மக்களே எனது எஜமானர்கள் – அவர்களிடம்தான் நான் படித்தேன் – எனச்சொன்ன டானியல்
‘ இனவாதிகளினால் யாழ். பொது நூலகம் எரிந்ததற்கும் – மேல்சாதியினரால் தென்மராட்சியில் தாழ்த்தப்பட்ட மாணவரின் நூல்கள் எரிக்கப்பட்டதற்கும் இடையே வேறுபாடுகள் இல்லை ‘
முருகபூபதி
ஒரு பத்திரிகையில் இவ்வாறு ஒரு நகைச்சுவைத்துணுக்கு. – ஒரு எழுத்தாளர் பத்திரிகை ஆசிரியரைச் சந்திக்கின்றார்.
பத்திரிகை ஆசிரியர் – வாரும் – வணக்கம். நீர் எழுத்தாளரா?
எழுத்தாளர்: ஆம் நான் ஒரு எழுத்தாளன்.
பத்திரிகை ஆசிரியர் – நீர் மதுபானம் அருந்துபவரா ? சிகரெட் புகைப்பவரா? அல்லது பெண்களுடன் அதிகம் தொடர்புள்ளவரா?
எழுத்தாளர் – அப்படி ஒன்றுமில்லை. நான் மிகச் சுத்தமானவன்.
ஆசிரியர் – நல்லது – உமக்கு ஆஸ்த்துமா நோய் இருக்கிறதா?
எழுத்தாளர் – இல்லை.
ஆசிரியர் – நீரிழிவு?
எழுத்தாளர் – இல்லவே இல்லை. நான் நல்ல சுகதேகி.
ஆசிரியர் – எழும்பய்யா – நீயும் ஒரு எழுத்தாளனா? போய்யா
மேற்படி நகைச்சுவைத் துணுக்கில் பொதிந்துள்ளது உண்மையா? என்பதை ஆராய்வதை ஒரு புறம் விடுத்து நிதானமாக எனக்குத் தெரிந்த பல எழுத்தாளர்களின் ஆரோக்கியம் குறித்து யோசித்துப் பார்த்தேன். பலர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மை தெரிந்தது. இங்கு அவர்களை பட்டியலிடுவது அவசியமில்லை.
ஆனால் நானும் ஒரு நீண்டகால நீரிழிவு நோயாளி என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த இனிமையான உடலுக்கு தினமும் மூன்று தடவை இன்சுலின் ஏற்றிக்கொண்டிருக்கின்றேன்.
நீரிழிவு நோயைப் பற்றியும் இப்பொழுது என்னால் ஒரு புத்தகம் எழுதமுடியும் – குறிஞ்சா கீரைத் தோட்டமும் வளர்த்து பராமரித்தேன் எனச் சொன்ன எழுத்தாளரைப் பற்றி இங்கே பார்ப்போம். அவர்தான் பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான அமரர் கே.டானியல்.
ஒரு சமயம் அவரை – அவரது யாழ் ஸ்ரான்லி வீதி ஸ்டார் கராஜில் சந்தித்த பொழுது – தம்பி – எத்தனையோ எழுதிவிட்டேன். நீரிழிவு நோயின் குணங்கள் அதற்கான சிகிச்சை பற்றியும் என்னால் ஒரு புத்தகம் எழுத முடியும். குறிஞ்சாக் கீரை சாப்பிடும்படி சொல்கிறீர் – அந்தக் கீரைத் தோட்டமும் பயிரிட்டு பராமரித்துப் பார்த்துவிட்டேன் – என்றார். இவ்விதமாக சுவாரஸ்யமாக பேச வல்லவர் எங்கள் டானியல்.
அவரது பஞ்சமர் முதல் பாகம் படித்த பின்னரே அவரது படைப்புகளை படிக்கும் ஆர்வம் எனக்குள் வளர்ந்தது. அடுத்தடுத்து டானியல் கதைகள் – உலகங்கள் வெல்லப்படுகின்றன முதலானவை படித்த கையோடு அவருடனான நட்பும் மலர்ந்தது.
முதல் முதலில் அவரை வில்லிசைக் கலைஞர் லடீஸ் வீரமணியின் தலைமையில் கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசாரசபை மண்டபத்தில் நடந்த அமரர் அ.ந.கந்தசாமி நினைவு தினக் கூட்டத்திலேயே சந்தித்தேன். அன்று அறிமுகத்துடன் பிரிந்தோம். பின்பு யாழ் நகரில் சந்தித்தபொழுது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். எனக்கிருந்த நேர அவகாசம் அவரை – அவரது ஸ்டார் கராஜில் சந்திக்க வைத்தது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் முரண்பட்டு ரகுநாதன் – சில்லையுர் செல்வராசன் புதுவை ரத்தினதுரை முதலானோருடன் திருகோணமலையில் அவர் மாநாடு நடத்தி முடித்திருந்த காலம் அது.
நான் – மல்லிகை ஜீவாவின் நண்பன். இ.மு.எ.ச. தேசிய சபை உறுப்பினன் என்பதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டும் என்னைத் தனது சகோதரனைப் போன்று நேசித்தவர்.
புலமைப்பரிசில் பெற்று படிக்கச்சென்று 1964 டிசம்பரில் யாழ் ஸ்ரான்லி கல்லூரிக்கு (கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) நான் குட்பை போட்டதற்கு Home Sick மாத்திரம் காரணம் அல்ல. சாதி என்றால் என்னவென்று தெரியாத அன்றைய எனது பிஞ்சு மனதிற்கு சாதிக் கொடுமை பற்றி உணர்த்தியதும் அந்த யாழ் மண்தான் என்பதும் ஒரு காரணம்.
என்னுடன் படித்த அரியாலையைச் சேர்ந்த ஒரு மாணவனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இந்த மண்ணில் இனி மிதிக்கக்கூடாது என திடசங்கற்பம் பூண்டு புறப்பட்டேன். அதன் பின் சுமார் பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை திரும்பியும் பார்க்கவில்லை.
1975 இல் மீண்டும் – எழுத்தாளனாக அங்கு சென்ற பொழுது எனது நூல் அறிமுகவிழாவில் – அடிமனதில் ஆழப்பதிந்த அச்சம்பவத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் மறைமுகமாகப் பேசிவிட்டு அமர்ந்தேன்.
விழாவுக்கு வருகை தந்த டானியல் அருகே வந்து – அவசியம் சந்திக்க வேண்டும் – என அழைத்தார். நீறுபூத்த நெருப்பாக அடங்கியிருந்த அச்சம்பவம் பற்றி டானியல் கேட்டார். அரியாலை மாணவ நண்பருக்கு நேர்ந்த அவமானத்தைச் சொன்னேன். டானியல் சிரித்தார்.
உதென்ன கதை – இதனை விட பெரிய – சிறிய கதைகள் இங்க நடந்திருக்கு – நடந்து கொண்டிருக்கு உமக்குத் தெரியாது தம்பி.
உங்கட பஞ்சமரும் இதர சிறுகதைகளும் எனக்குத் தெரிந்திராத பல விசயங்களைச் சொல்லியிருக்கின்றன. – என்றேன்.
டானியலின் பெரும்பாலான படைப்புகளைப் படித்த போதிலும் – அவர் வர்க்க முரண்பாடுகள் பற்றிய தெளிவுடன்தான் எழுதினாரா? என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. பஞ்சமர் முதல்பாகம் என்னைக் கவர்ந்தளவுக்கு இரண்டாம் பாகம் அமையவில்லை. இரண்டு பாகங்களும் இணைந்த முழுநாவல் பின்பு கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அக்கூட்டத்தில் நானும் பேசினேன்.
பொருளாதா ரீதியில் நலிவுற்றவர்கள் – ஏழை எளியவர்கள் உயர் சாதியிலும் இருக்கிறார்கள். தாழ்ந்த சாதியிலும் இருக்கிறார்கள். அதே சமயம் பொருளாதார வசதியில் உயர்ந்தவர்கள் தாழ்ந்த சாதியினரிடத்தும் – உயர்ந்த சாதியினரிடத்தும் வாழ்கிறார்கள். இதனை டானியல் உணர்ந்து கொண்டாரோ தெரியவில்லை. ஆயினும் அவர்- நண்பர் ராஜஸ்ரீகாந்தனுக்கு அளித்த பேட்டியில் ஒரு பகுதியை இங்கு சுட்டிக் காட்டுதல் பொருத்தம்.
டானியல் :- முதல் பிரதானமான முரண்பாடாக வர்க்க முரண்பாடு இருந்தாலும் – அந்த வர்க்க முரண்பாட்டை வழி நடத்திச் செல்வதற்கு பயிற்சி அளிப்பதற்கான ஆயுதமாக என் எழுத்தைப் பாவித்தேன். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விடயத்தை இங்கு சின்ன உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன். அங்கு சாதிகள் பல உண்டு. அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கினம் – உயர்ந்த ஆட்களுக்குள்ள பணம் இல்லாத ஆட்களும் இருக்கினம். ஆனால் பணமில்லாத உயர்ந்தவன் – அந்த நிலப்பிரபுத்துவ முறையில் ஏற்பட்ட பழக்க வழக்கங்களிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. இன்னமும் அவன் சாதி பார்த்துக் கொண்டு தானிருக்கிறான். ஆகையினால் அவன் சாதி பார்க்கின்ற வரையில் – இவன் வர்க்க ஒற்றுமையைப் பற்றிப் பேசிப் பிரயோசனமில்லை.
காசில்லாதவன் – பொருளில்லாதவன் – வாழ்வதற்கு வழி இல்லாதவன் – தங்களின் சொந்தக்காரர்களின் காணியிலேயே இரவல் குடியிருக்கிறவன் – எந்தவிதமான தொழில் துறையும் இல்லாதவனும் கூட பழக்கத்தின் அடிப்படையில் வந்த வழிமொழி நடைமுறைகளினால் இன்னமும் சாதி பார்த்துக் கொண்டிருக்கும் போது – தாழ்த்தப்பட்டவன் வர்க்க ஒற்றுமையைப் பற்றிப் பேசிப் பிரயோசனமில்லை. எப்போது இவன் வருவானென்றால் – இவனும் அவனுடன் போராடி அவனுக்கு எதிராகப் போராடக்கூடிய வல்லமையைப் பெற்ற காலத்தில் தான் அவனையும் சேர்த்துக் கொள்ள முடியுமே தவிர – அவன் அதுவரையில் சாதி பற்றிப் பேசாமல் இருக்கப் போவதில்லை.
டானியல் – நோயினால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் மிகவும் உற்சாகமாக எழுதினார். சில நாவல்களை எழுதுவதற்காக ஆதாரங்கள் தேடி குக்கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்தார். நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கற்பனையில் வாழ்ந்து இலக்கியம் படைக்கவில்லை.
அவரது பாத்திரங்கள் வட மாகாணத்தின் ஆத்மாவை பிரதிபலித்தவர்கள். டானியலின் பாத்திரப் படைப்புகளை அவதானித்தவர்கள் – எங்கே டானியல் சட்டப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கப் போகின்றாரோ என எண்ணியதுண்டு.
டானியலிடம் பல குறிப்பிடத்தக்க குணாதியங்கள் அமைந்திருந்தன.
துணிவுடன் கருத்துக்களைச் சொல்லுவார். எதிர் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார். தனக்குச் சரியெனப்பட்டதை தயங்காமல் வெளியிடுவார். ஒரு சமயம் – சிங்கப்பூரில் நீண்டகாலம் வசித்துவிட்டு விடுமுறையில் வந்த யாழ்ப்பாணத்துச் சீமான் ஒருவர் தமது வாகனத்தின் பாகம் ஒன்றைப் பழுது பார்ப்பதற்காக டானியலின் கராஜிற்கு வந்தார்.
பாகத்தின் திருத்தவேலை முடியும் வரையில் டானியல் அந்தச் சீமானுடன் சிங்கப்பூர் புதினங்களை விசாரித்து உரையாடினார்.
வந்த சீமானோ – சிங்கப்பூரின் முன்னேற்றத்தையும் – வனப்புகளையும் புகழ்ந்தவாறு – யாழ்ப்பாணத்தின் சீரழிவுகளையும் ஈழத்தமிழர்கள் பின்தங்கி இருப்பதற்கான காரணங்களையும் விளக்கிக் கொண்டிருந்தார். நேரம் கரைகிறது. சீமான் வந்த வேலையும் முடியவில்லை. வந்தவருக்காக டானியல் குளிர்பானம் வரவழைத்தார்.
வேலை இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிஞ்சிடும் – இதனை குடியுங்கோ – டானியல் உபசரித்தார்.
சீமானுக்கோ தயக்கம். – தம்பி – நான் இப்படி – கண்ட கண்ட இடத்திலும் கை நனைப்பதில்லை. நீங்கள் யார்? – எவர்? என்பதும் தெரியவில்லை.
பரவாயில்லை ஐயா – வாடிக்கையாளர்களை உபசரிப்பது எங்கள் பண்பு. குடியுங்கோ . வெய்யிலும் கொளுத்துது – களைத்துப் போயிருப்பீர்கள்.
சீமானும் டானியலின் அன்பில் களித்து அருந்தினார். பின்னர் டானியலின் பூர்வீகம் பற்றிக் கேட்டார்.
(இந்தப் பூர்வீகம் விசாரிக்கும் இயல்பு தமிழர்க்கே உரித்தான பண்பு. புகலிடத்திலும் இந்தப்பண்பு தொடருகிறது. உதாரணமாக பிறப்பூரைச்சொன்னால் – வடக்கா? தெற்கா? கிழக்கா? மேற்கா? எனக்கேட்பார்கள். அந்தக்கேள்வியில் கிடைக்கும் பதிலில் சாதியையும் தெரிந்தும் கொள்வார்கள்)
டானியலும் மிக இயல்பாக – தனது சாதியைக் குறிப்பிட்டார்.
சீமான் திகைத்தார். கோபித்தார்.
ஏன் – இதனை முதலிலேயே சொல்லவில்லை?
இப்போது சொன்னபடியால் அருந்திய பானத்தை வாந்தியெடுக்கப் போகிறீர்களா? சிங்கப்பூரின் முன்னேற்றம் சொல்லி – யாழ்ப்பாணம் பின்தங்கிவிட்டதாகப் பேசுகிறீர்கள். நீங்கள் சிங்கப்பூரில் எவ்வளவு காலம்தான் வாழ்ந்த போதிலும் இன்னமும் யாழ்ப்பாணத் தடித்த சாதிமானாகத்தானே சிந்திக்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது மாறப்போகிறீர்கள்.
சீமான் உதடுபிதுக்கியவாறு வந்த வேலையை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட பொழுது தமிழ் உலகம் வெகுண்டெழுந்தது. நானும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கோபத்துடன் நூலக எரிப்பு கொடுமையை நேரில் பார்ப்பதற்காக யாழ்நகர் சென்றேன். அப்பொழுதும் டானியலை சந்தித்தேன்.
டானியல் மிகவும் அமைதியாக என்னிடம் – உதற்காகவா வந்தீர். தென்மராட்சியில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த மாணவர்களை வீதியில் மறித்து அவர்களின் புத்தகங்களைப் பறித்த உயர்சாதியினர் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி – இரண்டு சம்பவங்களுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை – என்றார்.
மானிப்பாயில் ஒரு இலக்கிய நண்பருக்குத் திருமணம். விருந்து வேளையில் சம்பிரதாயத்தின் பிரகாரம் முதல் சாப்பாடு கொடுப்பதற்கு ஊர்க் குடிமகனைத் தேடினார்கள். அவரைக் காணவில்லை.
திருமணத்துக்கு வருகைதந்த டானியல் – ஏனப்பா – கஷ்டப்படுறியள் – இதோ நான் இருக்கிறேன். குடிமகனுக்குரியதை என்னிட்ட தந்திட்டு விருந்தை ஆரம்பியுங்கோ – என்றார் சுவாரஸ்யத்துடன்.
சமூக அந்தஸ்து கருதி – பிறந்த குலத்தை மறைப்பவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள். மனிதப்பிறவி தொழில் ரீதியாக – சாதியாக – உருவம் எடுத்தமையினாலேயே உயர்வு – தாழ்வு தோன்றியது. இந்நிலை மாறி மனுக்குலத்தை முழுமையாக நேசிக்க வேண்டும், என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார் டானியல்.
மக்களே எனது எஜமானர்கள் – அவர்களிடம்தான் நான் படித்தேன். எனது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் அவர்களின் விடிவுக்காகவுமே எழுதிக் கொண்டிருப்பேன் – என்று வாழ்நாள் பூராவுமே சொல்லிக் கொண்டிருந்த டானியல் கண் சத்திர சிகிச்சைக்காக தமிழகம் சென்றிருந்த வேளையில் தஞ்சாவூரில் மறைந்தார். இந்தத் துயரமான செய்தியை முதலில் எனக்குத் தொலைபேசி மூலம் கூறியவர் டானியலின் நெருங்கிய நண்பர் கவிஞர் சில்லையுர் செல்வராசன். இறுதியாக டானியலை – அவர் தமிழகம் செல்லும் முன்பு நண்பர் காவலூர் ராசதுரை வீட்டில் சந்தித்தேன்.
அவர் நண்பர் இளங்கோவனுடன் சிகிச்சைக்காக தமிழகம் சென்றவிடத்தில் தஞ்சாவூரில் மறைந்தார். அவரது கல்லறை அங்கிருக்கிறது.
எனக்கு – அதிர்ச்சி – தந்த மரணங்களுள் டானியலின் மறைவும் சேர்ந்துள்ளது.
இலங்கை வானொலியில் சிறிதுகாலம் கலைக்கோலம் நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றேன். ஒருநாள் டானியலுக்கான அஞ்சலி உரையை ஒலிபரப்ப ஆவன செய்து – வானொலி நிலைய கலையகத்தில் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருந்த சமயம் – மேலிடத்திலிருந்து திடீரென உத்தரவு வந்தது. குறிப்பிட்ட அஞ்சலிக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சாதி என்ற சொற்களை நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது.
எனக்குச் சிரிப்பாகிவிட்டது. ஈழத்து இலக்கிய வளர்ச்சி என வாசிக்கக்கூடாது – இலங்கை இலக்கிய வளர்ச்சி என்றுதான் வாசிக்க வேண்டும் என உத்தரவுகளைப் பிறப்பித்த அதியற்புதமான வானொலி நிலையம் அல்லவா அது.
பின்னர் – சாதி என்ற சொல் வருமிடங்களில் – அடிநிலை மக்கள் எனத்திருத்திக் குறிப்பிட்ட அஞ்சலிக்கட்டுரை ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகியது. அதனை வானொலிக்கென வாசித்தவர் எனதும் டானியலினதும் நண்பரான இன்றைய தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம்.
குடை என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் – மழை – வெய்யில் என்ற சொற்கள் இடம் பெறக்கூடாது – என்ற கட்டளை போன்று இலங்கை வானொலி மேலிடத்தின் அந்த அற்புதமான உத்தரவு கேட்டு அதிசயித்திருக்கிறேன்.
மனித நேயம் மிக்கவராக – மாற்றுக்கருத்துள்ளோரையும் அரவணைக்கும் பண்புகளோடு விருந்தோம்பும் இயல்புகளுடன் வாழ்ந்தவர் டானியல். நான் கண்ட டானியல் அப்படித்தான் – மற்றவர்களின் பார்வையில் எப்படியோ எனக்குத்தெரியாது.
–0–
மறுமொழியொன்றை இடுங்கள்