நடேசன்
நாங்கள் நைல் நதியின் பயணத்தில் கடைசியாக சென்ற இடம் அபு சிம்பல்(Abu Simbel). இது அஸ்வான் அணையில் இருந்து இருநூற்று ஐம்பது கிலோமீட்டர் தெற்கே நூபியாவின் பிரதேசத்தில் உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் மலைப்பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது அஸ்வான் அணை கட்டும்போது உருவாகிய லேக்நாசர் என்ற நீரத்தேக்கத்தால் மூழ்கிவிடவிருந்த இந்தக் கோயில் யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி உயரமான இடத்தில் மீண்டும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு தற்பொழுது பாதுகாப்பாக செயற்கையான கொன்கிறீட் மலையில் உள்ளது.
Abu Simbel Temple
அபு சிப்பல் நூபியர்கள் பிரதேசம். அங்கு சென்றதும் எங்களது வழிகாட்டியாக வந்த முகமட் அழகான பன்னிரண்டு வயதான ஆபிரிக்க சிறுவனைக்காட்டி இவன் நூபிய சிறுவன் என எனக்கு அறுமுகப்படுத்தினான். கறுத்த சொக்கிலேட் வர்ணத்தில் அழகான வெள்ளை பற்கள் பளிச்சிட அவன் சிரித்தான். அந்தச் சிறுவனது கையில் பல நிறக்கற்களில் செய்த பெண்களுக்கான சங்கிலிகள் காப்புகள் எனப் பல விதமான ஆபரணங்கள் இருந்தன.
அஸ்வான் அணையினால் தென்புறத்தில் குடியிருந்த இலட்சக்கணக்கான நூபியர்கள் தங்களது பாரம்பரிய நிலத்தை இழந்து விட்டார்கள் என்பதால் – அவர்களில் இவனும் ஒருவன் என நினைத்து நூறு எகிப்திய பவுண்ஸ்களை நான் நீட்டியபோது அவன் அதை வாங்காமல் தன்னிடமிருந்த ஆபரணங்களை என்னிடம் நீடடினான். நான் எனது மனைவியிடம் அவனிடம் அவற்றை வாங்கும்படி கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
Temple of Hathor ,dedicated to Nefertari
இப்படியான அழகிய கோயிலை எதற்காக நூபியர்கள் அந்தப்பிரதேசத்தில் கட்டவேண்டும்? என்ற கேள்வி எழும்போது அதனைக்கட்டிய அரசனது நோக்கம் – வரலாற்றை தெரிந்து கொள்ளும்போது அதனது முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும்
பத்துக் கட்டளைகள் என்ற படம் அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஈஸ்டர் விடுமுறைநாட்களிலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவார்கள். இந்தப் படம் ஹொலிவூட்டில் 1956இல் தயாரிக்கப்பட்டது. ஹொலிவூட்டில் இதுவரை வெளிவந்த பத்து முக்கிய சினிமாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் படத்தில் மோசஸ் ஆக சார்ள்ஸ் ஹெஸ்டனும் எகிப்திய அரசனாக யூல் பிரைனரும் வருவார்கள்.
இந்தப்படத்தில் யூல் பிரைனர் நடித்த பாத்திரம் எகிப்திய வரலாற்றில் மகா இராம்சியின் பாத்திரம். பைபிளில் சொல்லப்படாத விடயங்கள் அந்தப்படத்தில் இருந்தாலும் பாத்திரங்கள் காட்சிகள் பைபிளைத் தழுவியபடி எடுக்கப்பட்டுள்ளது.
நமக்குத் தெரிந்த கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் போன்றவர்களுக்கு ஆயிரம் வருடங்கள் முன்பு எகிப்தை ஆண்ட மாவீரன் இராம்சி. எகிப்தின் வரலாற்றில் கோயில்களில் சமாதிகளில் எங்கும் நிறைந்திருப்பது அவனது பெயரே. புத்தொன்பதாம் அரசவம்சத்தை சேர்ந்த இராம்சி எகிப்தை அறுபத்தியேழு வருடங்கள் அரசாண்டான். இந்த ஆட்சிக்காலம் எகிப்தின் உச்சம் எனலாம்.
உலகத்தின் மிக முக்கியமான வரலாற்று சின்னங்களில் ஒன்றாக பலராலும் கருதப்படும் இந்தக் கற்கோயிலில் மூன்று எகிப்திய தெய்வங்களுக்கும் (Re-Horakhty, Amun-Re and Ptah) நான்காவதாக இராம்சிக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. சிறியது எகிப்திய தாய்த் தெய்வமான ஹத்தாருக்கும் (Hathor)இராம்சியின் மனைவியான நெபெரற்ரிக்கும்(Nefertari) அர்ப்பணிக்கப்பட்டது.
1813 ஆம் ஆண்டு இந்தக் கோயில்கள் மண்மூடியிருந்தபோது சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளரால் ( ( Jean-Louis Burckhardt) கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கோயிலில் உள்ளே பொறிக்கப்பட்டிருந்த சித்திரங்கள் இராம்சியின் போர் வரலாறு மற்ற எகிப்திய தெய்வங்களைப் பற்றியது. இந்தச் சித்திரங்கள் 3000 வருடங்கள் சென்றாலும் மிகவும் தெளிவாக தெரிகிறது.
இராம்சி இளம் வயதிலே சிறுவனாக போரக்களத்தில் போர் நடப்பதைப் பார்த்தும் போர்பயிற்சி பெற்றும் எகிப்தின் அரியணைக்கு தயாராக்கப்பட்டான். அரியணை ஏறிய ஐந்தாம் வருடத்தில் தற்போது சிரியாவில் உள்ள கடிஸ் (Kadesh) என்ற நகரத்தின்மேல் போர் தொடுத்தபோது அந்த நகரம் ஹிற்ரைற்(Hittites) எனப்படும் தற்போது துருக்கியரின் ஆட்சியில் இருந்தது.
இராம்சி 20000 படைவீரர்கள் கொண்ட நாலு படையணி படைவீரர்களும் அங்கு போருக்கு செல்கின்றனர். எகிப்திய படைவீரர் தற்போதைய சினாய் பாலஸ்தீனம் அதன்பின் லெபனான் ஊடக செல்லும்போது முதல்முறையாக பனிபடர்ந்த மலைகளையும் மலர்கள் நிறைந்த பெக்காவலி(Bekka Valley in Lebanon) போன்ற பிரதேசத்தையும் காணுகிறார்கள். இந்த குறிப்புகள் எகிப்தின் பல இடங்களில் உள்ளது.
ஆராச்சியாளர்களது கருத்துப்படி அக்காலத்தில் பதினைந்து கிலோமீட்டரே ஒரு நாளில் போர்வீரர்களால் கடக்க முடியும். கடிஸ் செல்ல 800 கிலோ மீட்டர் கடந்திருக்கிறார்கள். 20000 போர்வீரர்களின் உணவு – தண்ணீர் இதைவிட பொதிகளை சுமக்கும் குதிரை கழுதை போன்றவற்றின் உணவுத் தேவை என்பது இக்காலத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத விடயமாகிறது.
ஹிற்ரைற் மன்னரான முவராலிஸ் (Muwatallis) உளவாளிகள் பெக்காவலிப்பகுதியில் சாதாரணமானவர்களைப்போல் இராம்சியை சந்தித்து ‘ஹிற்ரைற் மன்னர் உங்களைக் கண்டதும் ஓடி ஒளிந்துவிட்டார்’ என்றார்கள். இந்தச் செய்தியை உண்மையென நம்பி ஒரு படையணியுடன் மட்டும் சென்று இராம்சி தரித்து முகாமிட்டு நின்றபோது – பின்பகுதியால் ஹிற்ரைற் படைகளால் இராம்சியும் படைகளும் தாக்கப்பட்டன.
இராம்சி எதிர்த்து போரிட்டு தாக்குதலைத் தடுத்தபோது போர் சமநிலைக்கு வருகிறது. ஹிற்ரைற்னர் சமாதான ஒப்பந்தம் வேண்டியபோது இராம்சி மறுத்துவிட்டு போர்நிறுத்தம் மட்டும் செய்கிறர்.
இந்தப்போரின் காட்சிகள் அபு சிப்பல் கோயிலின் உள்ளே விரிவாக சித்திரமாக்கப்பட்டுள்ளது.
அபு சிப்பல் மலைக்கோயில் முகப்பில் இராட்சத 67 அடி உயரமான நான்கு இராம்சியின் சிலைகள் உள்ளன. இதில ஒன்றில் இராம்சியின் தலை உடைந்து விட்டது. இந்த சிலைகளின் இடையில் சூரியகடவுள் ரே (சுந) உள்ளது. இராம்சியின காலடியில் எகிப்தின் எதிரிகளான நூபிர், லிபியர் மற்றும் ஹிற்ரைற் சிலையாக உள்ளார்கள்.
இராம்சியின் இரண்டு சிலைகள் இடையே புகுந்து மலையில் குடைந்த அந்த கோயிலுக்குள் செல்லும்போது உள்ளே உள்ள காட்சிகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தன. இராம்சி எதிரிகளை கொல்வதும் ஒரு சித்திரமாக இருக்கிறது . அதேபோல் இரதத்தில் பூட்டியுள்ள குதிரையின் இரு சேணக்கயிறுகளை இடுப்பில் கட்டியபடி இடுப்பை அசைத்து இரதத்தை செலுத்தியபடி எதிரிகளுடன் போரிடுவது முதலான காட்சிகள் எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கும். 1274 BC ஹிற்ரைற் உடன் நடந்த போரின் பல காட்சிகள் அத்தோடு இராம்சி, ஆமுன் தெய்வத்தின் துணையுடன் தனியாக போரிடும் காட்சிகள் பல உண்டு. பண்டைய வரலாற்றில் இந்தப் போரின் காட்சிகள்போல் எதுவும் பதிவு பண்ணப்படவில்லை என்பது சரித்திர ஆசிரியர்களின் கணிப்பாகும்.
சிறிய கோயில் மகா இராம்சியின மனைவியான நெபரறியை(Nefertari) எகிப்திய தெய்வங்கள் ஆசிர்வதிப்பதான சித்திரங்கள் உண்டு. இந்தக் கோயில் – நெபராறி – இவளுக்காகவே சூரியன் ஒவ்வொரு நாளும் உதயமாகிறான் என எழுதப்பட்டிருப்பதில் இருந்து இராம்சி மனைவியை எவ்வளவு நேசித்தான் என்பது புலப்படுகிறது
அபு சிம்பல் இராம்சியின அரசாட்சியில் இருபதாவது வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 67 வருடங்கள் எகிப்தை ஆண்ட இராம்சி பிற்காலத்தில் படையெடுப்பு எதுவும் நடத்தாமல் கோயில் சமாதி என்பவற்றை கட்டுவதில் அமைதியாக இருந்ததால் பல காரணங்கள் கூறப்படுகிறது. நெபராறி இறந்து சிலகாலத்தில் பட்டத்துக்கு வாரிசான தலைமகன் இறந்ததில் இருந்து இன்னும் பல இராம்சியின் குழந்தைகள் இறந்து விடுகின்றன.
ஹிற்ரைற் உடனான போரில் சமாதான ஒப்பந்தம் எழுத மறுத்து போர்நிறுத்தம் செய்துவிட்டு வந்த இராம்சி தனது அரசாட்சியின் 21ஆவது வருடத்தில் ஹிற்ரைற் அரசுடன் உடன் சமாதான ஒப்பந்தம் எழுதிக் கொள்ளபடுகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகள் ஒருவருக்காக ஒருவர் போர்புரிவதும் வர்த்தகம் செய்து கொள்வதும் என மிக விரிவாக வரலாற்றில் எழுதப்பட்ட முதலாவது தேசங்களின் ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் வெள்ளித்தட்டில் எழுதப்பட்டது. இதனது பிரதி அபு சிம்பலில் உள்ளது. இராம்சி தனது 34 வருடத்தில் ஹிற்ரைற் இளவரசியை மணம் செய்து கொள்கிறார். அதை விட அந்த இளவரசி கொண்டுவந்த சீதனப் பொருட்களின் விபரம் எழுத்தில் உள்ளது.
இராம்சியின தலைப்பிள்ளை விவிலியத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோல் இறந்திருக்கலாம் என்ற கணிப்பை ஆராய விவிலியத்தை கொஞ்சம் பார்ப்போம்.
விவிலியம் – எக்ஸோடஸ்
ஆபிரகாமின் வழிவந்த மதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதங்களுக்கும் முக்கியமானவர் மோசஸ். பத்துக்கட்டளைகள் என்ற சாசனத்தை யாவோவிடம் பெற்று யுதர்களுக்கு கொடுத்தது மட்டுமல்ல வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் முக்கிய பகுதிகளான ஜெனசிஸ்(Genesis) எக்ஸோடஸ்(Exodus) என்ற இரண்டும் மோசஸால் எழுதப்பட்டது என்கிறார்கள்.
இப்படி முக்கியமான மோசஸோடு சம்பந்தப்படுத்தப்படும் எகிப்திய அரசன், மகா இராம்சி. இதனாலேயே எகித்திய வரலாறு பைபிலுடன் பின்னிப் பிணைந்து வருகிறது.
நான் முன்பு சொன்னபடி எகிப்தில் ஜேக்கப்பினது மகன் யோசப் எகிப்தில் பிரதமராக இருந்த வரலாறு பார்த்தோம். யோசப்பின் சகோதரர்கள் எகிப்தில் வாழ்ந்தகாலத்தில் யூத மக்களின் எண்ணிக்கையை நைல்நதியின் கழிமுகப் பிரதேசத்தில் பல்கிப்பெருக்கியதால் யூதர்களால் பிரச்சினை ஏற்படலாம். முக்கியமாக எதிரிகள் படையெடுப்பில் யூதர்கள் அவர்களுடன் சேரலாம் என எகிப்திய மன்னன் பயந்து யூதர்களின் ஆண்பிள்ளையை கொலை செய்யும்படியும் உத்தரவிடுகிறன். இந்த எகிப்திய மன்னன் மகா இரம்சியின் தந்தையான சேத் என பைபிள் ஆராய்ச்சியாளர்கள் முடிவுகட்டி இருக்கிறார்கள்.
இதற்குப் பயந்து மூன்று மாதக் குழந்தை மோசஸை நைல் நதியில் பப்பரசுக்கூடையில் வைத்து மிதக்க விடுகிறாள் மோசஸின் தாய். வேதாகமத்தின் பிரகாரம் அந்தக் கூடை தார் பிசின் போன்ற பதார்த்தத்தால் பூசப்பட்டு நீர் உட்செல்லாமல் நைல்நதியில் அரசகுடும்பத்துப் பெண்களின் குளித்துறைக்கு மிதந்தபடி செல்கிறது.
அங்கே குழந்தை மோசஸ் கருணையுள்ளம் கொண்ட எகிப்திய மன்னனின் தங்கையால் கண்டெடுக்கப்படுகிறது. யூதக்குழந்தை எனத்தெரிந்தும் உண்மையான மோசஸின் தாயை செவிலித்தாயாக மாற்றி பணம் கொடுத்து அரண்மனையில் வளர்க்கப்படுகிறது. வளர்ந்த இளைஞனாகிய மோசஸ் அடிமைகளைத் துன்புறுத்திய எகிப்தியனை கொன்ற விடயம் வெளியே தெரியும் என்ற அச்சத்தில் அரண்மனையை மட்டுமல்ல எகிப்தையே விட்டு வெளியேறிவிடுகிறார்.
மிடியன்(Midian) என்ற நகரத்தில் மதகுருவின் மகளை மணம்செய்து குழந்தையுடன் இருந்த மோசஸை யாவோ அழைத்து எகிப்தில் அடிமையாக இருந்த யூதர்களை மீட்கும்படி பணிக்கிறார். மோசஸ் மிகவும் தயக்கத்துடன் எகிப்திய அரசனிடம் சென்று யூதர்களை பாலைவனத்தில் நடக்கும் ஒரு திருவிழாவிற்குச் செல்ல விடுமுறை அளிக்கும்படி கேட்டபோது அரசன் மறுத்ததுடன் மேலும் யூதமக்கள்மீது அதிக வேலைப்பளுவை அதிகரிக்கிறான்.
மீண்டும் யாவோவின் கட்டளைப்படி யூத மக்களை விடுவிக்கும்படி மோசஸ் கேட்டபோது எகிப்திய அரசன் மறுத்ததால் யாவோவின் சித்தத்தால் மோசஸால் எகிப்தில் பல தீயவிடயங்கள் நடைபெறுகிறது.
அவையாவன:- நைல் இரத்தமாக ஓடுகிறது. எகிப்தெங்கும் தவளைகள் பூச்சிகள் வெட்டுக்கிளிகள் பெருகுகின்றன. மனிதர்களையும் மிருகங்களையும்; நோய்கள் தாக்குகின்றன. ஆடு மாடுகளுக்கு நோய் பீடிக்கிறது. எகிப்தில் பனிக்கட்டி மழை புயல்காற்று அடித்தும் பயிர்கள் நாசமாகிறது. நாடு இருளில் மூழ்குகிறது இப்படி ஒன்பது வகையான தீயவிடயங்களுக்கு அசைந்து கொடுக்காத எகிப்திய மன்னன் கடைசியாக எகிப்தில் தனது தலைப்பிள்ளையில் இருந்து எகிப்தியர்கள் எல்லோரதும் தலைப்பிள்ளைகள் சாத்தானின் வருகையால் இறந்தபோது மட்டுமே யூதர்களை அந்த இரவில் வெளியேற அனுமதிக்கிறான். அன்றைய இரவு யூதர்கள் தங்களது வீடுகளின் கதவு நிலைகளில் செம்மறியின் இரத்தத்தைப் பூசி சாத்தானிடம் இருந்து பாதுகாத்துக்கொள்கிறார்கள். இந்த நாளே பாஸ்ஓவர் நாள் எனப்படும.;
இந்த தினத்தில்தான் யேசுநாதர் தனது சீடர்களுடன் கடைசி விருந்தாக உணவுண்டு மகிழ்ந்தார். வேதாகமத்தின்படி 430 வருடங்கள் யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்தார்கள்.
இந்த வேதாகமத்தில் சொல்லப்படும் யூதர்களின் வெளியேற்றத்திற்கு எகிப்திய புதைபொருள் ஆய்வுகளில் எந்த அகழ்வு ஆதாரமும் இல்லை. மேலும் 600000 ஆண்கள் எகிப்தில் இருந்து வெளியேறியதாக வேதாகமம் சொல்கிறது. அப்படியானால் பெண்கள் குழந்தைகளின் தொகை எவ்வளவு? அக்கால எகிப்தின் மொத்த அளவே ஒரு மில்லியன் தான் இருக்கலாம் என்கிறர்கள்
வேதாகமம் பொய்யா?
எக்காலத்திலும் தோல்விகளையும் இறப்புகளையும் எகிப்தியர்கள் பதிவு செய்து கொள்வதில்லை ஆனால் வேதாகமத்தில் சொல்லப்பட்டபடி இந்த யூதமக்கள் பண்டசாலையை கட்டினார்கள். அவை கட்டப்பட்ட இடம் பித்தோம் (Pithom) இராமஸ் (Ramses)) இதைவிட மோசஸின் பெயர் எகிப்திய பெயர் என்கிறார்கள். இதற்கு அப்பால் இராம்சியின் மூத்தமகன் இறப்பதும் பிற்காலத்தில் இராம்சி எதுவித படையெடுப்பிலும் ஈடுபடாததையும் வைத்து வேதாகமத்தில் கூறப்பட்டதுபோல் பெரிய சம்பவம் இல்லாவிடிலும் சிறிய அளவில் யூதர்கள் எகிப்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்கிறார்கள். இராம்சி வெளிநாட்டவர் படையெடுப்பை தடுப்பதற்காக தலைநகரையும் படைகளையும் நைல் நதியின் கழிமுகப்பகுதியில் வைத்திருப்பதற்காக பெரிய கட்டிடங்கள் கட்டியதாக எகிப்திய வரலாறு கூறுகிறது. நைல் நதியில் கழி முகத்தில் செங்கல்லில் கட்டப்பட்ட பிற்கால கட்டிடங்கள் நைல்நதியின் நீர்க்கசிவால் அழிந்துவிட்டன.
எகிப்திய வரலாற்றை நாம் அறிவதற்கு துணை புரிந்தது பாலைவன மணலும் ஈரப்பதமற்ற எகிப்திய காலநிலையுமாகும்.
வேதாகமத்தில் சிறிது உண்மை கலந்த வரலாற்று புனைவாக இருக்கலாம் என பலர் கருதுகிறார்கள்
அபு சிம்பலில் இருந்து மீண்டும் லக்சருக்கு வந்தும் எமது சக பிரயாணிகளாகிப் பின்னர் பயண நண்பர்களாகிய அமெரிக்க – பிரான்ஸ் நாட்டவர்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் கெய்ரோ வந்து சேர்ந்தோம்
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்