கெய்ரோவிற்கு திரும்பி எங்கள் மரியற் ஹோட்டலுக்குச் சென்றபோது இரவாகியது. அன்றய தினம் ஹோட்டல் உணவகத்தில் அரேபிய சங்கீதம் ஒலித்தது. இரவு உணவுக்குப் பின்னர் மரியற்றில் உள்ள கசினோவிற்கு சென்று சிறிதளவு பணத்தை வைத்து அங்குள்ள மெசினில் விளையாடியபோது நூறு டொலருக்கு மேல் கிடைத்தது. ஆனால் அந்தப் பணத்தை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. அப்பொழுது ஐம்பது வயதான அரேபிய சூடானியர் ஒருவர் வந்து உதவி செய்தார். அவருடன் பேசியபோது எகிப்திற்கு லொரி ஓட்டிவந்ததாக கூறினார். உரையாடலின்போது ‘இஸ்லாமியராக இருக்கும் நீங்கள் எப்படி கசினோவுக்கு வந்தீர்கள்?’ எனக்கேட்டேன்.
சிரித்துவிட்டு அவர் சொன்ன பதில் ஆச்சரியமானது. ‘மற்றவர்கள் பணத்தை தொலைப்பதை பார்த்து இரசிக்க வந்தேன்’ என்றார்.
‘எத்தனை பிள்ளைகள்?’
‘பதினொன்று’ என்றபோது அவரது முகத்தில் பெருமை தெரிந்தது.
அப்பொழுது எனது நண்பன் ரவீந்திரராஜ் ஐப்பது டொலரை பிளாக் ஜக் என்ற விளையாட்டில் தொலைத்துவிட்டு சோகத்துடன் வந்தான். இப்பொழுது எனது கையில் நிகர இலாபமாக எழுபத்தைந்து டொலர் உள்ளது.
‘உன்பாடு எப்படி’ என்றான் நண்பன்.
‘பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு அந்த சூடானியரை அவனுக்கு அறிமுகப்படுத்தியபின்பு, மீண்டும் அந்த சூடானியரிடம் ‘கசினோவில் விளையாட ஆசையா?” எனக்கேட்டேன். அதற்கும் அவரிடமிருந்து மீண்டும் சிரிப்பு வந்தது
அவரது கையில் ஐம்பது டொலரை வைத்து ‘விளையாடுங்கள்’ எனக்கூறிவிட்டு; வெளியே வந்தேன்.
‘என்னடா உனக்கு விசரா?” – என்றான் நண்பன்
‘இந்த சூடானியர் இஸ்லாமியாராக அந்த காசோடு எழுந்து செல்வாரா அல்லது சாதாரண மனிதனாக அதை மெசினில்போடுவாரா? எனப் பார்க்க விரும்பினேன்.’ என்றேன்.
அவர் மெசினில் பணம் போடும் சத்தம் அங்கிருந்து வெளியேறும் எமக்கு கேட்டது.
—–
மறுநாள் கெய்ரோ மியூசியத்திற்கு சென்றோம். இந்த மியூசியத்தின் ஒரு பக்கத்தில் இருப்பது தாகிர்(Tahrir ) மைதானம். இங்குதான் தொடர்ச்சியாக எகிப்தை ஆண்ட முபாரக் அரசுக்கும் பின் வந்த இஸ்லாமிய அரசுக்கும் எதிரான அரசியல் போராட்டங்கள் பிரதி வெள்ளிக்கிழமையும் நடந்தது. நாங்கள் சென்ற காலத்தில் இஸ்லாமிய அரசு ஆட்சி செய்தது. கடந்தசென்ற வெள்ளிக்கிழமையன்று மியூசியம் செல்லாமல் தவிர்ப்பதற்காக லக்சர் நகரத்திற்கு நாங்கள் சென்றோம். இன்று திங்கட் கிழமையானதால் கெய்ரோ அமைதியாக இருந்தது.
மியூசியத்திற்கு எதிரில் இருந்த பல மாடிக்கட்டிடம் தீயில் கருகியிருந்தது. அதன் யன்னல்கள் சுவர்களுடன் அவலமாக காட்சியளித்தது. அதைப்பற்றி எமது பக்கத்தில் நின்ற ஒருவரிடம் கேட்டபோது, இதுதான் முன்னாள் அதிபர் முபாரக்கின் கட்சி அலுவலகம் என்றார். இப்பொழுது கண்காணாத இடத்தில் முபாரக் சிறையில் இருக்கிறார்.
எனக்கு பலகாலமாக ஒரு விடயம் புதிராக இருந்தது. ஒவ்வொரு முறையும் எகிப்திய ஜனாதிபதி முபாரக், தேர்தலில் வெல்லும்போது 98 அல்லது 99 வீதமான வாக்குகளில் வெற்றி பெறுவார். பிற்காலத்தில்தான் அந்த வாக்களிப்பு முறையை புரிந்துகொண்டேன். அதாவது அவர் ஒருவரே வேட்பாளராக இருப்பார். அவருக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ மட்டுமே வாக்களிக்கலாம் அப்போது ஒன்பது பேர் அவருக்குப் புள்ளியிட்டு விட்டு ஒருவர் அவருக்கு எதிராக புள்ளியிட்டால் அவர் 90 வீதமான வாக்குகளில் ஜனாதிபதியாவார். அதேநேரத்தில் நாலு கோடிமக்கள் வாக்களிக்காமல் வீட்டில் இருந்துவிடுவார்கள்.
வரலாற்றில் ஓரங்கட்டி விடப்பட்ட கட்சியும் அவர்களது அந்த கருகிய கட்டிடமும் மியூசியத்திற்கு அருகே இருப்பது பொருத்தமானதுதான் என நினைத்துக் கொண்டேன்.
மியூசியத்தைப் பார்க்கக் கிடைத்த சிலமணி நேரம் போதாது என்பதால் மம்மிகள் இருக்கும் இடத்தையும் பார்வையிட்டு துட்டகாமனது பகுதியிலும் அதிக நேரத்தை செலவிடுவது என தீர்மானித்தேன்.
மன்னர்களின் சமவெளியில் உள்ள துட்டகாமனது மம்மி மட்டும் வைக்கப்பட்டிருந்தது. மற்ற அரச மம்மிகள் எல்லாம் பாதுகாப்பிற்காக கெய்ரோ மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்தது.
மியூசியத்தில் கிட்டத்தட்ட அறுபதுக்கு மேற்பட்ட மம்மிகள் வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அரசவம்சத்தினர்களுடையவை. அவர்களது இருகைகளும் நெஞ்சில் வைக்கப்பட்டிருக்கும். ஹொலிவூட் படங்களில் சமாதிகளையும் மம்மிகளையும் பற்றிய விடயங்கள் கட்டுக்கதைகளாக என் மனதில் நொருங்கியது. மம்மிகள் ஒருவிதத்தில் மீனை காயவைத்து கருவாடாக்குவதற்கு ஒப்பானது. மனிதனை கருவாடாக்கும் தொழில்முறைதான் அந்த மம்மிகள். எனக்கு ஆதர்சமான இராம்சியின் மம்மியை பார்த்தேன்.
மகாராஜாக்கள் மற்ற நாடுகளுக்கு விஜயம் செய்வது போல் சகலமரியாதையுடனும் மகா இராம்சியின் மம்மி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வந்தது.
எப்படி எதற்காக?
1080-945 BCஇல் எகிப்து இரண்டாகப் பிரிந்து இரண்டு அரசர்கள் அரசாண்டபோது சமாதிகளை அரசால் பாதுகாக்க முடியவில்லை. இதனால் சமாதிகளைக் கொள்ளையடிக்கும் திருடர்களிடம் இருந்து அரச மம்மிகளை பாதுகாக்கும் பொருட்டு எல்லா சமாதிகளிலும் இருந்து அக்காலத்தில் தீப்ஸஸை ஆண்ட மதகுருமார் வம்சத்தில் வந்த அரசன் அரச மம்மிகளை ஒன்றாக்கி ஒரே சமாதியில் வைத்தான். இந்த சமாதியில் 1898 இல் பல மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டாலும் அவை ஒழுங்காக பாதுகாக்கப்படவில்லை.
மம்மிகள் சிலைகள் அல்ல. சேதனப்பொருட்களாலானவையானதால் கெட்டும்போகும் தன்மையுள்ளது . 1976இல் மகா இராம்சியின் மம்மி பூஞ்சணம் பிடித்ததால் அந்த பூஞ்சணங்களை அகற்ற பாரிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கதிரியக்கத்தால் பூஞ்சணங்கள் அகற்றப்பட்டு சுத்தமாக்கப்பட்டது.
அக்காலத்தில் இராம்சியின் கீழ்தாடை எலும்பில் பாரிய ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டது. வாழும் காலத்தில் அந்தத் தாடை சீழ்பிடித்திருந்ததுடன் மிகவும் துன்பத்தையும் வலியையும் கொடுத்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடியும்.
எகிப்தில் பல் வியாதி மிகவும் பொதுவாக பலரை பாதித்திருக்கும். அவர்கள் பாலைவனத்து மண்கலந்த சோளம் மாவு ரொட்டியை சாப்பிட்டதால் அந்தப்பாதிப்பு ஏற்படுகிறது. இராம்சியை மம்மியாக செய்தவர்கள் இதயத்தை மார்பின் வலது பக்கத்தில் வைத்து தங்க நூலால் தைத்திருந்தார்கள். மேலும் அந்த இதயத்தில் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆத்திரோகிளிரோசிஸ் நோய் பீடித்திருந்தது என பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டது.
சாதாரண மக்கள் கெய்ரோ மியூசியத்துக்குச் செல்வது இந்த மம்மிகளை பார்ப்பதற்கே. 3000 – 4000 வருடங்களுக்கு முன்னர் இருந்த மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை மம்மிகள் விளக்குகிறது. அவர்களது உடைகள் முகபாவங்கள் – தலை மயிர் என்பனவற்றை புரிந்துகொள்ள முடிகிறது. பல அரசர்களது தாடையில் பற்களில் சூத்தை இருந்தது. மாகா இராம்சியின் தலைமயிர் செம்பட்டையானது.
எகிப்திய நாட்டிற்கே தனித்துவமான இந்த மம்மிகளை எப்படி உருவாக்குவது என்பதை எகிப்தியர்கள் எந்த பப்பரசிலும் எழுதவில்லை. சாதாரண கிராம வாழ்க்கையை சமாதிகளிலும் கோவில்களிலும் எழுதிவைத்தவர்கள் – இதைமட்டும் விட்டுவிட்டார்கள். காரணம் – அவை இந்தத் தொழில் செய்பவர்களது குடும்ப வியாபார இரகசியம் போன்றது. அந்த இரகசியம் ஒவ்வொரு தலைமுறையிலும் பாதுகாக்கப்பட்டு நகர்த்தப்பட்து.
அப்படியானால் தற்போது எப்படி அறிந்து கொள்ள முடிந்தது? என்ற கேள்வி எழும்.
ரோமரது ( அகஸ்ரஸ் சீசர்) ஆட்சியில் வாழ்ந்து மம்மியாக்கப்பட்ட எகிப்திய கணவன் – மனைவி மம்மிகளின் பிரேதப் பெட்டியில் சில பப்பரசிக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன. உறவினர்கள் இறந்தவுடன் துக்கம் அனுஷ்டித்தபின்பு நைல்நதியின் மேற்குக் கரைக்கு சடலம் கொண்டு வரப்பட்டு மம்மிகள் உருவாக்குபவர்களிடம் கையளிக்கப்படும். 35 நாட்கள் பிரேதம் நேற்றன் ( உப்பும் பேக்கிஸ்சோடாவும் கலந்தது) என்ற தூளில் வைக்கப்பட்டு உடலின் நீர்த்தன்மை அகற்றப்படும். அதன்பின்பு லினன் துணியால் சுத்தப்பட்டு ஏழுவிதமான வாசனைத்திரவியங்களால் நனைக்கப்பட்டு பின்பு 70 நாட்களில் சமாதிக்கு கொண்டு செல்லவேண்டும் என எழுதப்பட்டு இருந்தது.
முன்னைய எகிப்தில் பல தொழில்களுக்குமென தனியான தெய்வங்கள் இருந்தன. மம்மியாக்கத்தின் தெய்வமாக ஓநாய் தலையுள்ள அனுபிஸ் (Anubis) இருந்தது. அனுபிஸ் இறந்தவர்களின் பயணத்தின் வழிகாட்டியாக கருதப்படுகிறது. அத்துடன் மம்மி;யாக்கம் செய்பவர்களின் தெய்வமாக இருந்து வருகிறது. இந்த மம்மியாக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் பிற்காலத்தில் இந்தச் சமாதியை பாதுகாக்கிறவர்களாகிறார்கள். தனிப்பட்டவர்களது தொழில்போல் அல்லாமல் குடும்பங்களின் தொழிலாக இந்த மம்மியாக்கம் இருந்துவந்தது.
இதைவிட 4ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்று ஆசிரியரான ஹெரொடொரஸ் (Herodotus) எழுத்துகளில் இருந்து அறிந்து கொள்ளப்பட்டவை.
அரசர்களதும் அரசவைப்பிரபுக்களதும் – உடலை மம்மியாக்கத்திற்கு கொண்டுவந்தால் – கொண்டுவந்தவர்களின் பொருளாதார வசதிக்கேற்ப அவை தரம்பிரித்து தெரிவுசெய்யப்பட்டு மம்மியாக்கம் செய்யப்படும்.
உடல் அமைப்பை தெரிந்தவர் வயிற்றின் இடதுபக்கத்தில் கோடு போட்டதும் அந்த இடத்தில் கூரிய எத்தியோப்பிய கல்லால் வெட்டி உள்ளுறுப்புக்கள் எடுக்கப்படும். கல்லீரல், இரைப்பை, குடல், சிறுநீரகம் என்பன நான்கு பளிங்கு ஜாடிகளில் வைக்கப்படும். வயிற்றுப்பகுதியை வாசனைத்திரவியங்களால் கழுவியபின்பு மீண்டும் வெட்டிய இடம் தைக்கப்படும். மூளையில் கொக்கிவடிவமான கம்பியை போட்டு குடைந்து மூளை முழுவதையும் கூழாக்கியபின்பு அந்த மூளை மூக்குவழியாக வெளியே எடுக்கப்படும். அதன்பின்பு அதே கம்பியால் மூளையை லினன் கொண்டு சுத்தப்படுத்துவார்கள். இதயத்தை எடுப்பதில்லை. காரணம் இதயமே நினைவுகளை சுமப்பது என்று எகிப்தியர்கள் நம்பினார்கள். இதன் பின்பே உடல் நேற்றனில் மூடிவைக்கப்படும். நேற்றனில் 35 நாட்கள் வைத்து பின்பு துணியால் சுற்றும்போது இறந்தவரது படுக்கைவிரிப்பே இதற்கு பயன்படுத்தப்படும். 70 நாட்களில் பல சடங்குகள் நடத்தி துக்கம் அனுசரித்த பின்பு சமாதியில வைத்து மூடப்படும்.
3000 வருடங்களாக எகிப்தியர் மம்மியாக்கம் செய்யும்போது அவர்களது தொழில்நுட்பத்தில் மாற்றம் ஏற்படுகிறது. பழைய அரசர்களது காலத்தில் மம்மியாக்கம் நன்றாக செய்யப்படவில்லை. உடலை சேலையால் சுற்றி அதன்மேல் பிளாஸ்றர் போன்று பூசி முகத்தில் வர்ணத்தைப் பூசுவார்கள். ஆரம்பத்தில் மம்மி சிலைபோல் தோற்றமளிக்கும். பிற்காலத்தில் உடல் உருக்குலைந்து எலும்புகள் மட்டும்தான் சிலையின் அடியில் மிஞ்சும்.
பிற்காலத்தில் மம்மியாக்கத்தில் புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு நவீனமடைந்தது. 8 ஆம் அரசவம்சத்தினரது காலத்தில் மூளை மண்டையோட்டுக்குள் இருந்து அகற்றப்பட்டது. பிற்காலத்தில் வயிற்றுப்புறத்தில் இருந்து உள்ளுறுப்புகள் அகற்றும்முறை தொடங்கியது.
21 ஆம் அரசவம்சத்தினர் பிற்காலத்தில் திருடர்களிடம் இருந்து அரச மம்மிகளைப் பாதுகாப்பதற்காக – அவைகளை புதிய சமாதிக்குள் ஒன்றாக சேர்க்க முயன்றபோது பல மம்மிகள் ஏற்கனவே சிதைவடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மம்மிகள் மீண்டும் அக்காலத்தில் மம்மியாக்கத்தில் ஈடுபடுபவர்களிடம் வழங்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டது. முக்கியமாக தோல் சுருங்கி இருந்த மம்மிகளில் தோலின் கீழே கழி போன்ற பதார்த்தம் ஏற்றப்பட்டது. இதனால் தோல்சுருக்கங்கள் நீங்கி புடைத்தன. அத்துடன் தனியாக ஜாடிகளில் வைக்கபட்ட ஈரல் இரப்பை குடல் சிறுநீரகம் என்பனவற்றின் நீர்த்தன்மை அகற்றப்பட்டு மீண்டும் வயிற்றுப்பகுதியில் வைக்கப்பட்டன.
1880 இல் பல அரச ஆபரணங்கள் மற்றும் முக்கிய பப்பரசி சுருள்கள் எகிப்தின் கருப்புச்சந்தையில் விற்பனைக்கு வந்தபோது – அக்காலத்தில் எகிப்தின் வரலாற்று பொருட்களுக்கு பொறுப்பாக இருந்த பிரான்சிய அதிகாரிகள் நைல் நதியின் மேற்கே மன்னர்களின் சமவெளி அருகில் வசிக்கும் ஒரு குடும்பத்தை சந்தேகித்தார்கள். அந்தக் குடும்பத்தினர் பல தலைமுறையாக இப்படியாக சமாதிகளில் இருந்து அரச ஆபரணங்களைத் திருடி விற்றே தொழில் நடத்தி வந்தார்கள் என்ற உண்மை தெரியவந்தது. அந்த ரசூல் குடும்பம் தீவிரமாக விசாரிக்கப்பட்டபோது அவர்களது வீட்டில் அரசகுடும்பத்து ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டது. பின்பு – இந்த ரசூல் குடும்பத்தில் ஆண் ஒருவர், 21 ஆவது அரச வம்சத்தினர் பல மம்மிகளுக்காக அமைத்த புதிய சமாதிக்கு, அதிகாரிகளை கொண்டு சென்று காட்டினார்.
இரவோடு இரவாக சமாதியில் இருந்து மம்மிகள் எடுக்கப்பட்டு எல்லாம் ஒன்றாக நீராவி வள்ளத்தில் போட்டு நைல் நதியில் கெய்ரோ கொண்டுவரப்பட்டது. இதேபோல் 1898 இல் பல மம்மிகள் கொண்ட புதிய சமாதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
1890 இல் அந்த மம்மிகள் நைல் நதிவழியாக வந்த போது மக்கள் அழுது துக்கம் அனுஷ்டித்தார்களாம். 4000 ஆண்டுகள் முன்பு இறந்த அரசனின் மம்மி வடிவத்தைப் பார்த்துப் பரவசப்பட்டு அல்லது அவனுக்காக அழுவதற்கு எந்த நாட்டு மக்களினால் இயலும்?
(தொடரும்)
Mummy -Ramses 11
மறுமொழியொன்றை இடுங்கள்