விலங்குப் பண்ணை
( ஜோர்ஜ் ஓர்வெல்)
தமிழாக்கம்:கந்தையா குமாரசாமி
பாகம் 1
இரவுப் பாதுகாப்புக்காகக் கோழிக்கூடுகளை மனோ பண்ணை அதிபர் ஜோன்ஸ் பூட்டியிருந்தார். எனினும்அக்கூட்டின் சிறிய நுழைவாயில்களையும் அடைத்துவிட்டுவந்தாரா என்பது அளவுக்கு மீறிய மதுபோதை காரணமாக அவருக்கு ஞாபகமில்லை. அவர் கையிலிருக்கும் அரிக்கன் விளக்குக்கூடு மெல்லிய ஒளிக்கீற்றுடன் இரு பக்கமும் ஆடிக்கொண்டிருந்தது. அவர் தடுமாறியவண்ணம் பின் கதவுப்பக்கம் தனது காலணிகளை உதறிவிட்டுச் சமையலறைப் பாத்திரங்கள் கழுவும் இடத்துக்குச் சென்றார். அங்கிருந்த மரக்கூஜாவிலிருந்து ஒரு கிளாஸ் பியர் அருந்தினார்.பின்பு அவர் மனைவி குறட்டைவிட்டபடி நித்திரை கொண்டிருக்கும் மெத்தைக் கட்டிலில் ஏறிப் படுத்துறங்கினார்.
படுக்கை அறையின் வெளிச்சம் அணைக்கப்பட்டதும் பண்ணைக்கட்டிடங்கள் எங்கும் சலசலப்புடனான சிறகடிப்புக்கள் காணப்பட்டன. அதிசயமான கனவொன்றை வயோதிப வெள்ளை நிறக் காட்டுப்பன்றியார் முதல் நாள் இரவு கண்டதாகவும் அப்பன்றியார் மற்ற விலங்குகளுடன் அக்கனவைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் செய்தியொன்று பகல் நேரத்தில் விலங்குகளிடையே பரவியது. ஜோன்ஸ் இல்லாத சமயம் பார்த்து சகலரும் தானியக் களஞ்சியத்தில் சந்திப்பதெனச் சம்மதமளிக்கப்பட்டது. அந்த ஆண்பன்றிப் பெரியாருக்கு அப்பண்ணையில் போதிய செல்வாக்கு இருப்பதால் தங்களது ஒருமணி நேர நித்திரையைத் தியாகம் பண்ணி அவர் சொல்லவிருப்பதைக் கேட்பதற்கு விலங்குகள் சகலரும் ஆயத்தமானார்கள். தானியக் களஞ்சியத்தின் ஒரு மூலையிலிருந்த திண்ணையில் வைக்கோல் படுக்கையின்மீது விட்டத் தீராந்தியில் தொங்கும் அரிக்கன் விளக்குக்கூட்டின் கீழ்ப் பன்றிப்பெரியார் ஒய்யாரமாகக் காணப்பட்டார். பன்றியாருடைய வயது பன்னிடண்டு வருஷங்கள். எனினும் அண்மைக்காலத்தில் பலசாலியாகக் கம்பீரமாக தயவுதாட்சண்யம் புத்திசாலித்தனம் மிளிர்ந்த தோற்றத்துடனிருக்கின்றார். விரைவாக மற்றைய விலங்குகள் அவ்விடத்தில் பிரசன்னமாகித் தத்தமக்கே உரித்தான பழக்கவழக்கத்துக்கு அமைய வசதியாக அமர்ந்து கொண்டன. முதல் வருகையாக மூன்று நாய்கள் அதன் பின்பாகப் பன்றிகள் வைக்கோல் பரவலில்; உடனடியாக மேடையின் முன்னால் இடம்பிடித்துக் கொண்டன. கோழிகள் யன்னல் ஓரங்களிலும் புறாக்கள் விட்டத்தீராந்திகளிலும் பன்றிகளுக்குப் பின்னால் பசுமாடுகளும் செம்மறியாடுகளும்; உட்கார்ந்து இரைமீட்கத் தொடங்கின.
வண்டியிழுக்கும் இருகுதிரைகள் ஒன்று சேர்ந்து மிக அமைதியாக நடந்து வந்து சின்னச்சின்ன பிராணிகள் வைக்கோல் பரவலில் மறைந்து இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில்; தங்கள் மயிர்அடர்த்தியான குளம்புக்கால்களை மெல்ல மெல்லப் பதித்தன. பலசாலியான நடுத்தர வயதான முயலொன்று நான்காவது முறையாகக் குட்டியீன்ற காரணத்தினால் பழைய தோற்றத்தைப்பெறாத ஒன்றாகக் காட்சியளித்தது. நீண்ட கழுத்தும் நாசிமுதல் வெண்கோட்டுடன் நெடுத்த உடல்பாங்குகொண்டதும் உதைப்பதில்; இரு குதிரைப்பலம் கொண்ட அதிவிவேகம் கொண்டதல்லாவிடினும் ஒரேமாதிரியான குணத்தளவிலும் வேலைசெய்வதில் திறமைசாலியெனக் கருதப்பட்டு உலகத்தவரால் நன்கு மதிக்கப்படும் அப்பாவிப் பிராணியான ஒட்டைச்சிவிங்கியும் காணப்பட்டது. குதிரைகள் வந்துமுடிந்த பின்பாக வெள்ளைஆட்டோடு கழுதையும் வந்தன. ஆகக்கூடிய கோபக்குணம் கொண்ட கழுதைதான் அந்தப் பண்ணையின் ஆரம்பவிலங்காகும். கழுதை கதைப்பது குறைவு. கதைப்பினும் அவை உதவாக்கரை எண்ணங்களாகவே இருக்கும். உதாரணமாகக் கடவுள் தனக்கு வாலைப் படைத்தது ஈக்களைத் துரத்துவதற்காக என்றாலும் காலக்கிரமத்தில் தனக்கு வாலில்லாமல் போனதால் ஈக்களும் இல்லாமல் போய்விட்டன என்று கூறியது. வுpலங்குகள் மத்தியில் அது எப்பொழுதும் தனிமையாகவே காணப்படும். அது சிரித்தது கிடையாது. ஏனென்று கேட்டபோது சிரிப்பதற்கு எதுவுமே இல்லை என்று பதில் சொன்னது. இருந்தபோதிலும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாவிடினும் அது ஒட்டைச்சிவிங்கியுடன் ஈடுபாடுகொண்டிருக்கும். அவ்விருவரும் வழமையாக ஞாயிற்றுக்கிழமைகளைப் பழத்தோட்டத்துக்கு அப்பாலுள்ள புற்றரையில் எதுவுமே பேசாமல் மேய்ச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.
இரு குதிரைகளும் படுத்ததுமே தாயையிழந்த வாத்துக்குஞ்சுகள் தாங்கள் மிதிபடாமல் தப்பிக்கொள்வதற்காகத் தானியக்கழஞ்சியத்தில் அங்குமிங்கும் ஓடி இருக்க இடம் தேடின. தனது நீண்ட முன்னங்காலால் முயலம்மையார் சுற்றுமதில்போன்ற அரண் ஒன்றை வைக்கோலால் அமைத்ததும் அந்த வாத்துக் குஞ்சுகள் அது தங்கள் கூடு என்றெண்ணி உள்ளே சென்று படுத்தவுடன் நித்திரையாகிவிட்டன. கடைசியாக ஜோன்ஸின் உடையைக்கடித்துப் பைத்தியக்காரத்தனமாக இழுத்த வெள்ளை நிறப்பெண்குதிரை சர்க்கரைக்கட்டியை மென்ற வண்ணம் மிகவும் நேர்த்தியாக வந்து சேர்ந்தது. அது முன்னணியில் இடம்பிடித்து தனது வெண்மை நிறமான பிடரிமயிரைச் சிலுப்பி தனது கழுத்துமயிரில் கட்டப்பட்டிருக்கும் சிவப்பு நாடாவின்பால் அனைவரது கவனத்தையும் ஈர்க்க முயற்சியெடுத்தது. இறுதியாகப் பூனை வந்து உஷ்ணமான இடமொன்றைத் தேடி வண்டியிழுக்கும் குதிரைகளுக்கு மத்தியிலிருந்து பன்றியாரின் பேச்சினைச் செவிமடுக்காது சந்தோஷத்துடன புர்ர்ரென்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.
அண்டங்காக்கை தவிர்ந்த மற்றைய சகல ஜீவபிராணிகளும் அங்கு பிரசன்னமாயிருந்தன. அண்டங்காக்கை பின் கதவுப்பக்கமாக உள்ள தாவாரத்தில் உறங்கிக்கொண்டிருந்தது. பன்றிப் பெரியவர்; அனைவரும் மிகவும் வசதியாக அமர்ந்திருந்து அவதானி;ப்பதைக் கவனித்ததும் தனது தொண்டையைச் செருமிச் சரிப்படுத்திக்கொண்டு பேச்சை ஆரம்பித்தார்.
தோழர்களே!
நான் நேற்றிரவு கண்ட அதிசயக் கனவு பற்றிய அறிவிப்பை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அக்கனவைப்பற்றிப் பின்னர் சொல்கின்றேன். அதற்கு முன்பாக வேறொன்றைச் சொல்ல விரும்புகின்றேன். நண்பர்களே! நான் அதிக காலம் உங்கள் மத்தியில் வாழ்வேன் என்று நினைக்கவில்லை.
நான் இறப்பதற்கு முன்பாக என் அனுபவங்கள் மூலமாகப் பெற்றெடுத்த சூட்சும அறிவுத்திறனை உங்களுக்கு சொல்லித்தரவேண்டியது எனது கடமையென எண்ணுகின்றேன். நான் தனிமையில் எனது தொழுவத்தில் கிடப்பதனாலும் கூடிய காலம் வாழ்ந்த காரணத்தாலும் இந்த உலகில் வாழும் எமது வாழ்க்கையின் நீரோட்டங்களை இப்பொழுது உயிருடனிருக்கும் பிராணிகளிலும் பார்க்க ஆறஅமரச் சிந்திக்கக் காலஅவகாசம் அளவுக்கதிகமாக எனக்கு உண்டு என்பதையும் நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். இவ்விடயம் பற்றியே நான் பேச விரும்புகின்றேன்.
தோழர்களே!
இப்பொழுது எங்களது வாழ்க்கையின் நிலை என்ன ? எங்கள் வாழ்வு மிகவும் பரிதாபகரமானது. சலியாமல் உழைக்கின்றோம். குறுகிய காலத்துக்கு மட்டும்தான் எங்களால் உயிர் வாழமுடியும். நாங்கள் அவற்றை எதிர்கொள்வோம். அப்பட்டமான உண்மை என்னவெனில் ஒரு விலங்கினது வாழ்க்கையென்பது அடிமைத்தனத்தோடு கூடிய துன்பச் சரித்திரமாகும். இங்கிலாந்து நாட்டிலுள்ள எந்த விலங்குக்கும் சுதந்திரமில்லை. ஒரு வயது கடந்த பின்னர் இங்கிலாந்து நாட்டில் வாழும் எந்த விலங்குக்கும் இன்பம் என்பதன் அர்த்தம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஓய்வு என்பது கிடைக்காது. நாங்கள் பிறக்கின்றோம். எங்கள் உயிர் உடலில் தங்குவதற்கு ஏற்ற உணவுமட்டும் தரப்படுகின்றது. எங்கள் உடலில் கடைசி அணுவளவு சக்தியிருக்கும்வரை வாட்டி வதைத்து வேலை வாங்கிவிட்டு உபயோகமுடிவில் கொடூரமான வகையில் கொல்லப்படுகின்N;றாம். கறவைப் பசுவின் கடைசிக் காலம் கசாப்புக்கடையென்பது நியாயம்தானா ? இது இயற்கைநியதிகளின் ஒரு பகுதியாகக் கொள்ளமுடியுமா? இந்த நாட்டில் வாழ்பவர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையமைத்துக் கொடுக்கவியலாத அளவு வறுமைமிகுந்த நாடென்று இங்கிலாந்தைக் கொள்வதா ? இல்லை தோழர்களே. இல்லை! இல்லையென்று ஆயிரம் முறை சொல்வேன் . இங்கிலாந்து நாட்டுமண் வளமிக்கது . அதன் சீதோஷ்ணநிலை சிறந்தது. இப்பொழுது வசிப்பதிலும் பார்க்கப் பெருந்தொகையான விலங்குகளுக்குப் போதுமான உணவுவகைகளைத் தந்துதவி வாழவைக்க இங்கிலாந்து தேசத்தால் முடியும். இந்த ஒரு பண்ணைமட்டும் 12 குதிரைகள் 20 பசுமாடுகள் நூற்றுக்கணக்கில் செம்மறியாடுகளுக்கு கற்பனைக்கு எட்டாத அளவு வசதியோடு உணவூட்டக்கூடிய நிலையில் உள்ளதல்லவா? நாம் ஏன் இந்தப் பரிதாபகரமான நிலையில் தொடர்ந்தும் வாழவேண்டும்? மனித வர்க்கத்தினால் எமது உழைப்பினால் கிடைக்கப்பெறும் உற்பத்திஉணவில் ஏறக்குறைய முழுப்பங்கும் களவாடப்படுவதுதான் அடிப்படைக் காரணமாகும். தோழர்களே ! அங்குதான் எமது பிரச்சினைகளுக்குப் பரிகாரமுண்டு. அதை ஒட்டு மொத்தமாக ஒரு சொல்லில் கூறுவதாயின் அது -மனிதன் – என்பதாகும். மனிதன்தான் எமது உண்மையான விரோதியாகும். மனிதனை இந்தக் காட்சியிலிருந்து நீக்கிவிட்டால் எமது பட்டினிக்கோலத்தின் ஆணிவேரும் அளவுக்கதிகமான உடலுழைப்பும் முற்றாக எக்காலமும் நீங்கிப்போய்விடும்.
உற்பத்தி செய்யாமல் உயயோகிக்கும் பிராணி மனிதன் ஒருவன் மட்டும்தான். அவனால் பால் தர இயலாது. முட்டையிட இயலாது. ஏரை இழுத்து உழுவதற்குப் போதிய பலம் அவனிடமில்லை. முயல்களைப் பிடிப்பதற்கு விரைவாக ஓட அவனால் இயலாது. எனினும் அவன்தான் ஜீவபிராணிகளின் தலைவன். பிராணிகளிடம் வேலைவாங்கிப் பட்டினியில் வாடாத அளவு சிறிது உணவுமட்டும் கொடுத்துவிட்டு மிகுதியைத் தனக்காகவே வைத்துக்கொள்வான்.
எங்கள் உழைப்பால் நிலம் உழப்படுகின்றது. எங்கள் எச்சசொச்சங்கள் பசளையாகக் கொள்ளப்படுகின்றன. இருப்பினும் எங்களில் ஒருவர்கூட அவனுடைய வெளித்தோற்ற உள்ளுணர்வைக்கூடச் சொந்தமாக்க முடியவில்லை.
என்முன்னே காணப்படும் பசுமாடுகளே! நீங்கள் கடந்த வருடத்தில் எத்தனையாயிரம் கலன்கள் பாலைக் கொடுத்துள்ளீர்கள் ? உங்கள் கன்றுக்குட்டிகள் வளர்வதற்குவேண்டிய அப்பாலுக்கு என்ன நடந்தது? ஒவ்வொரு துளிப்பாலும் எமது விரோதிகளின் வயிற்றுக்குள் போய்விட்டன.
கோழிகளே! கடந்த வருடம் எத்தனை முட்டை இட்டுள்ளீர்கள்? அம்முட்டைகளில் எத்தனை முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுகள்; பொரித்தன? மிகுதி முட்டைகள் யாவும் ஜோன்ஸ்க்கும் அவர் பரிவாரத்துக்கும் தேவைப்படும் பணத்திற்காகச் சந்தைக்குப் போய்விட்டன.
பெண்குதிரையே ! வயதான காலத்தில் ஆதரவும் ஆனந்தமும் தரத்தக்க நீயீன்ற நான்கு குதிரைக்குட்டிகளும் இன்று எங்கே? ஓவ்வொன்றுக்கும் ஒருவயதாகியவுடன் விலைபோய்விட்டன. அவைகளை இனிக் கண்ணால்கூடப் நீ பார்க்கமுடியாது. நான்கு குட்டிகளையீன்றதுடன் வயல்களில் வேலைசெய்து உழைத்தற்கு ஒரு தங்குமிடத்தோடு சிறிதளவு உணவைத்தவிர வேறென்ன உனக்குச் சன்மானம் கிடைத்தது ?
இந்தப் பரிதாபநிலை வாழ்க்கையிலும்கூட எமக்கு விதிக்கப்பட்ட இயற்கையான காலவரையறைவரை உயிர் வாழச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதிர்ஷ்டசாலிகளில் நான் ஒருவனாதலால் நான் மனக்குறைப்படவில்லை. கிட்டத்தட்ட 400 பிள்ளைகளைப் பெற்றெடுத்த எனக்கு இப்பொழுது 12 வயதாகின்றது. அதுவே பன்றியொன்றின் இயல்பான வாழ்வுக்காலம். ஆனால் எந்தவொரு விலங்கும்; முடிவில் கொடூரமான கத்திவீச்சின் துண்டாடலுக்குத்;; தப்புவதில்லை.
என் முன்னால் வீற்றிருக்கும் இளம் பன்றிகளே! ஓருவருட காலத்துள் துடித்துப் பதைத்துக் கதறக் கதற மரக்கட்டையில் உயிரைவிடுவீர்கள். பசுக்கள் பன்றிகள் கோழிகள் செம்மறிகள் யாவருக்கும் அந்தப் பயங்கர நிலைமை வந்தே தீரும். குதிரைகளும் நாய்களும் அந்த நியதிக்கு விதிவிலக்கல்
ஒட்டைச்சிவிங்கியாரே! உங்களது பாரிய தசைநார்கள் பலமிழக்கும் அதே நாளில் ஜோன்சினால் விற்கப்பட்டுத் தலைசீவப்பட்டு உடல் முழுவதும் அவிக்கப்பட்டு வேட்டைநாய்களுக்குத் தீனியாக்கப்படும்.
நாய்களே! வயதாகிப் பல்லிழந்த பின்னர் கழுத்தில் பாரமான செங்கட்டி கட்டப்பட்டு அண்மையிலுள்ள குளம் அல்லது குட்டையொன்றில் ஜோன்ஸினால் மூழ்கடிக்கப்படுவீர்கள்.
எனவே எனது அன்புமிக்க தோழர்களே! எமக்கு இத்தகைய தீங்கு உண்டாக்கும் வாழ்வியல்நிலை மனித வர்க்கத்தின் கொடூரத்தினால்தான்; ஏற்படுகின்றது என்பது உங்களெல்லோருக்கும் தெட்டத் தெளிவாக விளங்குகின்றதல்லவா?
எமது உழைப்பினால் கிடைக்கும் உற்பத்திப் பலாபலன்கள் மனிதனை விலக்கினால் மட்டுமே எமக்கு நிரந்தர சொந்தமாகும். அநேகமாக ஒருநாள் இரவுக்குள் நாங்கள் செல்வந்த செழிப்புடனும்; பூரண சுதந்திரத்துடனும் வாழலாம். ஆகவே நாங்கள் அதற்காக என்ன செய்யவேண்டும் ? மனித இனத்தைத் தோற்கடிக்க இரவு பகலாக அயராது பாடுபடவேண்டுமா!
தோழர்களே! இதுவே நான் உங்களுக்குச் சொல்லும் செய்தி: புரட்சி! இந்தப் புரட்சி எப்பொழுது நடைபெறும் என்று சொல்ல எனக்குத் தெரியாது. அது சில சமயம் ஒரு வாரத்தில் அல்லது 100 வருடங்களில் நடக்கலாம். ஆனால் என் காலின்கீழ் காணும் வைக்கோல் சாட்சியாகக் கூடியவிரைவில் நியாயம் கிடைக்கத்தான் செய்யும். உங்கள் வாழ்க்கையின் மிகுதிக் காலம் பூராவும் இவ்விடயத்தில் கண்ணும் கருத்துமாயிருக்க வேண்டும்! எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றி கிடைக்கும்வரை வருங்காலச் சந்ததியினருக்குப் போராட்டத்தைத் தொடரும்படி நான் சொன்ன செய்தியை உங்கள் வாரிசுகளுக்குச் சொல்லுங்கள்.
தோழர்களே! ஞாபகத்தில் வைத்திருங்கள். உங்கள் உறுதி எக்காலகட்டத்திலும் பிசகக்கூடாது. எந்தவிதமான தர்க்கமும் உங்களைத் தடுமாறவைக்கக்கூடாது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான அநுகூலங்கள் உள்ளனவென்றும் மனிதர்களின் உயர்ச்சியில்தான் விலங்குகளின் உயர்வும் தங்கியுள்ளது என்று நியாயப்படுத்துவதைச் செவிமடுக்காதீர்கள். அவை யாவும் அப்பட்டமான பொய்கள். மனிதனானவன் தன்சுயநலனைத் தவிர வேறெந்தப் பிராணிகளிடமும் சிரத்தை காண்பிப்பதில்லை. விலங்குகளான எங்கள் மத்தியில் போராடும்பொழுது திடமான ஐக்கியமும் தீர்க்கமான சினேகத்துவமும் காணப்பட வேண்டும். மனிதர்கள் அனைவரும் எமது விரோதிகள். வுpலங்குகள் யாவரும் எமது தோழர்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பெரிய அமளிதுமளி காணப்பட்டது. பன்றிப் பெரியவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான்கு பெரிய எலிகள் தங்கள் பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்து தமது பின்பக்கக் குண்டியில் உட்கார்ந்தவண்ணம் அவரது பேச்சைக்கேட்டுக் கொண்டிருந்தன.
அவைகளின் வரவை உடனடியாக நாய்கள் கவனித்ததைக் கண்ட எலியானவர்கள் சடுதியாகத் தங்கள் பதுங்கு குழிகளுக்குள் ஓடித்தப்பி உயிர் பிழைத்துக் கொண்டன.
பன்றிப் பெரியவர் தன்னுடைய பாதத்தை உயர்த்தி அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு தொடர்ந்து கூறியதாவது:
தோழர்களே! இங்கே ஒரு விடயம் தீர்மானிக்க வேண்டியுள்ளது. காட்டுப் பிராணிகளான எலிகள் முயல்கள் எமது நண்பர்களா அல்லது எதிராளிகளா? உங்கள் வாக்குப்பலத்தினாலே தீர்மானிப்போம். எலிகள் எமது நண்பர்களா? என்று தீர்மானமெடுக்க இங்கே குழுமியிருக்கும் அனைவரையும் கேட்க முனைகின்றேன். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிப் பெரும்பான்மையுடன் எலிகள் நண்பர்களென முடிவு செய்யப்பட்டது. பூனை யொன்றும் மூன்று நாய்களுமாக நான்கு பேர் மாத்திரம் எதிராக வாக்களித்தன. பின்னர் அவை நான்கும் இருபக்கமும் வாக்களித்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்படடது.
பன்றிப் பெரியவர் தொடர்ந்து கூறியதாவது: நான் இன்னும் சிறிதளவே சொல்ல இருக்கின்றது. மனிதனையும் அவன் வழிமுறைகளையும் எதிர்த்துப்போராடும் உங்கள் கடமையுணர்வை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இரு கால்களில் செல்பவர்கள் எமக்கு எதிரானவர்கள்;. நான்கு கால்களில் நடப்பவர்கள் அல்லது பறப்பவர்கள் எமது நண்பர்கள். மனிதனோடு மோதும் சமயம் நாங்கள் அவனைப்போன்று காணப்படக்கூடாது என்று மனதில் கொள்ளவேண்டும். மனிதனை வெற்றிவாகை சூடிய பின்பும்கூட அவனின் துர்க்குணங்களைப் பின்பற்றக்கூடாது. விலங்கினம் வீடொன்றில் எக்காலகட்டத்திலும் வசிக்கக்கூடாது. உடைகள் அணியவோ கட்டிலில் உறங்கவோ மதுபானம் அருந்தவோ புகைப்பிடிக்வோ கூடவே கூடாது. அத்தோடு வியாபாரத்திலீடுபடவோ அல்லது பணத்தைக் கையாளவோ ஆகாது. மனிதனுடைய பழக்கவழக்கங்கள் யாவும் தீயவை. எல்லாவற்றுக்கும் மேலாக எந்தவொரு மிருகமும் ஒருபோதும் தனது இனத்தவரான ஜீவபிராணிகள் எவரையும்; கொடுமைப்படுத்தக்கூடாது. பலசாலியிருந்தாலும் சரி பலமில்லாததாயிருந்தாலும் சரி புத்திசாலித்தனமாயிருந்தாலும் சரி கபடமில்லாததாயிருந்தாலும் சரி நாங்கள் எல்லோரும் சகோதரர்கள். எந்த மிருகமும் இன்னொரு ஜீவபிராணியை ஒருபோதும் கொல்லக்கூடாது. சகல மிருகவர்க்கமும் சமமான அந்தஸ்து கொண்டவை.
தோழர்களே! கடந்த இரவு நான் கண்ட கனவைப் பற்றி இப்போது சொல்லப்போகின்றேன். என்னால் அந்தக் கனவை விவரிக்க முடியாது. அது மனித இனம் பூமியை விட்டகன்ற பின்பாக உள்ளதைப்பற்றியதாகும். ஆனால் அது நான் மறந்து போனதொன்றை ஞாபகப்படுத்தியது. பல வருடங்களுக்குப் முன்னர் நான் ஒரு சின்னப்பன்றியாயிருந்த காலத்தில் எனது தாயாரும் மற்றப் பெண்பன்றிகளும் பழைய பாடலொன்றினது முதல் மூன்று சொற்களை மட்டும் இராகத்துடன் பாடிக்கொண்டிருப்பார்கள். அந்த இராகம் சிறு பராயத்தில் தெரிந்திருந்தது. எனினும் காலப்போக்கில் மறந்துவிட்டேன். கடந்த இரவு அந்தப் பாட்டு என் கனவில் தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் அப்பாடலின் சொற்கள் யாவும் கனவில் தோன்றின.
அப்பாடல் கடந்த காலத்தில் மிருகங்களால் பாடப்பட்டுவந்ததென்பது எனக்கு நன்கு தெரிந்ததொன்றாயினும் பரம்பரைபரம்பரையாக அவர்களால் மறக்கப்பட்டுவிட்டது.
தோழர்களே! அப்பாடலை நான் இப்பொழுது பாடப் போகின்றேன். எனக்கு வயதாகிவிட்டது. அதனால் எனது குரல் கரகரப்பானதாகிவிட்டது. ஆனாலும் நான் கற்றுக்கொடுக்கும் பாடலின் இராகம் நீங்கள் உங்கள் குரலில் பாடும்பொழுது இனிமையிருக்கும். அதற்கு இங்கிலாந்து நாட்டின் விலங்குகள் என்ற மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
பன்றிப் பெரியவர் தனது தொண்டையைச் சரிப்படுத்திக்கொண்டு பாடத்தொடங்கினார். பன்றியாருடைய குரல் கரகரப்பாயிருந்த போதிலும் துடிப்பான இராகத்தில் நன்றாகப் பாடினார். அந்த இராகம் நாட்டுப்பாடலுக்கும் நவீன குதியாட்ட இசைராகத்துக்கும்; இடைப்பட்டதொன்றாகும்.
அப்பாடல் வரிகள் :
இங்கிலாந்தின்; மிருகங்களே அயர்லாந்தின் விலங்குகளே
அங்குமிங்கும் உலகில் வாழும் பல்வேறு ஜீவபிராணிகளே
இங்கிதமான எதிர்கால வாழ்வின் இன்பச் சங்கதிதனை
பாங்காகச் சொல்கின்றேன் பயன்தரும் சற்றுக் கேளுங்கள்!
முன்னோ பின்னோ அந்த வேளை வரப்போகின்றது
சுயநல மனிதனின் கொட்டம் அழியப் போகின்றது
இங்கிலாந்து நாட்டின் பயன்தரு விளைநிலங்களில்
இனி மிருகங்கள் மட்டும் கால்பதிக்கப் போகின்றது!
மூக்கணாங்கயிறுகள் மூலைக்குள் முடங்கிவிடும்;
முதுகின் இருக்கைகள் மூச்சின்றிப் போய்விடும்
சீண்டித் தீண்டும். குச்சி துருப்பிடித்துக் கிடக்கும்
சவுக்கு இனிமேல் அடிக்காது முதுகு தடிக்காது!
கற்பனை காணா அற்புத மண்வளச் செழிப்புக்கள்
மாசில்லா அரிசி கோதுமை கடலை வைக்கோல்
அவரை கராம்பு சர்க்கரைவள்ளி தானியவகைகள்
அந்த நாளில் யாவும் எமக்கே சொந்தமாகும்!
சூரியன் ஒளிகள் இங்கிலாந்துதேசமெங்கும் பரவும்
வான்தரு தண்ணீர் சுத்தமாக மாறிச் சுகம் தரும்;
வீசும் காற்று தென்றலாகி இனியஇசையைத் தந்திடும்
இவை இனி விடுதலை கிடைக்கும் நாளன்று நடக்கும் !
அந்த நாளுக்காக நாம் அயராது உழைப்போம்
அதற்கு முன்பாக நாங்கள் இறக்க நேரிட்டாலும்
மாடுகள் குதிரைகள் வாத்துக்கள் வான்கோழிகள்
உயிரோடிருப்பவை விடுதலைக்காகப் பாடுபடவேண்டும்!
இங்கிலாந்தின் மிருகங்களே அயர்லந்தின் விலங்குகளே
அங்குமிங்கும் உலகில் வாழும் பல்வேறு ஜீவபிராணிகளே
இங்கிதமான எதிர்கால வாழ்வின் இன்பச் சங்கதிதனைப்
பாங்காகச் சொல்கின்றேன் பயன்தரும் சற்றுக் கேளுங்கள்!
பாடப்பட்ட இப்பாடலினால் விலங்குகள் அடக்கமுடியாத உத்வேகம் கொண்டன. அவைகள் பன்றிப் பெரியவர் பாடலை முடிக்கு முன்னர் தாங்களாகவே பாட்டிசைக்கத் தொடங்கிவிட்டார்கள். அவைகளுள் மட்ட அறிவுள்ளவைகள் சில வார்த்தைகளை உடனடியாகவே மனனம்பண்ணின. புத்தி தீட்சண்யமான பன்றிகளும் நாய்களும் ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே பூரணமாகக் கற்றுக்கொண்டுவிட்டன. அதன்பின்பாக சில ஒத்திகைகளின் பின்னர் முழுப்பண்ணையும் இங்கிலாந்து நாட்டின் மிருகங்கள் என்ற பாடலால் அதிர்ந்தது. பசுக்கள் மெல்லிய குரலிலும் நாய்கள் ஊளையிட்டும் செம்மறிக்கூட்டம் கத்தியும் குதிரைகள் சிணுங்கியும் வாத்துக்கள் சப்தமிட்டும் பல்வேறு இராகத்தொனிகளில் பாடின. பாட்டைக் கேட்டவுடன் பரவசப்பட்டு 5 முறைகள் தொடர்ச்சியாகப் பாடின. இடைமறிப்பு ஏற்பட்டிருக்காவிட்டால் இரவு முழுவதும் பாடலைத் தொடர்ந்திருப்பார்கள்.
துரதிஷ்டவசமாக இந்தக் கூச்சல் ஜோன்ஸின் நித்திரையைக் குழப்பியதால் படுக்கையைவிட்டுத் திடுமென எழுந்து பண்ணைக்குள்; நரி புகுந்து விட்டது என்று அனுமானித்துக் கொண்டார். அவரது படுக்கையறையின் மூலையில் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து இருளில் பலமுறை சுட்டுத்தள்ளினார். அந்தத் துப்பாக்கிக்குண்டுகள் தானியக் களஞ்சியச் சுவருள் புகுந்ததினால் அவசர அவசரமாக விலங்குகளின் கூட்டம் குலைந்தது. ஒவ்வொருவரும் கலைந்து தத்தமது படுக்கையிடத்துக்குப் பாய்ந்து ஓடிச் சென்றனர். குருவிகள் உயர உட்காரும் விட்டத்திலும் விலங்குகள் வைக்கோல் பரவலிலும்; அடங்கி ஒடுங்க முழுப்பண்ணை பூராவும் நிசப்தம் நிலவின.
மறுமொழியொன்றை இடுங்கள்