எகிப்தின் மதம், இராணுவம் முதலான அடிப்படையானவற்றை புறக்கணித்து – ஒருவனே தேவன் என்று சொல்லியபடி தீப்பஸ்ஸில் இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட புதிய நகரமான அமராவில் இருந்து எகிப்தை ஆள்கிறான். அங்கே சிறு குழந்தையாக துட்டன்காமன் மற்றைய சகோதரிகளுடன் வளர்கிறான். இக்காலத்தில் எகிப்தின் செல்வாக்கு மிக்க மதகுருமார் மற்றும் எகிப்திய இராணுவம் என்பன புறக்கணிக்கப்படுவதால் ஆக்னாட்டனின் மேல் வெறுப்புண்டாகிறது.

பதினேழுவருட ஆட்சியின் பின்பாக ஆக்னாட்டன் இறந்தபோது ஆய்(Ay) என்ற முதலமச்சரும் ஹோறேம்ஹெப் (Horemheb) என்ற இராணுவத்தளபதியும் ஒன்பது வயதிலிருந்த துட்டன்காமனை தீப்ஸ்ஸசுக்கு அழைத்துச்சென்று – அவனை அரச பதவியில் அமர்த்துகிறார்கள். அவனது ஆட்சியில் மீண்டும் எகிப்து பழைய நிலைக்குத் திரும்புகிறது. துட்டன்காமன் தனது ஒன்றுவிட்ட சகோதரியை – அதாவது ஆக்கனாட்டானுக்கும் நெபிரட்டிக்கும் பிறந்த அன்கெசென்பற்றேனை ((Ankhesenpaaten) திருமணம் புரிந்தான். ஒன்பது வருடங்கள் எகிப்தை ஆண்டு மரணமடைந்த துட்டன்காமனின் மரணம் பல எகிப்திய ஆய்வாளர்களால் இன்னமும் இயற்கையானதா, இல்லை கொலையா என முடிவு செய்ய முடியாது இருக்கிறது.

துட்டன்காமனின் மம்மியில் மண்டையோடு உடைந்தும் இடது கால் எலும்பு முறிந்தும் உள்ளன. இதைவைத்து விபத்து என ஒரு பகுதியினரும் கொலை என மற்றவர்களும் சொல்கிறர்கள். மரபணு ஆராய்ச்சிகளிலிருந்து மலேரியா நோய் பீடித்திருந்ததாலோ அல்லது தேரில் இருந்து அவன் இறங்கும்போது முறிந்த காலில் தொற்றுநோய் வந்தோ அவன் இறந்திருக்கலாம் என்ற செய்தியும் உள்ளது.

அவனது மரணம் கொலை எனச் சொல்பவர்களது காரணங்கள் வாதங்களையும் புறந்தள்ள முடியாது.

பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட குறிப்பில் துட்டன்காமன் இறந்தவுடன் 800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹிற்ரைற் (Hittites) அரசர்களுக்கு (தற்போதைய துருக்கி) துட்டன்காமனின் விதவை மனைவி தான் மறுமணம் புரிவதற்கு ஒரு இளவரசனை அனுப்பும்படி தகவல் அனுப்பியதாகவும் அதற்கு ஹிற்ரைற் என்ற அரசர், தனது இளவரசனை பலத்த பாதுகாப்போடு அனுப்பியபோது எகிப்திய பிரதேசத்தில் அந்த இளவரசனும் அவனது பரிவாரம் காணாமல் போய்விடுகிறது. இப்படியாக இளவரசனையும் பரிவாரத்தையும் அழிக்கக்கூடிய செயலைச் செய்வதற்கு எகிப்தில் அரசியலில் உள்ள முக்கியமானவர்களாலேயே முடியும். இக்காலத்தில் ஹிற்ரைற் எகிப்தியரின் முக்கிய எதிரி அரசாக கருதப்பட்டுவந்தது.

இப்படியாக எதிரி நாட்டு இளவரசனை மணம் முடிக்க துட்டன்காமனது விதவை மனைவி முன்வந்ததற்கு காரணம் என்ன?

துட்டன்காமன் இறந்த பின்பு துட்டன்காமனின் விதவையை அய்(Ay) மணந்து கொள்வதும், பின்பு சரித்திரத்தின் எந்த இடத்திலும் அந்தத்தகவல் குறிப்பிடப்படாமல் மறைவதும் நடந்துள்ளது. அய்(Ay) துட்டன்காமனின் பின்பு மூன்று வருடங்கள் அரசாள்வதும் எகிப்திய சரித்திரத்தில் உள்ளது.
துட்டன்காமனது இரண்டு குழந்தைகள் இறந்து பிறந்தவை. அவை மம்மியாக்கப்பட்டு அதே சமாதியில் வைக்கப்பட்டிருந்ததாம்.

இறந்த துட்டன்காமனது மம்மி மிகவும் சிறிய சமாதியில் அவசரமாக வைக்கப்படுகிறது. மம்மி இருந்த அறையின் முன்பாக இருந்த அறையில் துட்டன்காமன் பாவித்த ஆயிரக்கணக்கான பொருட்கள் ஒழுங்காக வைக்கப்படாமல் அவசரத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. துட்டன்காமனின் இறுதிச்சடங்குகளில் முக்கியமான ”வாய் திறத்தல் ”என்ற சடங்கைச் செய்வது அய் (Ay) எனக் கருதுகிறார்கள். இந்தச் சடங்கு சித்திரமாக சமாதியின் உள்ளே வரையப்பட்டுள்ளது.

இது சிறிய சமாதி என்பதால் வேறு ஒரு அரச குடும்பத்தவருக்காக அமைக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் – துட்டன்காமனது சடுதியான மரணத்தால் உடனடியாக அவனது மம்மி இங்கு கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் பலரிடம் உள்ளது.
இறந்த அரசனின் மம்மிக்கு இடையூறு செய்தவர்கள் நோய் துன்பம் அடைவார்கள் என்பது பலகாலமாக எகிப்தில் நிலவிவந்த நம்பிக்கை. இது விஞ்ஞானரீதியாக அர்த்தமில்லாவிடத்தும் கலாச்சார ரீதியாகவும் உண்மையாக இருந்தது. பழைய அரசர்கள் காலத்து சமாதியில் மம்மியை இடையூறு செய்பவர்களுக்கு வரும் நோயை எந்த வைத்தியராலும்; புரிந்து கொள்ளமுடியாது என எழுதப்பட்டிருந்தது.

மம்மியின் சாபம் என்ற இந்த நம்பிக்கை திருடர்களுக்கு மட்டுமல்ல புதைபொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் பொருத்தமானது. அவர்களையும் நோய், இறப்பு என்பன தாக்கும் என்ற நம்பிக்கை மூடிவைக்கப்பட்டிருந்த துட்டன்காமனது சமாதி கண்டுபிடிக்கப்பட்டதும் பெரிதாக பேசப்பட்டது. தொடர்ந்து நடந்த சில சம்பவங்கள் ஐரோப்பிய அமெரிக்க பத்திரிகைகளில் பிரசுரமாகி பிற்காலத்தில் ஹொலிவுட்டிலும் படமாகியது. அதன் தொடர்ச்சியாக மம்மியை வைத்து பல சினிமாப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

ஹவாட் காட்டரின் அகழ்வு வேலைகளுக்கு பணம் கொடுத்த பிரித்தானிய பிரபு கர்னவான் (Lord Carnarvon) ஆறு கிழமையின் பின்பு இறந்தார். இவரது இறப்பு மம்மியின் சாபமாக பெரிதாகப் பேசப்பட்டது

உண்மையில் நடந்தது என்ன?

முகத்தில் நுளம்பு கடித்து உருவாகிய காயத்தில் சவர அலகு பட்டு காயம் தொற்றுநோயாக மாறியதுடன் குருதியில் நோய்பரவி ( Blood poisoning) இறுதியில் மரணம் அடைந்தார்.

ஹவாட் காட்டர் சமாதியை திறந்தவுடன் எகிப்திய வேலைக்காரர் ஒருவரை தனது வீட்டிற்கு ஏதோ சிறிய வேலைக்காக அனுப்பியபோது வீட்டில் உள்ள கனறி ( Canary)என்ற சிறிய பறவையின் கூட்டில் இராஜநாகம் உட்புகுந்ததுடன் அந்த கனறியை கொன்று வாயில் வைத்திருந்திருந்தது.

இராஜநாகம் எகிப்திய அரசர்களின் கிரீடத்தை பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.

1925 நண்பர் ஒருவர் ஹவாட் காட்டரை சந்தித்தபோது அவரால் கொடுக்கப்பட்ட வண்டு வடிவமான பேப்பர் வெயிட்டில் ‘எனது உடலை அகற்றுபவர்களுக்கு நெருப்பு, கொள்ளை நோய், வெள்ளம் தாக்கும் என எழுதப்பட்டிருந்ததாம். பின்பு அந்த நண்பரின் வீடு தீப்பிடித்து அழிந்தது. அதை திரும்பவும் கட்டியபோது மழைவெள்ளத்தில் மூழ்கியது.

இப்படியான விடயங்களை மூடநம்பிக்கை என மறுத்த ஹவாட் காட்டர் பல வருடங்களின் பின்பு தனது 64 வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார்.
அவரது டயரியில் எகிப்தில் வசித்த முப்பத்தைந்து வருடங்களில் 1926 இல் ஒரு முறையே எகிப்திய பாலைவனத்தில் ஓநாயை கண்டதாக எழுதி இருந்தார்.

மம்மிகளை காக்கும் அனுபிஸ் தெய்வம் ஓநாய் தலை கொண்டது.

பிற்காலத்தில் துட்டன்காமனின் பிதேப்பெட்டியை திறந்தபோது 58 பேர்கள் மாத்திரமே அங்கிருந்தவர்கள். இவர்களில் 12 பேர் மட்டுமே முதல் பன்னிரண்டு வருடங்களில் இறந்தவர்கள். மற்றவர்கள் பலகாலம் உயிர் வாழ்ந்தார்கள்.

மம்மியின் சாபம் உண்மையா? தெரிந்தால் சொல்லுங்கள் பாரப்போம்.
—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: